Published:Updated:

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

பிறந்தவேளை (லக்னம்) அல்லது நட்சத்திர பாதம் (சந்திரன்) சிம்ம ராசியில் இருக்கும் வேளையில், சனியின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், கணவனுடன் மட்டுமல்லாமல் பிறருடனும் உடலுறவில் ஈடுபடத் தயங்கமாட்டாள். இந்தக் குறையானது அவளை மட்டுமின்றி, அவள் பிறந்த குலத்தையும் இழிவுபடுத்தும். ஆகையால் அவளை 'குலத்தைச் சிதைப்பவள்’ என்கிறது ஜோதிடம் (குலடா). உடல் வலிமை இழக்கும், அவளை ஏழ்மை பற்றிக்கொள்ளும்,  குலப்பெருமையை இழப்பாள் என்று விளக்குகிறது ஜோதிடம்.

திருமணத்தின் அடிப்படை

ஒருவனுக்கு ஒருத்தி அல்லது ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாட்டை திடப்படுத்துவது திருமணம். அது, மனித இனத்தின் நாகரிகம். அதில் இருவரது சுகாதாரமும், உள்ளத்தெளிவும் முறைப்படுத்தப்பட்டிருக்கும். அன்பும் இன்பமும் கலந்த கலவை அதில் இருக்கும். அது சமுதாய ஆரோக்கியத்துக்கு அவசியம். திருமணம் தனி மனித உரிமையானாலும், அவள் சமுதாயத்தின் அங்கமானதால், சமுதாயத்தைக் காப்பாற்றும் நோக்கில், உடலுறவு சுதந்திரத் துக்கு திருமணத்தின் மூலம் கட்டுப்பாடு விதித்தது அன்றைய சமுதாயம். அனுமனின் வாலில் அரக்கர்கள் நெருப்பு வைத்த தகவல் சீதைக்கு எட்டியது. அவளின் மனம் வருந்தியது. 'ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு என்னில் நிறைவாக இருக்குமானால், அந்த நெருப்பு அனுமனுக்குக் குளிர்ச்சியை அளிக்கட்டும்’ என்று நினைத்தாள். அனுமன் விடுபட்டான்.

அன்றைய நாளில் அரசனிடத்திலும் ஆண்டியிடத்திலும் இந்தக் கோட்பாடு உயிரோட்டத்துடன் விளங்கியது. சூர்ப்பணகை ராமனை அணுகியபோது, 'எனக்குச் சீதை என்ற மனைவி உண்டு. உன்னை ஏற்க இயலாது’ என்று அவன் கூறியதாக உள்ள விளக்கம், அதன் தரத்துக்கு வலுவூட்டுகிறது.  அந்தக் கோட்பாட்டைத் தகர்த்தெறிந்து, தன்னிச்சையாகச் செயல்படுபவளைச் சுட்டிக்காட்டுகிறது 'குலடா...’ எனத் துவங்கும் இந்தச் செய்யுள். ஜோதிடக் கண்ணோட்டத்தில்... இன்றைய நாளில் அடுக்கடுக்காக விவாகரத்தைச் சந்தித்தவர்களில் சிலரும், இதில் அடங்கிவிடுவார்கள். என்ன... அது, திரைமறைவில் நிகழ்கிறது என்பதுதான் வேற்றுமை!

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

முக்கியத்துவம் தனி மனிதனுக்கா, சமுதாயத்துக்கா?

