Published:Updated:

இன்று இரவு 10.51மணிக்கு, 'சூடாமணி சந்திரகிரகணம்'!

இன்று இரவு 10.51மணிக்கு, 'சூடாமணி சந்திரகிரகணம்'!
இன்று இரவு 10.51மணிக்கு, 'சூடாமணி சந்திரகிரகணம்'!

இன்று இரவு 10.51மணிக்கு, 'சூடாமணி சந்திரகிரகணம்'!

சந்திரகிரகணம் இன்று (ஆகஸ்ட் 7 -ம் தேதி) இரவு 10. 51மணிக்குத் தொடங்கி, இரவு 12.49  மணி வரை நீடிக்கிறது. இந்த மாதத்தில் இன்று (7-ம் தேதி) சந்திர கிரகணமும் ஆகஸ்ட் 21-ம் தேதி சூரிய கிரகணமும் ஏற்படுகின்றன. இதனால் பூமியின் நிலப்பரப்பிலும் கடற் பரப்பிலும் கதிர்வீச்சுகளின் தாக்கம் அதிகமிருக்கும். அந்த நேரத்தில் பெரும்பாலும் வெளியில் வரக்கூடாது. குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள் வெளியில் வரக்கூடாது என்பார்கள். 

சந்திர கிரகணத்தின் பாதிப்பு காரணமாக ஜோதிட ரீதியாக எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் என்ன செய்ய வேண்டுமென ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

'' இந்த முறை சந்திர கிரகணம் சந்திரனுக்கு உரிய நாளான திங்கள்கிழமை, சந்திரனுக்கு உரிய நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்தில் ஏற்படுகிறது. ஜோதிட ரீதியாக இதை, 'சூடாமணி சந்திர கிரகணம்' என்பார்கள். இன்று மதியத்துக்கு மேல் பால் பொருட்களைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இறைநாமத்தைத் துதித்து ஓய்வெடுத்தாலே போதுமானது. காலையில் அருகில் இருக்கும் அம்மன் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது நல்லது. ஏழைகளுக்கு வஸ்திர தானம் செய்தால், மிகச் சிறந்த பலன்களைப் பெறலாம். குறிப்பாக அஸ்தம், ரோகிணி, மிருக சீரிடம், திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம்,உத்ராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் ப்ரீத்தி செய்துகொள்வது நல்லது'' இவ்வாறு அவர் கூறினார்.  
 

சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி,  நாம் என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக்கூடாது என்பது பற்றி ஆன்மிக அருளாளர் ஶ்ரீரங்கம் கிருஷ்ணனிடம் பேசினோம். 

''பழையகால சாஸ்திரப்படி நம் ஆகம விதிப்படி கட்டப்பட்ட ஆலயங்களில் கொடிமரத்தில் இருக்கும் சின்னச்சின்ன உலோகங்கள் மற்றும் அதன் கலசத்தில் இருக்கும் வரகு அரிசி போன்றவை இடி, மின்னல் தாக்குதல்கள், கிரகணங்களின் கதிர்வீச்சுகள், இயற்கைச் சீற்றங்கள் இவற்றின் ஆபத்துகளிலிருந்து நமது ஆலயங்களையும் நாட்டு மக்களையும் பாதுகாத்தன.

கோயில் கருவறைக்கு மேல் இருக்கும்  கோபுரக் கலசத்திலிருந்து ஒரு செப்புக்கம்பி இழுக்கப்பட்டு அது கருவறையின் கீழே ஆழத்தில் விடப்பட்டிருக்கும். கோயில் கருவறையில் இருக்கும் கர்ப்ப கிரகத்துக்கும் அங்கிருக்கும் பொருள்களுக்கும் இடி மின்னலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாக்கும். இதேபோல் கொடி மரத்தின் கலசத்திலிருந்து வரும் செப்புக் கம்பியும் பீடங்களுக்கு அடியில் வந்து கருவறை செப்புக்கம்பியுடன் இணைக்கப்பட்டிருக்கும். 

மேலும், கோயிலின் பிரகாரங்களுக்கு வெளியே நான்கு கோபுர வாசல்கள் இருக்கும். இங்கு அமைக்கப்பட்டிருக்கும் கோபுரங்களின் கலசங்களிலும் இத்தகைய அமைப்பு இருக்கும். இதனால் பல மைல் சுற்றளவுக்கு உள்ள கிராமங்கள் பாதுகாக்கப்படும்.
கிரகணம் போன்ற சமயங்களில் கோயிலுக்குள்ளே மக்கள் அனைவரும் வந்து விடுவார்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே அவர்கள் உணவருந்தி விடுவார்கள். பிறகு சுவாமிக்கு அபிஷேகம் நடக்கும் அந்தத் தீர்த்ததை மக்களுக்கு வழங்குவார்கள். கிரகணம் முடிந்ததும் கோயிலைச் சுத்தம் செய்து புண்ணியகால தீர்த்தம் என வழங்குவார்கள். இதன் பிறகு மக்கள் அவரவர்  வீடுகளுக்குச் செல்வார்கள். இப்படிப்பட்ட கோயில்களுக்கு திருவண்ணாமலை, விருத்தாசலம் விருதகிரீஸ்வரர், திருவரங்கம் ரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். 

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கு ஒன்று மிகுந்த தொடர்புடையவை. குறிப்பாக அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாள்களில் சந்திரனின் ஒளி அலைகள் பூமியின் நிலப்பரப்பிலும் கடலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்துபவை. கிரகணங்களின் அதிர்வலைகள் நம் உடலிலும் மாற்றங்களை உண்டு பண்ணும் என்பதால், அந்த நேரத்தில் நாம் நம் உடலுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது.

சந்திர கிரகணத்தையொட்டி  திருமலை திருப்பதிக் கோயிலில் 6 மணி நேரத்துக்கு முன்பாகவே நடை சாத்தப்படுகிறது. இதனால் திருப்பதியில் 10 மணிநேரத்துக்கும் மேலாக சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. ஆர்ஜித சேவைகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
மீண்டும் அதிகாலையில் கோயிலில் புண்ணியதானம் செய்து, ஆலய சுத்திக்குப் பிறகு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அதன்பிறகு ஆகஸ்ட் 8-ம் தேதி காலை 7 மணிக்கு சர்வ தரிசனம் மூலமாக சாமி தரிசனத்துக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

இன்று ஆகஸ்ட் 7 -ம் தேதி நடைபெறவிருந்த, 'ஆவணி அவிட்டம்' நிகழ்ச்சி அடுத்த மாதம் (செப்டம்பர்) 6-ம் தேதிக்கு நடைபெறுமென்று காஞ்சி சங்கர மடம் சார்பாக, அறிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு