நமக்காக பூஜிக்கும் அகிலாண்டேஸ்வரி! ஆனைக்காவில் ஆனந்த தரிசனம்..! எஸ்.கண்ணன்கோபாலன்
அம்பிகை தவம் இயற்றி, அரன் அருள் பெற்ற திருத்தலங்கள் எத்தனையோ இந்தப் புண்ணிய பூமியில் அருளொளி பரப்பித் திகழ்ந்தாலும், அவற்றுக்கெல்லாம் இல்லாத ஒரு தனிச் சிறப்பு, இதோ, இப்போது நாம் தரிசிக்கச் செல்லும் இந்தத் திருத்தலத்துக்கு உண்டு.
இந்த பிரபஞ்சம் மட்டுமல்ல, நம்முடைய உடலும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் ஆனதுதான் என்பது நமக்குத் தெரியும். இந்தப் பஞ்ச பூதங்களின் நாயகன் என்பதால்தான் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்னும் ஐந்து திருமுகங்களைக் கொண்டவராகத் திகழ்கிறார் சிவபெருமான் (இவை தவிர, ஆறாவதாகவும் ஒரு திருமுகம் உண்டு). அந்த வகையில், சிவபெருமானுக்கு பிரசித்தி பெற்ற ஐந்து திருத்தலங்கள் உண்டு. அவற்றில் ஒன்றான திருவானைக்கா திருத்தலத்தையே இப்போது நாம் தரிசிக்கப் போகிறோம். பஞ்ச பூத திருத்தலங்களில் ஒன்று என்பதால் மட்டும் இதற்கு தனிச்சிறப்பு சேர்ந்துவிடவில்லை; இன்னும் ஒரு விசேஷமும் உண்டு. அந்த விசேஷம்தான் இன்றைய நம் தரிசன அனுபவமும், அதனால் நாம் பெற்ற தத்துவப் படிப்பினையும்!
பொதுவாக கோயில்களில் காலை, பகல், மாலை, இரவு என கால பூஜைகள் நடப்பது மரபு. இந்தத் திருக்கோயிலில், உச்சிக் கால பூஜையை மட்டும் அம்பிகையே செய்வதாக ஐதீகம். வேறு எந்தக் கோயிலுக்கும் இல்லாத தனிச்சிறப்பு இதுதான்!

நாள் தவறாமல் நடைபெறும் இந்த அரிய வைபவத்தை தரிசிக்க, பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருவது குறிப்பிடத்தக்கது. 19.9.14 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு, அந்த வைபவத்தை தரிசிக்கச் சென்றோம். நாம் சென்றிருந்தபோது, அம்பாள் சந்நிதியின் கதவுகள் மூடப்பட்டிருந்தன.
''இப்போ அம்பாளுக்கு அபிஷேகம் முடிஞ்சு, அலங்காரம் நடந்துண்டிருக்கு. அது முடிஞ்சு தீபாராதனை ஆனதும், சிவனாரை அம்பாள் பூஜிக்கும் புண்ணிய வைபவம் நிகழும். தொடர்ந்து கோ பூஜையும் நடைபெறும்' என்று தகவல் தெரிவித்தார் அருகில் இருந்த அன்பர் ஒருவர்.
அதற்குள் கோயிலை ஒருமுறை வலம் வந்து விடலாமே என்று நினைத்து, ஆலயத்தைச் சுற்றி வந்தபோது, சுதையினால் ஆன ஒரு சிற்பத்தைக் கண்டோம். சிவலிங்கத்தை பூஜிக்கும் நிலையில் அம்பிகை, யானை, சிலந்தி இடம் பெற்றிருந்த அந்தச் சுதை வடிவச் சிற்பத்தின் பின்னணி யில்தான் அந்த ஆலயத்துக்கான தல வரலாறு பொதிந்திருக்கிறது. அந்தப் புனித வரலாறு இதுதான்...
கயிலையில் ஒருநாள் ஈசனும் அம்பிகையும் தனித்திருக்கும் வேளையில், ஈசன் யோகநிலையை மேற்கொள்ள, 'அருகில் தேவி நான் இருக்கையில், இவருக்கு யோகநிலையா?’ என ஊடல் கொண்டாள் அம்பிகை. உலகத்தில் உள்ள தன்னுடைய பிள்ளைகளை எல்லாம் பார்க்க வேண்டும் என்று அம்பிகைக்கு ஆசை! அந்த ஆசை நிறைவேற வேண்டுமானால், அவள் ஈசனைப் பிரிந்து பூமிக்குச் செல்ல வேண்டும். அதற்கு ஈசனின் சம்மதம் கிடைக்காது என்பதால் தான், அவருடைய கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாகி, அதன் விளைவாக இந்த உலகத்துக்கு வந்து நமக்கெல்லாம் அருள் புரியத் திருவுள்ளம் கொண்டுவிட்டாள் அம்பிகை.
அதன்படியே, சிறந்த சிவபக்தரான ஜம்பு மகரிஷி வெண்நாவல் மரமாகத் திகழும் திருத் தலத்துக்கு வந்துவிட்டாள். அப்படி அவள் வந்து சேர்ந்த இடம்தான் இந்த திருவானைக்கா திருத்தலம்.
இந்தத் திருத்தலத்து சிவபெருமானை ஒரு யானையும், சிலந்தி ஒன்றும் பூஜித்தது குறிப்பிடத் தக்கது. யானை தினமும் நீரால் இறைவனை அபிஷேகித்து வழிபடுவதை வழக்கமாகக் கொண் டிருந்தது. சிவலிங்கத் திருமேனியில் இலைச் சருகு களோ தூசியோ படியாமல் இருக்க, சிலந்தியும் தன் வாயில் இருந்து சுரக்கும் உமிழ்நீரால் வலை பின்னி கூரைபோல் அமைத்து, சிவபெருமானை வழிபட்டு வந்தது. சிவபூஜை செய்ய வரும் யானை சிலந்திவலையை அகற்றுவதும், அடுத்து வரும் சிலந்தி மறுபடியும் வலை பின்னுவதும் நடைமுறையானது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிலந்தி, தன் வலையை நாசமாக்குவது யானைதான் என்று தெரிந்துகொண்டு, அதன் காதுக்குள் புகுந்து கடித்து, யானையைக் கொல்லப் பார்த்தது. வலி தாங்கமாட்டாத யானை தன் மத்தகத்தைப் பாறையில் மோத, ஒரே நேரத்தில் சிலந்தியும் யானையும் இறந்தன. தன்னைப் பூஜித்த யானைக்கு முக்தியும், தன்னைப் பூஜித்தாலும், யானையைக் கொல்ல முயன்றதற்காக சிலந்திக்கு மனிதப் பிறவியும் அளித்தார் சிவபெருமான். அந்தச் சிலந்திதான் கோச்செங்கட் சோழனாகப் பிறந்ததாகத் தலவரலாறு கூறுகிறது.

பூமிக்கு வந்து சேர்ந்த அம்பிகை, நீரையே திரட்டி சிவலிங்கமாகச் செய்து சிவபூஜையும், சிவ தியானமும் செய்து சிவபெருமானை வழிபடலானாள். சிவபெருமானின் அருளும், அவரை மணந்துகொள்ளும் பாக்கியமும் அவளுக்கு இன்னமும் கிடைக்கவில்லை. அதனால்தான் இன்னமும் அவள் நீராய் நின்று, நிலம் காக்கும் அந்த நிமலனை நித்தமும் இத் திருத்தலத்தில் பூஜித்தபடி இருக்கிறாளாம்.
என்ன விந்தை இது?! அகிலத்தையே ஆளும் வல்லமை கொண்ட அகிலாண்டேஸ்வரியால் இன்னமும் சிவபெருமானை மணக்க முடிய வில்லை என்றால், வியப்பாக உள்ளதே! ஆனால், அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதுபற்றி நாம் யோசித்துக்கொண்டிருந்த வேளையில்...
''அகிலா... தயாரா?'' என்று ஒரு குரல் கேட்டது. குரல் வந்த திசையைப் பார்த்தோம். அங்கே கோயில் யானையும், பாகனும் இருப்பதைக் கண்டோம். அந்த யானையின் பெயர்தான் அகிலா என்பதையும் தெரிந்துகொண்டோம். அம்பாள் சந்நிதியில் இருந்து அகிலாண்டேஸ்வரி ஈசனை பூஜிக்கச் செல்லும்போது, முன்னதாக அம்பாளின் திருப்பெயரைக் கொண்ட இந்த யானை செல்ல வேண்டும் என்பது சம்பிரதாயம்.
அம்பாள் சந்நிதியில் இருந்து அம்பாள் சிவனை பூஜிக்கச் செல்வாள் என்றால், எந்த வடிவத்தில் அவள் வருவாள்? விக்கிரஹ வடிவத்திலா அல்லது வேறு எந்த வடிவில் அவள் தன் சந்நிதியில் இருந்து வெளித்தோன்றுவாள்? இப்படியான கேள்விகள் நம் மனதில் நிறைந்திருக்க, ஆவலோடு நாம் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த நேரமும் வந்தது. மங்கல இசை ஒலிக்க, அம்பிகை சந்நிதியின் கதவுகள் திறந்தன. நீராய் நின்ற தன் நாயகனை பூஜிக்க, தன் சந்நிதி விட்டு வெளியே வந்தாள் அம்பிகை. அவள் எப்படி வந்தாள், என்ன வடிவத்தில் வந்தாள் தெரியுமா? அம்பிகையை அனுதினமும் பூஜிக்கும் பேறு பெற்ற அர்ச்சகரின் வடிவில் அந்த அகிலம் ஆளும் நாயகி அகிலாண்டேஸ்வரி வெளிப்பட்டாள்!
ஆம்... அம்பிகை சந்நிதியின் அர்ச்சகர்தான், அம்பாளைப் போலவே சிவப்புப் பட்டுச் சேலை அணிந்து, தலையில் கிரீடமும், கழுத்தில் ருத்திராட்ச மாலையும் தரித்து, ஜம்புகேஸ்வரரை வழிபடச் செல்கிறார். உடனே கருவறையின் கதவுகள் மூடப்பட்டன. அர்ச்சகர் வடிவில் வருபவள் சாட்சாத் அம்பிகையே என்பதால், ஐயனின் பூஜையையும், கோபூஜையையும் முடித்துவிட்டு வரும்வரை அம்பாள் சந்நிதியின் கதவுகள் மூடப்பட்டே இருக்குமாம்.
இப்போது அர்ச்சகர் வடிவில் செல்லும் அம்பிகையைத் தொடர்ந்து சென்று, அவள் தன் நாயகனாம் ஜம்புகேஸ்வரரை வழிபடும் எழில் காட்சியை தரிசித்துவிடலாமே!
முன்னே யானை செல்ல, தொடர்ந்து மங்கல இசை ஒலிக்க, அம்பிகை பிராகார வலம் வந்து ஜம்புகேஸ்வரர் சந்நிதிக்குள் செல்கிறாள். அதுவரை எங்கிருந்தார்கள், எப்படி வந்தார்கள் என்று சொல்லமுடியாதபடி பக்தர்கள் நூற்றுக்கணக்கில் ஐயனின் சந்நிதிக்கு எதிரில் இருந்த மண்டபத்தில் திரண்டுவிட்டார்கள்.

அங்கே நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்த பசு ஒன்று நிறுத்தப் பட்டிருந்தது. அன்னை அகிலாண்டேஸ்வரி ஐயனை பூஜித்த பிறகு செய்யும் கோ பூஜையை, திருமணப் பேறு வாய்க்கப் பெறாதவர்கள் தரிசித்தால், அவர்களுக்கு விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் கூடிவரும் என அங்கிருந்த பக்தர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டதும்... 'தான் நித்தமும் ஐயனையும் பசுவையும் பூஜிப்பதை தரிசிக்கும் பக்தர்களுக்கு நல்ல மணவாழ்க்கை அமையட்டும் என்ற எண்ணம் கொண்டுதான் அகிலாண்டேஸ்வரி மணக்கோலம் காணாமல் இருக்கிறாளோ?’ என்று தோன்றியது. ஆம்... அப்படித்தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால், அவள் தன் சங்கல்ப மாத்திரத்திலேயே, தனது நாயகனாம் சிவபெருமானை மணந்துகொள்ள முடியாதா என்ன?!
அம்பிகை ஜம்புகேஸ்வரரை பூஜிப்பதை தரிசிக்க, பக்தர்கள் கூட்டம் நெருக்கியது. ஐயனின் கருவறை மிகவும் சிறியது என்பதால், எல்லோராலும் உள்ளே செல்ல முடியவில்லை. நாமும் மானசீகமாக ஐயனையும் ஐயனை பூஜிக்கும் அம்பிகையையும் பிரார்த்தித்தபடி, ஈசனின் கருவறையை வலம் வருகையில், கருவறை விமானத்துக்கு மேலாக ஒரு வெண்நாவல் மரம் கிளை பரப்பி வளர்ந்திருந்ததைக் கண்டோம். நாம் அந்த மரத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு, அங்கிருந்த பெரியவர் ஒருவர் நம்மிடம் வந்து, அந்த மரத்தின் தொன்மைச் சிறப்பை விளக்கிக் கூறினார்.
அம்பிகை ஈசனின் சாபத்துக்கு ஆளாகி இத்தலத்துக்கு வருவதற்கு முன்பே, ஜம்பு மகரிஷி இங்கே வெண்நாவல் மரமாகத் தோன்றிவிட்டார். அவர் ஏன் வெண்நாவல் மரமாக வடிவெடுத்தார்? ஒருமுறை, அவர் சிவபெருமானை தரிசிக்கச் சென்றபோது, ஒரு வெண்நாவல் கனியைக் கொண்டுபோய்க் கொடுத்தார். பக்தன் அன்போடு கொடுத்த நாவல் பழத்தை ஈசன் சுவைத்துவிட்டுக் கொட்டையை உமிழ்ந்தார். ஜம்பு மகரிஷி அந்தக் கொட்டையை சிவனருட் பிரசாதமாக விழுங்கிவிட்டார். அப்படி அவர் விழுங்கிய கொட்டையே அவருள்ளிருந்து வெண்நாவல் மரமாக வளர்ந்து, காலங்களைக் கடந்தும் பசுமையும் செழுமையும் மாறாமல் தல விருட்சமாகத் திகழ்கிறது.

அந்த விருட்சத்தை தரிசித்துவிட்டு மண்டபத்தை அடையவும், அம்பாள் சிவபூஜையை முடித்துவிட்டு கோ பூஜைக்காக மண்டபத்துக்கு வரவும் சரியாக இருந்தது. அர்ச்சகர் வடிவில் இருந்த அம்பாள் அங்கே அலங்கரிக்கப்பட்டிருந்த பசுவுக்கு மஞ்சள் தடவி, மாலை அணிவித்து, தீபாராதனை செய்தார்.
அம்பாள் கோ பூஜை செய்வதைத் தரிசிக்க வந்திருந்த ரூபா என்பவர், ''தாத்தா சொன்னதன் பேரில் இங்கே வந்தேன். இங்கே அம்பாளே சுவாமியை பூஜிப்பதையும், கோ பூஜை செய்ததை யும் பார்த்தப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!'' என்றார். இப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்திருக்கும் அவருக்கு நல்ல வேலையையும், மணவாழ்க்கையையும் அந்த அகிலாண்டநாயகி அருள்வாள் என்பதில் சந்தேகமே இல்லை.

அம்பிகையாய் வந்து ஈசனை பூஜித்த அகிலாண்டேஸ்வரி சந்நிதியின் அர்ச்சகர் வெங்கடராம பண்டிதரிடம் நம்மை அறிமுகப் படுத்திக்கொண்டு, திருவானைக்காவில் உச்சிக் கால பூஜையை அம்பிகை செய்வதன் தாத்பர்யம் குறித்துப் பேசினோம்.
''இங்கே அம்பாள் சிவபெருமானிடம் யோகம் பயிலும் மாணவியின் நிலையில் இருப்பதால், அம்பிகைக்கு இங்கே திருமணம் நடைபெறவில்லை. எனவேதான், இந்தக் கோயிலில் திருமண உற்ஸவம் நடப்பதில்லை. ஆனால், அம்பிகையின் சங்கல்பப்படி, உச்சிக்காலத்தில் அம்பிகை சிவபெருமானை பூஜிப்பதையும், கோ பூஜை செய்வதையும் தரிசிப்பவர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் கூடிவருகிறது என்பது நிதர்சனமான உண்மை.

ஆதிசங்கரர் இந்தத் தலத்துக்கு விஜயம் செய்தபோது, அம்பிகை மிகவும் உக்கிரமாக இருந்தாளாம். எனவே, ஆதிசங்கரர் அம்பிகையின் உக்கிரத்தை அப்படியே சக்ரத்தில் ஆவாஹனம் செய்து, அதையே அம்பிகையின் இரண்டு காதுகளிலும் தாடங்கமாக அணிவித்து விட்டார். அன்றிலிருந்து அம்பிகை சாந்த ஸ்வரூபியாக மாறிவிட்டதாகப் பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்'' என்றார் வெங்கடராம பண்டிதர்.
பொதுவாக, அம்பாளின் திருவுருவத்துக்கு முன்பாக ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருக்கும். ஆனால், இங்கு ஸ்ரீசக்ரமே அம்பிகையின் தாடங்கங்களாகப் பிரகாசிப்பதன் காரணம் அதுதான்!
தன் மக்களுக்கு நல்ல மணவாழ்க்கை அமைய வேண்டும், அகிலமெல்லாம் சிறக்க வேண்டும் என்பதற்காகவே, சிவபெருமானின் கோபத்துக்கும் சாபத்துக்கும் தன்னை ஆளாக்கிக்கொண்டு, அகிலாண்டேஸ்வரி என்னும் திருப்பெயரோடு, திருவானைக்கா திருத்தலத்தில், உச்சிப் பொழுதில் சிவபூஜை செய்யும் திருக்காட்சியை தரிசித்த நமக்கு, அது ஆனந்த தரிசனமாக அமைந்ததில் வியப்பொன்றும் இல்லை!
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்