Published:Updated:

துங்கா நதி தீரத்தில்... - 13

குரு தரிசனம்!பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம் ஸ்யாம்

துங்கா நதி தீரத்தில்... - 13

குரு தரிசனம்!பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம் ஸ்யாம்

Published:Updated:

ஸ்ரீசிவா அபிநவ சச்சிதானந்த நரஸிம்ம பாரதி ஸ்வாமிகள், தம்முடைய குருநாதரின் ஆக்ஞை ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

ஆதிசங்கரரின் அவதார ஸ்தலத்தை ஆதாரபூர்வமாகக் கண்டறிந்து, வெளியுலகத்துக்கு அதைத் தெரியப்படுத்த வேண்டும் என்பதே அவருடைய சங்கல்பமாக இருந்தது. அதை அவர் நிறைவேற்றவும் செய்தார். அதுவே அவர்தம் சாதனையாகவும், பலரும் போற்றும்படியாகவும் அமைந்தது. அது பற்றியும், அந்தச் சாதனையை நிகழ்த்துவதில் ஸ்வாமிகளுக்கு ஏற்பட்ட சில தடங்கல்கள் பற்றியும் பின்னர் பார்ப்போம்.

தம்முடைய குருநாதரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த ஸ்வாமிகள், தினசரி ஸ்ரீசாரதா சந்திரமெளலீஸ்வரர் பூஜையும், தம் குருநாதரின் அதிஷ்டானத்தில் நித்திய பூஜைகளையும் தவறாமல் செய்து வந்தார். மற்ற நேரங்களில் மடத்து நிர்வாகத்தை கவனித்துக் கொள்வதிலும், சீடர்களுக்கு சாஸ்திரங்களைக் கற்றுக் கொடுப்பதிலும் ஈடுபட்டார். இப்படியாக ஏழு வருடங்கள் சென்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1986ம் வருடம், ஒருநாள் ஸ்வாமிகளை தரிசிக்க அண்ணா சாகிப் விஞ்சுருகர் என்பவர் வந்திருந்தார். இவர் முன்பே சிருங்கேரியில் உள்ள ஸ்ரீவித்யாசங்கரர் ஆலயத்துக்குத் தங்கத்தினால் ஆன பஞ்ச கலசங்களைக் காணிக்கையாகச் சமர்ப்பித்து இருந்தார். சிருங்கேரிக்கு வந்து ஸ்வாமிகளைத் தரிசித்து வணங்கியவர், ஸ்வாமிகள் வடதேச யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டார். 'தம்முடைய சங்கல்பப்படி ஆவது ஒன்றும் இல்லை. தம்முடைய குருநாதரின் சங்கல்பம் அதுவாக இருந்தால், அவரே அனுக்கிரஹம் செய்வார்’ என்று அப்போதைக்கு அவரிடம் தெரிவித்துவிட்டார் ஸ்வாமிகள்.

துங்கா நதி தீரத்தில்... - 13

பின்னர், ஸ்வாமிகள் ஸ்ரீசாரதா சந்திர மெளலீஸ்வர பூஜை செய்தபோதும், தம் குருநாதரின் அதிஷ்டானத்தில் பூஜை செய்தபோதும், ஸ்வாமிகளின் வடதேச யாத்திரைக்கான சுபசகுனங்கள் தோன்றின. அத்துடன், குருநாதரின் சமாதியின் மேல் இருந்த சிவலிங்கத்தின் ஆவுடையார் பீடத்தில், யாரும் வைக்காமலேயே ஒரு சிறிய பாணலிங்கம் இருப்பதையும் கண்டார். குருநாதரின் சமாதியின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சிவலிங்கத்தின் பிரதியாக அதை எடுத்துச் செல்லுமாறு குருநாதர் உத்தரவு கொடுப்பதாகத் தோன்றியது. அதன்படி, 5.2.1886 அன்று ஸ்வாமிகளின் வடதேச யாத்திரை தொடங்கியது.

யாத்திரையின்போது, வாழ்க்கை நிறைவுறும் வேளையில் தம்முடைய குருநாதர் கொண்டிருந்த சங்கல்பத்தின்படி, திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரரைத் தரிசிக்கச் சித்தம் கொண்டார். அதேபோல், திருக்கோகர்ணம் சென்ற ஸ்வாமிகள், மஹா சிவராத்திரி அன்று ஸ்ரீமஹாபலேஸ்வரருக்கு மூன்றாம் ஜாம பூஜைகளைச் செய்ததுடன், முத்தாரம், ருத்ராக்ஷ கண்டி, வஸ்திரங்கள் போன்றவற்றைக் காணிக்கையாகச் சமர்ப்பித்தார். சில தினங்கள் அங்கே இருந்துவிட்டு, பம்பாய் ராஜதானிக்கு விஜயம் செய்தார். ஜம்கண்டி, மீரஜ், சாங்லி, குருந்துவாட முதலிய சமஸ்தானங்களுக்கு விஜயம் செய்தார்.

இவ்விதமாக ஸ்வாமிகள் யாத்திரை செய்துகொண்டிருந்தபோது, நித்யானுஷ்டானங் களைக் கடைப்பிடிப்பதில் சில அசெளகர்யங்கள் ஏற்பட்டபடியால், தம்முடைய யதாஸ்தானமான சிருங்கேரிக்கே திரும்பிவிட சித்தம் கொண்டு, சொண்டூர் வழியாக பல்லாரியை அடைந்தார். அப்படி வரும் வழியில், முன்னர் ஒருமுறை பெரிய ஸ்வாமிகளின்மீதும், பரிவாரங்களின்மீதும் கல் எறிந்து தாக்குதல் நடத்திய ஒரு பிரிவினர் அதிகம் இருந்தபடியால், பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அதற்கெல்லாம் அவசியம் இல்லாதபடி, ஸ்வாமிகளின் திவ்விய திருமுகம் கண்ட மாத்திரத்திலேயே அவர்களின் மனதில் இருந்த வன்மங்கள் நீங்கி, சாந்தம் கொண்டவர்களாக, ஸ்வாமிகளை அன்புடன் வரவேற்றனர். அவர் பல்லாரியிலேயே சாதுர்மாஸ்ய விரத சங்கல்பம் செய்துகொண்டு, சுமார் இரண்டு மாதத்துக்கும் மேலாக அங்கேயே தங்கி இருந்தார். பின்னர், அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு, பெளகுப்பே என்ற கிராமத்தை அடைந்தார்கள்.

துங்கா நதி தீரத்தில்... - 13

ஸ்வாமிகளும் பரிவாரங்களும் அந்தக் கிராமத்துக்கு வந்த அன்றைய தினமே, இரவு எல்லோரும் உறங்கிக்கொண்டிருக்கையில், ஸ்வாமிகள் நித்தமும் பூஜித்து வழிபடும் ரத்னகர்ப்ப கணபதி, சந்திரமெளலீஸ்வரர் விக்கிரஹங்கள் வைக்கப்பட்டிருந்த சிறிய செப்புப் பெட்டியும், மற்றும் தங்கம், வெள்ளியினால் ஆன பூஜைப் பாத்திரங்களும் களவு போய்விட்டன. விடியல் பொழுது, மடத்து நிர்வாகிகளுக்கும், கிராம மக்களுக்கும் விசனப் பொழுதாகிவிட்டது. பெரிதும் வருத்தம் அடைந்தனர். என்ன செய்வதென்று யாருக்கும் புரியவும் இல்லை.

நடந்ததை அறிந்த ஸ்வாமிகள் சற்றே கலக்கம் கொண்டாலும், உடனே தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, முறைப்படி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்குமாறு

துங்கா நதி தீரத்தில்... - 13

நிர்வாகிகளிடம் சொல்லிவிட்டு, ஸ்நானம் செய்யச் சென்றார். ஸ்நானத்தை முடித்துக் கொண்டு, 6 மணிக்கு நரஸிம்ம மந்த்ரத்தை ஜபித்தபடி தியானத்தில் மூழ்கிவிட்டார். அன்றெல்லாம் அன்ன ஆகாரம் எதுவும் இன்றி தியானத்திலேயே இருந்தவர், இரவு 10 மணிக்கு தியானத்தில் இருந்து எழுந்து, ஸ்நானம் செய்துவிட்டு மறுபடியும் தியானத்தில் ஈடுபட்டார்.ஐந்தாவது நாள், கிராமத்தில் இருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள வயல்வெளியை உழுதபோது, ஒரு செப்புப் பெட்டி கிடைத்ததாகத் தகவல் கிடைக்கப்பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர், ஸ்வாமிகளுக்கு தகவல் சொல்லி அனுப்பிவிட்டு, அந்த இடத்துக்கு விரைந்து சென்றார். இன்ஸ்பெக்டர் சொல்லி அனுப்பிய தகவல் கிடைத்ததுமே, மடத்து நிர்வாகிகளும் கிராமத்து ஜனங்களும் அனலாய்த் தகிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அந்த இடத்துக்கு ஓடோடியும் சென்றனர். அங்கே சென்று பார்த்தபோது, சந்திரமெளலீஸ்வரர், ரத்னகர்ப்ப கணபதி, வலம்புரிச் சங்கு மட்டுமே அந்தச் செப்புப் பெட்டியில் இருந்தன.

அவற்றை எடுத்துக்கொண்டு வரும்போது, அதுவரை தகித்த வெயிலைத் தணிப்பதுபோல் மழை அருவியாய்க் கொட்டியது. ஸ்வாமிகளின் முன்னிலையில் வந்ததும், இன்ஸ்பெக்டர் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, விக்கிரஹங்கள் இருந்த பெட்டியை ஸ்வாமிகளிடம் ஒப்படைத்தார். 'கண்டனன் கற்பினுக்கரசியை’ என்று சொல்லக்கேட்ட ராமபிரான், சொல்லிய அனுமனை நெஞ்சாரத் தழுவி ஆசிர்வதித்ததுபோல, ஸ்வாமிகளும், இன்ஸ்பெக்டரை அருகில் அழைத்து அவரைத் தழுவிக் கொண்டதுடன், அவருடைய தலையில் தம்முடைய திருக்கரங்களை வைத்துப் பூரணமாக ஆசிர்வதித்தார்.

ஸ்வாமிகள், அளவற்ற யோக சக்தியை தம்முடைய குருவின் அருளினால் பெற்றுவிட்டார் என்று முன்பே பார்த்தோம். அப்படி இருக்க, திருடர்கள் வந்து களவாடிச் செல்லப்போவதை முன்கூட்டியே அவரால் யூகித்து அறிந்திருக்க முடியாதா அல்லது அப்படி நிகழாமலே தடுத்திருக்க முடியாதா என்ற சந்தேகம் நமக்கெல்லாம் தோன்றக்கூடும்.

அவரால் யூகித்து அறிந்திருக்க முடியும்; தடுத்திருக்கவும் முடியும். ஆனால், அப்படிச் செய்யவில்லை. காரணம் என்ன..?

தொடரும்...

தொகுப்பு: க.புவனேஸ்வரி

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism