Published:Updated:

மன நிம்மதி தருவாள் வீரபாண்டி கௌமாரி!

நிம்மதி அருளும் தேவி..!

தேனியில் இருந்து கம்பம் செல்லும் வழியில், 'வீரபாண்டி’ என்னும் ஊரில், வைகை ஆற்றின் கிளை நதியான முல்லையாற்றங்கரை அருகே, அத்தனை சாந்தமாகக் கோயில் கொண்டு வீற்றிருக்கிறாள், அருள்மிகு கௌமாரி அம்மன்.  

பார்வை பறிபோன வீரபாண்டியன் என்ற பாண்டிய மன்னன், சிவபெருமானை பிரார்த்திக்க, சிவபெருமான் மன்னன் கனவில் தோன்றி, கெளமாரி அம்மனை வணங்கி இழந்த பார்வையை திரும்பப் பெறுமாறு கூறினார். மன்னனும் அப்படியே செய்து கண் பார்வை பெற்றதாகவும், அதற்குக் காணிக்கையாக கோயிலைப் புதுப்பித்துக் கட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

மன நிம்மதி தருவாள் வீரபாண்டி கௌமாரி!

 அம்மை நோய் தீர்ப்பவள்

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், இவ்வழியாகச் சென்ற  ஆங்கிலேய அதிகாரி ஒருவர், அம்மை நோயால் பீடிக்கப்பட்டு  துன்பப்பட்ட போது, இத்திருத்தலத்துக்கு வந்து வணங்கி நலம் பெற்றதால், ஆற்றங்கரையில் பாலம் கட்ட உத்தரவு பிறப்பித்ததாகவும் சொல்லப்படுகிறது.  

மேலும், அம்மை நோயால் பீடிக்கப்பட்டவருக்கு, அம்பாள் முன் படைக்கப்பட்ட தீர்த்தத்தைக் கொடுக்க, 'அம்மை நோயின்’ சீற்றம் குறையும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.  

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், முல்லை நதியில் தீர்த்தமாடி, அங்கப்பிரதட்சிணம் செய்து, இங்குள்ள வேப்பமரத்தில் தொட்டில் கட்டி, வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மன நிம்மதி தருவாள் வீரபாண்டி கௌமாரி!

 மன நிம்மதி தருபவள்

குடும்பத்தில் எப்போதும் சண்டையும் சச்சரவுமாகவும் இருப்பவர்கள், சித்திரைத் திருவிழாவின்போது, தீச்சட்டி ஏந்தி வலம் வந்து வழிபட்டால், குடும்பத்தில் சண்டை சச்சரவு நீங்கி நிம்மதி ஏற்படுவதாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்கள்.

மாதம்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமை களில் புதிதாகத் திருமணம் ஆனவர்கள், திருமாங்கல்யத்தை அம்பாள் முன் சாற்றி வழிபட்டு, புது மாங்கல்யம் மாற்றிச் சென்றால், கணவருக்கு ஆயுள் கூடும் என்பது ஐதீகம்.

மன நிம்மதி தருவாள் வீரபாண்டி கௌமாரி!

 நேர்த்திக் கடன்களுக்கு உதவுபவள்

இத்திருத்தலத்துக்கு வந்து வேண்டுதல் நிறைவேறிய தென்மாவட்ட பக்தர்கள் சித்திரைத் திருவிழாவில் முடிகாணிக்கை கொடுத்தும், தீ மிதித்தும், பறவைக் காவடி எடுத்தும், ஆயிரம்கண் பானை சமர்ப்பித்தும் அம்மனின் அருள் பெறுகின்றனர். சித்திரைத் திருவிழாவின்போது, கொடிக்கம்பத்துக்கு நீர் ஊற்றவும், அக்னிச்சட்டி எடுக்கவும் மண்சட்டியை பயன்படுத்துவதுதான் வழக்கம். அந்த மண்சட்டி செய்யும் குயவர்களின் கனவில் தோன்றும் அம்பாள், ஒவ்வொரு ஆண்டும் இத்தனை மண்சட்டி தான் செய்யவேண்டும் என்று ஆணை பிறப்பிப்பாள். அவள் சொன்னபடியே, சட்டி செய்யும் குயவர்களுக்குச் சரியாக, கடைசிநாள் திருவிழாவின்போது, அனைத்து மண்சட்டிகளும் விற்றுப்  போகும் அதிசயமும் இங்கே நிகழ்கிறது..!

அக்னிசட்டி எடுப்பவர்களுக்கு எந்த மரத்தில் விறகு எடுக்க வேண்டும் என்பதையும், காவடி எடுப்பவர்களுக்கு எந்த நதியில் தீர்த்தம் எடுக்கவேண்டும் என்பதையும் கனவில் தோன்றி ஆணை பிறப்பித்து உதவுகிறாள் இந்த கெளமாரி அம்மன்.        

இந்தக் கோயிலில் விநாயகர், முருகன் சந்நிதிகளும் அமைந்து உள்ளன. வீரபாண்டிய மன்னனுக்கு கண்பார்வை அருளிய இந்த வீரபாண்டி அம்மனை வணங்கி வழிபட்டால், வழக்குகளில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றிகளே கிட்டும்.

-  ம.மாரிமுத்து

படங்கள்  வீ.சக்தி அருணகிரி