Published:Updated:

பரமனைத் தரிசிக்க பாதைகள் வேண்டாமா?

மா.அ.மோகன் பிரபாகரன், பா.குமரேசன் படங்கள்: மு.சரவணக்குமார்

பரமனைத் தரிசிக்க பாதைகள் வேண்டாமா?

மா.அ.மோகன் பிரபாகரன், பா.குமரேசன் படங்கள்: மு.சரவணக்குமார்

Published:Updated:

சிவ சிவ

 இல்லை இல்லை இல்லையென்று
இயம்புகின்ற ஏழைகாள்
இல்லையென்று நின்றதொன்றை
இல்லை என்னலாகுமோ

சிவவாக்கியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இல்லாத ஒன்றைப் பற்றி 'உண்டு  இல்லை’ எனும் விவாதம் எழ வாய்ப்பே கிடையாது. ஆனால் இருக்கின்ற ஒன்றைப் பொறுத்தவரை, அது இருப்பதை உணர்ந்தோமா இல்லையா என்பதுதான் விவாதத்தின் கருப்பொருளாக இருக்கும்!

உலகினைப் படைத்தும் காத்தும் அருளும் இறைவனைப் பற்றிய ஞானமும்கூட அப்படித்தான். எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்தப் பரம்பொருளின் இருப்புக்கு அத்தாட்சிகள் தேவையில்லை. தேனின் தித்திப்பாக, தென்றலின் குளுமையாக, மலர்களில் மணமாக, குழந்தையின் சிரிப்பாக, சுற்றத்தாரின் அன்பும் அரவணைப்புமாக... ஒவ்வொன்றிலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறான் இறைவன்.

அது மட்டுமல்ல, காலத்தின் கோலத்தால் மறைக்கப்பட்டிருக்கும் தன் திருக்கோயில்களையும்கூட அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறான். அப்படித்தான் அரசானைமலை அக்னீஸ்வரரும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

பரமனைத் தரிசிக்க பாதைகள் வேண்டாமா?

சமீபத்தில், மெளலி என்ற அன்பர் ஒரு புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு மலையின்மீது சிவன் கோயில் இருப்பதாகவும், அங்கே தினமும் அகத்தியர் வந்து வழிபடுவதாகவும் இருந்தது. அந்த அன்பருக்கு மலைகளின்மீது அமைந்திருக்கும் சிவாலயங்களை தரிசிப்பது என்றால் மிகவும் பிரியம்.

எனவே புத்தகத்தில் இருந்த அடையாளங்களைக் கொண்டு அரசானை மலைக்கோயிலுக்கு வந்திருக்கிறார். இங்கே வந்த பிறகுதான், தான் புத்தகத்தில் படித்தது அந்தக் கோயில் இல்லை என்பது அவருக்குத் தெரியவந்தது. இருந்தாலும் அவருக்கு இந்த மலைக்கோயிலின் மீதும், இங்கே கோயில் கொண்டிருக்கும் மகேஸ்வரன் மீதும் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டதால்,  ஒரு குழுவாக பக்தர்களைச் சேர்த்துக்கொண்டு இந்தக் கோயிலுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வரத் தொடங்கிவிட்டார். நமக்கும் அவர்தான் அதுபற்றி விவரம்் தெரிவித்தார்.

''ராகுகேது பெயர்ச்சி திருநாளான ஜூன் 21 அன்று கணபதி ஹோமம் ருத்ர ஹோமத்துடன் எங்கள் வழிபாட்டை ஆரம்பித்தோம். அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடந்து முடிய... வானில் மூன்று முறை கருடன் வட்டமிட்டது கண்டு சிலிர்த்துப் போனோம். நம்மையும் வழி்பாட்டையும் இந்த ஈசன் நேசமுடன்  ஏற்றுக்கொண்டுவிட்டதாக நாங்கள் அடைந்த பூரிப்புக்கு அளவே இல்லை'  பரவசத்துடன் விவரிக்கிறார் மெளலி.

ஈரோடு மாவட்டம், சேலம்கோவை நெடுஞ்சாலையில் உள்ள விஜயமங்கலத்துக்கு அருகில் அமைந்துள்ள கொங்கம்பாளையம் என்னும் கிராமத்தில் சிறிய மலையின்மீது அரசானை அக்னீஸ்வரர் திருக்கோயில் கொண்டிருக்கிறார்.

பரமனைத் தரிசிக்க பாதைகள் வேண்டாமா?

அரசு அண்ணாமலை என்பது மருவி அரசானைமலை என்று மாறியது என்று ஒருசாராரும், பாண்டவர்களின் அஞ்ஞாத வாசத்தின்போது அர்ஜுனன் இங்கு வந்து வழிபட்டுச் சென்றதால், அர்ஜுன மலை என்று பெயர் பெற்று, அதுவே காலப்போக்கில் அரசானைமலை என்று மாறியது என்று ஒருசாராரும் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும், இங்கே அருள்புரியும் அக்னீஸ்வரரும் அரசாத்தாளும் தம்மை நாடி வந்து வழிபடும் பக்தர்களுக்கு உடனுக்குடன் அருள்புரிகிறார்கள் என்பதில் மட்டும் இருவேறு எண்ணங்களுக்கு இடமே இல்லை.

சமணம், சைவம் என்று அந்தந்த மதத்தில் பிடிப்பு கொண்ட ஆட்சியாளர்களுக்கு ஏற்ப இந்த பகுதியில் இருந்த வழிபாட்டு தலங்களும் பல மாற்றங்களை அடைந்தன. அரசானை மலையும் அதில் ஒன்று. ஒரு காலத்தில் இது, சமணர் வழிபாட்டுத் தலமாகவும் இருந்திருக்கலாம் என்கிறார்கள் சிலர்.

இந்தக் கோயிலுக்கும் விஜயமங்கலம் எனும் பகுதியில் உள்ள நெட்டை கோபுரத்துக்கும் (சமணக்் கோயில்) இடையில் சுரங்கப்பாதை ஒன்று இருப்பதாகவும், அப்பகுதியை ஆண்ட விஜயபுரி மன்னன் தன் குடும்பத்தோடு வந்து அரசானைமலை அக்னீஸ்வரரை வழிபடுவதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை அது என்றும் செவிவழித் தகவல்கள் உண்டு.

இந்தக் கோயிலின் வரலாறு முழுமையானதாகத் தெரியவில்லை என்றாலும்கூட, அக்காலத்தில்  அக்னீஸ்வரரும் அரசாத்தாளும் மிகுந்த வரப் பிரசாதியான தெய்வங்களாக ஊர்மக்களால் பெரிதும் போற்றிக் கொண்டாடப்பட்டிருக்கின்ற னர் என்பது தெரிகிறது. ஈஸ்வரன் இங்கு மேற்கு நோக்கி அருள்வது விசேஷம் என்கிறார்கள்.

சம்பந்தருக்கும் சுந்தரருக்கும் சிவபெருமான் பொற்காசுகளைக் கொடுத்தது பற்றி நமக்குத் தெரியும். அதேபோல் இங்கே கோயில் கொண்டுள்ள அரசாத்தம்மனும் திருமணத்துக்கு தாலி செய்ய தங்கம் கொடுத்தாளாம். முற்காலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஏழைப் பெண்கள் அரசாத்தம்மனிடம் வந்து வணங்கும்போது, அரசாத்தம்மன், 'அதோ அங்கே இருக்கிறது தங்கம். எடுத்துக் கொள்’ என்பாளாம். அதேபோல அங்கே தங்கம் இருக்குமாம். வேண்டிக்கொண்டவர்கள் அதை எடுத்துக் கொள்வார்களாம். பிறகு, அரசாத்தம்மனின் அருளால் வசதி வந்ததும் அம்பிகையிடம் பெற்ற தங்கத்தைத் திரும்பக் கொடுத்து விடுவார்களாம். இப்படி ஒரு செவிவழிச் செய்தியை அங்கே கேட்க நேரிட்டது.

ஒருமுறை, அர்ச்சகர் ஒருவரை அழைத்துச் சென்றிருக்கிறார் மெளலி. அந்த அர்ச்சகர் அக்னீஸ்வரருக்கு அபிஷேகம் செய்துவிட்டு, அரசாத்தம்மனுக்கு அபிஷேகம் செய்தபோது, அந்த விக்கிரகத்தில் பெண் தெய்வத்துக்கு உரிய தனபாரங்கள் இல்லாததும், விக்கிரகத்தின் கரங்களில் சங்கும் சக்கரமும் இருப்பதையும் கண்டு,  அது விஷ்ணுவின் விக்கிரகம் என்று கூறியுள்ளார். பக்தர்கள் சிலரும் அதை ஆமோதிக்கிறார்கள்.

எனில், அரசாத்தம்மனின் திருவுருவம் எங்கே போனது? அந்த அரசாத்தம்மனுக்கே வெளிச்சம்!

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடுகளும், சமபந்தி விருந்தும் நடைபெற்று வருகின்றன. மற்றபடி எப்போதாவதுதான் மக்கள் வந்து வழிபடுவது வழக்கம். அன்பர் மெளலி, நண்பர்கள் சிலரோடு ஒரு குழுவாக ஞாயிற்றுக் கிழமைதோறும் செல்லத் துவங்கியதில் இருந்து, வேறு பக்தர்களும் வரத் துவங்கியுள்ளனர்.

பரமனைத் தரிசிக்க பாதைகள் வேண்டாமா?

கருவறையின் உள்ளே ஒன்பது சிறிய சிலைகள் காணப் படுகின்றன. அவை நவகிரகங்கள் என்று கூறப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக சில பக்தர்களின் முயற்சியால் கோயிலில் பௌர்ணமி இரவன்று கிரிவலம் செல்லுவது நடை பெறுவதாகத் தெரிவித்த ஊர்மக்கள் தொடர்ந்து, அருகில் இருக்கும் கைத்தமலை, சிவன்மலை, சென்னிமலை அளவுக்கு இந்த அரசானைமலை பிரசித்தி பெறாதாதது வருத்தமளிப்பதாக ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

''கோயிலில் வழிபாடுகள் தங்குதடையின்றி தொடரவும், திருப் பணிகளில் கவனம் செலுததவும் எங்களுடன் வரும் பக்தர்களின் குழுவில் இருந்தே சிலரைக் கொண்டு ஒரு திருப்பணிக் குழு அமைத்திருக்கிறோம். முதற்கட்டமாக... மலைப் பாதையைச் சீர்படுத்தி படிகள் அமைக்க, அறநிலையத் துறை மற்றும் வனத்துறையினரிடம் முறையான அனுமதி பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறோம்'' என்று விவரிக்கும் மெளலி, ''தினமும் அதிகாலை நேரத்தில் இந்த மலையில் ஏறி இறங்குபவர்கள் ஆரோக்கியமாக வாழலாம். அவர்களை எந்த நோயும் நெருங்காது. தற்சமயம் அமாவாசை நாட்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்களுக்கு இந்தக் கோயில் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்' என்கிறார்.

தொடர்ந்து அவரும் அவரது நண்பர்களும், ''ஸ்வாமியை பக்தர்

களே அபிஷேகித்து வழிபட்டு வருகிறார்கள். இந்த பகுதிக்கு அருகில் வசிக்கும் அர்ச்சகர்கள் எவரேனும் மனமுவந்து ஸ்வாமியை பூஜிக்க முன்வந்தால் நன்றாக இருக்கும்.' என்று வேண்டுகோள் வைக்கிறார்கள்.

அரசானை மலை வாழும் சிவனருளால் அன்பர்களது வேண்டுகோள்களும், இங்கே ஆலயம் அழகுற அமையவேண்டும் என்ற அவர்களது விருப்பமும் விரைவில் நிறைவேறும்.

பக்தர்கள் கவனத்துக்கு...

ஈரோடு மாவட்டம், சேலம்-கோவை நெடுஞ்சாலையில் அமைந் துள்ளது விஜயமங்கலம். கோவை மற்றும் சேலத்தில் இருந்து இந்த ஊருக்கு பேருந்து வசதிகள் உள்ளன. விஜயமங்கலம் டோல்கேட் அருகில் இறங்கி, இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள அரசானை மலைக்கோயிலுக்கு ஆட்டோ மூலம் செல்லலாம்.

பரமனைத் தரிசிக்க பாதைகள் வேண்டாமா?

*  மலைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் குடிநீர் பாட்டில்கள், பூஜைப் பொருட்கள் அனைத்தையும் அருகில் உள்ள விஜய மங்கலத்தில் இருந்தே வாங்கிச் செல்வது நலம்.

* மலைப் பாதை கரடுமுரடாகவும், செங்குத்தாகவும் இருப்பதால், வயதானவர்கள் தகுந்த துணையுடன் செல்வதுதான் நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism