Published:Updated:

கூழுக்குக் கவிபாடிய கூனக் கிழவி- இது ஆடி செவ்வாய் ஸ்பெஷல்

த.ராம்
கௌ.உமா
கூழுக்குக் கவிபாடிய கூனக் கிழவி- இது ஆடி செவ்வாய் ஸ்பெஷல்
கூழுக்குக் கவிபாடிய கூனக் கிழவி- இது ஆடி செவ்வாய் ஸ்பெஷல்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிருந்து கடுக்கரை செல்லும் வழியில் உள்ளது குறத்தியறை. ஐந்துகிரி மலையடிவாரத்தில் காணப்படும் மலைச்சரிவில், தெற்குப் பார்வையாக கருவறையில் நின்ற நிலையிலான திருமாலின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. இருப்பினும் அதற்குச் சிவப்புப் பாவாடை அணிவித்து அவ்வையாரம்மனாக வழிபடப்படுகிறது. சிற்பத்தின் கையில் சங்கு சக்கரம், வரத, ஊரு ஹஸ்தங்களுடன் கூடிய விஷ்ணுவின் சிற்பமாக உள்ளது. 1904-வாக்கில் இக்குடைவரை கோயிலை பார்வையிட்ட கவிமணி தேசிக விநாயம் பிள்ளை  மார்புக்கவசம், கண்மலடு சகிதம் பெண் தெய்வமாக அலங்கரிக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளார்.

"கோயில் குகைச்சுவரின் இருபக்கமும்  விநாயகர் சிலை புடைப்புச்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இச்சமணக்குடைவறைக்கோயில் 8-ம் நூற்றாண்டில் பிற்காலப்பாண்டியர்களால் விஷ்ணுக்கோயிலாக மாற்றம் செய்யப்பட்டது என்றும், குகைக்குள் உள்ள விஷ்ணுச்சிற்பம் முழுமைப்பெறாதது" என்று வரலாற்று ஆய்வாளர் அ.கா.பெருமாள் குறிப்பிடுகிறார்.

பண்டைய காலத்தில் குறத்தியறை பகுதி மக்கள் தங்கள் பெண்ணின் திருமணத்துக்கு எட்டு நாள்களுக்கு முன்பு வந்து அவ்வையாருக்கு வழிபாடு நடத்துவார்களாம். இப்போதும் திருமணமாகாத பெண்களும் குழந்தைப் பேறு இல்லாத பெண்களும் அவ்வையாரம்மனை வேண்டிக்கொள்வதும் நோன்பு இருப்பதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. குமரி மாவட்டத்தில் ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மட்டும் கடைபிடிக்கும், ‘அவ்வையார் நோன்பு’ பிரசித்தி பெற்றதாகும். கன்னிப் பெண்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், திருமணமான சுமங்கலிப் பெண்கள் இல்லறம் இனித்திருக்கவும், குழந்தை வரம் வேண்டியும், கணவனின் ஆயுள் பலம் கூடவும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கிறார்கள். அவ்வையார் நோன்பு இருக்கும் பெண்கள், ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் இரவு 10 மணிக்கு மேல், மூத்த சுமங்கலிப் பெண் ஒருவரது வீட்டில் ஒன்றாக கூடுவார்கள். பச்சரிசி மாவு, வெல்லம் முதலியன கலந்து உப்பில்லாமல் கொழுக்கட்டை செய்து பூஜை செய்வார்கள். அப்போது அவ்வையார் மற்றும் அம்மன் கதைகளை, மூத்த சுமங்கலிகள் கூற, நோன்பில் கலந்துகொள்ளும் பெண்கள் அனைவரும் அதை பயபக்தியுடன் கேட்பார்கள். பின்பு கொழுக்கட்டைகளை நிவேதனம் செய்து இறைவனை வழிபட்ட பின், அதை மீதமின்றி பெண்கள் அனைவரும் உண்பார்கள். இந்த நோன்பில் ஆண்களுக்கு அனுமதியில்லை.

கொழுக்கட்டையுடன், கூழ் படைத்து வழிபடும் பெண்களும் உள்ளனர். தெய்வமாகவே மாறி கூழையும் கொழுக்கட்டைகளையும் படையலாக ஏற்றுக்கொள்ளும் அவ்வையாரைக் "கூழுக்குக் கவிபாடிய கூனக் கிழவி' என்று சொல்லிதான் வணங்குகின்றனராம். ஆடி மாத 4-வது செவ்வாய்கிழமையை முன்னிட்டு,  அவ்வையார் அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. திருமணத் தடை நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும், கொழுக்கட்டைகள் படைத்து அவ்வையார் அம்மனுக்கு  பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள். இதில், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பெண்கள் வந்து அவ்வையார் அம்மனின் அருளைப் பெற்றுச் செல்கிறார்கள்.