இறைவனை அறிவதும் அடைவதும்  ஒரு சிலராலேயே முடியும். அப்படி அறிந்தவர்களில், எல்லோராலும் இறைவனைப் பற்றிச் சொல்லிவிட முடியாது. ஒரு சிலரால் மட்டுமே சொல்ல முடியும். அப்படியே சொன்னாலும் இறைவன் குறித்து முழுமையாகச் சொல்லுதல் என்பது அரிதான ஒன்று!  

மிகுந்த அனுபவமும், பக்குவமும், தெளிவும், பாண்டித்தியமும், கவித்துவமும், ஞானமும் பெற்றவர்களால் மட்டுமே, தாங்கள் அனுபவித்த தெய்விகத்தை, நமக்குத் தெரிந்த சிலவற்றின் மூலம் கோடிட்டுக் காட்ட முடியும். அதை உணர்ந்து, புரிந்துகொள்ள வேண் டியது நமது பொறுப்பு. அப்படித்தான்... ஆசார்ய புருஷர்களாலும், சித்தர்களாலும் துதிக்கப்பட்ட ஸ்ரீராமனை, மாகவி ஒருவர் துதித்திருக் கிறார். அவரும், ஸ்ரீராமனை முழுவதுமாக துதிக்கமுடியாத தன்னுடைய இயலாமையையே வெளிப்படுத்தி இருக்கிறார்!

முதலில் பாடலைப் பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெய்யோன் ஒளிதன் மேனியின்

பாடல் சொல்லும் பாடம்

விரி சோதியில் மறைய

பொய்யோ எனும் இடையாளொடும்

இளையானொடும் போனான்

மையோ மரகதமோ மறி

கடலோ மழைமுகிலோ

ஐயோ! இவன் வடிவென்பதோர்

அழியா அழகுடையான்.

உண்மைதான்! அழியா அழகுடையான் என ராமரை வர்ணித்த  இந்தப் பாடலும் அழியா அழகுடையதாகத் திகழ்கிறது. இதை எழுதியவர் கம்பர். ராமர், சீதை, லட்சுமணன் ஆகிய மூவரும் வனவாசத்துக்காக சென்ற காட்சியைத் தன் அகக் கண்களால் தரிசித்து, அப்படியே பாடலாகப் பதிவு செய்திருக்கிறார் கம்பர்.

அடிக்கரும்பின் சுவை போல, இந்தப் பாடலும் நிறைவு பெறும் போது, அளவிடமுடியாத பொருட்சுவை கொண்டதாக உள்ளது.  அப்படியே நாமும் அனுபவிக்கலாம்.

ராமர், சீதை, லட்சுமணன் மூவரும் மரவுறி தரித்துச் செல்கிறார்கள். அப்போது, சூரியன் தன் கதிர்களை விரித்து ஒளிமயமாக உலா வரத் தொடங்குகிறான். ஆனால், ராமரின் திருமேனியில் இருந்து வெளிப் பட்ட ஒளி வெள்ளத்தின் முன்னால், அந்தச் சூரியனே ஒளி மங்கிக் காணப்படுகின்றானாம். ராமரின் பின்னால் மெலிந்த இடை கொண்டவளாக இருக்கிறதா, இல்லையா எனும்படியான இடைகொண்டவளாக, சீதாதேவி செல்கிறாள். அடுத்து, தொண்டு செய்வதில் இளைக்காதவரான இளையவர் லட்சுமணன் செல்கிறார்.

இவ்வாறு, பாடலின் முற்பகுதியில் ராமரைப் பற்றி விரிவாக வர்ணித்து, கூடவே ஒருசில வார்த்தைகளால் மட்டுமே சீதையையும் லட்சு மணனையும் வர்ணித்த கம்பர், பாடலின் பிற்பகுதியில் மறுபடியும் ராமதரிசனம் செய்து வைக்கப் புறப்பட்டுவிட்டார்.

பாடல் சொல்லும் பாடம்

மேனியின் விரிசோதி என்றவர்... மேலும், மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ என நான்கு விதமாகச் சொல்லிப் பூரிக்கிறார். அபூர்வமான சொற்பிரயோகங்கள் இவை.

முதலில், மையோ...

தன் தேஜஸால் சூரியனையே ஒளி மங்கச் செய்த, அப்படிப்பட்ட ராமரை எளியவர்களால் நெருங்க முடியுமா?

ஏன் முடியாது? 'அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன்’ என்று குகன் நெருங்க வில்லையா?’ ராமர், கண்ணுக்குக் குளுமை (மை) போன்றவர்; யாரும் நெருங்கலாம், ராமரின் அருளைப் பெறலாம்.

இவ்வாறு 'மையோ’ என்று வர்ணித்த கம்பருக்கு சந்தேகம் வந்தது. மை, சில தருணங்களில் கண்களை உறுத்தும்; எரிச்சல் உண்டாக்கும். ஆனால், ராமர் அப்படி இல்லையே! உறுத்தாத, எரிச்சலை உண்டாக்காத, குளுமையான ஒளியை வீசும் மரகதமாயிற்றே! ஆகவே, 'மரகதமோ?’ என்கிறார்.

அப்போதும் கம்பருக்குத் திருப்தி ஏற்படவில்லை. சந்தேகம் வந்துவிட்டது.

'ஆஹா! மரகதம் என்பது... பணக்காரர்கள் மட்டுமே நெருங்கக்கூடியது. ராமர் அப்படி இல்லையே! படகோட்டி முதல் வானரங்கள் வரை ராமரை நெருங்கினார் களே! மேலும், மரகதம் என்பது வெறும் கல்தான். ஆனால் ராமரோ, கல்லையே பெண்ணாக்கியவர் ஆயிற்றே! ஊஹும்! இது சரிப்பட்டு வராது. கல் எங்கே? கருணைக் கடலான ராமர் எங்கே?’ என்று கருதியவர், 'ராமரின் கருணையை அளவிடவும் முடியாது, ஆழங்காணவும் முடியாது’ என்பதை விளக்க, 'மறிகடலோ’ என, ராமரைக் கடலாகக் கூறிக் கம்பர் ஆனந்தப்பட்டார்.

அதற்கும் ஒரு தடை வந்தது!

கடல் உப்பு நீரால் நிறைந்தது. ஸ்ரீராமர் இனிமையானவர் ஆயிற்றே! கடல், தேடிப்போய் உதவி செய்யாது; ராமரோ நாடிப் போய் நலம் செய்பவர். ஆகவே, கடலையும் ராமருக்கு இணையாகச் சொல்லக்கூடாது. 'ராமன், அடியார்கள் தன்னைத் தேடி வர வேண்டும் என்று இல்லாமல், அவர்கள் இருக்கும் இடம் நாடிப் போய் அருள்மழை பொழிபவன். கருணை மழை பொழியும் கார்மேகம்...’ என்பதை

விளக்க, 'மழை முகிலோ...’ என்கிறார் கம்பர்.

அப்படியும் கம்பருக்குப் பிரச்னை வருகிறது.

'அடடா! மழைமேகம் என்று ராமரைச் சொல்லிவிட்டேனே! மழை மேகம் என்பது உண்மைதான். அது மழை பொழிவதும் உண்மைதான். ஆனால், கார்மேகம் மழை பொழிந்ததும் வெளுத்துப் போய்க் களை இழந்துவிடு்ம். ராமன் அப்படி இல்லையே! ராமனின் கருணை மழைக்கு அளவேது? அவர், என்றுமே கருணை மழை பொழியும் கார் மேகமாயிற்றே! ஆகையால் ராமரை, மழை முகிலாகவும் சொல்ல முடியாது’ என்று கம்பர் திகைத்துப்போய் விடுகிறார்.

எனவேதான், 'இந்த ராமனின் வடிவழகு அழியா அழகுடையது. அதை நான் எவ்வாறு வர்ணிப்பேன்’ என்று கருதியவர், 'ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்’ எனப் பாடலை முடிக்கிறார். அவர் சொல்லும் 'ஐயோ’ வை 'அய்... யோ!’ எனச் சொல்லி உச்சரிக்கவேண்டும்.

அப்போதுதான் கம்பரின் உள்ளமும் கவித்துவமும் புரியும்.

தெய்வ அருளும், கவித்துவமும், பக்குவமும் பெற்ற கம்பரே,

தெய்வத்தை வர்ணிக்க முயன்று தோற்றுப் போயிருக்கிறார் என்றால்... ஏதோ ஓரிரு நூல்களைப் படித்துவிட்டு, 'எனக்குத்தான் தெய்வம் சொந்தம். மற்ற யாரையும் நான் ஒப்புக்கொள்ள முடியாது. எனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும்...’ என்பவர்களை என்ன சொல்வது?

(இன்னும் படிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism