Published:Updated:

மனநோய் தீர்ப்பாள்... மாங்கல்யம் காப்பாள்... திருவெற்றியூர் பாகம்பிரியாள்! #AadiSpecial

மனநோய் தீர்ப்பாள்... மாங்கல்யம் காப்பாள்... திருவெற்றியூர் பாகம்பிரியாள்! #AadiSpecial
மனநோய் தீர்ப்பாள்... மாங்கல்யம் காப்பாள்... திருவெற்றியூர் பாகம்பிரியாள்! #AadiSpecial

மனநோய் தீர்ப்பாள்... மாங்கல்யம் காப்பாள்... திருவெற்றியூர் பாகம்பிரியாள்! #AadiSpecial

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனைக்குத் தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருவெற்றியூர் (திருவொற்றியூர் அல்ல). இங்கிருக்கும் பாகம்பிரியாள் கோயில் இந்தப்பகுதி மக்களின் சக்தி தெய்வமாக விளங்குகின்றது. வயலில் எது விளைந்தாலும், முதல் படையல்  பாகம்பிரியாள் அம்மனுக்குத்தான்!

தலவரலாறு:

புராண காலத்தில் இப்பூவுலகை மகாபலி சக்கரவர்த்தி என்ற மன்னன் அரசாட்சி செய்துவந்தான். அவனது ஆட்சியில் மாதம் மும்மாரி மழை பொழிந்து வந்தது. மக்கள் எந்தக்குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். மன்னனும் மக்கள் வந்து கேட்பதையெல்லாம் வாரி வாரி வழங்கினான். 

மன்னனையே தெய்வமாக வணங்கினர்!

மக்களின் கண்களுக்கு மகாராஜா மகாபலி சக்கரவர்த்தி வாழும் தெய்வமாகவே தோன்றினார். மக்கள் கடவுளையே மறந்து விடுவார்களோ என்றுகூட தோன்ற ஆரம்பித்துவிட்டது. நாளுக்கு நாள் மகாபலியின் புகழ் எல்லா உலகிலும் பரவத் தொடங்கியது. இதே நிலை நீடித்தால் நம்மை மறந்து போய்விடுவார்களே என்று தேவலோகத்திலிருப்பவர்களும் முனிவர்களும் வருந்தத் தொடங்கிவிட்டனர். இதையெல்லாம் கேள்விப்பட்ட நாரதர், ''இப்படியே போனால் மக்கள் எம்பெருமானையே மறந்து விடுவார்கள். பூவுலகில் தங்களுடைய பெருமை குன்றிவிடும்'' என  சிவபெருமானிடம் முறையிட்டார். 

மகாபலியின் முற்பிறவிக் கதை

சிவபெருமான் நாரதருக்கு மகாபலியைப் பற்றி கூறினார். ''இந்த மகாபலி போன பிறவியில் எலியாகப் பிறந்தவன். எனது சந்நிதியில் இருக்கும் தூண்டாமணி விளக்கு ஒருமுறை அணைந்துவிடும் நிலை ஏற்பட்டபோது, அதன் திரியைத் தூண்டிவிட்டு அணையாமல் பார்த்துக்கொண்டான். அதனால், 56 தேசங்களையும் கட்டி ஆளும் பாக்கியத்தை நான்தான் வழங்கினேன். அதனால், நானே அவனை அழிப்பது பாவம்'' எனக் கூறிவிட்டார். 

தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர்.  மகாவிஷ்ணு வயதான அந்தணர் வேடமேற்றுச் சென்று மகாபலியிடம் 'மூன்றடி மண் வேண்டுமென கேட்டார். அப்படியே ஆகட்டுமென வழங்கினான். தர்ம தேவதையின் கண்ணீர்!

மகாவிஷ்ணு முதல் அடியை பூமியாகவும், இரண்டாவது அடியை ஆகாயமாகவும் அளந்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைக்கவேண்டும் என வினவ, தனது சிரசையே காண்பித்தான் மகாபலி சக்கரவர்த்தி. 

மகாவிஷ்ணுவின் பாதம் தலையில் பட மண்ணுள் மறைந்தான் மகாபலி. ஆனால், மகாபலி செய்த தர்மத்தை எண்ணிய தர்மதேவதை மகாவிஷ்ணுவின் காலைப் பற்றி கண்ணீர் விட்டாள். அப்போது, அந்தக் கண்ணீரின் உஷ்ணம் தாளாமல், அவரதுகாலில் புற்று வைத்தது. இந்தப் புற்றை அகற்றுவதற்கு மதுரை மீனாட்சி அம்மனிடம் யோசனை கேட்டார் விஷ்ணு.

திருவாடனையில் இருக்கும் ஆதிரத்தினேஸ்வரரைக் கேட்டால், இதற்கு ஒரு வழி பிறக்கும் என்றார். அதன்படி, மகாவிஷ்ணு அங்கு சென்றார், ஆதிரத்தினேஸ்வரர்,  “இங்கிருந்து தென்கிழக்கே ஜெயபுரம் எனும் ஊர் உள்ளது. அங்குள்ள 'வாசுகித் தீர்த்த'த்தில்  சூரிய உதயத்துக்கு முன் நீராடி வேம்பு மர வனத்தில் இருக்கும் சிவலிங்கத்தை வழிபட்டால்,  காலில் உள்ள புற்று போகும் என்றார். மகாவிஷ்ணுவும் அங்குள்ள வில்வ மரத்தினடியில் சுத்த சுயம்புவாக இருக்கும் ஈசனை வழிபட்டார். ஈசன் உமையொருபாகனாக காட்சி தந்தார். ஈசனுக்கு இடப்பாகத்திலிருக்கும் தேவி பாகம் பிரியாமல் காட்சி தந்ததால், 'பாகம்பிரியாள்' என பெயர் பெற்றார். ஜெயபுரம் என்னும் இந்த ஊர்தான் திருவெற்றியூர் என காலப்போக்கில் அழைக்கப்படலாயிற்று.

இப்போதும் மக்கள் தங்கள் நோய்களில் இருந்து விடுபட, முதல் நாள் இரவே வந்து கோயில் மண்டபங்களில் தங்கி வாசுகி தீர்த்தத்தில் குளித்து பாகம்பிரியாளை வழிபட்டுச் செல்கின்றனர். தன்னை நாடி வரும் பக்தர்களின் உடல் நோய், மனநோய் என சகலத்தையும் குணமாக்கி அருளாட்சி செய்கின்றார். பாம்புக்கடி, விஷக்கடி போன்றவற்றுக்குக்கூட மக்கள் நம்பிக்கையுடன், இங்குள்ள தீர்த்தத்தைக் கொடுக்கிறார்கள். பெண்களின் மாங்கல்யம் காப்பவள்.

இங்குள்ள விவசாயப்பெருங்குடி மக்கள், தங்கள் வயலில்  விளைந்த முதல் விளைச்சல் தானியங்கள், காய்கள், பழங்கள் மற்றும் மலர்களை இங்குள்ள அம்பாளுக்குத்தான் முதலில் படையலிட்டு வணங்குவார்கள்.

ஈசனுக்கும் அம்பாளுக்கும் ஒரே அர்ச்சனை பூஜைதான். முதலில் சிவனுக்கும் அடுத்து அம்பாளுக்கும் நடைபெறுகிறது. தனித்தனியாக அர்ச்சனை செய்யப்படுவதில்லை. கோயில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.  தென்மாவட்ட மக்களுக்கு பாகம்பிரியாள் கலங்கரை விளக்காகத் திகழ்கிறாள்.

அடுத்த கட்டுரைக்கு