Published:Updated:

துங்கா நதி தீரத்தில்... - 14

குரு தரிசனம்! பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம் ஸ்யாம்

துங்கா நதி தீரத்தில்... - 14

குரு தரிசனம்! பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம் ஸ்யாம்

Published:Updated:

ஸ்ரீஸ்வாமிகள் தம்முடைய குருநாதரின் கிருபையினால், அளவற்ற யோக சக்தியைப் பெற்றுவிட்டார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அப்படியிருக்க, அவர் தம்முடைய யோகசக்தியினால், பெளகுப்பே கிராமத்தில் ரத்னகர்ப்ப கணபதி, சந்திரமெளலீசுவரர் விக்கிரஹங்கள் களவு போனதை ஏன் தடுக்கவில்லை? அவை என்ன சாதாரண விக்கிரஹங்களா?

ஸ்ரீஆதிசங்கரர் காசியில் இருந்தபோது, காசி விசுவநாதரால் கயிலையில் இருந்து கொண்டு வரப் பெற்ற ஐந்து லிங்கங்களில் ஒன்று அல்லவா சந்திரமெளலீசுவர லிங்கம்! அவைகளில் ஒன்றை சிதம்பரம் க்ஷேத்திரத்தில் வைத்துவிட்டு, மற்ற நான்கையும் தம்மால் நிறுவப்பெற்ற சிருங்கேரி, துவாரகா, பத்ரி, ஜகந்நாதம் ஆகிய நான்கு ஆம்னாய பீடங்களில் வைத்து, வழிவழியாக ஆசார்ய புருஷர்களால் வழிபடும்படியான நியமத்தை ஏற்படுத்தினார் ஆதிசங்கரர். அந்த சந்திரமெளலீசுவர லிங்கம் ஸ்படிகம் இல்லை என்றும், அது ஒரு ரத்ன விசேஷம் என்றும் சொல்லப்படுகிறது. லிங்கத்தின் திருமுடியில் இருக்கும் சந்திரனின் ஒளியும்கூட வியப்பூட்டுவதாக இருக்கும்.  

அப்படி, ஆசார்ய புருஷர்களால் வழிபடப் பெற்ற அந்தச் சக்தி வாய்ந்த விக்கிரஹத்தை யாராலும் அவ்வளவு சுலபத்தில் கொண்டு போய்விட முடியுமா என்ன? அப்படியே கொண்டுபோனாலும், அந்த விக்கிரஹங்கள் திரும்பவும் தம்முடைய யதாஸ்தானத்துக்கு வந்துவிடாதா என்ன? இதனை ஸ்வாமிகள் நன்றாகவே அறிவார். அதன் காரணமாகவும், குருநாதரின் கிருபையினால் தாம் பெற்றிருந்த நரஸிம்ம உபாசனையில் தாம் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறோம் என்று தம்மைத் தாமே சுய பரிசோதனை செய்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கட்டுமே என்கிற சங்கல்பத்தின் காரணமாகவும்தான் அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறும்படியாகச் செய்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துங்கா நதி தீரத்தில்... - 14

விக்கிரஹங்கள் களவு போய், அதனால் ஏதேனும் துன்பம் விளைந்துவிடாமல் இருக்கவேண்டுமே என்று அச்சம் கொண்டவர்போல், விக்கிரஹங்கள் களவு போன அன்றைய நாள் முழுவதும் மிகத் தீவிரமான நரஸிம்ம உபாசனையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். களவு போன விக்கிரஹங்களைக் கொண்டு வந்து சேர்த்த அந்த இன்ஸ்பெக்டர்தான் எத்தனை பாக்கியசாலி! ஸ்வாமிகளின் பரிபூரண அனுக்கிரஹம் அவருக்குக் கிடைத்துவிட்டதே!

களவுபோன விக்கிரஹங்கள் திரும்பக் கிடைத்ததுமே, உடனே சிருங்கேரிக்குச் சென்று, அவற்றைத் தம் குருநாதரின் அதிஷ்டானத் தில் சேர்ப்பித்துவிட நினைத்த ஸ்வாமிகள், அதன்படியே புறப்பட்டுவிட்டார். சிருங்கேரியை அடைந்த ஸ்வாமிகள் அதன்பின் சுமார் இரண்டு வருட காலம் வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே இருந்து நித்ய ஆசார அனுஷ்டானங் களைக் கடைப்பிடித்தபடி, வித்யார்த்திகளுக்குப் பாடம் சொல்லுவதிலும், சாஸ்திர கிரந்தங்களை ஆராய்வதிலுமாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.

ஒருநாள், ஸ்ரீசாரதையின் திருவுள்ளப்படி தென்னிந்திய விஜயம் மேற்கொள்ள சங்கல்பம் கொண்டார். அதே நேரம், அன்றைய மைசூர் மஹாராஜாவாக இருந்த சாமராஜ பிரபு, ஸ்வாமிகள் தம்முடைய ராஜதானிக்கு விஜயம் செய்து அனுக்கிரஹிக்க வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார். அதன்பேரில், மைசூருக்கு விஜயம் செய்து, ராஜ குடும்பத்தினருக்குப் பரிபூரண அனுக்கிரஹம் புரிந்தார் ஸ்வாமிகள்.

பின்னர், மைசூரிலேயே சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்க சங்கல்பம் கொண்டார். அதன்படி, சுமார் நான்கு மாத காலம் ஸ்வாமிகள் அங்கே தங்கியிருந்தபோது, விநாயக சதுர்த்தியை முன்னிட்டு சமஸ்தான வழக்கப்படி, வித்யார்த்திகணபதி சபை நடைபெற்றது. சாஸ்திரங்களில் மிகுந்த பாண்டித்யம் பெற்றிருந்தவர்களும், ஆஸ்தான வித்வான்களாக இருந்த பண்டிதர்களும் சபையில் கலந்துகொண்டு, சபையை அலங்கரிக்கும் ஸ்வாமிகளின் முன்னிலையில் பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து விவாதிப்பார்கள். அப்படி ஒருநாள், சமஸ்கிருதத்தின் சிறப்புகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, ஸ்வாமிகளுக்கு தம் குருநாதருடன் முதல் முறையாக தென்னிந்திய விஜயம் செய்தபோது நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

1870-71ம் ஆண்டுகளில், குருநாதர் ஸ்ரீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகளோடு் சுமார் 9 மாதங்கள், சென்னை ஜார்ஜ் டவுனில்  கிருஷ்ணப்ப நாயக்கர் அக்ரஹாரத்தில் இருந்த சிருங்கேரி மடத்தில் தங்கி இருந்தார் பால ஸ்வாமிகள். ஸ்ரீநரஸிம்ம ஸ்வாமிகளைப் பற்றி மைசூர் சமஸ்தான கமிஷனராக இருந்த 'பெளரிங்’ மூலம் அறிந்திருந்த சென்னை மாகாண கவர்னர் நேப்பியர், ஸ்வாமிகளுக்கு யாதொரு குறையும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார். அப்பகுதி  மக்களும்கூட ஸ்வாமிகளின் தேஜஸைக் கண்டு, அவரையே தங்கள் குருநாதராக வரித்துக்கொண்டனர். அந்த அளவுக்கு ஸ்ரீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகள் தம்முடைய அருள்திறனால் அனைவரையும் ஆகர்ஷித்துக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

துங்கா நதி தீரத்தில்... - 14

சென்னையில் இருந்தபோது, தமிழ் மொழியைத் தெளிவாகப் பேசக் கற்ற ஸ்வாமிகள், தமிழ் மொழியில் பாண்டித்யம் பெற்றிருந்த அறிஞர்களைச் சந்திப்பதில் விருப்பம் கொண்டிருந்தார்.  அந்தச் சந்திப்பின்போது ராமலிங்க அடிகளாரைப் பற்றியும், அவருடைய 'ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்’ என்பன போன்ற பாடல்களைப் பற்றியும் அறிந்துகொண்டவர், அடிகளாரைச் சந்திக்க விரும்பினார். விஷயத்தைக் கேள்விப்பட்ட வள்ளலார் சுவாமிகள், தம்முடைய முதன்மை மாணவரான தொழுவூர் வேலாயுதனாரை அழைத்துக்கொண்டு, ஸ்வாமிகளை தரிசிக்க வந்தார்.

வள்ளலாரை அன்போடு வரவேற்ற ஸ்வாமிகள், அவருக்குரிய ஆசனம் அளித்து அமரச் செய்தார். இருவரும் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் ஸ்வாமிகள், ஒரு சமஸ்கிருத புத்தகத்தைக் கொடுத்து, அதில் குறிப்பிட்ட பகுதியைப் படிக்கும்படி கூறினார். வள்ளலார் தம்முடைய மாணவருக்குப் பெருமை சேர்க்க எண்ணியவராக, வேலாயுதனாரையே படிக்கச் சொன்னார். வேலாயுதனாரும் படித்துத் தெளிவாக விளக்கினார். அதைக் கேட்டுப் பெரிதும் சிலாகித்த ஸ்வாமிகள், வள்ளலார் சுவாமிகளிடம் சமஸ்கிருத மொழியின் சிறப்புகளைப் பற்றி விளக்கமாகக் கூறினார். பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த வள்ளலார் சுவாமிகள், ''சமஸ்கிருத மொழியின் சிறப்புகள் பற்றி இவ்வளவு சிலாகித்துப் பேசுகிறீர்களே, அதற்கான அவசியம் என்ன?'' என்று கேட்டார்.

துங்கா நதி தீரத்தில்... - 14

அதற்கு ஸ்வாமிகள், ''உங்களுக்குத் தெரியாதா, சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாயைப் போன்றது. யாரேனும் தாயைப் பழிப்பாரோ?'' என்று கேட்டார்.

உடனே வள்ளலார் சுவாமிகள் சற்றும் யோசிக்காமல், ''தாங்கள் சொல்லுவதுபோல் சமஸ்கிருதம் தாய் என்றால், தமிழை தந்தை என்றே போற்றலாம். இயற்கையிலேயே இனிமையான மொழி தமிழ். இறையருளைப் பாடித் துதிக்க மிகவும் இசைவான மொழி. வேறு எந்த மொழியிலும் இல்லாத 'ழ’கரம் தமிழுக்கே உரித்தான தனிச் சிறப்பு!'' என்று பதில் கூறினார். அதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து, ஆம் என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தார் ஸ்ரீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகள். தமிழின் தொன்மையும் தொல்புகழும் அவருக்குத் தெரியாததா என்ன? வள்ளலார் சுவாமிகளின் வாய்மொழியாக அது வெளிப்பட வேண்டும் என்பதுதான் ஸ்வாமிகளின் விருப்பம் போலும் என்று, மறைவாக  இருந்த பால ஸ்வாமிகள் நினைத்துக் கொண்டார்.

மைசூரில் பண்டிதர்கள் சபையில் இருந்த வேளையில், முன்பு நடந்த இந்தச் சம்பவத்தைப் பற்றி நினைத்துக்கொண்ட ஸ்வாமிகள் மெள்ளச் சிரித்துக் கொண்டார். ஸ்வாமிகள் சிரித்ததற்கான காரணம் அங்கிருந்த பண்டிதர்களுக்குப் புரியவில்லை.

ஸ்வாமிகள் அதை விளக்கியபோது..?

தொடரும்...

தொகுப்பு: க.புவனேஸ்வரி, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism