Published:Updated:

திருமகளே வருக!

கடவுள் அறிவோம்! புதிய தொடர் தி.தெய்வநாயகம்

திருமகளே வருக!

கடவுள் அறிவோம்! புதிய தொடர் தி.தெய்வநாயகம்

Published:Updated:

'உலகிலுள்ள அனைத்துச் செல்வங்களும் திருமகளின் வடிவங்களே’ என்கின்றன ஞானநூல்கள். வீடு மனை, கால்நடைகள், நோயில்லா வாழ்க்கைப்பேறு உள்ளிட்ட சகல சௌபாக்கியங்களும் கைகூடுவதற்கு, திருமகள் திருவருள் புரியவேண்டும். திருமகளான லட்சுமியின் திருக்கதையை பலவாறு சிலாகிக்கின்றன புராணங்கள். அனந்தபோகன், சகரன், சோழன் முதலான மன்னர்களுக்கும், பிருகு, கபிலர் முதலான ரிஷிகளுக்கும் பல்வேறு தருணங்களில் மகளாக அவதரித்து வளர்ந்து, திருமாலை அவள் மணந்த கதைகள் உண்டு என்றாலும், லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றிய கதையே பிரதானமாகப் பேசப்படுகிறது.

ருமுறை, இந்திராதி தேவர்கள் துர்வாச முனிவரின் சாபத்தின் காரணமாக சகல செல்வங்களையும் இழந்து வாடினர். இந்த நிலையில் லட்சுமிதேவியும் ஒரு சாபத்தின் காரணமாக திருமாலைப் பிரிந்து சென்று, பாற்கடல் அரசனுக்கு மகளாகப் பிறந்து, வளர்ந்து வந்தாள். நெடுங்காலத்துக்குப் பிறகு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதில் வெளிப்பட்டு, திருமாலை மணந்தாள். பாகவதம், சிவமகா புராணம், பாரதம் ஆகிய ஞானநூல்கள் விளக்கும் திருக்கதை இதுவே.

தீபம், தாமரை, வில்வம், திருமாங்கல்யம், சந்தனம், உப்பு, பசுவின் பின்புறம் என திருமகள் வசிக்கும் மங்கலப் பொருட்களை பட்டியலிடும் ஞானநூல்கள் அழகு, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பக்தி ஆகிய ஐந்தும் பூரணமாக நிரம்பிய பெண்களை கிரகலட்சுமி எனப் போற்றுகின்றன. அவர்களால் கிரகம் (இல்லம்) மேன்மை பெறும் என்பதால், இப்படியொரு சிறப்பு அவர்களுக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமகளே வருக!

வீட்டுக்கு வரும் பெண்களை மகாலட்சுமியாகவே கருதி வரவேற்கும் வழக்கம் நம்மில் உண்டு. சில பகுதிகளில் தானியங்கள் நிரம்பிய பாத்திரத்தை வாயிலில் வைத்து, மணப்பெண் வீட்டுக்குள் வரும்போது அவளுடைய வலக்கால் அதில் பட்டு, தானியம் வீட்டுக்குள் சிதறும்படி செய்வார்கள். மருமகள் மூலம் வீட்டில் தானியம் பெருகவேண்டும் என்னும் ஐதீகத்தின் அடிப்படையில் செய்யப்படும் சடங்கு இது. கேரளாவில் தானியங்கள் நிறைந்த பாத்திரத்தை மணமகளிடம் கொடுப்பார்கள். அவள் அதை எடுத்துச் சென்று வீட்டுக்குள் வைத்து, விளக்கேற்றி வழிபடுவாள்.  இதன் மூலம் அந்த வீட்டில் சகல சௌபாக்கியங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.

அலைமகளை அஷ்டலட்சுமிகளாக விவரித்துச் சொல்லும் வழிபாட்டு நூல்கள், கிரகலட்சுமி வடிவிலும் அவளை வழிபடச் சொல்கின்றன. பொற்குவியல் நிரம்பிய கலசத்துடன் நம் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் திருக்கோலத்தில் இந்த தேவியை வீட்டின் வாயில் முகப்பில் வைத்து வழிபட வேண்டும்.

முற்காலத்தில் நம் முன்னோர்கள் ஆலயம், அரண்மனை, வீடு போன்ற கட்டடங்களின் தலைவாயிலில், யானைகள் பூஜிக்கும்  அலைமகளின் (கஜலட்சுமி) திருவடிவை அமைத்திருப்பார்கள். இவளுக்கு 'திருநிலை நாயகி’ என்று பெயர். இப்படி, தலைவாயிலில் லட்சுமிதேவியின் திருவடிவை அமைப்பதால் சகல செல்வங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.

அதுபோன்று, கிரகலட்சுமி படத்தையும் வீட்டின் பிரதான வாயிலுக்கு அருகில் (உட்புறமாக) மாட்டிவைத்து வழிபடலாம். இதோ, உங்களுக்காக இந்த இதழுடன் ஸ்ரீகிரகலட்சுமி வண்ணப் படம் தரப்பட்டுள்ளது.

திருமகளுக்கு உகந்த வெள்ளிக்கிழமைகளில் தேவியின் திருப் படத்தை, முன்னர் குறிப்பிட்டது போன்று தலைவாயிலில் வைத்து வழிபட ஆரம்பிக்கலாம். குறிப்பாக, ஐப்பசி மாதத்தில் பௌர்ணமி திருநாளில் வழிபடத் துவங்குவது விசேஷம்!

அன்று அதிகாலையில் நிலைவாயிலை தூய்மை செய்து, சந்தனம் குங்குமம் வைத்து அலங்கரித்து, மாவிலைத் தோரணம் கட்டவும். வாசலில், தாமரை வடிவிலான கோலம் போட்டு, அதன்மீது ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வையுங்கள். தொடர்ந்து, ஸ்ரீகிரகலட்சுமி திருப்படத்துக்கும் சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து அலங்கரிக்கவும். பின்னர், செந்தாமரை மலர்கள் அர்ப்பணித்து, பால் பொங்கல் நிவேதனம் செய்யவேண்டும்.

திருமகளே வருக!

அதன்பின், அலைமகளை நம் வீட்டுக்குள் வரவேற்கும் விதமாக நிலைவாயிலுக்கும் தூப தீபங்கள் காட்டி வணங்க வேண்டும். தொடர்ந்து...

'திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர்தொழ
வருமகளே உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம் பெரிது
தருமகளே தமியேன் தலைமீது நின்தாள் வையே’

என்ற பாடலையோ அல்லது திருமகளின் துதிப்பாடல்களில் உங்களுக்குத் தெரிந்த ஏதேனும் ஒரு பாடலையோ பாடி  வணங்கி, ஸ்ரீகிரகலட்சுமி திருப்படத்துக்கு தூபதீபங்கள் காட்டி நமஸ்கரித்து, பூஜையை நிறைவு செய்யலாம். தொடர்ந்து, அனுதினமும் அதிகாலையில் இந்த தேவியைத் தரிசித்து வணங்கிவர, வீட்டில் சகல சுபிட்சங்களும் பெருகும் என்பது நிச்சயம்.

இன்னும் அறிவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism