Published:Updated:

சக்தி சங்கமம்

இசைக்கு எல்லையே இல்லை!டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா கலந்துரையாடல் தொடர்ச்சி...

சக்தி சங்கமம்

இசைக்கு எல்லையே இல்லை!டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா கலந்துரையாடல் தொடர்ச்சி...

Published:Updated:

பெயருக்கேற்றாற்போலவே, ஒவ்வொரு பதிலிலும் ஒரு குழந்தைத்தனம் கொஞ்சுகிறது டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவிடம். எந்தக் கேள்வி கேட்டாலும், சட்சட்டென்று பதில் சொல்லிவிட்டு, கலகலவெனச் சிரிப்பதில் தான் அவரின் ஆரோக்கியமும் தெளிவும் நிறைந்திருக்கிறதுபோலும்.

சக்தி சங்கமம்

? திருவிளையாடல்ல 'ஒருநாள் போதுமா’ன்னு ஆணவ த்வனியில பாடியிருப்பீங்க. இன்னொரு படத்துல 'தங்கரதம் வந்தது வீதியிலே’னு குழைஞ்சும் இழைஞ்சும் பாடியிருப்பீங்க. இதுக்காக, என்ன மாதிரியான முயற்சிகள் எடுத்துக்கிட்டீங்க?'' என்று கேட்டார் வாசகி ராதா சுதர்சனம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இதுக்குப் பெரிசா மாத்திப் பாடணும், முயற்சி எடுத்துப் பாடணும்னெல்லாம் அவசியம் இல்லை. படத்துல அந்தக் கேரக்டரோட குணாதிசயம் என்ன, எந்தச் சூழல்ல இந்தப் பாட்டு வருது, இந்தப் பாட்டின்போது யார் யாரெல்லாம் இருப்பாங்க, பாட்டுக்கு வாயசைக்கிற நடிகர் யாருனு டைரக்டர்கிட்டயும் மியூஸிக் டைரக்டர்கிட்டயும் முழு விவரத்தை யும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டுப் பாடிட வேண்டியதுதான்!''

''இந்தக் காலத்தில் சங்கீதம் கற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்கு உங்களின் அறிவுரை என்ன?''  இது வாசகர் சேதுராமனின் கேள்வி.

சக்தி சங்கமம்

''அரைகுறையா கத்துக்காதீங்க; முழுசா கத்துக்கோங்க. ஆசைப்பட்டு கத்துக்கோங்க. அப்பா ஆசைப்படுறார், அம்மா விரும்பறானு இல்லாம, நீங்களா விரும்பிக் கத்துக்கணும். சங்கீதத்துல எல்லா நுணுக்கங்களையும் ஈடுபாட்டோட கத்துக்கணும். அந்தக் காலத்துல எல்லாம் இந்த அளவுக்கு வசதிகளோ வாய்ப்புகளோ இல்லை. இங்கேருந்து அங்கே போய் கத்துக்கறதுக்கு, போயிட்டு வர வாகன வசதிகளும் கிடையாது.

இன்னிக்கு எல்லாமே இருக்கு. கத்துக் கொடுக்கறதுக்கும் நிறையப் பேர் இருக்காங்க. போக வர, சாலையும் நல்லாருக்கு. வாகன வசதிகளும் இருக்கு. ரேடியோ, டிவி, மேடை, சபாக்கள்னு நிறைய வாய்ப்புகளும் கிடைக்குது. போட்டிகள் வைக்கிறாங்க. பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்துறாங்க. அதனால, எதைக் கத்துக்கறதா இருந்தாலும், ஆழ்ந்த ஈடுபாட்டோடயும் உத்வேகத்தோடயும் குழந்தைகள் கத்துக்கணும்!'' என்றார் பாலமுரளி கிருஷ்ணா.

''அமிர்தவர்ஷினி ராகத்துல பாடினா மழை வரும்னு சொல்லுவாங்க. இப்போதைய தேவை மழை. அந்த அமிர்தவர்ஷினி ராகத்தைப் பத்தி சொல்லுங்களேன்...'' வாசகி உமாவின் இந்த கேள்விக்கு, உற்சாகத்துடன் பதில் சொல்கிறார் பாலமுரளிகிருஷ்ணா...

''அமிர்தவர்ஷினி ராகம் அற்புதமானது. அதை எப்ப எதுக்குப் பாடுறோங்கறதைப் பொறுத்துதான் எல்லாமே இருக்கு. மேடைல சாதாரணமாவும் பாடலாம். மழை வரணுங்கற பிரார்த்தனையோடயும் பாடலாம். மழை பெய்யணும்னு நினைச்சுப் பாடுறதுக்கும் மேடைல சாதாரணமா பாடுறதுக்குமான  வேறுபாட்டை, அமிர்தவர்ஷினி ராகத்தைக் கவனிச்சுப் பார்த்தா புரிஞ்சுக்க முடியும்.

அந்த ராகம்னு மட்டும் இல்லை. பொதுவாவே சங்கீதம்னா அது மகா சமுத்திரம். இந்த உலத்தைப் போலவே பரந்து விரிஞ்சது இசை. ஸ்ருதி, லயம், நாதம்னு சொல்லிண்டே இருக்கலாம். இப்ப இந்த உலகத்துல, பூமி இருக்கு. ஆகாயம் இருக்கு. அந்த வானத்துல, நட்சத்திரங்கள் இருக்கு. சந்திரன் இருக்கு. சூரிய பகவானும் இருக்கார். இந்த உலகத்துல சூரிய சந்திரர்கள் இருக்கிற வரைக்கும், சங்கீதமும் இருக்கும். இசை, எல்லைகளே இல்லாதது. வரையறைகளைக் கடந்தது. இன்னும் இன்னும் எவ்வளவோ இருக்கு. அதுல நான் கத்துக்காதது கூட ஏராளம்'' என்று கண்கள் விரியச் சொல்கிறார் பாலமுரளி கிருஷ்ணா.

சக்தி சங்கமம்

''இசையில் சிறந்து விளங்கியவன் ராவணன். அவனுடைய வீணை இசைக்கு, அந்த ஈசனே மயங்கிப் போனார்னு புராணம் சொல்லுது. அப்பேர்ப்பட்ட ராவணனுக்கு, பிறன்மனை நோக்கும் புத்தி ஏன் வந்துச்சு? இந்த இசை, அவன் குணத்தை பக்குவப்படுத்தவில்லையே... ஏன்?'' என்று வாசகி சுகன்யா கேட்டார்.

''பகவானை நாமெல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டாமா? நல்ல நல்ல விஷயங்கள் நடக்கும் போது, சுத்தி நடக்கற எதையும் நாம கவனிக்கறதே இல்லை. அதேநேரம், ஏதாவது கஷ்டம்னு வந்தாத்தானே, கடவுள் பத்தியே நினைக்கிறோம். சீதைக்கு இப்படியொரு ஆபத்துன்னா, கடவுள் சும்மா இருக்கமாட்டார். அப்ப, கடவுளை இந்த உலகமே அறிந்துகொள்ளும். துன்பம் வரும்போது பகவான் கண்டிப்பா, நிச்சயமா வருவார்னு நாம எல்லாரும் நம்பிக்கையோட பிரார்த்தனை பண்ணணும். அப்பதான் வருவார். அதுக்காகத்தான் ராவணன், பிறன்மனை, சீதாதேவி, கடத்தல் எல்லாமே! இதனால நமக்கு ஒழுக்கசீலரான ஸ்ரீராமர்ங்கற அவதாரக் கதையைத் தெரிஞ்சுக்க முடிஞ்சுதே....'' என்று வாசகர்களிடம் எதிர்க்கேள்வி கேட்டார்.

''இசையால மனசை அமைதிப்படுத்த முடியுமா? கோபத்தைக் குறைக்க முடியுமா?'' இது வாசகி பத்மலதாவின் கேள்வி.

''மனசுக்கு அமைதி வேணும்னு நினைச்சு, இசையைக் கேட்டா, நிச்சயம் மனசு அமைதி ஆயிடும். இசையால அழ வைக்கவும் முடியும். கோபமாக்கவும் முடியும். இல்லாத வீரத்தை ஒருத்தருக்கு வரச் செய்யவும் முடியும்.

பாடுறவங்களைப் போலவே கேக்கறவங்களும் லயிச்சுப் போகணும். அப்படி அமைஞ்சிட்டா, மன சஞ்சலமெல்லாம் பறந்து போயிடும். கோபம் மொத்தமும் காணாமப் போயிடும்'' என்று சொல்ல... ''உங்களுக்குக் கோபம் வராதாமே.... அப்படியா?'' என்று

பத்மலதாவே இன்னொரு துணைக் கேள்வியைக் கேட்டார்.

''ஆமாம். கோபமே வராது. வாசிக்கும்போது, மேடைல யாராவது தப்புப் பண்ணிட்டா கோபம் வருமான்னு கேப்பாங்க. அப்பவும் வராது எனக்கு. கச்சேரில, வரிசையா 'இந்தப் பாட்டு வேணும்... அந்தப் பாட்டு பாடுங்க’னு துண்டுச் சீட்டு கொடுத்துக்கிட்டே இருக்கும்போது கோபம் வருமானு கேட்டிருக்காங்க. அப்பவும் எனக்குக் கோபம் வந்தது இல்லை.

நான் கேக்கறேன்... ஏன் கோபப்படணும்? கோபப்பட்டு என்னாகப் போகுது? ஒருவிஷயத்தை முடிக்கணும்னு கோபமா சொன்னாலும் அந்தக் காரியம் முடிஞ்சிடும். அதேநேரம் சாந்தமா சொன்னாலும் காரியம் நடந்திரும். அப்படீன்னா... சாந்தமாவே சொல்லிட்டு, அன்பாவே சொல்லிட்டுப் போயிடலாமே..! எதுக்குக் கோபப்பட்டு, குய்யோமுறையோனு கத்தணும்? கோபப்படணும்னு அவசியமே இல்லை'' என்று சாந்தமாய்ப் பார்த்தபடி புன்னகைத்தார் பாலமுரளி கிருஷ்ணா.

சக்தி சங்கமம்

''நீங்களே புதுப்புது ராகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறீர்கள். இதுபற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்'' என்று வாசகி புவனேஸ்வரி கேள்வி எழுப்பினார்.

''இசையில் மொத்தம் 72 மேளகர்த்தாக்கள். ஆனால் அந்த மேளகர்த்தாக்களைப் பற்றி ஒரு சர்ச்சை உண்டு. சம்பூர்ண மேளகர்த்தா, அசம்பூர்ண மேளகர்த்தானு ரெண்டுவிதம். இதுல, அசம்பூர்ண மேளகர்த்தாவை உருவாக்கியவர் வேங்கடபதி. சம்பூர்ண மேளகர்த்தாவுக்கு கோவிந்தாச்சாரி என்பவர்தான் கர்த்தா. தியாகராஜர், சம்பூர்ண விதத்தைத்தான் கையாண்டார். எனக்கும் சம்பூர்ணம்தான் பிடிக்கும்.

முத்துசாமி தீட்சிதர், அசம்பூர்ண மேளகர்த்தாவை போற்றினார். எந்த ராகத்துக்கும் ஒரு பாடல் இருக்கணும். அப்போதுதான், அந்தப் பாட்டைப் பாடும்போதுதான் ராகம் புரியும். ஒரு ராகத்துக்கு பலப்பல பாட்டுகள் இருந்தா, இன்னும் விசேஷம். ஆனா, ஒரு ராகத்துக்கு ஒரேயொரு கீர்த்தனை மட்டுமே இருந்தா, அதை அடிக்கடி பாடணும். அப்படிப் பாடினாத்தான், அந்த அபூர்வ ராகம் வெளியே தெரியவரும். நான் கச்சேரிகள்ல, ரெண்டு பாட்டுப் பாடிட்டு, ஒரு அபூர்வ ராகம் பாடுறது வழக்கம்.

கவிதை, பாடல் எழுதறதை முறையாக் கத்துக்கலை நான். சம்ஸ்கிருதம் தெரியாது எனக்கு. பாடுவேனே தவிர, எழுதத் தெரியாது. திடீர்னு தோணுச்சு. குருநாதர்கிட்ட பாடிக்காட்டினேன்.

'அற்புதம்... ரொம்ப நன்னா இருக்கு. நிறையப் பண்ணு...’னு ஆசீர்வாதம் பண்ணினார். அப்புறம் குருவை வைச்சே கீர்த்தனை தோணுச்சு. அதுக்கு நிறைய கீர்த்தனைகள் எழுதினேன். எல்லாமே இறையருள். குரு கிருபை.

அப்பய்ய சாஸ்திரி தெரியும்தானே! ஒருநாள், காலைல நாலு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினார். அப்ப, சின்னவயசுதான் எனக்கு. கதவைத் திறந்து பார்த்ததும், என் அப்பா ஆடிப்போயிட்டார். 'எழுப்பு... இன்னும் பத்து நிமிஷத்துல உன் பையன் என்னோட வரணும்’னார் சாஸ்திரி. எழுந்து, குளிச்சு நாங்க ரெண்டு பேரும் ரெடியானதும்... 'நீ வரவேணாம். அவன் மட்டும் வந்தாப் போதும்’னார்.

சாஸ்திரிகளை நிமிர்ந்து என்னால பார்க்கவே முடியலை. அவர் கண்கள்ல அப்படியொரு ஒளி. தேஜஸ். பயமா இருந்துச்சு. ஏதோ மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டது மாதிரி அவரோடயே போனேன்.  