முறையான திருமணத்தில் இணைந்தவள் மனைவி. முறையற்ற இணைப்பை வைப்பாட்டி, சின்ன வீடு என்று குறிப்பிட்டு சிலர் ஏற்பதில் இருந்து, நாகரிகம் அலட்சியப்படுத்தப்பட்டது என்பது புலனாகிறது. பண்டைய நாகரிகம் சமுதாயத்துக்கே முதலிடம் கொடுத்தது. தற்போது தனி மனிதனின் பிறப்புரிமைக்கு முதலிடம் கொடுத்து, விவாகரத்தை ஏற்றுக்கொள்கிறது சமுதாயம். இப்படியிருக்க, கிரகங்களில் இரண்டாம் தரமான ராகுவை 7ல் பார்த்து விவாகரத்தைக் கூறுவதிலும், பாபக் கிரகங்கள் (வெப்பக் கிரகங்கள்) 7லும், 8லும் இருப்பதை வைத்து பல மனைவிகள், பல கணவன்மார்கள் என்று விளக்கம் அளிப்பதிலும் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை. சமுதாயத்தின் கண்ணோட்டம் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. கணவன் மனைவி என்ற தொடர்புக்கான தகுதி மறைந்துவிட்டது. சிலரது கண்ணோட் டத்தில் அவர்கள் நுகர்பொருளாகவே தென்படுகிறார்கள். அவர்களை சனி த்ரிம்சாசகத்தில் இணைந்தவர்களாகக் கருதக்கூடாது. விவாகரத்து வளர்ந்து வருவதைக் கண்ணுற்ற சிலர், இப்படியொரு விளக்கமளிக்கத் துணிவார்கள். இந்த விளக்கமே, சிலருக்கு விவாகரத்தில் நுழைய ஊக்கம் அளித்துவிடுகிறது.

தாம்பத்தியத்தில் அல்லல்படுகிறவர்களை விடுவிக்க ஏற்பட்ட விவாகரத்து, அப்படியான நிலை இல்லாதவர்களிலும் நுழைந்துவிட்டது. இவர்கள் எல்லாம் சனி த்ரிம்சாம்சகத்தில் உதித்தவள் வரிசையில் இணையமாட்டார்கள்.

சனி த்ரிம்சாம்சகம்

குறிக்கோளை எட்டுவதற்காக, தரம் தாழ்ந்த வழியிலும் செயல்பட வைக்கும் இயல்பை சனி சுட்டிக்காட்டும். அவன் வெப்பக்கிரகம்; சூரியனின் சாராம்சம் பெற்றவன். அவளை சொரணை இல்லாதவளாக மாற்றிவிடுவான் அவன். பின்விளைவு இழிவைச் சந்திக்க வைக்கும் என்ற எண்ணம் அவளிடம் உதிக்காது. இழிவைச் சந்திக்கும்போதும் அவளின் மனம் அதை இழிவாக எண்ணாது. நாகரிகமற்ற செயலில் இறங்குவதில் வெட்கம் இருக்காது. சனியின் இயல்பு த்ரிம்சாம்சகத்தில் வெளிப்படும்.

திருப்தியைத் தேடிப்போகும் உடலுறவல்ல அது; உணர்வை எதிர்பார்க்காத இணைப்பு. ஆனால், விவாகரத்தை ஏற்கும் இருவரும் பரஸ்பரம் சண்டை சச்சரவு இல்லாமல் மனமுவந்து விவாகரத்தை ஏற்கிறார்கள்.அவர்களிடம் சுயநலத்தை நிறைவு செய்வதிலும், திருப்தியைத் தேடுவதிலும்தான் அக்கறை இருக்கும். அவை கைக்கு எட்டாத நிலையில் விவாகரத்தும் தொடரும். அப்படியும் தோல்வியுற்றால், கடைசியில் திருமணத்தையே தவிர்த்துவிடுவார்கள். இவற்றையெல்லாம் சனி த்ரிம்சாம்சக பலனாக ஏற்கக்கூடாது. நடைமுறை யில் இருக்கும் விவாகரத்துகள் ஜோதிடத்தில் தென் படாது. 'இன்றைக்குத் தென்படும் விவாகரத்தை அன்றைக்கே ஜோதிடம் குறிப்பிட்டுவிட்டது’ என்று ஜோதிடத் துக்கு பெருமை சேர்ப்பது வீண். அநாகரிகமான செயலுக்கு ஜோதிடம் துணை போகாது. திருமணத்தில் இணைந் தவர்கள் பிரியாமல் இருக்க, பல பரிகார முறைகளை ஜோதிடம் ஏற்கும். அதற்கு, சமுதாய செழிப்பில் அக்கறை உண்டு. அறம் சார்ந்த விளக்கவுரைகளின் தொகுப்பே ஜோதிடம். அது, பண்பையும் சுகாதாரத்தையும் மீறி செயல்படாது. இதுவே இன்றைக்கும் ஜோதிடம் நிலைத்திருப்பதற்கான அத்தாட்சி!

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

பிரிந்தவர்களில், முதுமையில் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்காக இணைந் தவர்களும் உண்டு. கணவன் மனைவி என்ற தூய்மையான இணைப்பைப் பெருமைப்படுத்த ஜோதிடம் செயல்படும். அந்தக் கட்டுக்குள் அடங்காதவர்களையும் அது சுட்டிக்காட்டும். அதில் ஒன்றே, சனி த்ரிம்சாம்சகத்தில் உதித்தவள் பற்றிய விளக்கமும் (குலடா)!

வேலியாகும் தாலி

குலத்தைப் பார்த்துப் பெண் எடுத்த காலம் ஒன்று இருந்தது. அந்த நடைமுறையானது 'குலடை’யை ஒதுக்க உதவியாக இருந்தது. விவாகரத்தைச் சந்தித்தவர்களிலும் குலம் மதிப்பை இழந்துவிடும். அன்று குல மரியாதை சமுதாயச் செழிப்புக்கு உதவியது. இன்று குலமரியாதை, சமுதாய முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாகப் பார்க்கப்படுகிறது. காலத்தின் தாக்கமும், சிந்தனை மாற்றமும் சில விபரீதங்களுக்குக் காரணமாகி விடுகின்றன. 'குலடை’கள் முதுமையை எட்டும் போது ஏழ்மை ஏற்படுவதுடன், குலமும் போய் விடும். உடலில் பிணியும் பற்றிக்கொள்ளும். அவள், சமுதாயத்தின் பார்வையில் வெறுக்கத்தக்கவளாக மாறிவிடுவாள். வாழ்வின் முற்பகுதி இன்பத்தை அளித்தாலும், பிற்பகுதி துயரத்தைத் தழுவிவிடும். இதை எண்ணியே, அவர்களைத் தவறான வழியில் செல்லவிடாமல் தடுக்க, சமுதாயத்தில் திருமணம் அரங்கேறியது.

மனமானது இயலாது. கட்டுப்பாடின்றி செயல்பட ஆரம்பித்தால், சம்பந்தப்பட்ட நபருக்கும் சமுதாயத்துக்கும் இழுக்கை ஏற்படுத்திவிடும். ஆக, திருமண இணைப்பு அவளை திசைதிருப்பாமல் காப்பாற்றுகிறது. 'தாலி அவளுக்கு வேலி’ என்பார்கள். சட்டதிட்டங்களால் இயலாத ஒன்றை 'தாலி’ சாதித்தது. நாகரிகம் வளர்ந்தும், சட்டதிட்டத்தை மதிக்கும் எண்ணம் வளரவில்லை. குலடையை ஒதுக்கவும், குலடையாக மாறாமல் பாதுகாக்கவும் ஜோதிடம் உதவியாக இருக்கும். விவாகரத்தில் பிறந்த குழந்தைகளும் குலத்தை இழந்துவிடுவர். அவர்களின் சுகாதாரம் பறிபோவதுடன், ஏழ்மையும் பற்றிக்கொள்ளும். இயல்பில் நல்ல நாகரிகமாக இருப்பவளும்கூட, தொடர் விவாகரத்துகளால் செயற்கையாக 'குலடை’ பட்டியலில் இணைந்து விடுவது உண்டு. சிந்தனை வளம் பெற்றும், சமுதாயத் தைக் கண்ணுற்றும், அனுபவம் இருந்தும்கூட ஒருத்தி குலடையாக இருப்பதை இந்த செய்யுள் சுட்டிக் காட்டுகிறது. இயல்பை மாற்ற இயலாது (ஸ்வபாவோதுரதிக்ரம்:). அது இவளில் மெய்யாகிவிடுகிறது.

சனி சுட்டிக்காட்டும் இயல்புகள்

அமைதியும் சுறுசுறுப்பும் இல்லாத தமோ குணம் இருப்பதை சனி சுட்டிக்காட்டும். அறியாமையும் ஆலஸ்யமும் (சோம்பேறித்தனமும்) தமோ குணத்தின் அடையாளங்கள். எஜமானன் சொல்லும் கட்டளையை ஆராயாமல் நடைமுறைப் படுத்தும் ஏவலாட்கள், உடலுழைப்பை நம்பி வாழ்பவர்கள், ஈனச்செயல்களில் இறங்கத் தயங்காதவர்கள், சுயநலத்தை விட்டுக்கொடுக்காதவர்கள். சட்ட திட்டங்களை பொருட்படுத்தாதவர் கள் ஆகியோர் அறியாமையைத் தழுவியவர்கள். சிந்திக்கும் திறன் குன்றியிருப்பதால், இவர்களுக்குத் தங்களை மாற்றிக்கொள்ள இயலாமல் போய்விடுகிறது. இப்படியான இயல்பை சனி சுட்டிக்காட்டும்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

சனி வெப்பக்கிரகம்; சூரியனில் இருந்து வெளிவந்த கோளம் என்கிறது ஜோதிடம். அதை மெய்ப்பிக்கும் விதத்தில் சனியை சூரிய புத்திரன் சௌரி என்று குறிப்பிடும். சிம்ம ராசி முழுவதும் சூரியன் பரவியிருப்பான். ஹோரையிலும் த்ரேக்காணத்திலும் வெப்பக்கிரகத்தின் தொடர்பு உண்டு. அதன் துணையுடன், சனி த்ரிம்சாம்சகம், அதில் பிறந்தவளை அறியாமையைத் தழுவச்செய்து குலடையாகத் தோன்றவைத்தது என்று சொல்லலாம்.

கிரகங்களும் வெப்ப - தட்பமும்!

கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்பு, பகை, சமன் என்று வரையறுக்கும் ஜோதிடம். கிரகங்களில் ஊடுரு வியிருக்கும் வெட்ப தட்பங்களின் சேர்க்கையால் விளையும் சூழலையே இப்படி மூன்றாக வகுத்திருக்கிறது. 'சூரியனுக்கும், சந்திரனுக்கும் சனி பகை’ என்று சொல்லும். சூரியனின் இணைப்பு சனியின் வெப்பத்தைப் பெருக்கி, விபரீத விளைவை உருவாக்கும். சந்திரனின் இணைப்பு அதாவது தட்பக் கிரகத்தின் தொடர்பு சனிக்கு ஏற்படும்போது, அவரது வெப்பம் புழுக்கத்தைச் சந்தித்து விபரீத விளைவை ஏற்படுத்தும். வெப்பத்தின் தாக்கம் எல்லை மீறித் தென்படும்போது திடீரென உருவான மேகமண்டலத்தின் குளிர்ச்சியில், அதாவது வெப்பத்தைத் தணிக்க ஏற்பட்ட மழையால், புழுக்கம் அனுபவத்துக்கு வரும்.

வெப்பக்கிரகமான சூரியன் சனியோடு இணையும்போது, வெப்பம்

எல்லை மீறித் தாக்கும் வேளையில், ஈரப்பதம் மறைந்து வறட்சி ஏற்படும். உயிரினங்களில் ஈரப்பதம் மறைந்து, பல பிணிகளை ஏற்படுத்தும். சில பிராணிகளில் உயிர் வெளியேறுவதும் உண்டு. ஆக, வெட்ப தட்பங்களின் கலவை, அதன் தரத்தை ஒட்டி மாறுதலைச் சந்தித்து, சூழலைமாற்றும். உயிரினங்களின் இயல்பை ஒட்டி இன்பம், துன்பம் இரண்டையும் உணரவைக்கும். எந்தக் கலவை இன்பத்துக்கு வழிகோலும், எது துன்பத்தை சந்திக்கவைக்கும் என்கிற நுண்ணறிவை ஜோதிடம் புகட்டும்.

இங்கு, சிம்ம ராசியில் சூரியனும், ஹோரை மற்றும் த்ரேக் காணத்தில் அவனது பங்கும் சேர்ந்து, வெப்பம் தூக்கி நிற்கும் வேளையில், த்ரிம்சாம்சகத்தில் சனியின் வெப்பம் இணையும்போது, அளவு கடந்த வெப்பத்தால் மனதில் இருக்கும் இரக்கம், பரிவு போன்ற தட்பக் குணங்கள் மறைந்து, அறியாமை வலுவடைந்து, அவள் குலடையாக உருவாக ஊக்கம் அளித்துவிடுகிறது என்று சொல்லலாம்.

தாம்பத்தியத்தில் மூவகை நிலைகள்

நமது உடலில் வெப்பம் (பித்தம்), தட்பம் (கபம்), காற்று (வாதம்) ஆகிய மூன்றும் இருக்கும். இதில் வெப்பமும் தட்பமும் ஒன்றுக்கொன்று பகை. இரண்டு பகைகளின் தாக்கத்துக்கு உட்பட்ட காற்று (வாதம்), முந்தைய இரண்டில் ஒன்றுக்கு நண்பனாகவும், பகைவனாகவும் மாறிவிடுவான். இந்த மாறுதல் அந்த இரண்டில் ஒன்றுக்கு வெற்றியும் தோல்வியும் ஏற்க வைக்கும். அது, துயரத்தில் (பிணி) அல்லது இன்பத்தில் (ஆரோக்கியம்) இணைய வைத்துவிடும் என்கிறது ஆயுர்வேதம். வெட்ப தட்பங்களின் இணைப்பில் ஏற்பட்ட தாக்கமானது, மனதில் இருக்கும் விருப்பு வெறுப்பு (நட்பு பகை) இரண்டில் ஒன்றுக்கு வெற்றியை அல்லது தோல்வியைச் சந்திக்க வைத்துவிடும்.

இரு வகையாகப் பிரிக்கப்பட்ட வெட்ப தட்ப கிரகங்கள், அவற்றின் தரத்துக்கு உகந்த வகையில் இன்ப துன்பங்களை உணர வைக்கின்றன. மன நெருக்கத்தை இறுதி செய்யும் நோக்கில் பொருத்தம் கையாளப் படுகிறது. நெருக்கம் தளராமல் இருக்க, இருவரிலும் உடலுறவில் அளவு கடந்த ஆர்வம் இருந்தால், அது வெற்றியைப் பெற்றுத் தரும். இருவரிடமும் அந்த ஆர்வம் அளவுடன் இருந்தாலும் வெற்றி உண்டு. இருவரிடமும் அதற்கு முன்னுரிமை அளிக்காத இயல்பு இருந்தாலும் வெற்றி உண்டு.

ஆனால், இருவரிடத்திலும் ஏற்றக்குறைச் சலுடன் தென்படும்போது, வெற்றியை எட்டமுடியாமல் தவிக்க நேரிடும். இந்த மூன்று நிலைகளை வெட்ப தட்பக் கிரகங்களின் தாக்கம் ஏற்படுத்துகிறது. மனதில் தோன்றும் நல்ல எண்ணங்கள், கெட்ட எண்ணங்கள், அவற்றின் வளர்ச்சி, அழிவு, நிறைவு ஆகிய அத்தனையும் வெட்ப தட்ப இணைப்பில் தோன்ற வேண்டும்; மறைய வேண்டும். இருக்கும் மூலப்பொருள் அவை இரண்டும்தான்.

பத்து பொருத்தங்கள் பலன் தருமா?

இங்கு, சிம்ம ராசியில் ஒட்டு மொத்த வெப்பக்கிரகத்தின் துணை யோடு வெப்பக் கிரக சனியின் த்ரிம்சாம்சகமானது, அதில் பிறந்தவளின் மனோநிலையை படம் போட்டுக்காட்டுகிறது. ஸப்தமாம்சம், நவாம்சம், தசாம்சம், த்வாதசாம்சம் என்ற பிரிவுகளில் தட்பக் கிரகங்களின் இணைப்பு இருந்தாலும், த்ரிம்சாம்சகத்தின் வலுவை தளர்த்த முடியாத நிலையில், அதற்கு அடிபணிந்து ஒத்துழைப்பை அளித்துவிடும்.  

மனம் ஒன்றுபடாத தம்பதிகளிலும், புலன்களின் வேட்கையைத் தணித்துக்கொள்ளும் ஆர்வம் மேலோங்கியுள்ளது. அதை நிறைவேற்ற முனையும்போது, போலியான மன ஒற்றுமை முளைத்துவிடும். இது, காலப்போகில் அடிமைத் தன்மையை ஏற்கவைத்து, வலுக்கட்டாயமாக ஒற்றுமையை நிலைநிறுத்தும். இப்படியான அத்தனை மாறுதல்களுக்கும் கிரகங்களில் ஊடுருவிய வெட்ப தட்பமே காரணம் என்கிறது ஜோதிடம்.

இப்படியிருக்க, 10 பொருத்தங்களையும் பட்டியலிட்டு, 10க்கு 8, 10க்கு 9 என்று வரையறுப் பதும், கட்டத்தில் தென்படும் கிரகங்களை வைத்து தாம்பத்தியத்தின் நிறை குறைகளை நொடிப் பொழுதில் வெளியிடுவதும் நம்பிக்கைக்கு உகந்ததல்ல. அதன் வெளிப்பாடுதான் பெருகிவரும் விவாகரத்துக்கள். 'குலம், வம்சம் என்பதெல்லாம் நமது படைப்புகள். உண்மையில் அப்படி ஒன்றும் இல்லை. பண்டைய நாளில் அவை இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் அவற்றை விலக்கினால்தான் சமூக ஒற்றுமையைப் பாதுகாக்க இயலும்’ என்கிற புதிய சீர்திருத்தவாதிகளின் கணிப்பு, நடைமுறைக்கு ஒத்துவராது. அவர்களும் அவற்றை அழிக்க முடியாமல், மறைமுகமாக ஒத்துழைப்பு அளிக்கவே செய்கிறார்கள்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

ஜோதிடம் உணர்த்தும் உண்மை

ஏழை பணக்காரன், பண்டிதன் பாமரன், முதலாளி தொழிலாளி, மேல்தட்டு அடித்தட்டு, சிந்தனை யாளர்கள் உடல் உழைப்பை ஏற்றவர் கள் என்றும், அட்வைஸரி, எக்ஸ்கியூட்டிவ், மார்க்கெட்டிங், லேபர் என்று தொழிலை வைத்தும் வகைப்படுத்துகிறோம். அந்தந்தப் பிரிவிலும்கூட திறமையை வைத்து ஏராளமான  உட்பிரிவுகள் உண்டு.

ஆக, 'மனித இனத்தை, அதில் பிறந்தவர்களை ஒன்றாகப் பார்க்க வேண்டும்’ என்று உதட்டளவில் ஏற்றாலும், நடைமுறையில் இதைக் கடைப்பிடிப்பது கடினம். சிந்தனையி லும் செயல்பாட்டிலும் மனிதர்கள் வேறுபட்டுத் திகழ்கிறார்கள் என்பதே உண்மை என்று ஜோதிடம் சுட்டிக் காட்டும்.

முற்பிறவி கர்ம வினையின் தாக்கமானது அவரவர் இயல்புக்குக் காரணமாக மாறும்போது, வேறுபாடு களே இயற்கை; ஒற்றுமை என்பது செயற்கை என்பது விளங்கும். அதனால்தான் மனித இனம் தோன்றிய நாளில் இருந்து ஒற்றுமையை ஓதிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் ஒற்றுமை இருக்குமானால், ஓத வேண்டிய அவசியம் இருக்காது அல்லவா?! ஒரு விஷயத்தைக் குறித்து ஓதுதல் தொடர்வது, அது இல்லை என்பதற்கான அடையாளம். பண்டைய நாளில் பண்பும் கட்டுப்பாடும் ஒற்றுமையைத் தக்கவைத்தன. தற்போது, சுதந்திரமும் கட்டுப்பாடின்மையும் ஒற்றுமையை உருக்குலைக்கின்றன. இப்படி, தனிமனிதனின் நிறைவை எட்ட வைப்பதோடு நில்லாமல், சமுதாயச் செழிப்புக்கும் தனது பங்கைப் பரிந்துரைக்கிறது ஜோதிடம். 'குலடை’ என்பது தனி ஒருவளின் இயல்பு ஆனாலும், அது சமுதாயத்தில் ஊடுருவி, செழிப்பை எட்டவிடாமல் செய்துவிடும்.

சிந்திப்போம்...

அடுத்த கட்டுரைக்கு