Published:Updated:

கல் தூண்கள்... காலபைரவர் சிலை சிதைக்கப்பட்டதா? மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் என்னதான் நடக்கிறது?

கல் தூண்கள்... காலபைரவர் சிலை சிதைக்கப்பட்டதா? மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் என்னதான் நடக்கிறது?
கல் தூண்கள்... காலபைரவர் சிலை சிதைக்கப்பட்டதா? மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் என்னதான் நடக்கிறது?

பழைமையான கோயில்களில் இருக்கும் தூண்கள், அந்தக் கோயிலின் கட்டுமானத்துக்காகவும், அழகுக்காகவும்  உருவாக்கப்பட்டவை அல்ல. சிற்பங்கள் வழி, ஓவியங்கள் வழி நம் பண்பாடும், கலாசாரமும் வெகு நுட்பமாக அவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நம் தொன்ம அடையாளமாக மிஞ்சியிருக்கும் இதுபோன்ற கலைச் சின்னங்களை, அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் தங்கள் அலட்சியத்தால் சிறிது சிறிதாக அழித்து வருகிறார்கள் என்று குமுறுகிறார்கள் மக்கள். அதற்கு உதாரணமாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் நிலையைச் சுட்டிக் காட்டுகிறார்கள். 

தமிழகத்தில் ஆயிரம் ஆண்டு பழைமையான கோயில்களைப் பற்றி  யுனெஸ்கோ அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. முதற்கட்டமாக, கடந்த மார்ச் மாதம் பழைமையான  10 கோயில்கள் பற்றிய அறிக்கையை யுனெஸ்கோ வெளியிட்டது.  மணப்பாடு நாகநாதசாமி கோயில் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோயில்களில் நடக்கும் வரம்பு மீறல்களை அந்த அறிக்கை வெளிப்படையாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது. 

’மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரை குளத்தைச் சுற்றி தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இருந்த பழைமையான தூண்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன: அதன் காரணமாக கோயில் ஸ்திரத் தன்மைக்கே ஆபத்து; சிற்ப சாஸ்திர விதிகளும் மீறப்பட்டுள்ளன’ என்று யுனெஸ்கோவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ’ அறநிலையத்துறையின் தலைமை ஸ்தபதியான முத்தையா ஸ்தபதியிடம் இந்த புனரமைப்புப் பணிகளுக்கு ஒப்புதல் பெறவில்லை’ என்றும்  அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ’தீட்டப்பட்டுள்ள வர்ணங்களும் சிற்ப சாஸ்திர விதிகளுக்கு முரணாக இருக்கிறது’ என்றும் ’திருப்பணிகள் அனைத்தும் அவசர கதியில் செய்யப்பட்டுள்ள’தாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.  ’இதுபோன்ற பழைமையான கோயில்களை புனர்நிர்மாணம் செய்யும்போது கலாசாரம், பாதுகாப்பு  உள்ளிட்டவைகளை நன்கு ஆராய்ந்து, முழுமையான ஆய்வு நடத்திய பிறகே செய்யவேண்டும்’ என்றும் யுனெஸ்கோ அறிவுறுத்தி இருக்கிறது. இந்த அறிக்கை, பக்தர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை உருவாக்கி இருக்கிறது. 

’மீனாட்சி அம்மன் கோயிலில் விதிகள் மீறப்படுகின்றன’  என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வரும்  ஹரிஹரன் என்பவர் இதுகுறித்து  வருத்தத்தோடு பேசினார்.

“ மீனாட்சியம்மன் கோயிலின் மையப்பகுதியில் இருக்கும் பொற்றாமரைக் குளத்திற்கு பல்வேறு பெருமைகள் உள்ளன. முன்பு இந்தக் குளத்தில் நீராட அனுமதி அளிக்கப்பட்டது. இப்போது அனுமதி இல்லை. இந்தக் குளத்தை அழகுபடுத்துவதாக சொல்லி பல விஷயங்களை மாற்றிவிட்டனர். தெப்பத்தில் சிமென்ட் , பளபளப்பான கற்களைப் பயன்படுத்தியதால் பழைமையான கற்கள் உடைய ஆரம்பித்துள்ளன. பழைமையான தூண்களைக் காணவில்லை. கோயில் கும்பாபிஷேகத்தின்போது கூட குளத்தில் தண்ணீர் இல்லை. தற்போது களிமண் நிரப்பி வாட்டர் சர்குலேசன் செய்து வருகின்றனர். குளத்தைச் சுற்றி திருக்குறள் பொறிக்கப்பட்ட கல் தூண்கள் இருந்தன. இப்போது அவற்றைக் காணவில்லை. கோயிலில் இருந்த காலபைரவர் சிலையையும் காணவில்லை. இது குறித்து நிர்வாகத்தில் விசாரித்தபோதும் முறையான பதில் இல்லை. தட்சிணாமூர்த்தியின் சிலை வழிபாடுகளிலிருந்து எடுக்கப்பட்டு ஆயிரம் கால் மண்டபத்தில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது. கோயிலின் சில பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அரசு உடனடியாக இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்து கோயிலின் புனிதத் தன்மையைக் காக்க வேண்டும்” என்றார் அவர். 

இது தொடர்பாக கோயில் இணை ஆணையர் நடராஜனிடம் பேசினோம் "கோயில் புனரமைப்புப் பணி அவசரகதியில் செய்யப்படவில்லை. 1991 முதல் திட்டம் தீட்டப்பட்டு நிதானமாகத்தான் நடக்கிறது. பழைமையான கட்டுமானத்திற்கு எவ்வித பங்கமும் நேராமல் மிகுந்த கவனத்தோடு பணிகளைச் செய்து வருகிறோம்.  கல்லில் விரிசல் ஏற்படுகிறதா என்று பார்க்க, கண்ணாடி துண்டுகளை ஒட்டி குறிப்பிட்ட காலம்வரை   அதைக் கண்காணித்த  பிறகுதான் பணிகளை ஆரம்பிக்கிறோம். பல தலைசிறந்த வல்லுநர்கள் குழு இணைந்துதான் இந்த வேலைகளைச் செய்கிறார்கள் .எந்தவித விதி மீறல்களும் இங்கு நடக்கவில்லை. நிதி ஆணையத்தின் நிதி மற்றும் கோயில் பணம் 3 கோடியே 71 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் இந்தப் பணிகள் நடந்து வருகின்றன.  
குளத்தின் தெற்கு பகுதியில் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டன. கிழக்குப் பகுதியில் முடியும் நிலையில் உள்ளன. கற்களை நிறுவும் பணிதான் மிச்சமிருக்கிறது. மிக விரைவில் இந்தப் பணிகள் முடிந்து விடும். 

பழைமையான தூண்கள் எல்லாவற்றையும் மீண்டும் நிறுவ முடியாது. அதில் சில அதிக உயரமாகவும், சில உயரம்  குறைவாகவும் உள்ளன. சில தூண்கள் மிக மோசமான பாதிக்கப்பட்டுள்ளன. பழைய தூண்களைக் காணவில்லை என்று தேவையில்லாமல் பரபரப்பை கிளப்புகிறார்கள். இங்கிருந்து எடுக்கப்பட்ட தூண்கள் அனைத்தும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி எதுவும் எனக்குத் தெரியாது. அவர்கள் எங்களிடம் எந்தத் தகவலையும் கேட்டுப் பெறவில்லை. எங்களிடம் கேட்கும்போது போதிய விளக்கம் அளிப்போம்." என்றார் அவர் .

எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இந்தக் காலக்கட்டத்திலும், பழைமையான கோயில்களைப் போல உறுதியாகவும், நுட்பமாகவும் ஒரு கோயிலை நம்மால் வடிவமைக்க முடியாது. நம் முன்னோரின் கலைத்திறனுக்கும், கற்பனைக்கும் ஆதாரமாக இருக்கும் இதுபோன்ற பண்பாட்டுச் சின்னங்களை அடுத்த தலைமுறைக்குப் பாதுகாத்துத் தரவேண்டியது நமது கடமை. அலட்சியத்தால் அந்தக் கடமையிலிருந்து விலகினால் காலம் நம்மை மன்னிக்காது..! 

-----