Published:Updated:

துங்கா நதி தீரத்தில்... - 12

பாரதி காவலர் டாக்டர்.கே.ராமமூர்த்தி, ஓவியம்: ஸ்யாம்

துங்கா நதி தீரத்தில்... - 12

பாரதி காவலர் டாக்டர்.கே.ராமமூர்த்தி, ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:

ஸ்ரீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகள் 80 வயது பூர்த்தியடைந்த நிலையில், தாம் திருக்கோகர்ணம் சென்று ஸ்ரீமஹாபலேஸ்வரை (மஹாபலேஸ்வரரை கோகர்ணேஸ்வரர் என்றும் அழைப்பது உண்டு). தரிசிக்க வேண்டும் என்று கூறியபோது, ஸ்வாமிகளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இளைய ஸ்வாமிகளும் சரி, ஸ்ரீமடத்து நிர்வாகிகளும் சரி தயங்கவே செய்தனர். ஸ்வாமிகள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியும்கூட அவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை.

துங்கா நதி தீரத்தில்... - 12

காலை முதல் இப்படியே சொல்லிக் கொண்டிருந்த ஸ்வாமிகள், அன்று மாலை, ''இதோ நம்மை திருக்கோகர்ணம் அழைத்துச் செல்ல பல்லக்கு தயாராகிவிட்டது. நம்மை அந்தப் பல்லக்கில் உட்கார்த்தி வையுங்கள்.'' என்றார். சுற்றிலும் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பத்துடனே இருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் சென்றிருக்கும். ஸ்வாமிகள், ''ஆஹா! என்ன ஒரு திவ்விய தரிசனம்! நம்முடைய பல்லக்கு போகிகள்தான் எவ்வளவு சாமர்த்தியசாலிகள். நம்மை விரைவிலேயே கோகர்ணத்துக்கு அழைத்துச் சென்று வந்துவிட்டார்களே! அவர்களுக்கு நிறைய சன்மானம் கொடுங்கள்.'' என்றார். அப்போதும்கூட சுற்றிலும் இருந்தவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுதான் ஸ்ரீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகள் பேசிய கடைசி வார்த்தைகள். மறுநாளே அதாவது 23.5.1879 அன்று ஸ்வாமிகள், ஸ்ரீசாரதா பீடத்துக்கு தகுதியான பீடாதிபதியை நியமித்துவிட்ட ஆத்ம திருப்தியுடன் விதேஹ முக்தி அடைந்துவிட்டார்கள்.

ஸ்ரீீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகள் விதேஹ முக்தி அடைந்துவிட்டதை இளைய ஸ்வாமிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 9 வயதில் தம்மை ஸ்ரீசாரதாபீட பீடாதிபதியாக ஸ்வீகரித்துக்கொண்டு அன்றுமுதல் தாயாய், தந்தையாய், ஆசானாய், அனைத்துக்கும் மேலாகத் தேடியும் கிடைக்காத சத்குருவாய் என எல்லாமாய் இருந்த பெரிய ஸ்வாமிகள் இன்று தம்மிடையே இல்லை என்ற எண்ணமானது இளைய ஸ்வாமிகளின் நெஞ்சத்தை பாரமாய் அழுத்தியது. ஆனாலும் மனதை கொஞ்சம் திடப்படுத்திக்கொண்டு மேற்கொண்டு ஆகவேண்டிய காரியங்களை கவனிக்கலானார். ஸ்வாமிகளின் குரு மற்றும் பரமகுரு ஆகியோரின் அதிஷ்டானங்களுக்கு இடையில் ஸ்ரீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் அமைக்கப்பட்டது.

துங்கா நதி தீரத்தில்... - 12

ஸ்ரீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகளின் திருமேனியை அதிஷ்டானத்தில் இருத்தி பூஜை வழிபாடுகள் அனைத்தும் பூர்த்தி அடைவதற்கு இரவு நெடுநேரம் ஆகிவிட்டது. காலையில் இருந்தே தம்முடைய குருவின் அதிஷ்டானப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஸ்ரீசிவா அபிநவ சச்சிதானந்த நரஸிம்ம பாரதி ஸ்வாமிகளின் மனதில் மறுபடியும் தம்முடைய குருநாதரின் நினைவு தோன்ற, அன்ன ஆகாரம் ஏதும் கொள்ளாமல் துக்கப்பட்டுக் கொண்டிருந்தார். நெஞ்சத்தைப் பிழிந்த துக்கத்தின் காரணமாக சற்றே பிரக்ஞை இழந்த நிலையில், அவருக்குக் காட்சி கொடுத்த ஸ்ரீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகள், ''நாம் எங்கே போய்விட்டோம்? இங்கேதானே இருக்கிறோம். பின் எதற்காக பெண்களைப் போல் கண்ணீர் விட்டு துக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாய்?' என்று கேட்பதுபோல் தோன்றியது.

அப்போதுதான் ஸ்வாமிகளின் மனதில் சற்றே தெளிவு ஏற்பட்டது. சரீரத்துடன் பிரத்யட்சமாக இருந்த தம் குருநாதர், இப்போது அகண்டராய் எங்கெங்கும் வியாபித்து உள்ளார் என்று சமாதானம் செய்துகொண்டார்.

இங்கே இரண்டு விஷயங்களைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். ஸ்ரீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகள், தாம் திருக் கோகர்ணம் சென்று மஹாபலேஸ்வரை தரிசித்த தாகக் கூறினார் அல்லவா? அது எப்படி?

தாம் சங்கல்பித்துக் கொண்டதை நிறைவேற்றக்கூடிய அளவுக்கு அவர் சத்திய சங்கல்பராக இருந்தார். அவர் தம்முடைய இறுதி நேரத்தில் கொண்டிருந்த, கோகர்ணத்து ஈசனை தரிசிக்க வேண்டும் என்ற சங்கல்பம் நிறைவேறவே செய்தது. அதுபற்றி கோகர்ணம் ஸ்ரீமடத்து நிர்வாகியான கோபால சாஸ்திரிகள், ஸ்ரீசிவா அபிநவ சச்சிதானந்த நரஸிம்ம பாரதி ஸ்வாமிகளிடம், ''நான் நேற்று கண்ணயர்ந்தபோது, கோகர்ணேஸ்வரர் கோயிலில் இருப்பதாக உணர்ந்தேன். அப்போது மஹாஸ்வாமிகள் ஆலயத்துக்கு வந்தார். நான் பரபரப்புடன் எழுந்து அவரை நமஸ்கரித்தேன். என்னுடைய க்ஷேம லாபங்களைப் பற்றி அக்கறையுடன் விசாரித்தார். பிறகு, இறைவனுக்கு கற்பூர நீராஞ்ஜனம் செய்துவிட்டுத் திரும்பிவிட்டார்' என்று தெரிவித்தார்.

அப்போதுதான் ஸ்வாமி களுக்கும் ஸ்ரீசாரதா பீட நிர்வாகிகளுக்கும், முந்தினநாள் தாம் கோகர்ணேஸ்வரரை தரிசித்து வந்ததாக ஸ்ரீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகள் கூறியதன் பொருள் விளங்கியது. அனைவரும் மெய்சிலிர்த்து மஹா ஸ்வாமிகளை மானசிகமாக நமஸ்கரித்தனர்.

துங்கா நதி தீரத்தில்... - 12

சந்நியாசம் மேற்கொண்ட ஒருவர், தம்முடைய குருநாதர் இன்று சரீரத்துடன் தம்முடன் இல்லையே என்பதற்காக துக்கப்படலாமா என்று நம்மில் பலருக்கு ஒரு சந்தேகம் தோன்றக்கூடும்.

தம்முடைய 9வது வயதில் தம்மை ஸ்ரீசாரதா பீடத்து பீடாதிபதியாக ஸ்வீகரித்துக்கொண்டு, சுமார் 13 ஆண்டுகளுக்கும் மேலாக தாயினும் மேலாக அன்பு செலுத்தி, ஸ்ரீசாரதா பீடத்தை நிர்வகிப்பதற்கான அத்தனை விஷயங்களுடன், சகல சாஸ்திர ஞானங்களையும் தமக்கு தக்கபடி தெளிவுடன் உபதேசித்த தம்முடைய குருநாதர் சரீரத்துடன் இல்லாத நிலையில், மனம் துக்கிப்பது இயல்புதானே! சந்நியாசம் கொண்டுவிட்டால் இதயத்தில் ஈரம் வற்றிப் போய்விடுமா என்ன? அன்பு நிறைந்த இதயமும், உயிர்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் கொண்டிருப்பதுதானே சந்நியாச தர்மத்தின் இலக்கணம்! எனவே, தம்முடைய குருநாதரின் பிரிவு குறித்து ஸ்வாமிகள் துக்கப் பட்டதில் தவறேதும் இல்லை.

சில நாட்களில் ஸ்வாமிகளுக்கு வியாக்யான சிம்மாஸனத்தில் கிரமப்படி பட்டாபிஷேக வைபவம் நடைபெற்றது.

தினசரி தம்முடைய குரு நாதரின் அதிஷ்டானத்தில் நித்திய பூஜைகளைச் செய்து வந்ததுடன், தம்முடைய ஆஸ்ரமத்துக்கு உண்டான தர்மங்களைக் கடைப் பிடித்துக்கொண்டும், ஸ்ரீசாரதா சந்திரமெளலீஸ் வர பூஜைகளை கிரமப்படி செய்து கொண்டும், கூடவே ஸ்ரீசாரதா பீடத்து நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டு தம்முடைய ஆன்மிகப் பயணத்தைத் தொடரத் தொடங்கிய ஸ்வாமிகள், தம் குருநாதரைப் போலவே எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தியதுடன் ஓர் அரிய சாதனையையும் நிகழ்த்தி அருளினார். அந்தச் சாதனை...

தொடரும்...

தொகுப்பு: க.புவனேஸ்வரி

படம்்: ஜெ.வேங்கடராஜ்