மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அருட்களஞ்சியம்

சுதர்சன தரிசனம்!

'எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவிதான் யாதினும் அரிது அரிது காண்’ என தாயுமானவர் போற்றும் இந்த மானிடப் பிறவி ஏன் சிறந்தது என்று பார்த்தால், ஆறறிவு படைத்ததனால்தான் என்பர் பெரியோர். இறைவன் எங்குமுளன்; அவன் தன்னுள்ளும் உளன். அவனைக் காண வேண்டும் என்ற முதிர்ந்த அறிவு (ஞானம்) ஏற்பட, இந்த மனிதப் பிறவியில்தான் முடியுமாதலால், மனிதன் சிறந்தவனாகிறான். அப்படி இறைவனைக் காண விழையும்போது அவன் மேற்கொள்ளும் முயற்சிகள் பல; உத்திகள் அநேகம். அகண்டாகாரமான உருவற்ற ஒரு பெரும்பொருளை தன் மனதுக்குகந்த உருவில் வழிபட்டு, முடிவில் அப்பரம்பொருளில் கலப்பதே அவன் நோக்கம். இதையே தெய்வ உபாசனை என்று கூறுகிறோம்.

இந்த வழியில் தன்னிலும் அந்நியமாக எண்ணி பாவனையினால் வழிபட்டு வரும் ஆரம்ப தசையிலே, அச் சக்தியினால் மனதுக்கு பலமும் வீர்யமும் ஏறி, அந்தத் தெய்வத்தின் சக்தியைப் பிரயோகித்து, உலகோபகாரமாக தீமை, நோய், பைசாச உபாதை முதலியவற்றுக்குப் பரிகாரமும் காண்கின்றனர் சிலர். முக்திக்கு வித்தான மூர்த்தி, ஸித்திக்கும் உதவ முன்வருவதுதான் உபாஸனா மார்க்கத்தின் விந்தை. அத்தகைய ஞான மார்க்கத்தின் நடுவே, இகத்துக்கு மட்டும் விரைவில் பலனளிக்கும் நிலையில் உள்ள உபாஸனை தெய்வங்களில் ஸ்ரீசுதர்சனர் முக்கியமானவர்.

அருட்களஞ்சியம்

சூரியன் ஒன்றுதான். ஆனாலும் அதிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்களுக்குப் பல வண்ணங்கள். அதைப் போலவே பரம்பொருள் ஒன்றுதான். ஆனாலும், தத்துவ சொரூபமான அநேக வடிவங்களில் பல குண இயல்புகள் கொண்டு விளங்குகிறது. அப்பரம்பொருளை அணுகும் முறையிலும் உபாஸனையிலும் பல துறைகள்  நெறிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சுதர்சன உபாஸனை.

மகாவிஷ்ணுவின் கரங்கள் ஒன்றில் காணப்படும் சக்கர ஆயுதத்தில் உறையும் தேவனே சுதர்சனர் எனப்படுகிறார். அந்தச் சக்கரம் சுதர்சன சக்கரம் எனப்படுகிறது. காத்தல், படைத்தல், அழித்தல் என்ற முத்தொழிலில் காக்கும் தொழில் கொண்ட விஷ்ணுவுக்கு, துஷ்ட நிக்ரஹத்துக்கு பொறுப்பு இருப்பதால் ஆயுதப்படை அவசியம். அத்தகைய ஆயுதங்களில் ராஜனாக இருப்பது சுதர்சனம். அதனால் அவரை 'ஹேதிராஜன்’ என்றும் கூறுவர். திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கரத்துக்கு உரிய தெய்வம் என்பதால், சுதர்சனர் உக்கிர வடிவினர். வைணவர்கள் விஷ்ணுவின் சக்கர சக்தியை 'சக்கரத்தாழ்வார்’ என்று கூறுவர். சுதர்சனருக்கு சக்கரராயர் என்றும் ஒரு பெயர் உண்டு.

சுதர்சனர் பிரத்யட்சமான தெய்வம். நெறிமுறைகளுக்கு ஏற்ப தீவிரமாக உபாஸிப்பவர்களுக்கு, உக்கிர வடிவம் கொண்ட சக்கரத்தாழ்வார் மங்கலம் நல்குவதாக பல நூல்களும் கூறுகின்றன.

