Published:Updated:

வேதமே வாழ்க்கையாய்...

என் கடன் இறைபணி செய்து கிடப்பதே..சாருகேசி

வேதமே வாழ்க்கையாய்...

என் கடன் இறைபணி செய்து கிடப்பதே..சாருகேசி

Published:Updated:

சென்னை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம், நெடுஞ்செழியன் வீதியில் அமைந்திருக்கிறது 'யாக்ஞவல்கிய குருகுலம்’. நமது தேசத்தின் பண்டைய மரபுப்படி இங்கே பயிலும் மாணவர்களுக்கு உணவு, தங்கும் இடம் எல்லாம் இந்த குருகுலத்தில்தான். தனது இல்லத்தையே வேதபாடசாலையாக்கி, குருகுலமாக நடத்தி வரும் அதன் தலைவர் பரசுராம கனபாடிகளுக்கு வயது 101.

வேதமே வாழ்க்கையாய்...

பல்லாண்டு  காலமாகத் தொடரும் வேதப் பணி, இவரைத் தேடி அடைந்து தங்களுக்குப் பெருமை சேர்த்துகொண்ட பல விருதுகள், காஞ்சி ஸ்ரீமகாபெரியவாளின் திருவாக்கால் 'பிரம்ம ரிஷி’ என்றழைக்கப்பட்ட பெரும்பாக்கியம்... என நீள்கிறது பிரம்மஸ்ரீ பரசுராம கனபாடிகளின் வாழ்நாள் சாதனைகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவரைச் சந்தித்து ஆசி வாங்குவது நமக்கெல்லாம் பெரும் கொடுப்பினை அல்லவா? ஒரு ஞாயிறன்று காலைப் பொழுதில் குருகுலம் சென்றோம். உள்ளே நுழையும்போதே பரசுராம கனபாடிகளின் கணீர் குரலில் 'சர்வாணி பூதான்’ என்ற ஈசாவாசிய உபநிஷத ஸ்லோகம் கேட்கிறது. குருநாதரை மாணாக்கர்களும் தொடர, நம் செவியையும் சிந்தையையும் நிறைத்தது மந்திர உச்சாடனம். பாடம் முடிந்ததும்தான் நம்மைக் கவனிக்கிறார். அருகில் சென்று வணங்கியதும், கைகளால் தொட்டு நம்மை வரவேற்கிறார்.

வேதமே வாழ்க்கையாய்...

''பாடம் சொல்லிக்கொடுக்கிற நேரத்தில் அப்பாவின் முழுக் கவனமும் அதில்தான் இருக்கும். அதுதான் அவருக்கு முக்கியம்'' என்று புன்னகைக் கிறார், அவருடைய இளைய மகன் சாரநாதன். அவரே தொடர்ந்து, ''இரண்டு மாதங்கள் முன்பு வரை, உட்கார்ந்தபடி மாணவர்களுக்கு வேத சாஸ்திர பாடங்களைச் சொல்லிக்கொடுத்து வந்தார். சமீபத்தில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், கட்டிலில் சாய்ந்து அமர்ந்து, வேத பாடம் சொல்லித் தருகிறார்'' என்றார்.

''இவ்வளவு சிரமப்பட வேண்டுமா?' என்று நாம் கனபாடிகளிடம் கேட்க, 'என்னால வேதம் சொல்லிக் கொடுக்காம இருக்கமுடியாது.  குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதைவிட வேறு ஆனந்தம் என்ன இருக்கு?' என்று சிரிக்கிறார் பரசுராம கனபாடிகள்.

''1980லிருந்்து வேதம் சொல்லித் தருகிறார். பூஜை முடித்து 8 மணிக்கு வந்தால், மறுபடி பாடங்கள் ஆரம்பமாகிவிடும். ஆரம்பத்தில் முதல் குழுவில் மூன்று பேர் இருந்தார்களாம். பின்னர் மெள்ள மெள்ள அதிகமாகி, 78 பேர் ஒரு குழுவில் இருக்குமளவுக்கு வளர்ந்தது. இப்போது, தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் ஐந்து பேர் படிக்கிறார்கள்'' என்கிறார் மகன் சாரநாதன்.

''அப்பாவுக்கு பூர்விகம், சொந்த ஊர்...''

வேதமே வாழ்க்கையாய்...

''கும்பகோணத்திலிருந்து பத்து கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் இஞ்சிக்கொல்லைதான் அப்பா பிறந்த ஊர்...''  மகன் சொல்ல ஆரம்பிக்க அவரை இடைமறித்த கனபாடிகள், பழைய விஷயங்களை நினைவுகூர்ந்து பேசினார்... ''பிறந்தது 1913 ம் வருஷம் ஆகஸ்ட் 15. இப்ப எனக்கு 101 வயசு ஆச்சு. காவிரி ஸ்நானத்துக்காகவே அல்லூர் வந்தேன். அங்கே, காஞ்சி மடத்தின் ஆஸ்தான வித்வானானமுத்து கிருஷ்ண சாஸ்திரிகள் என்கிட்ட வேதம் கத்துக்கிட்டார். அவருக்குக் காது சரியா கேட்காது. உரக்க சொல்லிக் கொடுப்பேன். அப்போ என்னைப் பார்த்துட்டுத்தான் பெரியவா என்னை 'பிரம்மரிஷி’ன்னு கூப்பிட ஆரம்பிச்சார்! இன்னிக்கும் இங்கே குழந்தை களுக்கு நான் வேதம் சொல்லிக்கொடுக்க, பெரியவாதான் காரணம். அவர் சொல்லித்தான் செய்யறேன்!' என்று அவர் சொல்லும்போது குரல் நெகிழ்கிறது. திருச்சி பக்கமிருந்து யார் வந்தாலும் அவர்களிடம், 'பிரம்ம ரிஷியைத் தெரியுமோ?’ என்று கேட்பாராம் மஹா பெரியவா. அந்த அளவுக்கு மஹா ஸ்வாமிகளின் அபிமானம் பெற்றவர் பரசுராம கனபாடிகள். இவருக்குச் சேதுராமன், கல்யாணராமன், விசுவநாதன், சாரநாதன் என நான்கு மகன்கள். சரஸ்வதி, பிருந்தா என  இரண்டு மகள்கள்.

ஆரம்பத்தில் ராமேஸ்வரம் சுப்ரமணிய சாஸ்திரி களிடம் சம்ஸ்கிருத அடிப்படைப் பாடங்களைக் கற்றுக்கொண்டாராம். பின்னர் மதுரையில் ராமேஸ்வர தேவஸ்தான பாடசாலையில், மஹா மஹோபாத்யாய கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்

மற்றும் ராமசுப்ப சாஸ்திரிகளிடம் காவ்ய பாடம். பிறகு, குளித்தலையில் உள்ள வைகாநல்லூர்

சரஸ்வதி அம்மாள் சுக்ல யஜுர் வேத பாட சாலையில், கண்வகுலபதி சிதம்பர கனபாடி களிடம் சுக்ல யஜுர் வேத கிரமாத பாடம் கற்றுக்கொண்டிருக்கிறார். கண்வகுலபதி சிதம்பர கனபாடிகளே இவருக்குக் குரு. அவர் மைசூர் ஆஸ்தான வித்வான். அவர் பெங்களூரு சென்றதும்,

அவரைத் தொடர்ந்து இவரும் பெங்களூரு சென்று

தர்க்கம், சாஸ்திரம், சாஹித்யம் எல்லாம் அவரிடமே கற்றுக்கொண்டாராம். அங்கே ஐந்து வருடம் சலக்ஷண யஜுர் வேத கணந்தம், கிருஹ்ய பாஷ்யம் எல்லாம் படித்தார். திருச்சி பழூரில், சிறுகமணி

ஸ்ரீ எஸ்வி.சுப்பிரமணிய சாஸ்திரிகளிடம் அத்வைத வேதாந்த பிரஸ்தனத்ரய பாஷ்யம் படித்தாராம். தந்தையைப் பற்றி சாரநாதன் விளக்கியபோது பிரமித்து நின்றோம். ''1975லிருந்து வேதம் எழுத ஆரம்பித்தார். கனம் மட்டுமின்றி பதம், கிரமம், ஜடை எல்லாம் எழுதியிருக்கிறார். 1981ல் சென்னைக்குப் பேருந்தில் வந்தபோது நடந்த விபத்தில் வலது கை முறிந்து கட்டு போட்டிருந்தபோதும், எழுதுவதை நிறுத்தவில்லை.  இடக் கையால் வலது கையை ஆதரவுக்காகப் பிடித்துக்கொண்டு, கை வலிக்க வலிக்க எழுது வார்' என்கிறார் கடைசி மகன் சாரநாதன். 'எழுத ஆரம்பிச்சுட்டா... சாப்பாடு, தூக்கம் எதுவும் கிடையாது அவருக்கு!' என்கிறார் கனபாடிகளின் மனைவி லட்சுமி. இவருக்கு வயது 94.

இப்படிச் சிரமப்பட்டாவது ஏன் எழுத வேண்டும்? படிக்கிற மாணவர்களுக்கு பாடப் புத்தகம் வேண்டுமே? கைப்பிரதி மிக மோசமாகி, சிதிலமாகிவிட்டது என்பதால் வருகிற தலைமுறைக்காக எழுதிவைத்தாராம். அவருடைய கையெழுத்து அச்சடித்த மாதிரி அத்தனை அழகாக இருக்குமாம்.

அதுமட்டுமா? 'சுக்ல யஜுர்வேதத்தில் இவர் ஓர் அத்தாரிட்டி! 'சுக்ல யஜுர் வேத சாம்ராட்’ என்று பட்டமே வாங்கியிருக்கார்'' என்கிறார் அவருடைய மூத்த மகன் சேதுராமன். 'எங்கள் மூல குரு யாக்ஞவல்கியர்தான்.  இந்த வேதம் வந்ததே யாக்ஞவல்கியரிடம் இருந்துதான்' என்று எதிர் சுவரில் மாட்டப் பட்டிருக்கும் யாக்ஞவல்கியரின் ஓவியத்தைச் சுட்டிக்காட்டியபடி சொல்கிறார் கனபாடிகள்.  

''திருவிழாக்கள், கும்பாபிஷேகம் என எதற்கு அழைத்தாலும் மறுக்காமல் சென்றுவிடுவார் அப்பா. சன்மானம் எல்லாம் எதிர்பார்ப்பது கிடையாது. அவர்கள் கொடுத்ததை வாங்கிக் கொண்டு திருப்தியுடன் திரும்பிவிடுவார். அங்கே வேதம் சொல்லும் வாய்ப்பு கிடைத்ததே, அது போதும் என்பார்!'' என்று மகன்கள் விளக்க... 'முக்கியமான சதஸ்களுக்கு எல்லாம் போய் வந்திருக்கேன், 95 வயதுவரை. அகில இந்திய வேத மாநாடு நடக்கிற இடங்களில் எல்லாம் கலந்துகொண்டிருக்கேன். கும்பகோணம் அத்வைத சபை, வேத தர்ம பரிபாலன சபை எல்லாத்துக்கும் போயிருக்கேன். என்னை 'கும்பகோணம் சுவாமிகள்’னு கூப்பிடுவா!'' என்கிறார் பரசுராம கனபாடிகள்.

வேதமே வாழ்க்கையாய்...

2007ம் வருடம், சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இவருக்கு 'மஹா ஸ்வாமி புரஸ்கார்’ விருது கொடுத்தபோது, ஒரு வெள்ளி விளக்கும் கொடுத்து கௌரவித்தார்கள். ஜெயின் டி.வியில் இவர் சுக்ல யஜுர் வேதம் பற்றி, காலை 5:30 மணி முதல் 6 மணி வரை சொல்லும் உரை இவருக்குப் பல ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. 'சத பத பிராம்மணம்’ என்ற நூலை முதல்முதலாக இவர் எழுதி முடித்ததும், டி.ஆர். சுவாமிநாதன் என்பவர் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். உஜ்ஜயினியில் உள்ள சாந்தீபனி ராஷ்ட்ரீய வேத வித்யா பிரதிஷ்டான் அதை இங்கே வந்து யாக்ஞவல்கிய குருகுலத்திலேயே வெளியிட்டது. 2000 பக்கங்களும், 100 அத்தியாயங்களும் கொண்ட இந்தப் புத்தகத்தில் யாகங்கள், ஹோமங்கள் முதலியனவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. பத புத்தகம் ஒன்றையும் தனியே வெளியிட்டிருக்கிறார்.

'உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம் என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?' என்று கனபாடிகளிடம் கேட்டபோது, ''மகா பெரியவா ஆக்ஞைப்படி தற்போதைய பெரியவா ஜெயேந்திரருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தது!' என்கிறார் நெகிழ்ச்சியுடன். மொத்தத்தில் பிரம்மஸ்ரீ பரசுராம கனபாடிகளுக்கு வேதமே வாழ்க்கை என்றால், அவரது வாழ்வும் அனுபவங்களும் நமக்கான வேதங்கள்!

விருதுகள் பெற்ற பெருமை!

வேதமே வாழ்க்கையாய்...

பிரம்மஸ்ரீ பரசுராம கனபாடிகள் வாங்கிக் குவித்திருக்கும் விருதுகள் ஏராளம். 1998ல் இந்தியக் குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது. பூனா, வாரணாசி, சென்னை, அஹமது நகர், நாசிக், காஞ்சிபுரம் என்று பல நகரங்களில் உள்ள வேத அமைப்புகளும் இவருக்கு விருதுகள் வழங்கியுள்ளன.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் அளித்த பாராட்டு, காஞ்சி ஸ்ரீசங்கர மடம், சிருங்கேரி சாரதா பீடம், சகடபுரம் சுவாமிகள், பரனூர் கிருஷ்ண பிரேமி சுவாமிகள், சுவாமி சிவானந்தர், பெங்களூரு இளைஞர் சங்கம், விவேகானந்தா கல்லூரி, சென்னை சம்ஸ்கிருத கல்லூரி... என்று இவரை பாராட்டி கௌரவித்தவர்களின் பட்டியல் வெகு நீளமானது! திருமலை திருப்பதி தேவஸ்தானம் இவருடைய நூற்றாண்டை, காஞ்சிபுரம் மடத்தில் வைத்து ஒரு விழாவாகவே கொண்டாடி பாராட்டியதாம். அப்போது இவரை ஓர் ஆம்புலன்ஸில் வைத்து அழைத்துச் சென்றார்களாம்!

இந்திரா காந்தி தேசிய பாரம்பர்யப் பாதுகாப்பு அறக்கட்டளை, இவரிடம் சுக்ல யஜுர் வேதத்தைப் பதிவு செய்து, தில்லி வேத டிரஸ்ட்டுக்கு அளித்திருக் கிறது. அங்கு அதைப் பொக்கிஷமாக பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

படங்கள்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism