Published:Updated:

சக்தி சங்கமம்

கடவுளுக்கும் ஒரு கடமை உண்டு!வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் இல.கணேசன்

சக்தி சங்கமம்

கடவுளுக்கும் ஒரு கடமை உண்டு!வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் இல.கணேசன்

Published:Updated:

தேசியத்தில் ஆழ்ந்த பற்று, நமது பண்பாடு குறித்த தெளிவான பார்வை, இந்து மத நூல்களில் தேர்ச்சி, இலக்கியத்தில் ஆர்வம், அதை வளர்ப்பதற்கான அமைப்புகளை உருவாக்கும் முனைப்பு, அரசியலில் தூய்மை, எதிரணியைப் பற்றிப் பேசும்போதும் கண்ணியம், ஆன்மிகத்தில் ஈடுபாடு... இவற்றின் ஒட்டுமொத்த வடிவம் இல.கணேசன்.

அவர் தமது ஆன்மிகக் கருத்துகளை நமது வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டபோது, புதிய பரிமாணத்தில் பல சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன என்பது உண்மை. இனி, அவருடனான கலந்துரையாடல்...  

? ஆன்மிகம் தற்காலத்தில் வளர்ந்திருக் கிறது என்று நினைக்கிறீர்களா?  வாசகர் ரமணியிடம் இருந்து வந்த முதல் கேள்விக்கு சிறு புன்னகையுடன் பதில் சொல்கிறார் இல.கணேசன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"ஆன்மிகத்துக்கு வளர்ச்சியும் இல்லை; குறைவும் இல்லை. ஆன்மிக உணர்வு மக்களிடையே வளர்ந்திருக்கிறதா என்பதுதான் கேள்வி. இந்த தேசத்தைப் பொறுத்தவரையில் ஆன்மிக உணர்வு என்பது இயற்கையாக இருக்கக்கூடியது என்றே கருதுகிறேன். படித்தவன், பாமரன் எல்லோருக்குள்ளேயும் ஆன்மிக உணர்வு என்பது இருக்கத்தான் செய்கிறது."

சக்தி சங்கமம்

"அப்படியெனில், மக்களிடையே பக்தி வளர்ந்து வருகிறது என்கிறீர்களா?" என்று கேட்டார் வாசகர் காஞ்சி கிருஷ்ணா.

"ஆன்மிகம் என்பதைக் குறிக்கோள் என்று வைத்துக் கொண்டால், பக்தியை மார்க்கம் என்றே சொல்ல வேண்டும். ஆண்டவன் படைப்பில் நாம் எல்லோருமே கருவிகள்தாம். இரண்டு கைகள், இரண்டு கால்கள் கொண்ட, பேசத் தெரிந்த, சிந்திக்கத் தெரிந்தவர்கள் நாம். ஆனால் பிறப்பால் மனிதனாக ஒருவன் பிறந்தாலும், அவன் முழு மனிதனாக ஆக வேண்டும். ஆனால்,  லட்சத்தில் ஒருவர்கூட முழு மனிதனாக முடிவதில்லை. அப்படி எவராவது ஒருவர் ஆகிவிட்டால் அவருக்கு மறு பிறவி என்பது இல்லாமல் போய்விடும். அப்படிப்பட்ட முயற்சிகளை எல்லோரும் மேற்கொள்ளவேண்டும்."

? கோயிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை இப்போது அதிக மாகி வருகிறதே... அது பற்றிய தங்கள் கருத்து?  இது வாசகர் ஸ்ரீதரின் கேள்வி

"நான் தஞ்சாவூரைச் சேர்ந்தவன். எனது இளம் பிராயத்தில் அமைதியாக உட்கார்ந்து பாடம் படிப்பதற்கு கோயில்களுக்குத்தான் செல்வோம். இப்போது தஞ்சை பெரிய கோயிலுக்குக் கூட்டம் கூட்டமாக மக்கள் வருகின்றனர். பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. பிரதோஷம், கிரி பிரதட்சிணம் என மக்கள் திரள் திரளாக வருகின்றனர். மலையில்லாத ஊர்களிலெல்லாம் தெப்பக்குளத்தையும் சுற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.  இது ஒரு  நல்ல மாற்றம்தான்.

ஒருமுறை காஞ்சிப்பெரியவர், அப்போது புதிதாக வந்த அரசாங்கம் குறித்துப் பேசுகையில், 'கடவுளை நம்பாதவர்களும்கூட ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள்’ என்று கருத்து தெரிவித்தார். ஆனால், அந்த வருடம் எல்லா கோயில் உண்டியல்களிலும் அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு வசூல் ஆனது. அப்போதைய முதலமைச்சரும் இதனைத் தனக்கு மக்கள் தந்த வரவேற்பாகக் குறிப்பிட்டார். ஆனால் பெரியவாளிடம் கேட்டபோது, 'என்ன செய்வது? கஷ்டம் வந்தா ஜனங்க கோயிலுக்கு வந்துதானே ஆகணும்!’ என்று புன்னகைத்தார்.

பாரம்பரியக் கோயில்களைவிட பரிகார ஸ்தலக் கோயில்களுக்குத்தான் அதிக பக்தர்கள் வருகின்றார்கள். அப்படி இல்லாமல் முழு நம்பிக்கையுடனும், பக்தியுடனும் மக்கள் வருவார்களேயானால் அது மிகவும் நல்ல மாற்றமாகக் கருதலாம். எப்படியோ, கோயில்களுக்கு இப்போது நிறைய வருமானம் வரத் தொடங்கியுள்ளது. பழைய கோயில்கள் சீர்செய்யப்படுகின்றன. குளங்கள் தூர் வாரப்படுகின்றன. ஆனால், இந்த நிலையையே முழு பக்தி என்று என்னால் சொல்ல முடியவில்லை."  

சக்தி சங்கமம்

? கோயில்களுக்கு மக்கள் வருவது பக்தியாலா, பயத்தாலா?  வாசகர் விட்டல் நாராயணன் கேள்வியை முடிப்பதற்குள், பதில் வருகிறது இல.கணேசனிடம் இருந்து.

"பயத்தால் என்று சொல்ல முடியாது. அதேநேரம், மக்களுக்குக் கஷ்டம் வரும்போது ஆண்டவனிடம்தானே சொல்லி அழ முடியும்? அன்றாடம் சாதாரணமாக நடக்கவேண்டிய பணிகளெல்லாம்கூட சரிவர நடக்காத நிலையில், 'என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டுமே, மகளுக்குத் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டுமே’ என்றெல்லாம் அடிப்படை விஷயங்களைக்கூட கடவுளிடம் கேட்கும் நிலைதான் இன்று இருக்கிறது. 'சாமி கண்ணைக் குத்திடும். ஆண்டவன் தண்டனை கொடுத்துவிடுவான்...’ என்றெல்லாம்தான் அம்மாக்கள், நாம் குழந்தைகளாக இருக்கும்போது சொல்லி வளர்த்திருக்கிறார்கள். இது தவறு. இறைவன் தாய் போன்றவன். 'தாயினும் சாலப்பரிந்தூட்டும்’என்று கடவுளை அடியார் ஒருவர் பாடியிருக்கிறார். குழந்தைக்குப் பசி எடுக்கும்போது தாயின் பால் சுரக்குமாம். வேறொரு அடியவர், 'என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற பாடலில், 'உன் கடன் எனக்கு வேண்டுவனவற்றை அருளுவதே’ என்று கடவுளை நோக்கிப் பாடுகிறார். அதையும்விட மகாகவி பாரதி ஒரு படி மேலே போய் பராசக்தியைப் பார்த்து, 'இவை யருள்வதில் உனக்கேதும் தடையுளதோ?' என்று உரிமையுடன் கேட்கிறார். ஆக, அச்சம் என்பது நிச்சயம் இருக்கக் கூடாது. அதே நேரம் நியாயம், தர்மம், நெறிமுறைகள், இவற்றை விட்டுவிடக் கூடாது என்பதில் அச்சம் தேவை."  

? தினமும் ஆலய வழிபாடு செய்வீர்களா?   இது வாசகர் காந்தியின் கேள்வி.

"மனிதனுக்கு உடம்பு, அறிவு, மனம் மூன்றும் மிகவும் முக்கியமானவை. தினமும் காலையில் நாலரை மணிக்கு எழுந்துவிடுவேன். அறிவுத் தேடல் என்பது நாள்பூராவும் தொடரும். காலையில் உடற்பயிற்சி செய்வேன். பலர் தியானம், ஜபம், பாராயணம், வழிபாடு ஆகியவற்றைக் கடைப்பிடிப்பார்கள். ஆனால், நான் காலை வேளைகளில் சந்தியாவந்தனம் செய்து முடித்து, நூற்றெட்டு காயத்ரி ஜபம் செய்வேன்.  இது முப்பது ஆண்டுகளாகத் தொடர்கிறது. பின்பு தேசபக்தி, தெய்வ பக்தி இரண்டின் தொடர்பாகவும் சுலோகங்கள் படிப்பேன். காலையில் எழுந்தவுடனேயே சில சம்ஸ்கிருத ஸ்லோகங்களைச் சொல்லிவிடுவேன். அதில் ஒன்று பூமாதேவியை வணங்கு வது. 'அம்மா, நான் உன் காலை மிதிக்கிறேன். மன்னித்துக்கொள்’ என்று அவளிடம் மன்னிப்புக் கேட்டு விட்டுத்தான் என் தினசரி கடமைகளைத் தொடங்குகிறேன்.

அண்மையில் நமது பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்து ஒருவர், 'மன்னிப்பு கேட்பதற்கு ஏன் தயங்குகிறீர்கள்?’ என்று கேட்டபோது, அவர் 'இல்லையே! தினமும் பூமாதேவியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டல்லவா எழுந்திருக்கிறேன்’ என்று சொன்னார்.  

சக்தி சங்கமம்

அடுத்ததாக, பாரத தேசத்தில் பிறந்த அத்தனை முனிவர்கள், யோகிகள், மகான்கள் அனைவரின் பெயர்ப் பட்டியலையும் வாசிப்பேன்.கண்ணகி, திருவள்ளுவர், ஆதிசங்கரர், ராமானுஜர் இப்படி எல்லோரின் பெயர்களும் அதில் வரும். அதன் பிறகு அபிராமி அந்தாதி, சிவ புராணம், விநாயகர் ஸ்துதி, கந்தசஷ்டி கவசம், நரசிம்மர், விசாலாட்சி ஸ்லோகங்கள் இப்படி எல்லாவற்றையும் படிப்பேன்.  

'இதற்கெல்லாம் நேரம் உண்டா?’ என்று நீங்கள் கேட்கலாம். 'நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை’ என்பதுதான் என் பதில்.  நேரமிருக்கும்போது வீட்டிலேயே சொல்வேன். வெளியில் கிளம்பி விட்டால், காரில் பயணித்தபடியே சொல்வேன். மற்றபடி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஆலயங்களுக்குச் செல்கிறேன்.  தினசரி போக  முடிவதில்லை."  

? குரு அமைவதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?  என்று கேட்டார் வாசகி சரளா

"குறிப்பாக ஒருவர் மட்டுமே எனக்குக் குருவாக இருக்கிறார் என்று சொல்லமாட்டேன். ஆனால், மனதால் சிலரை குருவாக வரித்துக்கொண்டிருக் கிறேன். எல்லோருக்கும் குருவாக இருப்பவர் தட்சிணாமூர்த்திதான்! 'குருர் பிரம்மா, குருர் விஷ்ணோ, குருர் தேவோ மஹேஸ்வரஹ...’ என்று மனதால் சொல்லி வணங்குவேன். தவிர ஆசார்யர்கள் என்று பார்த்தால் ஆதி சங்கரர், பரமாச்சார்யர், ஜெயேந்திரர், விஜயேந்திரர், சிருங்கேரி ஸ்வாமிகள் இவர்கள் எல்லோரையும் காலையில் மனதால் வணங்குவேன்.  

