Published:Updated:

வரம் தரும் முப்பெரும் தேவியர்!

வரம் தரும் முப்பெரும் தேவியர்!
வரம் தரும் முப்பெரும் தேவியர்!

தேவியர் தரிசனம்

கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் உள்ளது ஈச்சனாரி விநாயகர் கோயில். இந்த ஆலயத்துக்கு வடக்கே அமைந்துள்ளது ஸ்ரீமகாலட்சுமி திருக்கோயில். வட இந்திய பாணியில் அழகுற அமைந்த இந்த ஆலயத்தில், நவராத்திரி நாயகியரான ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீதுர்கை ஆகிய முப்பெரும் தேவியரும் கருவறையில் ஒருசேரக் காட்சி தருகின்றனர்.

நடுவில் மகாலட்சுமி, இடது பக்கம் சரஸ்வதி, வலது பக்கம் துர்கை ஆகியோர் கிழக்குப் பார்த்தபடி தரிசனம் தரும் அற்புதமான ஆலயம் இது. கோயிலின் அமைதியான சூழல், மன அமைதியைத் தருகிறது.  நுழைவு வாயிலின் வடக்குப் பிராகாரத்தில் ஆதிசேஷன் மீது அரங்க நாதர் யோக நித்திரையில் அருள்கிறார்.  அருகில் திருமகளும் காட்சி தருகிறாள்.

இந்தக் கோயிலில் ஏழரை அடி உயரத்துடன்  காட்சி தரும் அனுமனைக் காணக் கண்கோடி வேண்டும். அவரது கம்பீரத் தோற்றமும், கருணைக்கூர் திருமுகமும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. மேலும்,  நுழைவுவாயிலின் வலது பக்கம் தனி மண்டபத்தில் விநாயகர் அருள்வது குறிப்பிடத் தக்கது.

வரம் தரும் முப்பெரும் தேவியர்!

அதுமட்டுமா? வேத மண்டபம்; அடுத்து, சூரியனை மையமாக வைத்து மற்ற எட்டு கோள்களும் அமைந்திருக்கும் நவகிரக மண்டபம்; இறுதியாக,  பஞ்சலோகத்தாலான  கொடிமரம் உள்ள வேலைப்பாடு நிறைந்த மண்டபம் என அழகுற அமைந்திருக்கிறது திருக்கோயில்.  கொடி மரத்தின் முன்பாக கெளரி விநாயகர், செந்தில்நாதர் தங்கள் வாகனங்களுடன் காட்சி தருகின்றனர்.

முப்பெருந்தேவிகள் அமைந்துள்ள கருவறையைச் சுற்றிலும் தட்சிணா மூர்த்தி, தன்வந்திரி பெருமாள், பிரம்மா ஆகியோர் சந்நிதி கொண் டிருக்கின்றனர். மும்பை மகாலட்சுமி  ஆலயத்தைப்  போலவே கருவறை விமானம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமகாலட்சுமி முன், பெரிய ஸ்ரீசக்ரமேரு பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது கூடுதல் சிறப்பு!  

காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள், சூரியனின் பொற் கிரணங்கள் கொடிக்கம்பத்தின் அருகே உள்ள இடைவெளி வழியே ஸ்ரீமகா லட்சுமி முகத்தில் படுகிறது. 12 மணிக்கு மூன்று தேவியர் திருமுகங்களிலும் சூரிய ஒளி படுகிறது. அப்போது தரிசித்தால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!

உலக மக்கள் அனைவருக்காகவும், உலக அமைதிக்காகவும் முப்பெருந்தேவியர் பெயரில் மட்டுமே இங்கு அர்ச்சனை செய்யப்படும். எந்த ஒரு தனி மனிதரின் பெயரிலும் அர்ச்சனையோ, சிறப்பு தரிசனமோ, கட்டணமோ கிடையாது.

வரம் தரும் முப்பெரும் தேவியர்!

ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு நெல், தானியங்களில் முதல் அட்சரத்தை எழுதி, வித்யாரம்பம் செய்து வைக்கப்படுகிறது. சித்திரை முதல் நாளன்று கருவறை முழுவதும் நீர் நிரப்பப்பட்டு, அதில் தாமரைகள் மிதக்க... அந்தத் தாமரை தடாகத்துக்்கு மத்தியில் தேவியர் காட்சி தரும் அழகே அழகு! ஆடி மாதம் முழுவதும் விழாக்கோலம் கொண்டிருக்கும். குறிப்பாக, ஆடி வெள்ளிக்கிழமைகள் வெகு விசேஷம். முப்பெரும் தேவியர்களுக்கும் ஆடி மாதத்தின் முதல் 3 வாரம் பூக்களாலும், 4வது வாரம் காய்கறிகளாலும், 5வது வாரம் கனிகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

வரலட்சுமி விரத நாளில், தேவியின் காலடியில் வைத்து பூஜை செய்யப்பட்ட மாங்கல்யப் பொருள்களும், மாங்கல்யமும் சுமங்கலிகளுக்கு அளிக்கப்படுகின்றன.

நவராத்திரி நாயகிகளாம் சரஸ்வதி, லட்சுமி, துர்கை ஆகிய முப்பெரும் தேவி களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரங்கள், சிறப்பு பூஜைகள் என, நவராத்திரி விழாவின் 10 நாட்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் இந்தக் கோயிலில் அமைக்கப்படும் கொலு வைபவம், மிகச் சிறப்பானது. குழப்பங்கள், மனச்சிக்கல் களுடன் வருவோர் முப்பெருந்தேவியரை தரிசித்தால் மனநிம்மதி கிடைக்கப் பெறலாம் என்பதில் ஐயமில்லை.

இரா.ஆனந்தி

படங்கள்: மு.குகன்

சென்னையில் முப்பெருந்தேவியர்

னம் தரும் திருமகள், கல்வி தரும் கலைவாணி,  தளர்வறியா மனமும் தைரியமும் தரும் துர்காம்பிகை... இந்த முப்பெரும் தேவியரின் திருவருளே உலகின், உயிர்களின் இயக்கத்துக்கு அடிப்படை. இவர்களது வரம் கிடைத்தால் போதும், சகல சௌபாக்கியங்களிலும் பூரணத்துவம் பெற்றுவிடலாம்.

அப்படியான பாக்கியத்தை பக்தர்கள் பெறும் வகையில், முப்பெருந்தேவியரும் ஒருங்கிணைந்து அருள்பாலிக்கும் ஆலயங்களில் ஒன்று சென்னை, போரூர் மதனந்தபுரத்தில் உள்ளது. செவ்வாய், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முறையே ஸ்ரீதுர்கை, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீலட்சுமி தேவியருக்கான சிறப்பு பூஜைகள், மட்டைத்தேங்காய் சங்கல்பம், பௌர்ணமி பூஜை முதலான வைபவங்கள், இந்தக் கோயிலுக்கே உரிய சிறப்பம்சங்கள்!

வரம் தரும் முப்பெரும் தேவியர்!

காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் ஆசியுடன் மதனந்தபுரம் மக்களால் கட்டப்பட்ட இந்தக் கோயில் குறித்து கடந்த இதழில் கட்டுரை வெளியாகியிருந்தது. ஆனால், தவறுதலாக கோவை முப்பெருந்தேவியர் கோயிலுக்கான படங்கள் இடம் பெற்றுவிட்டன. சென்னைபோரூர், மதனந்தபுரம் முப்பெருந்தேவியரின் அருட்தரிசனமும் கோயில் படங்களும் இங்கே உங்களுக்காக!

படங்கள்: இரா.வருண் பிரசாத்

அடுத்த கட்டுரைக்கு