அவர் வீட்டு பூஜையறையில் என்னை உட்கார வெச்சு. ''இங்கே பார். சில விஷயங்களை உங்கிட்ட சொல்லச் சொல்லி, அம்பாள் உத்தரவு. அதைச் சொல்லத்தான் இங்க கூட்டிட்டு வந்தேன். கவிதைங்கறது ஒரு அற்புதமான படைப்பு. அதுக்கு சில விதிமுறைகள் இருக்கு. அதுவொரு அறிவியல். சில முக்கியக் குறிப்புகள் உனக்குத் தெரியணும். கவிதைக்கு ஒரு கனம் அவசியம். மீட்டர் ரொம்பவே முக்கியம். அதெல்லாம் இப்படித்தான் இருக்கணும்’னு சொல்லிட்டு, மடை திறந்த வெள்ளம் போல, சங்கீதம் தொடர்பான குறிப்புகளை சொல்லிக்கிட்டே போனார். அப்பய்ய சாஸ்திரி சொன்ன எல்லாமே அப்படியே என் மனசுல பதிஞ்சிடுச்சு.

வீட்டுக்கு வந்து, எழுதின கீர்த்தனைகளையும் சாஸ்திரி சொன்ன குறிப்புகளையும் வைச்சுப் பார்த்தப்ப, ஒவ்வொரு கீர்த்தனையும் கனகச்சிதமா அமைஞ்சிருந்து. நான் கரகரன்னு அழுதுட்டேன். எல்லாமே தெய்வ சங்கல்பம். வேற என்ன சொல்றது... சொல்லுங்க'' என்றபோது, நெகிழ்ந்தும் வியந்தும் நின்றது வாசகர் கூட்டம்.

''வெளிநாட்டில் கச்சேரிகளுக்குச் சென்ற அனுபவம் பற்றிச் சொல்லுங்களேன்'' என்று வாசகர் சேதுராமன் ஆர்வத்துடன் கேட்டார்.

சக்தி சங்கமம்

''வெளிநாட்டில், கச்சேரிக்காகத்தான் போயிருக்கேன். சுத்திப் பாக்கவோ, ஜாலியா இருக்கவோ போனதில்லை. போகாத வெளிநாடே இல்லைன்னுதான் சொல்லணும். நம்மூரைப் போலவே  அங்கேயும் ரசிகர்கள் ரொம்ப உற்சாகமா வரவேற்பாங்க. ஆர்வமா இருப்பாங்க. அவங்களைப் பாக்கறதும் அவங்களோட பேசுறதும்  ரொம்ப உற்சாகமான விஷயம். அதனால வெளிநாட்டுக்குப் போனாலும்கூட, இடங்களை சுத்திப் பாக்கறதுக் கெல்லாம் நேரமே இருக்காது. அதை நான் விரும்புறதும் இல்லை. ரசிகர்களை சந்திக்கறதைவிட ஒரு குதூகலம் இருக்க முடியுமா என்ன?’' என்று சொல்லும்போதே, உற்சாகம் பரவுகிற அவரின் வார்த்தைகளில்.

''இப்படித்தான் கச்சேரி பண்ணணும். பூஜை இப்படித்தான் செய்யணும் என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே கட்டுப்பாடுகள் வைத்துக் கொண்டிருக் கிறீர்களா?'' என்று வாசகி உமா கேட்டார்.

''பூஜையாகட்டும், கச்சேரியாகட்டும்... இப்படிக்

கட்டுப்பாடுகள் வெச்சுக்கிட்டா, அப்புறம் மனசும் புத்தியும் அந்தக் கட்டுப்பாட்டையே பிடிச்சுண்டு நிக்கும். மனசு ஒரு திசை. புத்தி இன்னொரு திசை. இது ரெண்டும் இப்படிப் போயாச்சுன்னா, அப்புறம் பூஜைலயும் ஆத்மார்த்தம் இருக்காது. கச்சேரியை யும் லயிச்சுப் பண்ணமுடியாது.

அதனால, பூஜைகளை எப்ப செய்யணும்னு தோணுதோ, அப்ப ஆத்மார்த்தமா செய்றவன் நான். அதேபோல கச்சேரி புக்காகி, மேடை ஏறிட்டேன்னா, அந்த நாலஞ்சு மணி நேரமும் பாட்டுலதான் முழுக்கவனமும் இருக்கும்.

அதேபோல, 'கச்சேரி அன்னிக்கி மௌன விரதம் இருந்து குரலை பாதுகாப்பீங்களா? ஐஸ்க்ரீம் அறவே தொடமாட்டீங்களா?’ன்னெல்லாம் கேப்பாங்க சிலபேர். 'மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே’னு பாடியிருக்கேன். ஆனா, கச்சேரிக்கும் மௌனமா இருக்கறதுக்கும் சம்பந்தமே இல்லை. ஐஸ்க்ரீமை ரொம்ப விரும்பிச் சாப்பிடுவேன். சாயந்திரம் கச்சேரின்னா, ஒரு மூணு மணி வாக்குல, சுடச்சுட பஜ்ஜி சாப்பிட்டு, ஸ்ட்ராங்கா ஒரு காபி குடிச்சிட்டு, அப்புறம் ஒரு ஐஸ்க்ரீம்கூட சாப்பிட்டுவிட்டு, மேடையேறியிருக்கேன்.

இந்தப் பாட்டு, இசை, ஞானம், கீர்த்தனை, பெயர், புகழ் எல்லாமே பகவான் கொடுத்த பெருங்கருணை. கொடை. அப்படியிருக்கும்போது, குரல் வளத்தோட இருக்கறதுக்கு நாம என்ன பண்ணினாலும் ஒண்ணும் ஆகப்போறதில்லை. தெய்வக் கணக்குக்கு முன்னாடி, நீங்க என்ன.... நான் என்ன... நாமெல்லாம் எம்மாத்திரம்?

இசையுலகத்துக்கும் இறைவனுக்கும் எப்பவும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன். அவ்ளோதான்...'' என்று ஒரு குழந்தையைப் போல் கபடமின்றிச் சிரிக்கிறார் பாலமுரளி கிருஷ்ணா.

அந்தச் சிரிப்பே ஒரு ஆலாபனைதான். சங்கீதம்தான்!

'இசைக்குக் கவிதையா... கவிதைக்கு இசையா? எப்படி இருக்க வேண்டும்?'

ஆர்.மைதிலி, திருவில்லிபுத்தூர்

''இது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அது முக்கியமில்லை. என்னைப் பொறுத்தவரை, கவிதைங் கறது ஓர் உண்மையை, அல்லது அழகை அல்லது ஒரு விவரத்தைச் சொல்லாமல் சொல்வதுன்னு நினைக்கிறேன்.

ஆந்திராவுல இருந்தப்ப, ஒருநாள்... ராப்பிச்சைக்காரன் ஒருத்தன், நாட்டுப்புறப் பாடல் ஒண்ணைப் பாடிக்கிட்டே போனான். அவனோட குரலைவிட, இசையைவிட, அவன் பாடின வார்த்தைகள் என்னை ஈர்த்துச்சு. இன்னும் காது கொடுத்தேன். பிரமிச்சுப்போயிட்டேன்.

வெள்ளைங்கற நிறத்தைப் பத்திப் பாடுறான். சங்கு வெள்ளைன்னான். பிரம்மா வெள்ளைன்னான். புகழ் வெள்ளைன்னான். தடக்குன்னு, சிவப்பு உதடுகளின் புன்னகை வெள்ளைனு ஒரு வரியைப் பாடி னான். ஆடிப்போயிட்டேன் நான்.

சங்கு வெள்ளைங்கறது பார்த்தாலே தெரிஞ்சிடும். பிரம்மாவையும் புகழையும் வெள்ளையைக் குறியீடா வைச்சுச் சொன்ன கற்பனை. சரி... அதெப்படி சிவப்பு இதழின் புன்னகை வெள்ளை?!

இதழ்களை விரிக்கும்போது, உள்ளிருந்து தெரிகிற பற்களைச் சொல்கிறான். அவனோட முகம் நினைவுல இல்லை. ஆனா, அந்தப் பாட்டும் வரிகளும் இன்னும் மறக்கலை எனக்கு. இதுமாதிரியான நிறைய விஷயங்கள்... சுவாரஸ்ய சம்பவங்கள்... புத்தகமா வந்திருக்கு. பத்திரிகையாளர் ராணிமைந்தன், தகவல்களை எங்கிட்டேருந்து வாங்கி, ரொம்பப் பிரமாதமா தொகுத்து எழுதியிருக்கார். அதுல இன்னும் இன்னும் பல விஷயங்கள் இருக்கு.

(ராணிமைந்தன் எழுதிய அந்தப் புத்தகத்தின் தலைப்பு... 'சங்கீதப் பெருங்கடல்’; கலைஞன் பதிப்பகம் வெளியீடு)

தொகுப்பு: வி.ராம்ஜி

படங்கள்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism