Published:Updated:

கேட்ட வரங்களை வாரி வழங்கும் காரைக்குடி கொப்புடை அம்மன்! #AadiSpecial

கேட்ட வரங்களை வாரி வழங்கும் காரைக்குடி கொப்புடை அம்மன்! #AadiSpecial
கேட்ட வரங்களை வாரி வழங்கும் காரைக்குடி கொப்புடை அம்மன்! #AadiSpecial

சிவாலயங்கள் பலவற்றுக்கும் இல்லாத ஒரு விசேஷம் சிதம்பரத்துக்கு உண்டு. மூலவரும் உற்சவரும் ஒருவராகவே இருப்பது வேறு எங்கும் காணாத அதிசயம். அதைப்போல் காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் ஆலயத்திலும் மூலவரும் உற்சவரும் ஒன்றே. இன்னொரு சிறப்பம்சம் இங்கே கருப்பண்ணசாமி குதிரையின் மேல் அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கிறார். பொதுவாக காளி, துர்கை போன்ற உக்கிர தெய்வங்கள் வடக்கு நோக்கித்தான் இருப்பார்கள். ஆனால் இங்கு அம்பாள் கிழக்கு நோக்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

குழந்தைப்பேறு வேண்டிவரும் பெண்களுக்கும், திருமணத்தடையைப் போக்கவேண்டி வருவோருக்கும் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறாள் காரைக்குடி கொப்புடை அம்மன். இதைத்தவிர, சிறு வியாபாரிகள் முதல் வர்த்தகப் பிரமுகர்கள் வரை புதிதாகத் தொழில் தொடங்கினாலோ, தொழில் அபிவிருத்தி வேண்டுமென்றாலோ இந்தக் கொப்புடை அம்மனைத்தான் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர். கேட்பவருக்கு கேட்ட வரங்களை வாரி வழங்கும் தாயாகத் திகழ்கிறாள்.

காரைக்குடி நகரின் நடுவில் கோயில் அமைந்துள்ளது ஒரு தனிச் சிறப்பாகும். கோயிலின் நுழைவாயிலில் உள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. அம்மனின் அருள் பெற உள்ளே நுழைந்ததும், ‘சோபன மண்டபம்’  காட்சி தருகிறது. இடப்புறம் விநாயகர் சந்நிதியும், வல்லத்துக் கருப்பர் சந்நிதியும் உள்ளன. வலப்புறம் வண்ண மயில்வாகனன் தண்டாயுதபாணியாக அருள்புரிகிறார்.

 தலவரலாறு:

ஒரு காலத்தில் இந்தப்பகுதி முழுவதும் வனப்பகுதியாக இருந்தது. இதில் காரை மரங்கள் அதிகம் வளர்ந்திருந்தன. அவற்றைச் சமன்படுத்தி மக்கள் குடியேறியதால்,  'காரைக்குடி' என்று அழைக்கப்படலாயிற்று. காரைக்குடியிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது செஞ்சை சங்கராபுரம். இங்கு காட்டம்மன் கோயில்  கொண்டிருக்கிறார். இங்குள்ள காட்டம்மனும் கொப்புடை நாயகியும் அக்காள் தங்கை. காட்டம்மனுக்கு ஏழு பிள்ளைகள். கொப்புடை நாயகிக்கோ பிள்ளைகள் இல்லை.

அக்காளின் குழந்தைகளைப் பார்க்க அரிசி மாவில் செய்யப்பட்ட கொழுக்கட்டைகளைச் செய்து எடுத்துக்கொண்டு தங்கை பாசத்துடன் சென்று பார்த்து வருவது வழக்கம். ஆனால், அக்காளுக்கோ புத்தி கோணாலாக வேலை செய்தது. தன் தங்கை,  தனது பிள்ளைகளைப் பார்க்க அடிக்கடி வருவதை விரும்பவில்லை. அதனால், தன் பிள்ளைகளை ஒழித்து வைத்துவிட்டு தங்கையிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். இதைக் குறிப்பால் உணர்ந்த கொப்புடை நாயகி, 'ஒளித்து வைக்கப்பட்ட பிள்ளைகளை இனி பார்க்க வரமாட்டேன்' எனக் கூறி உக்கிரமாகப் போய் அமர்ந்து விட்டார். அக்கா தன் தவற்றை உணர்ந்து கலங்கினார். கொப்புடை நாயகி தன் அக்காவை மன்னித்து அருளினார் என்பது இந்தக் கோயிலின் தலவரலாறு. 

ஆதிசங்கரர் தனது ஶ்ரீசக்கரத்தை வைத்து வழிபட்ட தலம் என்பதால், இந்த ஆலயத்துக்குள் அருகில் வரும்போதே இதன் ஆகர்ஷண சக்தியை நம்மால் உணர முடியும். காரைக்குடியின் காவல் தெய்வம், கொப்புடைநாயகி அம்மன் !காரைக்குடியின் காவல் தெய்வம், கொப்புடை நாயகி அம்மன், காரைக்குடிக்கு மட்டுமல்ல, தென் மாவட்ட மக்களுக்கே வளம் பல தந்து, நலமுடன் காக்கும் நாயகியாகத் திகழ்கின்றாள்.

"ஓங்கார வடிவத்து உள்ளிருந்து  உலகீன்ற உமையவள் ஆதிசக்தி 
 பாங்காக மரை நான்கும் பரிமளித்துப் பல்லுயிர்கள் வாழப் பராமரித்து
 ஆங்காங்கே  அற முயர நெறி வளர அருள் சுரந்துரட்சிக்கும் கொப்புடையாளை
 நீங்காது நெஞ்சகத்தே வணங்கிடுவோர் நிகரில்லா செல்வத்தைப் பெறுவர்தமே!"

எனும் இந்தப் பதிகத்தைப் பாடி நாம் இருக்கும் இடதிலிருந்தே அம்மனை நினைத்து வழிபட்டால், நம் இன்னல்களைத் தீர்த்து வைப்பாள்.