மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒருநாள்...ஓரிடம்...ஓர் அனுபவம்..!

பக்தி... பவித்ரம்... பரவசம்..!எஸ்.கண்ணன்கோபாலன்

லயங்களில் நித்திய உற்ஸவம், மாத உற்ஸவம், பிரம்மோற்ஸவம், பவித்ரோற்ஸவம் எனப் பல திருவிழாக்கள் நடைபெற்றாலும், அவற்றில் தனிச் சிறப்பு கொண்டதாகத் திகழ்வது பவித்ரோற்ஸவம்தான். பெயரிலேயே பவித்ரம் என்ற சொல்லைக் கொண்டிருக்கும் இந்த உற்ஸவம் புனிதமானதும் புண்ணியம் சேர்ப்பதும் ஆகும். கோயில்களில் ஆண்டுதோறும் ஏழுநாட்கள் நடைபெறும் இந்த பவித்ரோற்ஸவத்தைத் தரிசிக்க  நாமும், 6-9-14 அன்று ஒரு கோயிலுக்குச் சென்றோம்.

நாம் தரிசிக்கச் சென்ற உற்ஸவம் மட்டுமல்ல, அந்தக் கோயிலும் கூட ஒன்றுக்கு ஐந்து பங்காக இறைவனின் சாந்நித்தியமும், அருள் திறமும் பொலிந்து திகழும் திருக்கோயிலாகும். அது மட்டுமல்ல, அந்த இறைவனுக்கும்கூட அந்தத் திருத்தலம் மிகவும் உகந்த திருத்தலம்தான் என்றே சொல்லலாம்.

ஆம்! மற்ற திவ்விய தேசங்களில் எல்லாம் நாம் இறைவனின் ஓர் அர்ச்சாவதாரத் திருக் கோலத்தையே தரிசிக்க முடியும். ஆனால் இந்தத் திருத்தலத்திலோ நாம் பகவானின் ஐந்து அர்ச்சாவதாரத் திருக்கோலங்களை தரிசிக்க முடியும். அப்படியானால், இந்தக் கோயில் இறை வனுக்கே பிரியமான திருத்தலம் என்றுதானே சொல்ல வேண்டும்!

ஒருநாள்...ஓரிடம்...ஓர் அனுபவம்..!

அந்தக் கோயில்...

''கோகுலத்தில் ஏழை இடையர்களுக்கும், ஆவினங்களுக்கும் அன்பு செலுத்தியவனும், இன்றும் நமக்குச் சாரதியாக இருந்து நம்மை வழிநடத்தத் தயாராக இருப்பவனுமான அந்தப் பெருமாளை இப்பொழுதே இந்த நிமிஷமே சென்று வணங்கு. அவன் திருவடிகளைப் பற்றிக் கொண்டால் நாம் நிச்சயம் கடைத்தேறுவோம்.'' என்று சுவாமி விவேகானந்தர், தம்முடைய சென்னை பக்தரான அளசிங்கருக்கு எழுதியிருந்த கடிதத்தில், எந்த பெருமாளைப் பற்றி குறிப்பிட்டிருந்தாரோ, அந்த பார்த்தசாரதி பெருமாள் குடிகொண்டிருக்கும் திருக்கோயில்!

இங்குதான் வெகு கோலாகலமாக நடை பெற்றது பவித்ரோற்ஸவம். நாம் தரிசிக்கச் சென்றிருந்தபோது, ஆண்டாள் சந்நிதிக்கு முன்புள்ள மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலைக்கு முன்பாக, பெருமாளுக்கு திருமஞ்சனம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

ஒருநாள்...ஓரிடம்...ஓர் அனுபவம்..!

திருமஞ்சனம் தொடங்குவதற்கு இன்னும் நேரம் இருப்பதால், அதற்குள் இந்த திவ்விய தேசம் மட்டும் பகவானின் பிரியத்துக்கு உகந்ததாக ஆனது எப்படி என்பது பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே..!

துளசி வனம் அடர்ந்திருந்தபடியால் பிருந்தாரண்யம் என்று அழைக்கப்பெற்ற இன்றைய திருவல்லிக்கேணி க்ஷேத்திரத்தில், ஆதியில் பிருகு, அத்திரி, மரீசி, மார்க்கண்டேயர், சுமதி, ஸப்தரோமர் போன்ற மகரிஷிகள், இறைவனின் அருள் பூரணமாக இந்த உலகத்துக்குக் கிடைக்கப் பெறவேண்டும் என்பதற்காகத் தவம் இயற்றினர்.

பிருகு முனிவரின் பிரார்த்தனைக்கு இரங்கிய பகவான், வேதவல்லித் தாயாருடன் ஸ்ரீமன்னாத பெருமாள் என்ற திருப்பெயருடன் சயனக் கோலத்திலும்;

அத்திரி மகரிஷியின் பிரார்த்தனையின்பேரில், ஸ்ரீநரசிம்மரும்;

ஸப்தரோமரிஷியின் வேண்டுதலின்படி, கஜேந்திர வரதரும்;  

ஸஸபதி மஹரிஷியின் மகனான மதுமான் என்பவனின் தவத்தின் பயனாக ராம பிரானும்;

சுமதி என்ற ராஜரிஷியின் கோரிக்கையின்படி திருப்பதி வேங்கடேசப் பெருமாளும் இங்கே கோயில் கொண்டார்கள்.

இப்படி, இறைவனின் ஐந்து அர்ச்சாவதார மூர்த்தங்கள் இங்கே கோயில் கொண்டபடி யால்தான், இத்திருத்தலம் பகவானுக்கு பிரியமானதாகவும், ஐந்து திவ்விய தேசங்களை தரிசித்த பலனைத் தருவதாகவும் அமைந்திருக்கிறது.

சுமதி ராஜமஹரிஷி பெருமாளிடம், பூர்ணாவதாரமான கிருஷ்ணபிரான், பார்த்தனுக்கு சாரதி யாக இருந்த கோலத்தில் எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்க, பெருமாளும் அப்படியே அருள் புரிந்தார். அதனால் இங்கு மூலவருக்கு வேங்கட கிருஷ்ணன் என்ற திருப்பெயர் வழங்கு கிறது.

இதோ... பெருமாளுக்கு திருமஞ்சனம் தொடங்கிவிட்டது. திருமஞ்சனத்தின்போது, பெருமாளின் வடிவழகை திருமுடி முதல் திருவடி வரை வர்ணிக்கும் வடிவழகு கட்டியம், திருமஞ்சன கட்டியம் வாசிக்கப்பட்டது. இந்தக் கட்டியங்களைப் பற்றி பின்னர் பார்ப்போம். அன்று சனிக்கிழமை என்பதாலும், பவித்ரோற்ஸவம் நடைபெற்றதாலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்தனர்.

ஒருநாள்...ஓரிடம்...ஓர் அனுபவம்..!

திருமஞ்சனமும் அலங்காரமும் நிறைவு பெற்றதும், யாக சாலையில் அமைக்கப்பட்டிருந்த மூன்று ஹோம குண்டங்களில் ஹோமங்கள் தொடங்கி நடைபெற்றன. காலை சுமார் 1030 மணிக்குத் தொடங்கிய ஹோமம் பூர்ணாஹுதியுடன் நிறைவுபெற 12-30 மணி ஆகிவிட்டது. அத்துடன் காலை நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.

மாலையில் பெருமாள் திருவீதி உலாவும் தொடர்ந்து ஹோமங்களும் நடைபெற இருப்பதாக அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்க முடிந்தது. பவித்ரோற்ஸவத்தின் தாத்பர்யம் பற்றி தெரிந்துகொள்ள கோயிலின் பெரியமுறை பிரதான அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியாரிடம் பேசினோம்.

ஒருநாள்...ஓரிடம்...ஓர் அனுபவம்..!

''பவித்ரோற்ஸவம் என்பது வருஷந்தோறும் ஏழு நாட்கள் நடைபெறும். கோயில்களில் நடைபெறக்கூடிய பூஜை வழிபாடுகளில் நம்மை அறியாமலேயே பிழைகள் ஏற்படுவது இயல்பு. மேலும் கோயிலுக்கு வந்து செல்லக்கூடிய பக்தர்களில் ஒருசிலரின் அறியாமையின் காரண மாக பிழைகள் ஏற்படுவதும் இயல்புதான். இவை எல்லாம் சேர்ந்து கோயிலுக்கும் ஸ்வாமிக்கும் பலவகையான தோஷங்களைச் சேர்த்து விடும்.

இப்படி ஏற்படக்கூடிய தோஷங்களால் கோயிலில் இறைவனின் சாந்நித்யம் குறைந்துவிடும். எனவேதான் அத்தகைய தோஷங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு, பவித்ரோற்ஸவம் வருஷத்துக்கு ஒருமுறை ஆவணி மாதம் ஏழு நாள் நடைபெறுகிறது.'' என்றார்.

தொடர்ந்து அவரிடம் பவித்ரோற்ஸவத்தின் போது நடைபெறக்கூடிய மற்ற விவரங்களைப் பற்றியும் கேட்டோம்.

''பவித்ரோற்ஸவம் ஏழுநாள் நடக்கும். முதல் நாளிலேயே கோயிலில் இருக்கும் எல்லா தெய்வங்களுக்கும், மஞ்சள், பச்சை, நீலம், சிவப்பு, வெள்ளை நிற பட்டு நூல்களால் ஆன மாலை அணிவிக்கப்படும். பட்டு நூல்களால் ஆன இந்த பவித்ரமாலைக்கு மந்திரங்களை ஈர்க்கும் சக்தி உண்டு.

இந்த உற்ஸவத்தின்போது காலையிலும் மாலையிலும் நடைபெறும் யாக மந்த்ரம், மந்த்ர பாராயணம் போன்ற அனைத்து மந்த்ரங்களையும் பட்டு பவித்ரமாலை ஈர்த்துக்கொள்வதால், கோயிலில் உள்ள தெய்வத் திருவுருவங்களில் மந்த்ர சக்தி பூரணமாக ஆவாஹனமாகி விடுவதுடன், அந்த ஒரு வருஷத்தில் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்டிருக்கக்கூடிய தோஷங்கள் எல்லாம் விலகி, இறைவனின் சாந்நித்யம் பூரணமாக நிறைந்துவிடும்.'' என்றவர் தொடர்ந்து,

''நடுவில் உள்ள சப்ய குண்டத்தில் பெருமாளுக்கு பிரத்தியேகமாக உள்ள மூர்த்தி ஹோமங்கள், பஞ்ச ஸூக்தம், தாதாதி, பிராயஸ்சித்த ஹோமம், ஸர்வ தைவத்யம், ஸுதர்ஸன காயத்ரி, பூர்ணாஹுதியும் நடைபெறும்.பெளண்டரீக குண்டத்தில் சாந்தி மந்த்ரங்கள், திக்பால ஸூக்தங்களும்; அடுத்ததாக உள்ள ஒளபாஸன குண்டத்தில் எல்லா பெருமாளுக்கும் உண்டான காயத்ரி மந்த்ரங்கள், பஞ்ச ஸூக்தங்களும் வைகானஸ பகவத் சாஸ்திரப்படி நடைபெறும்.'' என்றார்.

பவித்ரோற்ஸவத்தில் நடைபெறும் ஹோமங்களில் கும்பத்தில் பெருமாளை ஆவாஹனம் செய்வார்கள். அந்த கும்ப தீர்த்தத்தைப் பெற்று அருந்தினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம் மட்டுமல்ல, பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும்கூட.

ஒருநாள்...ஓரிடம்...ஓர் அனுபவம்..!

பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும்போது ஸேவிக்கப்படும்  வடிவழகு கட்டியம், திருமஞ்சன கட்டியம் பற்றித் தெரிந்துகொள்ள திருவல்லிக் கேணி பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில் வேத அத்யாபாக கோஷ்டியின் செயலாளரான டாக்டர். வேங்கடகிருஷ்ணனைச் சந்தித்தோம்.

''பெருமாளின் திருமஞ்சனத்தின்போது ஸேவிக்கப்படும் வடிவழகு கட்டியம், திருமஞ்சன கட்டியம் இரண்டுமே சமஸ்கிருத ஸ்தோத்திரங்கள் மற்றும் ஆழ்வார்களின் பாசுரங்கள் ஆகியவற்றில் உள்ள அழகும் அர்த்தமும் கொண்ட வார்த்தைகளைக் கொண்டு தொடுக்கப்பட்ட பாமாலை என்றே சொல்லலாம்.

பகவானின் எழிலார்ந்த திருக்கோலத்தை திருமுடி தொடங்கி திருவடி வரை அழகாக வர்ணிக்கும் இந்தக் கட்டியத்தை வாசிக்கும்போது வாசிப்பவர்களுக்கும் சரி, கேட்பவர்களுக்கும் சரி, மனம் பரவசத்தால் பூரித்துப் போகும்.'' என்றார். நேரில் பார்த்து அனுபவித்ததால், அவருடைய வார்த்தைகளில் இருந்த உண்மை நமக்குப் பூரணமாக விளங்கியது.

ஒருநாள்...ஓரிடம்...ஓர் அனுபவம்..!

அன்று மாலை 430 மணிக்கு நாம் மறுபடியும் கோயிலுக்குச் சென்றோம்.

அப்போது பெருமாள் புறப்பாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சுமார் 5 மணியளவில், முன்னால் திவ்வியபிரபந்தம் ஒலிக்க, பின்னதாக வேதங்கள் முழங்க உபயநாச்சிமாருடன் பெருமாளின் வீதி உலா தொடங்கியது. மாலைச் சூரியனின் ஒளியில் பெருமாளை தரிசித்தபோது, பெருமாளின் திருவுருவம் மட்டும் கரிய நிறத்தில் இருப்பது கண்டு திகைத்துப் போனோம்.

அருகில் இருந்த கோயில் மணியம் சேஷாத்ரியிடம் காரணம் கேட்டோம்.

''நீங்கள் சொல்வது உண்மைதான். பெருமாளின் திருவுருவ விக்கிரஹம் ஐம்பொன்னால் ஆனதுதான் என்றாலும், ஆதியில் யாக குண்டத்தில் இருந்து வெளிப்பட்ட விக்கிரஹம் என்பதால், பெருமாளின் திருவுருவம் கரிய நிறத்தில் அமைந்திருப்பதாக பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். எத்தனை முறை மெருகேற்றப் பார்த்தாலும் பெருமாளின் அந்த கரிய நிறம் மட்டும் மாறவே இல்லை.'' என்றார்.

என்னதான் ஐம்பொன்னால் ஆன விக்கிரஹம் என்றாலும், அதில் உறைபவன் சாட்சாத் அந்த துவாபரயுகத்து கிருஷ்ணன் அல்லவா? அப்படியானால் அவன் கரிய நிறத்தவனாய் திருக்காட்சி தருவது இயல்புதானே!

ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் தண்ணீர் தெளித்து கோலம் போட்டிருந்ததையும், ஒவ்வொரு வீட்டு வாசல் முன்பாகவும் பெருமாள் நின்று நிதானித்து பக்தர்களின் தீப ஆராதனைகளை ஏற்றுக்கொண்ட அந்த அதியற்புத காட்சியைக் கண்டு நாம் சிலிர்த்துப் போனோம்.

ஒருநாள்...ஓரிடம்...ஓர் அனுபவம்..!

6-30 மணிக்கெல்லாம் பெருமாளின் வீதி உலா முடிந்து, மண்டபத்துக்கு எழுந்தருளினார். சற்று நேரத்துக்கெல்லாம் ஹோமங்கள் தொடங்கின. அன்றைய ஹோமங்கள் பூர்ணாஹுதியுடன் நிறைவு பெற எப்படியும் இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிடும் என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து நம்மால் தெரிந்துகொள்ள முடிந்தது.

ஏழு நாள்கள் நடைபெறும் பவித்ரோற்ஸவத்தில், அந்த ஒருநாள் கலந்துகொண்டு திரும்பிய நம் மனதில், 'பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர்முன் நின்றானை’ என்று திருமங்கையார் போற்றிப் பாடிய அந்த பார்த்தசாரதி, நம்முடைய மனத்தில் உள்ள தீய குணங்களாகிய பகைவர்களையும், நம் வாழ்க்கையில் எதிர்ப்படும் பகைவர்களையும் ஒடுக்கி நம்மை நாளும் பயனுற வாழச் செய்திடுவான் என்ற நம்பிக்கை நிறைந்திருக்க அந்த புனிதத் தலத்தில் இருந்து திரும்பினோம்.

ஸ்ரீபிருந்தாரண்யநிவாஸாயா

                  பலராமானுஜாயச

ருக்மிணி ப்ராணநாதாயா பார்த்தஸூதாய

                           மங்களம்!

- படங்கள்: தி.குமரகுருபரன், தி.ஹரிஹரன், பார்த்தசாரதி