சக்தி சங்கமம்

ஸ்ரீராமானுஜரின்மீது எனக்கு அபார பக்தி உண்டு. சிறு வயதில் ஒரு முறை, தினமலர் ராமசுப்பய்யர் என்னிடம், பி.ஸ்ரீ எழுதிய ராமானுஜரின் சரிதத்தைக் கொடுத்து, படித்துவிட்டு பத்திரமாகத் திருப்பித் தரும்படி சொன்னார்.  அருமையான புத்தகம். ராமானுஜரின் வாழ்க்கையைப் படித்தால், இன்று தம்மைப் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களெல்லாம் அவரது காலடி மண்ணுக்குச் சமம் என்பது புரியும். பின்னர், ராமசுப்பய்யரிடம் கேட்டு, அந்த புத்தகத்தை நானே வைத்துக்கொண்டேன்.

ஒருகாலத்தில் அரசாங்கத்தின் அவசர கால அறிவிப்பின்போது, தலைமறைவு வாழ்க்கை வாழ நேர்ந்தது. அப்போது எனது பெயர் 'பாஷ்யம்’ என்றாயிற்று. அந்தப் பெயர் அரசாங்கத்துக்குத் தெரிந்துபோய்விட்டது. பின்னர் என் பெயரை 'ராமானுஜம்’ என்று வைத்துக்கொண்டு இருபது ஆண்டுகள் அந்தப் பெயரில்தான் இருந்தேன்.  தினமும் திருமண் தரித்துக் கொள்வேன்.

ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதா தேவி, விவேகானந்தர், சித்பவானந்தர், குருஜி கோல்வால்கர் இவர்களையெல் லாம் தினமும் நினைப்பேன். தற்போது சுவாமி தயானந்த சரஸ்வதியையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது பகவத் கீதை சொற்பொழிவை 45 நாட்களுக்குத் தொடர்ந்து கேட்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அன்றிலிருந்து கீதையில் ஒரு பகுதியாவது தினமும் படிக்கிறேன். பாரதியின் 'பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி’யை தினசரி சொல்வேன். அதுவும் எனது பிரார்த்தனையின் ஒரு பகுதியாகும்."  

சக்தி சங்கமம்

அடுத்த கேள்வியை வாசகர் சந்தானம் கேட்டார்...  

? யார் மகான்? யார் மாமனிதர்?

"எவர் ஒருவருடைய புகழ் அவர் மறைந்த பிறகும் நாளாக நாளாக வளர்ந்துகொண்டே போகிறதோ அவர் நிச்சயம் மகான்தான். ராமர், கிருஷ்ணர் ஆகியோர் இந்த பூமியில் அவதரித்தவர்கள்தாம். அவர்களுக்கு ஜாதகமும் கணித்துவிட்டார்கள். அவர் களின் காலத்துக்குப் பின்னர் இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் அவர்களை வணங்குகிறோமே!

அந்தக் காலத்தில் நடந்த அத்தனை சங்கீத உபன்யாசங்களுக்கும் நான் சென்றிருக்கிறேன். கிருபானந்த வாரியார், எம்பார் விஜயராகவாசார்யர், புலவர் கீரன் என எல்லோரது சொற்பொழிவு களையும் கேட்டு ரசித்திருக்கிறேன். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உரையும், அவரது கம்பீரமும் எனக்கு இன்றும் மனதில் பசுமையாக இருக்கிறது. நான் படித்ததைவிட கேட்டதே அதிகம் என்று சொல்லலாம்."  

•  ஆரியம் என்றால் என்ன?

•  பண்பாடு என்பதற்கு நீங்கள் சொல்லும் வரையறை என்ன?

•  ஆன்மிகம், இலக்கியம்  இரண்டுக்கும் என்ன தொடர்பு?

• பொற்றாமரை, சங்கப்பலகை போன்ற அமைப்புகளைத் தாங்கள் நடத்திவருவதாகக் கேள்விப்பட்டோம். அவை பற்றிச் சொல்லுங்களேன்?

இதுபோன்ற இன்னும் பல கேள்விகளும் அதற்கு இல.கணேசன் அளித்த விரிவான பதில்களும் அடுத்த இதழில்!

படங்கள்: க்ளிக் ரவி

அடுத்த சங்கமம்...

வாசகர்களே! அடுத்த சக்தி சங்கமத்தில் உங்களுடன் கலந்துரையாடல் போகிறார்... சத்குரு!

சக்தி சங்கமம்

ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளை 21.10.14  தேதிக்குள் எங்களுக்குக் கிடைக்குமாறு அனுப்பி வையுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism