புரட்டாசி சாரதா நவராத்திரி காலத்தில் அம்பாள் தரிசனம் நலம் பல பயக்கும் என்கின்றன ஞானநூல்கள். அவ்வகையில் விசேஷ திருத் தலங்களில் அருளோச்சும் தேவியர் நால்வரின் தரிசனம் இங்கே...

விஜயவாடா கனகதுர்கா

மாலையணிந்து... விரதமிருந்து...

ந்திர மாநிலம் கிருஷ்ணா நதிக்கரையில் இந்திர கீலார்த்திக் குன்றங்களின் நடுவில் அழகுறை அமைந்திருக்கிறது ஸ்ரீகனகதுர்கா கோயில்.

இந்திரகீலன் எனும் அடியவன் ஒருவன், தனது கர்ப்பத்தில் அம்பிகை மகளாகப் பிறக்கவேண்டும் என்று விநோத விருப்பம் கொண்டான். அதற்காக தவம் இயற்றினான். அவனுக்கு வரம் தர வேண்டும். அதேநேரம் இயற்கையான நியதிக்கு விரோதம் ஏற்பட்டுவிடக் கூடாது. ஆண் வயிற்றில் மகவு பிறப்பது எப்படி?  அம்பிகை ஓர் உபாயம் சொன்னாள். இந்திரகீலனை மலையாக மாறி, காத்திருக்கச் செய்தாள்; அசுரர்களை அழித்ததும், அந்த மலையின் குகையில் சுயம்புவாய் எழுந்தருளி, பக்தனின் விருப்பத்தை நிறைவேற்றினாள் என்கிறது தலபுராணம்.

தேவி தரிசனம்

அகத்தியர், பரசுராமர், பரத்வாஜர், பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர், ஆதிசங்கரர் ஆகியோர் வழிபட்ட தலம் இது. சென்னையில் இருந்து புதுடெல்லி, கொல்கத்தா, காசி, ஹைதராபாத் செல்லும் ரயில்கள் விஜயவாடா வழியாகச் செல்லும். விஜயவாடா பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அம்பிகையின் ஆலயம்.

கிருஷ்ணாவில் நீராடி, மலையேற வேண்டும். படிக்கட்டுகளில் மஞ்சள் தீற்றி பொட்டு வைத்து வழிபட்டு அம்பிகையிடம் கோரிக்கை வைக்கிறார் கள் பக்தர்கள். ஐயப்ப சாமிக்கு மாலையணிந்து விரதம் இருப்பது போன்று, ஸ்ரீகனகதுர்காவுக்கும் மாலை போட்டு விரதம் கடைப்பிடிப்பது இந்தத் தலத்தின் சிறப்பம்சம்!

கட்டீல்  துர்கா!

இளநீர் காணிக்கை!

தேவி தரிசனம்

ர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள தலம் கட்டீல். 'கடீ’ எனும் சொல்லுக்கு மையம் என்று பொருள்.

கனககிரி எனும் மலைக்கும் பர்வஞ்சே எனும் இடத்துக்கும் மையமாக உள்ளது இந்தத் தலம். இங்கே நந்தினி நதியின் மையத்தில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி. மேலும், முனிவர் ஒருவர் தந்த சாபத்தின் பொருட்டு தேவ லோக தெய்வப் பசுவான நந்தினி, இங்கே நதியாகப் பாய்வதாகவும்,  அம்மன் அருளால் அவள் விமோசனம் பெற்றதாகவும் கூறுவர்.

சும்பநிசும்பர் எனும் அசுரர்களுடன் போரிட்டு, அம்பிகை அவர்களை அழித்தாள் அல்லவா? அப்போது போரில் இருந்து தப்பியோடிய அருணாசுரன் என்பவன், பிரம்மதேவனை நோக்கி கடும் தவம் இருந்து அரிய வரங்களைப் பெற்றான். அதன் பலனாக உலக உயிர்களை  எல்லாம் கொடுமைப்படுத்திய இந்த அசுரனை, தேனீயின் வடிவில் வந்து அம்பிகை அழித்ததாகச் சொல்இறது தலபுராணம். பிறகு, அடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்கே இங்கேயே கோயில் கொண்டாளாம்! அன்னை ராணி தேனீயாக தோன்றிய பாறையை இன்றைக்கும் தரிசிக்கலாம். இதில் அம்பிகை சூட்சுமமாக உறைந்திருக்கிறாள் என்கிறார்கள் பக்தர்கள்.

உட்கார்ந்த நிலையிலும் அல்லாமல் நின்ற நிலையிலும் அல்லாமல் வித்தியா சமாக திருக்கோலம் காட்டுகிறாள் கட்டீல் ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி.

இவள் இளநீர் பிரியை. பாக்குப் பூவும் இந்த அம்பிகைக்கு மிக உகந்தது. அதுவே இங்கு பிரசாதமாகத் தரப்படுகிறது. சுற்று வட்டார விவசாயிகள், தங்கள் தென்னந் தோப்புகளில் தேங்காய் நிறைய காய்க்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள். அது பலித்ததும், கோயிலுக்குத் தென்னங் கன்றுகளை காணிக்கை செலுத்துகிறார்கள்.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் இங்கே வசந்த காலம்.இதையொட்டி நிகழும் வசந்தோற்ஸவம் பெரும் கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. நவராத்திரி விழா வைபங்களும் இங்கே சிறப்புற நடைபெறுகின்றன. இந்த புண்ணிய காலத்தில் இங்கு வந்து துர்காதேவியைத் தரிசித்து வழிபட்டால், நலன்கள் யாவும் கைகூடும்!

புன்னைநல்லூர் மாரியம்மன்

காவல் நாயகி!

சோழர்கள் தங்களின் படை பலத்தை மட்டுமின்றி அம்பிகையின் பாதுகாவலையும் திடமாக நம்பினார்கள். தங்கள் தலைநகரின் எட்டு திக்கிலும் அம்பிகைக்கு ஆலயம் அமைத்தார்கள். அதன்படி தஞ்சைக்குக் கிழக்கே கோயில் கொண்டவளே இந்த மாரியம்மன்.

சோழர்கள் காலத்துக்குப் பிறகு அம்பிகையின் நினைப்பும் மறந்து போனது, நாட்டு மக்களுக்கு. பின்னர் 17ம் நூற்றாண்டில் வெங்கோஜி மன்னர் காலத்தில் மீண்டும் வழிபாடுகள் நடந்தன. அதன் பிறகும் என்ன காரணத்தினாலோ இங்கே வழிபாடுகள் தடைப்பட்டுப் போயின.

பிற்காலத்தில் மராட்டிய மன்னர் துளஜா என்ப வரின் மகளுக்கு வைசூரி கண்டு பார்வை பறிபோனது. மன்னர் வேதனை கொள்ள, அவரின் கனவில் சிறுமியாய் வந்து தன்னையும் தான் இருக்கும் இடத்தையும் அம்பிகை வெளிப்படுத்தினாள்.

தேவி தரிசனம்

அம்மன் சொன்னபடி அவள் இருக்கும் இடத்தை அறிந்த மன்னர், சதாசிவ பிரம்மேந்திரரின் வழிகாட்டுதலுடன் அவளுக்கு கோயில் அமைத்ததாகச் சொல்வர். அவர் அம்மனை பூஜிக்க, அவர் மகளுக்கும் அம்மன் அருளால் பார்வை கிடைத்ததாம். புன்னை மரங்கள் நிறைந்த வனத்தில் குடி கொண்டதால் புன்னைநல்லூர் என்று தலம் பெயர் பெற, அங்கே மாரியம்மனாக கோலோச்சுகிறாள் அம்பிகை!

தஞ்சை நாகை நெடுஞ்சாலையில் தஞ்சையில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.அம்மனின் விக்கிரகம் புற்றுமண்ணால் ஆனது என்பதால், அபிஷேகம் கிடையாது ஐந்து வருடங் களுக்கு ஒருமுறை தைலக் காப்பு  மட்டுமே. ஒரு மண்டல காலத்துக்கு இந்த தைலக்காப்பு நடைபெறும். அப்போது அம்மனைத் தரிசிக்க இயலாது என்பதால், வெண்திரையில் அம்மனின் உருவை வரைந்து, அந்த  திரைக்கே அர்ச்சனை ஆராதனைகள் நடைபெறும். அபிஷேக நேரத்தில் அம்மனுக்கு உக்கிரம் அதிகமாகும் என்பதால், வெங்காயம் கலந்த தயிர்சாதமும் இளநீர் குலைகளையும் சமர்ப்பிக்கிறார்கள்.

வயிற்றுவலியால் அவதிப்படுவோர், கண் பார்வை குறைபாடுகள் உள்ளவர்கள் புன்னைநல்லூராளை வேண்டிக்கொள்ள, விரைவில் குறைகள் தீர்ந்து குணம் பெறலாம் என்பது நம்பிக்கை!

கொடுங்கலூர் பகவதி

அம்மே நாராயணா...

கேரள மாநிலத்தில் கடற்கரையையொட்டி அமைந்திருக்கும் தேவியின் திருத்தலம் கொடுங்கலூர். ஸ்ரீபரசுராமர் ஸ்தாபித்த அம்மன் ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஸ்ரீலோகாம்பிகை என்றும் ஸ்ரீகன்யகா தேவி என்றும் இங்குள்ள அம்மையை வழிபடுகிறார்கள். ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றி, தாரகன் எனும் அசுரனை அழித்த தேவி இவள் என்கிறது தலபுராணம்.

அசுரக் கணவனை கன்யகாதேவியிடம் இருந்து காப்பாற்றும்படி ஆதிசக்தியை வேண்டி நின்றாளாம் அவன் மனைவி மனோதரி. ஆதிசக்தி தனது மேனியில் இருந்து சில வியர்வைத் துளிகளை சேகரித்து மனோதரியிடம் தந்து, 'இந்த தீர்த்தம் விசேஷமானது. பயன்படுத்திக்கொள்’ என்றாள். தீர்த்தத்துடன் கணவனைத் தேடி வந்த மனோதரி, பாதாளத்தில் அவன் கன்யகாதேவியால் சம்ஹாரம் செய்யப்பட்டதைக் கண்டாள். அதனால் கோபம் கொண்டவள் தீர்த்தத்தை தேவியின் மீது தெளித்தாள். அது அம்மைக்கொப்புளங்களாகி கன்யகா தேவியை வாட்டியது. தன்னால் உருவாக்கப்பட்டவள் துன்புறலாமா என்று யோசித்த சிவனார், கண்டாகர்ணன் என்பவனைத் தோற்றுவித்து, அவன் மூலம் கொப்புளங்களை ஆற்றுப்படுத்தினார் என்று நீள்கிறது தலபுராணக் கதை.

தேவி தரிசனம்

கன்யகாதேவியின் ஆணைப்படி, மனோதரி, இங்கே வசூரிமாலா என்ற பெயரில் திகழ்கிறாள். அவளுக்கு  மஞ்சள் தெளித்து வழிபடுகிறார்கள். மாக்கோட்டை முக்தேஸ்வரி என்றும் இந்த அம்பிகையை அழைக்கிறார்கள். இவளின் சந்நிதி முன் நின்று 'அம்மே நாராயணா, தேவி நாராயணா’ என்று கோஷம் எழுப்பி வழிபடுகிறார்கள்.

அம்மன் சந்நிதிக்கு இருபுறமும் தம்புரான் அம்மனையும், தவிட்டு அம்மனை யும் தரிசிக்க லாம். தம்புரான் அம்மனுக்கு வெள்ளிக் குடத்தில் தீர்த்தம் நிரப்பி வெள்ளிக் காசுகள் இட்டு காணிக்கை செலுத்து கிறார்கள். தவிட்டு அம்மனை வேண்டிக் கொண்டால் ஆஸ்துமா முதலான சுவாச பிரச்னைகள் விலகுமாம். அப்படி வேண்டுதல் நிறைவேறினால் வறுத்த அரிசியுடன் தவிடு, உமியை நேர்த்திக்கடனாகச் செலுத்துகிறார்கள்.

நவராத்திரி காலங்களில் இந்த அம்பிகை சரஸ்வதிதேவியாக வணங்கப்படுகிறாள். நவராத்திரி தவிர, தாலப்பொலி திரு விழாவும், பரணித் திருவிழாவும் இங்கே பிரசித்தம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு