Published:Updated:

கேள்வி - பதில்

ஆன்மிக சொற்பொழிவுகள் அவசியமா? சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

ஆன்மிக சொற்பொழிவுகள் அவசியமா? சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

? 'ஆன்மிகச் சொற்பொழிவுகள், கதாகாலட்சேபம் முதலானவற்றில் சொல்லப்படும் அறிவுரைகள் மற்றும் போதனைகளை, அவற்றைச் சொல்பவர்கள் பின்பற்றுவதே கடினம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் நேரத்தை வீணாக்குபவை’ என்கிறான் நண்பன் ஒருவன்.

உரையாற்றுபவருக்கான ஒரு வேலை வாய்ப்பு என்பதைத் தவிர, இவற்றால் வேறொன்றும் பயன் இல்லை என்பது அவனது கருத்து. அவனுக்கு பதிலளிக்க என்னால் இயலவில்லை. தங்களுடைய பார்வையில், தகுந்த விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

- சே. பெருமாள்சாமி, அரக்கோணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் கோணம்...

'மண், பெண், பொன் ஆகிய மூன்றின் மீதான ஆசைகள்தான் பல இன்னல்களுக்குக் காரணம். இவற்றை விலக்கிவிட்டால், அழியாத ஆனந்தத்தை அடையலாம்’  இப்படியான தத்துவங்களுடனும், சான்றுகளுடனும், கதைகள் வாயிலாகவும் மகான்களின் வாழ்க்கை வரலாறுகளுடனும்... கேட்பவர்களின் மனதைப் பக்குவப்படுத்துவார்கள். அதேநேரம், இந்த மூன்றும் தன்னை வந்தடையும்போது ஏற்று மகிழ்வார்கள். இந்த அனுபவமானது தொடர்ந்து தொழிலில் ஈடுபட அவர்களுக்கு ஊக்கமளிக்கும். அவர்களுடைய விளக்க உரைகளும் மென்மேலும் மெருகேறி கைத்தட்டல்களால் சிறப்புப் பெற்றுவிடும். பட்டமும், பட்டயமும், பரிசும், பெருமையும் தானாகவே வந்துவிடும். ஆக மொத்தத்தில் இந்தத் தொழிலானது அவர்களது வாழ்க்கையை செம்மையாக்கிவிடும். அவர்கள் லோகாயத வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பெற்று நிறைவை எட்டுவார்கள்.

இப்படி, மூலதனமே இல்லாமல் முன்னுக்கு வந்துவிடும் சிலரைப் பார்த்து, மேலும் பலர் இந்தத் தொழிலில் ஈடுபடுவார்கள். இத்தகைய அன்பர்கள் சொல் வளம், திறமை ஆகியவற்றின் இழப்பால் தொழில் தடைபடும் வேளையில், பெருமை பெற்ற மகான்களின் பக்தர்களாக தங்களை பதிவு செய்துவிடுவார்கள். அந்த மகானின் வரலாறைப் படித்தறிந்து, அவரது பெருமைகளை சொற்பொழிவின் இடை இடையே சேர்த்துக்கொண்டு, அவரது பக்தகோடிகளை ஈர்ப்பார்கள். அதன் பிறகு மற்றவர்களையும்... அவரவர் வணங்கும் மகான்கள் குறித்த தகவல்களைத் திரட்டி, அவர்களின் பெருமையைச் சொல்லி, தன்வசப்படுத்துவார்கள். இப்படி, வித்தியாசமான சொற்பொழிவை சமுதாயத்துக்கு இவர்கள் வழங்க, இவர்களது வாழ்வுக்குப் போதுமான ஒத்துழைப்பை மக்கள் குழாம் அளிக்கும்.

கேள்வி - பதில்

? எனில், ஒருசிலருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதைத் தவிர, சொற்பொழிவு உபந்யாசங்களால் வேறு பயன் இல்லை என்கிறீர்களா?

ஆமாம்! வேதம், புராணம், இதிகாசம், சம்பிரதாயம், மகான்கள் மற்றும் பக்தர்களது கதைகள் ஆகிய அத்தனையும் பலபேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கின்றன என்றே சொல்லவேண்டும்.

இவற்றை தவிர, சம்பிரதாய பஜனை, நாம சங்கீர்த்தனம், கல்யாண உற்சவம், ராமாயணம், மகாபாரதம், பாகவதம், பக்த விஜயம் போன்றவையும் பலருக்கும் நல்லதொரு வேலை வாய்ப்பை அளிக்கின்றன. இப்படி, நாட்டின் கலாசாரத்தை அழியாமல் காப்பாற்றும் அத்தனை தத்துவ நூல்களும், தரிசனங்களும் நல்ல வேலை வாய்ப்பை அளிக்கின்றன.

படித்து, பலபேருக்கு பகிர்ந்தளித்து, நல்ல குடிமகன்களை உருவாக்கி, அமைதியான சமுதாயத்தை ஏற்படுத்தி,  தனது பங்கை சமுதாயத்துக்குச் செலுத்தி, பிறப்பின் பலனை பயனுள்ளதாக்க வேண்டிய அத்தனை நூல்களும், லோகாயத வாழ்க்கையை நிறைவு செய்ய பயன்படும் வகையிலேயே வளர்ந்து மிளிர்கின்றன!

10+2+3+2=17. இப்படி, 17 வருடங்கள் கல்வி பயின்று ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட காலம் தொழில் பயின்று வேலை வாய்ப்பைப் பெறுகிறான். ஆரம்பத்தில் போதுமான ஊதியம் இருக்காது. தொழிலில் திறமை வளர வளர சிறுகச் சிறுக ஊதிய உயர்வைப் பெறுவான். இப்படி வாழ்க்கையை நடத்துபவர்கள் ஏராளம். இவர்களில்... மண்ணாசை வேண்டுமானால் ஒருசிலருக்கு  மட்டும் நிறைவேறும். மற்றபடி பெரும்பாலானோருக்கு  மூன்று ஆசைகளும் இருக்காது. அவர்களுக்கு அது எட்டாக்கனி. உழைப்பை மட்டுமே நம்பி வாழும் இந்த மக்களுக்கு சமுதாயத்தில் அங்கீகாரமும் கிடைக்காது. இப்படியான நடுத்தர வர்க்கத்தினர் மூன்று ஆசைகளிலிருந்து விடுபட்டு ஆன்மிக அறிவு பெற்று விளங்குவதும் உண்டு. அதேநேரம், இந்த மூன்றையும் தாரக மந்திரமாக உபதேசித்து, தனது வாழ்க்கையை உயர்த்திக்கொள்ளும் சிலர், ஆசைகளில் இருந்து விடுபடாமல், ஆன்மிக அறிவையும் எட்டாமல், வாழ்க்கையை நிறைவு செய்வார்கள்.

கேள்வி - பதில்

? அதற்காக, அறம் சார்ந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் தகுதி புராண  இதிகாச விளக்கவுரைகளுக்கு இல்லை என்றாகிவிடுமா?

அப்படிச் சொல்லவில்லை. கட்டுக்கதை, மூட நம்பிக்கை என்று தூற்றியவர்களையும் ஏற்றுக்கொண்டு உயர்த்திவிடுவதிலும் சொற்பொழிவு கதாகாலட்சேப மேடைகளுக்கு அதீத பங்களிப்பு உண்டுதான். அதேநேரம், அவற்றை தனிப்பட்ட வளர்ச்சிக்காக பயன்படுத்தும் நடைமுறைகளே இங்கு அதிகம் என்று சொல்ல வருகிறேன்.

ஆன்மிக இதழ்களும், நாளேடுகளும், அவற்றை நம்பி உயிர்பெற்று வளைய வருகின்றன. பேச்சுத் தகவலை இந்த இதழ்களில் கட்டுரைகளாக வரைந்து, வரவேற்பு பெற்று மகிழும் எழுத்தாளர்களையும் வாழவைக்கின்றன. அதுமட்டுமா? சின்னத் திரை, பெரியதிரைக்கும் ஊன்றுகோலாகச் செயல்படுகின்றன!

ஆக, நவீன உலகிலும் அந்த பழம்பெரும் பொக்கிஷமானது வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த பலரை கைதூக்கிவிட்டு வாழ்வளித்து வருகிறது. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிறார்கள். இனாமாகக் கிடைத்த தேங்காயில் பிள்ளையாரின் அருளைப் பெற்று மகிழ்கிறார்கள். அலட்டிக் கொள்ளாமல், உதடுபடாமல் நுனிப்புல் மேய்ந்து, நூதன இலக்கியவாதிகளாக பெருமை பெற்று விளங்கும் தகுதியையும் பெற்று மகிழ்கிறார்கள். இது, அந்த பொக்கிஷத்தின் அழியா பெருமைக்கு அடையாளம்.

இரண்டாவது கோணம்...

'வேதத்தைக் காப்பாற்றுகிறேன்’ என்று உறுதிமொழி ஏற்றவர்கள் ஊரைவிட்டு வெளியேறி விட்டார்கள். தத்துவ நூல்கள் பலவும் இணையதளங்களில் தஞ்சம் புகுந்து விட்டன. சம்பிரதாயங்களோ மக்கள் மனதில் இருந்து மறைந்துவிட்டன. உலகளாவிய சிந்தனை மாற்றத்தின் தாக்கமானது, மக்களை புது வாழ்க்கை முறையை ஏற்கவைத்திருக்கிறது. புதிய தலைமுறையினருக்கு பழைமையில் நாட்டம் இல்லை. ஆக, கோயிலும் விழாக்களும் வேலை வாய்ப்பாக மாறிவிட்டன.

கேள்வி - பதில்

? என்ன சொல்ல வருகிறீர்கள்... எல்லாமே மாறிவிட்டது; புராண இதிகாசங்கள் போன்ற பொக்கிஷங்களை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க, மேடைப் பேச்சுக்களை விட்டால் வேறு வழியில்லை என்கிறீர்களா?

இன்றைய நிலைமை அப்படித்தான்! சின்னத்திரையில் அபிஷேக ஆராதனையைப் பார்த்து ரசிப்பது வழிபாடாக மாறிவிட்டது. ஆகாய விமானம், ரயில், கார், பஸ் ஆகியவற்றில் சுற்றுப் பிரயாணம் செய்வது க்ஷேத்திராடனமாக மாறிவிட்டது. ராமாயணம், மகாபாரதம் போன்றவை பட்டிமன்றமாக மாறி, பொழுதுபோக்கில் இணைந்துவிட்டன. அடுக்குமாடிக் கட்டடத்தில் வாழப் பழகியவர்கள், கூட்டுக் குடும்பத்தை மறந்து விட்டார்கள். வீட்டுக் கொண்டாட்டங்கள் அனைத்தும் மண்டபத்தில் அரங்கேறுகின்றன. உணவுக்குக் கட்டுப்பாடு இல்லை. ஒவ்வொரு தனிமனிதனும் சுயநலமுடனும் சுதந்திரமாகவும் வாழவிரும்புகிறான்.

சமுக சட்டதிட்டங்கள் மதிக்கப்படுவதில்லை. வேலையிலும், ஊண்உறக்கத்திலும் சுதந்திரம் உண்டு. காலநேரம் பார்ப்பது இல்லை. எந்த பிரச்னையிலும் வியாபார நோக்கில் சிந்தனையை வளர்த்து, சுயநலத்தைக் காப்பாற்றிக்கொள்வர். மதமும் ஜாதியும் கட்டுப்படுத்தாது. விருப்பத்துக்கு உகந்த வகையில் அவற்றை ஏற்கலாம். பழைய பொக்கிஷங்கள் எல்லாம் ஒரு பொருட்டல்ல. அவற்றை அவன் ஏற்கவும் இல்லை; துறக்கவும் இல்லை!

கேள்வி - பதில்

பண்டிகைகளும், நினைவு நாள்களும், பிறந்த நாள்களும் பொழுதுபோக்குகளாகி விட்டன. பண்டிகை தினங்களில் சின்னத் திரைகளில் பட்டிமன்றம், பெரிய திரைகளில் புதிய திரைப்படங்கள் வெளியீடு. அதுமட்டுமா? ஏகாதசி, சிவராத்திரி தினங்களில் விழித்திருக் கவும் திரைப்படங்கள்தான் உதவுகின்றன. கலைஞர்களின் நேர்க்காணல், கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியனவும் இடம்பிடிக்கும்.

இப்படியான புதிய நாகரிகத்தை எட்ட முடியாதவர்கள், நாட்டுப்பற்று, மொழிப் பற்று என்ற வகையில் மண் மறந்த பழைய நிகழ்வுகளை அரங்கேற்றுவார்கள். கூத்தும் கும்மாளமும் புதுப்பொலிவு பெற்று அரங்கேறும்!

சுதந்திரத்தோடு பொறுப்பு இல்லாமல் வாழ்வதை ஏற்கிறார்கள். நல்வழிப்படுத்துவதில் சட்டதிட்டங்கள் தோற்றுவிட்டன. எனவே, நல்லுரைகளும் காதில் ஏறாது. சுய சிந்தனை முடங்கிவிட்டது. குறிக்கோள் இல்லாத வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். இந்த சூழலில், அவர்களுக்கு மனமாற்றம் ஏற்படுத்தி, மகிழ்ச்சியான வாழ்க்கையில் தன்னிச்சையாக இணைத்துக்கொள்ளும் எண்ணத்தை ஏற்கவைக்கிறார்கள் சொற்பொழிவாளர்கள். அதற்கு உதவியாக பழம்பெரும் பொக்கிஷத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

? ஆக, அவர்களுடைய பணி சேவை மனப் பான்மை கொண்டது; அதில், வியாபார நோக்கு இல்லை என்கிறீர்களா?

பெரும்பாலும் அப்படித்தான். ஒருசிலரை மனதில்கொண்டு எல்லோரையும் அப்படி எடைபோடக் கூடாது. மக்களுக்கு ஏமாற்றம் ஏற்படுத் தும் சீர்திருத்தவாதியை பொதுப் பட்டியலில் சேர்க்கக் கூடாது. வயிறு வாடாமல் இருக்க பணத்தை ஏற்பது வியாபாரம் ஆகாது. பண்டைய ராமாயண, மகாபாரத, இதிகாச சொற்பொழிவில் ஈடுபடுபவர்களில், இதய பரிவர்த்தனம் வாயிலாக மக்கள் சேவையில் மூழ்கியவர்களும் நிறையபேர் இருக்கிறார்கள்.

கேள்வி - பதில்

அவர்களது மன முதிர்ச்சியும், சிந்தனை வளமும் பழைய பொக்கிஷங்களை பிடித்துக்கொண்டு வாழ்வில் முன்னேற நிர்பந்திக்காது. அதேநேரம், எந்தத் துறையில் இணைந்தாலும் அதை சிறப்பாக்கி தன்னையும் உயர்த்திக்கொள்ள வழிவகுக்கும். அவர்களது நல்ல எண்ணத்தை குறுகிய பார்வையில் பார்ப்பது தவறு.

ஒரே வழியில் எல்லா மனமாற்றமும் ஏற்படாது. சிலருக்கு வேதம், சிலருக்கு புராணம், சிலருக்கு பக்தி, சிலருக்கு பூஜைபுனஸ்காரங்கள், சிலருக்கு நாம ஸங்கீர்த்தனம் தேவைப்படும். அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளை ஜீரணிக்க முடியாத அப்பாவி மக்களை தேற்றி வாழ்க்கையில் அவர்களுக்கு நம்பிக்கையூட்ட, நமது பழம்பெரும் பொக்கிஷத்தின் நல்லுரைகளும் சொற்பொழிவு களும் உதவும். இந்த மக்களை கைதூக்கிவிடுவதற்காக தங்களது ஆசைகளை அறவே அடக்கி, தியாகத்தில் அமைதி காணும் இதுபோன்ற பெரியவர்களின் தொண்டு, சரியான வேளையில் சரியான முறையில் செயல்படுவதை எண்ணி பாராட்டு வதற்கு மனம் இல்லாவிட்டாலும், உள்நோக்கத்துடன் அவர்களை விமர்சிப்பது தவறு.

? உள்நோக்கம் எல்லாம் ஒன்றும் இல்லை. பயன்பாடு யாருக்கு, எந்த வகையில் என்பதுதான் எங்களின் கேள்வி?

மனமாற்றம் ஏற்படுத்துவதில் விஞ்ஞானத்தை விட மெய்ஞ்ஞானம் உதவும். வியாபார மயம் ஆக்கப்பட்ட சூழலில், அவர்களது பண்பும் பரிவும் வியாபாரமாகப் பார்க்கப்படுவது, சிந்தனை வளம் குன்றியவர்களின் குறைபாடு. அவர்கள் தூய்மையான வாழ்க்கையையும் உயர்ந்த சிந்தனையையும் உடையவர்கள். இந்த இரண்டிலும் ஏற்பட்டிருக்கும் கோணலை நேராக்கும் அவர்களது  முயற்சியால்தான் சமுதாயம் கொந்தளிக்காமல் அமைதி காக்கிறது. பழம்பெரும் பொக்கிஷத்தின் அருமை பெருமை தெரியாதவர்கள், அதைக் கையாண்டு செய்யப்படும் மக்கள் சேவையை எப்படி உணர முடியும்?. எல்லோரும் அதை உணரும் காலம் வந்தால், இந்த நாடு சொர்க்கமாக மாறும்.

மூன்றாவது கோணம்

மக்களின் மாறுபட்ட சிந்தனைகள் கதைகளாகவும், கட்டுரைகளாகவும், சிந்திக்க வைக்கும் தகவல்களாகவும் வார, மாத இதழ்களில் இடம்பெற்றிருக்கும். தங்களின் சிந்தனையோடு ஒத்துப்போகும் அப்படியான தகவல்களை மக்கள் வரவேற்பார்கள். அவர்களது ஒத்துழைப்பு பத்திரிகைகள் வளரவும் ஒத்துழைக்கும். உண்மையைச் சொல்லப்போனால், மக்களின் சிந்தனைகளே பத்திரிகைகள் வாயிலாக வெளிவருகின்றன என்று சொல்லலாம்.

மக்கள் முன்னேற்றத்தைக் குறிக்கோளாக வைத்து, அவர்க ளுடைய தவறான சிந்தனையை சுட்டிக்காட்டி விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் பத்திரிகைகள் மிக அரிது.  உதாரணமாக, எல்லா இதழ்களிலும் ஜோதிட பகுதி இருக்கும். அப்பாவி மக்களை ஈர்க்க அது பயன்படும். இப்படித்தான், சொற்பொழிவுகளிலும் மக்களின் சிந்தனையே இடம்பிடிக்கும். அவற்றில் நகைச்சுவையும், அரசியலும் திண்ணைப் பேச்சும் கலந்திருப்பதால், சொல்ல வந்த விஷயத்தின் முக்கியத்துவம் மங்கி விடும். அவற்றில் தன்னலமும், வியாபார நோக்கும் கலந்திருப்பதால், தலைப்பின் கருத்து கேட்பவர்களின் மனதில் பதியாது. நகைச்சுவையை மட்டும் ரசித்துவிட்டு நகர்ந்துவிடுவார்கள். காலப்போக்கில் அவை பொழுதுபோக்கு அம்சங்களாகவே மாறிவிடும்.

? 'பொழுதுபோக்காக மாறிவிடும்’ என்று எதன் அடிப்படையில் குறை சொல்கிறீர்கள்?

ராமாயணம், மகாபாரத சொற்பொழிவுகளை கவனித்தீர்கள் என்றால், மூல நூலை இயற்றியவர்களின் சிந்தனையைவிட சொற்பொழிவாளரின் சிந்தனையே மேலோங்கி இருக்கும். அவர்கள் தங்களின் சிந்தனையை பயன்படுத்த பழைய பொக்கிஷங்களை ஏற்கிறார்கள் எனலாம். ராமாயணத்தில் குடியரசு, சகோதரத்துவம், சமநோக்கு இருப்பதாக விளக்குவார்கள்.

மகாபாரதத்தின் திரௌபதியை இன்றைய மங்கையாக சித்திரிப்பார்கள். பாகவதத்தில் கண்ணனை இன்றைய இயக்கத்தின் தலைவனாக சித்திரிப்பார்கள். பகவத் கீதையை அறக்கோட்பாடாக விளக்குவார்கள். அரசியல் தந்திரமாக எடுத்துரைப்பார்கள். 'உழைப்பின் உயர்வை எடுத்துக்காட்டுகிறது, பக்தி வழிபாட்டை எடுத்துரைக்கிறது...’ என்பார்கள்.

இப்படி, தங்களின் கோணத்தில் பழைய பொக்கிஷங்களுக்கு காலத்துக்கு உகந்த கருத்தை வெளியிட்டு, சிறப்புப் பெற்று விளங்குவார்கள். அவர்களில் தன்னலமும் வியாபார நோக்கும் தென்படுவதால், அவர்களை சமூகசேவகர்களாக சித்திரிப்பது மிகைப்படுத்திய விளக்கம்.

தவறான கொள்கை இருப்பவர்களிடத்தில் பழைய பொக்கிஷங் கள் மாட்டிக்கொள்வது உண்டு. உழைப்பால் உயரும் எண்ணம் இல்லாதவர்களும் இந்த துறையில் நுழைந்திருப்பதால், நமது பழைய பொக்கிஷங்கள் உருமாறிப் போயிருக்கின்றன. மக்களை நல்வழிப்படுத்தும் தகுதியை இழந்திருக்கின்றன. கல்வி கற்று, தெளிவு பெற்று, உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்கும் இயல்பு பெற்றவர்கள் தென்படுவதில்லை. நுனிப்புல் மேய்பவர்கள்தான் இதில் நிரம்பியிருக்கிறார்கள். ஆகவே, புதிய தலைமுறையினர் பழைய பொக்கிஷத்தைக் கற்றுணர்ந்து, சமுக சேவையை ஏற்கத் தயாராக வேண்டும்.

கேள்வி - பதில்

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

பண்டைய நாள்களில் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளின் மன வளர்ச்சிக்காக அடிப்படையிலேயே பண்டைய பொக்கிஷங்களின் அறக்கல்வி போதிக்கப்பட்டன. உடலுக்கு இணையாக உள்ளமும் வளர அது உதவியது. நம்நாட்டில் வாழ்ந்த ஆன்மிக மேதைகளும் அரசியல் தலைவர்களும் பள்ளிகளில் அறக்கல்வியின் இணைப்புடன் கல்வி பயின்றவர்கள். மகாத்மா காந்தி, படேல், ராஜாஜி, நேரு போன்றவர்கள் உருவாக அறக்கல்வி உதவியது. ஆனால் புது வாழ்க்கை முறையில் இணைந்தவர்களோ அறம் அறவே அற்றுப்போன நிலையில் வளர்ந்து பழகியவர்கள். அவர்கள் அறக் கல்வியின் பெருமையை அறியமாட்டார்கள். காலம் கடந்து அவர்களுக்கு போதிக்கும்போது அவர்களுக்கு அதில் நாட்டம் இல்லாமல் போய்விடுகிறது. மேலும் போதிப்பவர்களும் புது வாழ்க்கைமுறையை ஏற்றவர்களாக இருப்பதால், அவர்களது சேவை வெறும் நாடகமாக மாறிவிடுகிறது. திறமை மிக்க போதகர்களும் அரிதாகிவிட்டனர்!

ஆக, எதையும் வலுக்கட்டாயமாக திணிக்கும்போது மனதில் பதியாமல் வெளியே வந்துவிடுகிறது. இந்தக் குறைபாடுகளை சந்தர்ப்பத்துக்கு உகந்தவாறு, தங்களின் வாழ்க்கையை செம்மைப் படுத்த பயன்படுத்துகிறார்கள் சிலர். நாம்தான் விழிப்பு கொள்ள வேண்டும்.

பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.