கொடுக்கும் குணம் எல்லோருக்கும் வராது. கோடி பேர்களில் ஒருவருக்குத்தான் கொடுக்கும் குணம் உண்டு. 'தாதா கோடிக்கு ஒருவர்’ என்பார் ஒளவையார்.

கொடுக்கும் குணம் இல்லாவிட்டால்கூடப் பரவாயில்லை. கொடுப்பவர்களை ஏளனமாக  இழிவாகப் பேசித் தற்பெருமையைப் பறை சாற்றுபவர்களை என்ன சொல்வது?

''அட! எங்கிட்ட இருந்தா, இவனைவிட இன்னும் பத்து பேருக்கு நான் குடுப்பேன். பணம் அவன்கிட்ட இல்ல போய் மாட்டிக்கிட்டு இருக்கு. அவன் எப்படி சம்பாதிக்கிறான்னு எனக்குத்தான் தெரியும். அப்படி எல்லாம் சம்பாதிச்சு, தர்மம் பண்ண வேண்டிய அவசியம் எனக்கு இல்ல'' என்ற பேச்சையும் நாம் கேட்டிருப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தப் பேச்சு, வசனத்துக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். வாழ்க்கைப் பயணத்துக்கு உதவாது. உதாரணமாக...

வெளியூருக்குப் போவதென்றால் டிக்கெட், செல்போன், சார்ஜர் என்பவற்றோடு புறப்பட்டாலும், ''எதையாவது சாப்பிடறதுக்கு எடுத்துக்க. நாலு பிஸ்கட் பாக்கெட், இட்லி, சப்பாத்தி, ரெண்டு பாட்டில் தண்ணி இப்படி எதையாவது எடுத்துக்க. ட்ரெயின்ல நமக்குப் பசிக்கும்போது எதுவும் வராது'' என்று சொல்லி முன்னேற்பாட்டுடன் செல்கிறோம் அல்லவா?

பாடல் சொல்லும் பாடம்!

அதுபோல, நமது பிறவிக்குப் பிறகு ஒரு பயணம் உண்டே... அதற்கு வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்யவேண்டாமா?

ஓரளவுக்காவது காலமும் நேரமும் தெரிந்து, முடியக்கூடிய சாதாரண வழிப்பயணத்துக்கே எவ்வளவோ ஏற்பாடுகளைச் செய்யும் நாம், தொலையாத வழிப் பயணம் செல்கையில் இன்னும் எத்தனை தீவிர முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும்? எங்கு போகி றோம், எவ்வளவு நாட்கள் ஆகும், அங்கே என்ன கிடைக்கும்? என்பதெல்லாம் தெரியாத வழியையே, தொலையாத வழி என்பார்கள். அந்த வழியைப் பற்றி நமக்கெல்லாம் தெரியாது. அதனால்தான் மகான்களான நம் முன்னோர்கள், தொலையாத அந்த வழிக்குப் பொதிசோறும் துணை யும் இதுதான் என்று சிலவற்றைச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள்.

அவற்றுள் முதலாவதாக இடம் பெறுவது, 'பசிக்கிறது என்று கேட்பவர்களுக்கு இலையாவது  வெந்தது ஏதாவது பகிர்ந்து கொடுங்கள்’ என்பதே.

இளையான்குடிமாற நாயனார் வீட்டுக்கு இரவு நேரத்தில், கொட்டும் மழையில் ஒருவர் வந்து உணவு கேட்டார். வீட்டில் எதுவும் இல்லாத நிலையிலும் நாயனார், வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த கீரை இலைகளைப் பறித்துச் சமைத்து உணவிட்ட தாகப் பெரியபுராணம், உபமன்யு பக்த விலாசம், சிவபக்த விலாசம் முதலான நூல்கள் கூறுகின்றன.

இலை உணவு இட்டு இறைவன் அருளை அடைந்த இளையான்குடிமாற நாயனாரின் வரலாறு, நமக்கு விரிவாகவே வழி காண்பிக் கிறது.

அடுத்தது, 'வெந்தது ஏதாவது...’

வள்ளல் கர்ணனைப் பற்றி கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு.

தானதர்மம் செய்வதில் ஈடுஇணை அற்றவரான கர்ணன் இறந்துபோய் சொர்க்கத் துக்குச் சென்றார். அங்கே கர்ணனுக்கு எல்லாவிதமான செளகரியங்களும் வசதி களும் கிடைத்தன. ஆனால், உணவு மட்டும் கிடைக்கவில்லை. கர்ணன் பசியால் துடித்தார்.

அங்குள்ளவர்களிடம் கேட்டதற்கு, ''கர்ணா, நீ பூலோகத்தில் எல்லா தான தர்மங்களையும் செய்தாயே தவிர, அன்னதானம் செய்யவில்லை. அங்கே கொடுத்திருந் தால்தானே இங்கே கிடைக்கும்,'' என்று பதில் கிடைத்தது. அதன் காரணமாகவே கர்ணன் மறு பிறவியில் சிறுத்தொண்ட நாயனாராக வந்து அன்னதானம் செய்து நன்னிலை பெற்றதாக, கர்ணபரம்பரைக் கதை கூறுகிறது.

ஆகையால்...

'இலையாயினும் வெந்தது ஏதாயினும் பகிர்ந்து ஏற்றவர்க்கு’

எனும்படி தர்மம் செய்யவேண்டும்.

அப்படி அடுத்தவர்களுக்குத் தர்மம் செய்யும்போது, பணிவோடு கொடுக்க வேண்டும்; அன்போடு கொடுக்க வேண்டும்; தெய்வச் சிந்தனையோடு கொடுக்கவேண்டும்.

''தெய்வமே! இப்படி அடுத்தவர்களுக்குக் கொடுக்கும் நிலையில் என்னை வைத்திருக் கிறாயே!'' என்ற எண்ணத்தோடு கொடுக்க வேண்டும்.

இப்படி எல்லாம் செய்வதற்கு ஆசையாகத் தான் இருக்கிறது. ஆனால் முடியவில்லையே. பணம் இருக்கு, மனம் இல்லையே! காரணம்?

ஆறு பேர் நம்மைத் தடுக்கிறார்கள். அந்த ஆறு பேரும் மிகவும் பலம் படைத்தவர்கள், தீயவர்கள்.

காம, குரோத, லோப, மோக, மத, மாத்சரிய என்னும் ஆறு தீய குணங்களே மலைபோல உயர்ந்து நின்று, நல்லது செய்யவிடாமல் நம்மைத் தடுக்கின்றன.

முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் உள்ள ஞானவேலால் அந்தத் தீயவைகளை நீக்கி, நமக்கு அருள்புரிவார்; நற்கதி அளிப்பார்.

முருகப்பெருமானை அன்போடு வணங்கி வழிபடுங்கள். முடிந்ததைக் கொடுங்கள்! முக்தி கிடைக்கும்.

இனி, இந்தத் தகவலைச் சொல்லும் அருணகிரிநாதர் பாடலைக் காண்போம்...

மலை ஆறு கூறெழ வேல் வாங்கினானை

       வணங்கி அன்பின்,

நிலையான மா தவம் செய்குமினோ!

       நும்மை தேடி வரும்

தொலையா வழிக்குப் பொதிசோறும்

       உற்ற துணையும் கண்டீர்!

இலையாயினும் வெந்தது ஏதாயினும்

       பகிர்ந்து, ஏற்றவர்க்கே.

(இன்னும் படிப்போம்)