Published:Updated:

ஸ்ரீசாயி பிரசாதம் - 1

சரணம்... சாயி சரணம்...புதிய தொடர் எஸ்.கண்ணன்கோபாலன், ஓவியம்: ஜெ.பி.

ஸ்ரீசாயி பிரசாதம் - 1

சரணம்... சாயி சரணம்...புதிய தொடர் எஸ்.கண்ணன்கோபாலன், ஓவியம்: ஜெ.பி.

Published:Updated:

பிரசாதம்... இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது எதுவாயினும், அது பிரசாதம் என்று புனிதத் தன்மை கொண்டதாக ஆகிவிடுகிறது. அது மலராக இருக்கலாம்; விபூதி, மஞ்சள், குங்குமமாக இருக்கலாம்; நாம் உண்ணக்கூடிய உணவாகவும் இருக்கலாம். எதுவாயினும் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிறகு, அது இறைவனின் அருளுடன் கூடிய பிரசாதமாக நமக்குக் கிடைத்து, நம்முடைய தோஷங்களை எல்லாம் இல்லாமல் போகச் செய்கிறது. நம் உடலையும் உள்ளத்தையும் புனிதப்படுத்துகிறது.  

இறைவனுக்கு நாம் அர்ப்பணிக்கக்கூடியவற்றைப் பிரசாதமாகப் பெறுவதைப் போலவே, இறைவன், தானே நம்மிடத்தில் கருணை கொண்டவராக, நமக்குப் பல வரப்பிரசாதங்களை அருளவே செய்கிறார். இறைவனின் அந்த வரப்பிரசாதங்கள்தான், இந்தப் புண்ணிய பூமியில் தோன்றிய ஞானிகளும், மகான்களும், அருளாளர்களும்!

அத்தகைய மகான்கள்தான் கீழ்த்திசைக் கதிரவன் போன்று இந்த உலகத்துக்கே ஞான ஒளியை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இறைவனின் கருணையினால் தோன்றிய இந்த மகான்கள்தான் நம்மை ஆட்கொண்டு, நம்முடைய இகபர சுகங்களை எல்லாம் நமக்கு வழங்கக்கூடியவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்களே நமக்கு குருமார்கள். அவர்களிடம் நம்மை ஒப்படைத்துவிட்டால், பிறகு நாம் எதற்குமே கவலைப்படத் தேவையில்லை. அனைத்தையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். அப்படி ஒரு மகானிடம் நம்மை ஒப்புக் கொடுத்துவிட்ட பிறகு, எது நடந்தாலும் அது நம்முடைய நன்மைக்கே என்று அமைதியாக இருக்க வேண்டும். அதற்கு மிக மிக அவசியத் தேவை என்ன தெரியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்ரீசாயி பிரசாதம் - 1

''இரண்டே இரண்டு முக்கிய குணங்கள்தான்!' என்கிறார் ஒரு மகான். அந்த இரண்டு குணங்கள் 'நிஷ்டா’, 'ஸபூரி’ எனப்படும். நிஷ்டா என்றால், உறுதியான நம்பிக்கை; ஸபூரி என்றால், அசாத்திய பொறுமை. எவருக்கும் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய தாரக மந்திரங்களான அந்த இரண்டு வார்த்தைகளை நமக்கு அருளிய அந்த மகான் வேறு யாருமல்ல...

ஷீர்டியில் தோன்றி, அனைத்துத் தரப்பினராலும் அன்புடனும் பக்தியுடனும் பூஜிக்கப் பெற்றவரான சாயிநாதர்தான் அந்த ஒப்பற்ற மகான்; மகா ஞானி!

'என்னுடைய சமாதிக்குப் பிறகும் நான் உயிர்ப்புடன் செயல் படுவேன்; என்னைத் தஞ்சமென அடைந்தவர்களுக்கு, அவர்களுடைய குறைகளையும் துன்பங்களையும் உடனுக்குடன் போக்கி, சந்தோஷத் தையும் சாந்தியையும் அருள்வேன்!’ என்று உறுதி அளித்தபடியே, இன்றைக்கும் அருள்புரிந்து வருகிறார்.

அதனால்தான், ஸ்ரீ ஷீர்டி சாயிபாபா இன்றைக்கும் கோடானுகோடி பக்தர்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார். அவரிடம் நாம் ஒன்றைப் பிரார்த்தித்துக் கொண்டால், அதை உடனே நமக்கு அருளக்கூடிய அன்புத் தெய்வமாகத் திகழ்கிறார். நாம் அவரிடம் பிரார்த்தித்துக்கொண்ட விஷயம் மிகவும் அற்பமானதாக இருந்தாலும்கூட, நமது விருப்பத்தின் பொருட்டு அதையும் அப்படியே நிறைவேற்றக்கூடிய வரப்பிரசாதி சாயிநாதர்.

அவர் இறைவனால் நமக்கு அருளப் பெற்ற வரப்பிரசாதம். அது மட்டுமல்ல; அவரே அந்த தெய்வமும்கூட என்று சொன்னால், அதுவும் மிகையில்லை.

அவருடைய ஜீவித காலத்திலும் சரி, ஒரு விஜயதசமி அன்று நிகழ்ந்த அவருடைய மஹாசமாதிக்குப் பின்னும் சரி... அவர் நிகழ்த்திய அற்புதங்கள்தான் எத்தனை எத்தனை! அதிசயங்கள்தான் எத்தனை எத்தனை!

அத்தனையும் நமக்கு ஆனந்தத்தை மட்டும் தருவதோடு நின்றுவிடாமல், அனுபவப் படிப்பினைகளையும் சேர்த்தே தருகின்றன.

தம்முடைய சமாதிக்குப் பிறகும் தாம் உயிர்ப்புடன் செயல்படுவதாக பாபா கூறியிருந்தார் அல்லவா? அதற்கேற்ப, அவருடைய சமாதிக் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் அதிகரித்தே காணப்பட்டது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் நாளாவட்டத்தில் அந்த எண்ணிக்கை குறைந்துபோனது. ஆயினும், அந்த நிலை அப்படியே நீடித்திருக்கவில்லை.  

ஸ்ரீசாயி பிரசாதம் - 1

ஈரோடு மாவட்டம், பவானியில் பிறந்தவரான ஸ்ரீநரஸிம்ம ஸ்வாமிஜி என்பவர், 1940களின் தொடக்கத்தில் 'அகில இந்திய சாயி சமாஜம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, பாபாவின் மகிமைகளைப் பரப்பினார். அவர்தான் 1950களின் தொடக்கத்தில் மயிலாப்பூரில் உள்ள சாயிபாபா கோயிலையும் நிர்மாணித்தார். பாபாவை அர்ச்சிப்பதற்காக, பாபா அஷ்டோத்திர சத நாமாவளியை இயற்றியவரும் அவர்தான்.

அவரைப் போலவே, 1990களின் தொடக்கத்தில் சாயி பாபாவினால் ஆட்கொள்ளப்பட்டவரும், சென்னை குமணன்சாவடியில் 'அன்ன பாபா மந்திர்’ என்ற பெயரில் பாபா கோயிலை நிர்மாணித்தவருமான ஸ்ரீகுமார் பாபா, 'அன்ன பாபா 108 போற்றி’ என்ற பெயரில் ஒரு நாமாவளியை இயற்றினார்.

மதுரை மீனாட்சியின் தீவிர பக்தரான அவர் பாபாவினால் ஆட்கொள்ளப்பட்டதே ஒரு சுவாரஸ்யமான சம்பவம். அது பற்றிப் பிறகு பார்ப்போம்.

பாபாவின் அர்ச்சனை மந்திரங்களான இந்த இரண்டு நாமாவளிகளும் ஒன்றுபோலவே அமைந்திருந்தாலும், சிற்சில நாமாவளிகள் மாறியிருக்கின்றன. ஆனாலும், இரண்டுமே பாபாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டவைகள்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்த நாமாவளிகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும், பாபா தன் வாழ்க்கையில் நிகழ்த்திய ஒரு லீலை இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

'ஸ்ரீகிருஷ்ண ராம சிவ மாருதி ரூபாயை நம:’ என்று பாபாவைப் போற்றுகிறது ஒரு நாமாவளி. இதன் பின்னணியில் உள்ள பாபாவின் லீலைதான் என்ன..?

பிரசாதம் பெருகும்...