Published:Updated:

ஆடி மாதத்தில் பெண்கள் தீச்சட்டி ஏந்துவது, தீ மிதிப்பது ஏன்?

ஆடி மாதத்தில் பெண்கள் தீச்சட்டி ஏந்துவது, தீ மிதிப்பது ஏன்?
ஆடி மாதத்தில் பெண்கள் தீச்சட்டி ஏந்துவது, தீ மிதிப்பது ஏன்?

ஆடி மாதத்தில் பெண்கள் தீச்சட்டி ஏந்துவது, தீ மிதிப்பது ஏன்?

தமிழர்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தது ஆடி மாதம்.  கோபம் கொண்ட பெண் தெய்வங்களை சாந்தப்படுத்த அவர்களுக்கு விழா எடுக்கும் மாதம். விவசாயிகள் ஆடிப்பட்டம் தேடி விதைக்கும் மாதம். குடும்பம் தழைக்க தாலியை பெருக்கிப்போடும் மாதம். இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட ஆடி மாதத்திற்கு பின்னால் பெரும் வரலாறும் இருக்கிறது. அது சாதாரண வரலாறு அல்ல, மன்னனையே எதிர்த்து நின்ற ஒரு பெண்ணின் வரலாறு. சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்கு பிழைக்க வந்த வணிகன் கோவலன், தவறான தீர்ப்பால் பலியானது ஆடி மாதத்தில் தான். நியாயம் தவறிய பாண்டிய மன்னன் தன் உயிரைத் துறந்த மாதம்.  மதுரை நகரம் கோபத்தீயால் பொசுங்கிய மாதம். இப்படி பல தனித்தன்மைகள் உண்டு ஆடி மாதத்துக்கு!

ஓர் ஆடிவெள்ளியில்தான் மதுரை நகரம் எரிந்து சாம்பலானதாகவும், மதுரையை எரித்த வேகத்தில் மிகுந்த கோபத்துடன் 14 நாட்கள் நடந்து சென்ற கண்ணகி, கூடலூரிலுள்ள  மங்கலதேவி கோட்டத்தை அடைந்து (இன்றைய தேனி மாவட்டம்)  அங்கிருந்து வானுலகத்துக்கு சென்று தெய்வமானாள் என்றும் சிலப்பதிகாரத்திலும், நாட்டார் கதைகளிலும் சொல்லப்படுகிறது. 

சங்க இலங்கியங்களில் விமர்சனமே இல்லாமல் மன்னர்களின் பெருமை பேசிக்கொண்டிருக்கும்போது, இளங்கோவின் சிலப்பதிகாரம் மட்டும்தான்  மதியிழந்து நீதி தவறிய மன்னனின் கதையைச் சொல்கிறது. வாழ்க்கையைத் தொலைத்த ஒரு பெண்ணின் கதையைப் பேசுகிறது. அவளின் கோபத்தை நியாயப்படுத்துகிறது. கடைசியில் அவளை தெய்வமாக்குகிறது. 

தனது கணவன் கோவலனைக் கள்வனென்று கூறி, உயிரை வாங்கிய பாண்டிய மன்னனின் அவைக்கே துணிச்சலாக சென்று  'தேரா மன்னா...'.என்று  உலகமே அறியும் வண்ணம்  கண்ணகி வாதம் செய்த மண் மதுரை. நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியன் மடிந்து வீழ்ந்தும், அதைத் தாங்கிக்கொள்ளாமல் அவன் மனைவி கோப்பெருந்தேவி  இறந்தும் கூட அமைதி கொள்ளாது, அந்த மன்னன் வாழ்ந்த மதுரையே அழிந்து போகவேண்டுமென்று  தீக்கிரையாக்கினாள் கண்ணகி.

அதுபோன்ற  துன்பச் சம்பவம் கொண்ட இன்னொரு ஆடி வெள்ளி வந்துவிடக்கூடாது என்றுதான் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் நம் பெண்கள் பலவித வழிபாடுகளை நடத்தி கண்ணகியை அம்மனாக நினைத்து சாந்தப்படுத்துகிறார்கள். தீச்சட்டி தூக்குகிறார்கள், தீ மிதிக்கிறார்கள். கணவர்களின் ஆயுளுக்காக வேண்டுகிறார்கள்.  அம்மன் வழிபாட்டின் அடிப்படை கண்ணகி வழிபாடுதான் என்கிறார்கள் அறிஞர்கள். 

இது தொடர்பாக விரிவாகப் பேசுகிறார் வரலாற்று எழுத்தாளர் பாண்டுரங்கன்,

''பண்டைய இலக்கியங்களெல்லாம் மன்னனின்  பெருமைகளை மட்டுமே பேசிக்கொண்டிருந்தபோது சிலப்பதிகாரம் மட்டுமே சாதாரண குடிமக்களின் பெருமைகளை சிறப்புடன் பறைசாற்றியது. அநீதி இழைக்கப்பட்டால் அது யாராக இருந்தாலும் எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிச்சலைக் கொண்ட பெண்கள் தமிழ் சமூகத்தில் வாழ்ந்தார்கள் என்பதை நிறுவுகிறது. 

ஓர் ஆடி வெள்ளியில்தான் கண்ணகியின் கண்ணீர்த் தீயில் மதுரை எரிந்தது என்று அறிஞர் தமிழண்ணல் அவர்களும் எழுதியுள்ளார்.

இதையே தமிழறிஞர் கி.பி.சுப்பிரமணியம் பிள்ளையும் உறுதி செய்துள்ளார். நம் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருப்பதும், அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்வதும் அதன் நீட்சியாக தொடர்கிறது, தமிழகத்தைப் பொறுத்தவரை கண்ணகியை மாரியம்மனாக வழிபடுகிறார்கள். ஒரு சில இடங்களில் கண்ணகியை நேரடியாக வணங்குகிறார்கள்.

மதுரை சிம்மக்கல் அருகிலுள்ள செல்லத்தம்மன் கோயிலில் இப்போதும் கண்ணகி சிலை உள்ளது. அச்சிலை பொதுமக்களால் வழிபடப்படுகிறது. மதுரையை எரித்த கண்ணகி, பதினான்கு நாட்கள் நடந்து சேர்ந்த இடமே தேனி மாவட்டம் கூடலூர் மங்கலதேவிக் கோட்டமாகும். இங்கு வந்த கண்ணகி வானுலகில், தெய்வமாகி விட்டதாக மக்கள் நம்பி வழிபட்டு வருகிறார்கள். நாட்டரசன்கோட்டையிலுள்ள கண்ணாத்தாள் கோயிலும் கண்ணகியை வழிபட உருவாக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். 'மதுரையின் கிழக்கு வாயில் வழியே கணவனுடன் நுழைந்த நான், இப்போது அநாதையாக மேற்குத் திசை வழியே செல்கிறேன்' என்று புலம்பிவிட்டுக் கண்ணகி புறப்படுவதையும், மதுரையை எரித்துவிட்டு கரடுமுரடான பாதையில் மேற்குத்திசை நோக்கி நடந்து,  நெடுவேள் குன்றம் ஏறி, மலர்ந்த ஒரு வேங்கை மரத்தடியில் அவள் நிற்பதையும், பதினான்காம் நாளன்று வானஊர்தியில் இந்திரன் உள்ளிட்ட தேவர்களோடு, கோவலனும் வந்து கண்ணகியைப் பணிந்து உடன் அழைத்துச் செல்வதையும் சிலப்பதிகாரம் காட்சிப்படுத்துகிறது. இலங்கையில் கண்ணகி விழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். தமிழ்ச் சமூகத்தில் கண்ணகி நீதியின் குறியீடு, ஆடி வெள்ளிக்கிழமைகளில் அதை நாம் பார்க்க முடிகிறது.'' என்றார். 

கண்ணகி பிறந்த பூம்புகார் மேலையூர் பத்தினி கோட்டத்தில் கண்ணகி வீடுபேறு அடையும் நாள் கண்ணகி திருவிழாவாக இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு சிறப்புகளை பெற்ற கண்ணகி, நாகை மாவட்டம் பூம்புகார் பகுதியில் வாழ்ந்து  அற்புதங்களை நிகழ்த்தியதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. கண்ணகி ஆடி மாதம் பூப்பல்லக்கில் ஏறி விண்ணுலகம் சென்ற நாளை கண்ணகி வீடுபேறு அடைந்த நாளாக கொண்டாடுகிறார்கள்.  அவர் வாழ்ந்த பூம்புகார் மேலையூர் பகுதியில் பத்தினிக்கோட்டம் என்ற பெயரில் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடி அனுஷ நட்சத்திரத்தில் கண்ணகிக்கு பால், வாசனை திரவியங்கள், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம், பூக்கள் உள்ளிட்ட 51 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.  இப்படி, அநீதிக்கு எதிராக, அறச்சீற்றத்துக்கு உதாரணமாக கண்ணகி நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஆடி மாதம் நமக்கு அதை உணர்த்திக்கொண்டிருக்கிறது..." என்கிறார் பாண்டுரங்கன்!
     

.

அடுத்த கட்டுரைக்கு