''ஸ்நானே, தானே, ஜபாதௌச
ச்ராத்தே சைவ விஷேத:
சிந்தநீய: சக்ரபாணி: ஸர்வா
கௌக விநாசந: ஸர்வ கர்மஸு

பூர்ணம் ஸ்யாத் ஸத்யம் ஸத்யம் ஹி நாரத''

என்று பிரம்மன் நாரதருக்கு, ஸ்ரீ சுதர்சனர் ஸ்நானம், தானம், தவம், ஜபம் முதலியவற்றை எடுத்துக்காட்டி, எக்காலத்திலும் த்யானிக்கத் தக்கவர் என்று ஸத்யம் செய்து கூறுகிறார் என்கிறது புராணம்.

தீவிரமாக யோக மார்க்கத்தில் வழிபடும் எந்த உபாஸனையிலும், உபாஸனைக்கு உரிய தேவனை யந்திர வடிவில் அமர்த்தி வழிபடுவது உண்டு. சுதர்சன வழிபாட்டில் யந்திர உபாஸனை மிக முக்கியமானது. சுதர்சன சக்கர யந்திர அமைப்பு இரு வகையானது. செப்புத் தகட்டில் வரி வடிவிலேயே முக்கோணம், ஷட்கோணம் போன்ற கோண அமைப்பில் பரம்பொருளின் வடிவைக் கண்டு வழிபடுவது ஒரு முறை. சக்கரத்தில் சுதர்சனரின் வடிவை உள்ளடக்கிய விக்கிரக ஆராதனை மற்றொரு வகை. வார்த்தைகளே இல்லாமல் வெறும் ஒலி ஆலாபனையால் மட்டும் இனிய இசையை எழுப்பி மகிழ்வூட்டுவதைப் போல, உருவம் இல்லாத வரிவடிவ யந்திர வழிபாடு மனதுக்கு சாந்தி அளிக்கவல்லது.

அருட்களஞ்சியம்

சுதர்சனரின் வீரம் கிளர்ந்தெழும் வடிவத்தையும், மங்கல இயல்பு களையும், சுதர்சன வழிபாட்டில் ஏற்படும் அருள் நலன் களையும் கீழ்க்காணும் சுலோகம் வர்ணிக்கிறது:

சங்கம் சக்கரம்ச சாபம் பரதம் அஸிகதா
குந்தம் அத்யுக்ர தம்ஷ்ட்ரம் ஜ்வாலா
  கேசம் த்ரிநேத்ரம்
ஜ்வல லலனனிபம் ஹார கேயூர வக்த்ரம்
வந்தே ஷட்கோண சக்ரம் சகல ரிபுஜன
ப்ராணா ஸம்ஹார சக்ரம்

சுதர்சன உபாசனை வீரம் அளிக்கவல்லது. தீர்க்கவொண்ணா நோய்களும் சுதர்சனரின் கடாட்சத்தால் நீங்கப் பெறும் என்பது சுதர்சன உபாஸகர்களின் அனுபவம். போர் முனையில் வெற்றித் திருமகளின் கடாட்சத்தைப் பெறுவதையே லட்சியமாகக் கொண்டு வீர வாழ்வு வாழ்ந்த பல மன்னர்கள் சுதர்சன உபாஸிகளாக இருந்திருக்கின்றனர்.

'சுதர்சன சதகம்’ எனும் நூறு பாசுரங்கள் கொண்ட அருள் மாலையை நெறி தவறாது முறைப்படிப் பாராயணம் செய்வதனால், எத்தகைய ஆபத்திலிருந்தும் விடுபெறலாம் என்பது சுதர்சன உபாஸிகளின் நம்பிக்கை.

சுதர்சன உபாஸனையின் பெருமைச் சிறப்புகளை நாடறியச் செய்தவர்களாள் ஸ்ரீநிகமாந்த மகாதேசிகரின் பணி ஒப்பற்றது. ஸ்ரீ தேசிகர் சிறந்த சுதர்சன உபாஸியாக விளங்கியதுடன் 'ஸ்ரீ சுதர்சன அஷ்டகம்’ என்ற பாமாலையையும் சக்கரத்தாழ்வாருக்குச் சூட்டியிருக்கிறார்.

சுதர்சன வடிவங்கள்

'சில்ப ரத்தினம்’ சுதர்சனரின் பல்வேரு வடிவங்களை வருணிக் கிறது. திருமாலின் சக்கரத்துக்கு உரிய தேவனை அந்நூல் 'சக்கர ரூபி விஷ்ணு’ என்று குறிப்பிடுவதுடன், சுதர்சனர் விஷ்ணுவின் அம்சமே என்பதையும் வலியுறுத்துகிறது. வேலாயுதத்தையே முருகனாக வழிபடுவதுபோல் சுதர்சனரையும் விஷ்ணுவாகவே பாவித்து வழிபடுவது மரபு. எண் கரங்கள் கொண்ட  சுதர்சனரையும், பதினாறு கரங்கள் கொண்ட வடிவையும், முப்பத்திரண்டு கரங்கள் கொண்ட வடிவையும், 'சில்பரத்தினம்’ குறிப்பிடுகிறது.

சாதாரணமாக ஆலயங்களில் சுதர்சனர் எட்டு அல்லது பதினாறு கரங்களுடன் வீறு கொண்டு எழும் தோற்றத்துடன் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் வடிவைக் கல்லிலும் செம்பிலும் காணலாம். ப்ரயொக அவசரத்தில் போர்க்கெழும் கோலத்துடன் பாய்வது போல் பதினாறு கரங்களுடன் காணப்படுகிறார்.

காஞ்சியில் உள்ள அஷ்டபுஜர், எண் கரங்கள் கொண்ட பெருமான்,  திருமாலின் சுதர்சன சக்தி எனப்படுகிறார். குடந்தையில் திருக்கோயில் கொண்டுள்ள சக்கரபாணி, சுதர்சனரின் வடிவமே ஆகும். சக்கரத்தை கரத்தில் கொண்டு சக்கரபாணி என்றே பெயர் பெற்றிருக்கும் அப்பெருமான் சுதர்சனராகவே காட்சி தருகிறார்.

சுதர்சன வழிபாடு பேராபத்துக்களிலிருந்தும், தீரா நோயிலிருந்தும், எடுத்த காரியத்தில் ஏற்படும் இடையூறுகளிலிருந்தும் காக்க வல்லது என்பதால், குரு முகமாக உபதேசம் பெற்று ஜப, தவ, ஹோம, மஹா மந்திரங்களைச் செய்து பயனடையலாம்.

பாஸ்கரராயர்!

கி.பி.1690-ல் மஹாராஷ் டிரத்தில் 'பாகா’ என்ற சிறிய கிராமத்தில் கம்பீரராயர்  கோனாம்பிகா தம்பதிக் குக் குமாரனாகப் பிறந்தவர் பாஸ்கரராயர். இவரது ஏழாம் பிராயத்தில் காசிமா நகரில் உபநயனம் நடந்தேறியது. அக்கணமே சரஸ்வதி உபாஸனா மந்திரத்தை உபதேசம் பெற்றார் பாஸ்கர ராயர்.

காசி அரசனுடைய பேரபி மானத்துக்குப் பாத்திரமானார். காசி அரசன் ஆதரவில், பால மேதை பாஸ்கரராயர் அநேக வருஷங்கள் அப் புண்ணிய பூமியில் வசித்து வந்தார்.

அருட்களஞ்சியம்

வேத, உபநிஷத் பாடங் களை மகான்கள் இயற்றிய பாஷ்யத்தோடு கற்றுணர்ந்து தமக்கென ஒரு வழியை வகுத்துக்கொண்ட பின்னர், அங்கே பிரபலமாயிருந்த கௌட தர்க்க சாஸ்திரத்தைப் பயில கங்காதர வாஜபேயி என்ற தவச்ரேஷ்டரை அடைந்தார்.  

திருமணப் பருவம் எய்தியதும், ஆனந்தியை மணம் புரிந்தார். இல்வாழ்க்கையின் பயனாக மகப்பேறு கிடைத்தது. பாண்டு ரங்கன் என்ற திவ்யநாமம் தாங்கியது அக்குழந்தை.

தேவீ பாகவதத்தில் லயித்துப் போன பாஸ்கரராயருக்கு தேவீ உபாஸனையில் ஈடுபாடு ஏற்படலாயிற்று. அதில் பூரணத்வம் அடைய விரும்பி, சிவதத்த சுக்லர் என்ற ஸ்ரீவித்யை உபாஸகரை நாடி தீக்ஷை பெற்றார். பாஸுரா நந்த நாதர் என்ற தீக்ஷா நாமத்தோடு சக்தி உபாசனையை மேற்கொண்ட பாஸ்கரராயர், தமது துணை வியாருக்கும் ஸ்ரீவித்யையை உபதேசம் செய்துவைத்தார்.

கிருஷ்ணா நதி தீரத்தில் இல்லறம் நடத்தி வந்த பாஸ்கர ராயரை காவிரி தீரத்தில் வந்து ஸ்திரவாசம் செய்ய வேண்டுமென அழைப்பு விடுத்த தஞ்சாவூர் அரசன், அவருக்கு பூதானமாக  ஒரு கிராமத்தை வழங்கினான். காவிரியின் வடகரையில்... தென் கரையில் அவர் குருநாதர் கங்காதர வாஜபேயி வாழ்ந்து வந்த திருவாலங்காடு கிராமத்துக்கு எதிரிலுள்ள பாஸ்கரராயபுரம் அவருக்குச் சொந்தமாகியது.

தமது சாஸ்திரீய நெறி வாழ்க்கைக்கு உதவி செய்ய வேண்டி, கல்வி கேள்விகளில் சிறப்புற்று விளங்கிய பதினேழு பிராமணக் குடும்பங்களுக்கு கிராம சொத்தைப் பகிர்ந்து மான்யமாக வழங்கிய  பிறகு, மத்யார்ச்சுனம் என்ற திருவிடைமருதூருக்கு தமது வாச ஸ்தலத்தை மாற்றிக் கொண்டார். அங்கு நிகழ்ந்த ஒரு சம்பவம் அவருடைய தேவீ உபாசனையின் மகிமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

சந்நியாசி ஒருவர் தெருவில் நடந்து போவதைச் சிறிதும் லட்சியம் செய்யாது காலை நீட்டிய வண்ணம் தெருத் திண்ணையில் சாய்ந்து கொண்டிருப்பது பாஸ்கர ராயருடைய பழக்கமாய் இருந்து வந்தது.

தமக்கு உரிய மரியாதையை அளிக்காதது குறித்து கோபம் கொண்ட சந்நியாசி, அவரெதிரில் ஊர் ஜனங் களைக் கூட்டி வைத்துக் கொண்டு அவரது நடத்தை குறித்துப் புகார் செய்தார்.

அருட்களஞ்சியம்

''இல்லறம், துறவறம் இரண்டுமே தர்மத்தின் சார்பு கொண்டது. என் தர்மத்தை நான் கடைப்பிடித்தேன். அதற்கு மாறாக நான் செய்திருந்தால் (துறவியை வணங்கியிருந்தால்), இந்தத் துறவி இந்நேரம் சிரசு வெடித்து மாண்டு போயிருப்பார்'' என்று சொல்லிவிட்டு அத்துறவியின் தண்டம், கமண்டலம், காஷாயம் மூன்றையும் வைத்து நமஸ்காரம் செய்தார்.

உடனே தண்டம், கமண் டலம், காஷாயம் மூன்றும் ஆயிரமாயிரம் தூள்களாகச் சிதறின. அவர் மகிமையை உணர்ந்த துறவி, தேவியே தம் எதிரில் இருப்பதாகக் கூறி வணங்கினார்.

தேவீ உபாஸகர்களுடைய இரு கண்களில் ஒன்று தேவி, மற்றொன்று பாஸ்கரராயர் என்று சொல்லுவது மிகையாகாது.

ஏறக்குறைய நாற்பதுக்கு மேற்பட்ட கிரந்தங்கள் செய்து, லலிதா ஸஹஸ்ர நாமத்திற்கு பாஷ்யம் செய்த பெருமையும் இம்மகானைச் சேருகிறது. ஸ்ரீவித்யை உபாஸனா பத்ததிகளை நிர்ணயம் செய்த இம்மகான், பாரத தேசமெங்கும் யாத்திரை செய்து, காசி, கொங்கண தேசம் முதற்கொண்டு  பல க்ஷேத்திரங்களில் தாமே முன்னின்று கோயில்கள் கட்டி அரும்பெரும் தேவ பிரதிஷ்டைகளைச் செய்தருளியுள்ளார்.

பாஸ்கரராயபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீபாஸ்கரேஸ்வரர் ஆலயம், தேவி உபாஸகர்களின் ஸ்ரீநகரமாகவும், ஸ்ரீசக்ரராஜ பீடமாகவும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது!

1970 விகடன் தீபாவளி மலரில் இருந்து...

ஓவியங்கள்: சிம்ஹா, அனு