Published:Updated:

துங்கா நதி தீரத்தில்... - 15

குரு தரிசனம்! பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம் ஸ்யாம்

துங்கா நதி தீரத்தில்... - 15

குரு தரிசனம்! பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம் ஸ்யாம்

Published:Updated:

மைசூர் சமஸ் தானத்தில், ஸ்வாமிகளின் முன்னிலையில் கூடியிருந்த வித்யார்த்தி கணபதி சபையில், மொழிகளைப் பற்றிய விவாதம் பண்டிதர்களிடையே ஏற்பட்டது. அப்போது, தம்முடைய  குருநாதருடன் முதல்முறையாக தக்ஷிணதேச யாத்திரை சென்றிருந்தபோது, சென்னையில் குருநாதருக்கும் வள்ளலார் சுவாமிகளுக்கும் இடையில் நடைபெற்ற விவாதம் நினைவுக்கு வர, ஸ்வாமிகளின் முகத்தில் ஒரு புன்னகை பிறந்தது. பின்னர் மெதுவாக, அங்கிருந்த பண்டிதர்களிடம் அந்தச் சம்பவத்தைப் பகிர்ந்துகொண்ட ஸ்வாமிகள் தொடர்ந்து...

''மொழிகளுக்கு இடையில் பேதம் எதுவும் கிடையாது. ஒவ்வொரு மொழியும் அதனதன் இயல்பில் தனித்தன்மையும் தனிச்சிறப்பும் கொண்டதுதான். எனவே, மொழிகளைப் பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்கு அவசியமே இல்லை'' என்று சொல்லி, அந்த விவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

சுமார் நான்கு மாதங்கள் மைசூரில் இருந்த ஸ்வாமிகள், அங்கிருந்து புறப்பட்டு பல க்ஷேத்திரங்களின் வழியாக, காவிரி நதியின் உற்பத்தி ஸ்தானமான தலைக்காவிரியை அடைந்தார். தங்கக் காசுகளால் காவிரி அன்னைக்கு விஸ்தாரமாக பூஜைகள் செய்த ஸ்வாமிகள், தொடர்ந்து பச்சிமவாஹிநி தலத்துக்குச் சென்றார். அங்கே தம்முடைய குருநாதருக்கு ஆராதனை பூஜைகளைச் செய்தார். பின்னர் சத்தியமங்கலத்தை அடைந்த ஸ்வாமிகள், அங்கிருந்த மடத்திலேயே சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டார். விரத காலம் முடிந்ததும் கோபிசெட்டிபாளையத்துக்கு வந்து, அங்கே நவராத்திரி பூஜைகளை விமரிசையாக நடத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துங்கா நதி தீரத்தில்... - 15

தொடர்ந்து, கும்பகோணம் முதலான க்ஷேத்திரங்களின் வழியாக திருச்சியை அடைந்தார். அங்கே சில நாட்கள் இருந்துவிட்டு, கோயம்புத்தூர், கொழுமம் என்ற வரதராஜபுரத்துக்கு வந்து சேர்ந்த ஸ்வாமிகள், அங்கே அந்த வருஷத்திய சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்தார். பின்னர், அருகில் இருந்த கடத்தூர் அக்ரஹாரத்தில் நவராத்திரி வைபவத்தை விமரிசையாக நடத்திவிட்டு, ஸுப்ரமண்ய க்ஷேத்திரமான பழனிக்கு வந்து சேர்ந்தார். அங்கே தம் திருக்கரங்களால் தண்டாயுதபாணிக்கு விசேஷ பூஜைகளைச் செய்தார். பின்னர் திண்டுக்கல் வழியாக மதுரையை அடைந்த ஸ்வாமிகள், ஸ்ரீமட சம்பிரதாயப்படி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண மண்டபத்தில் முகாம் அமைத்துக்கொண்டார். ஸ்வாமிகள் அங்கே இருந்தபோது, அப்போதைய ராமநாதபுர சமஸ்தானத்தின் மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதி, ஸ்வாமிகளை தரிசித்து வணங்கி, புஷ்பங்களால் நன்றாக அலங்கரிக்கப்பட்ட தங்கப் பல்லக்கில் ஸ்வாமிகளை அமரச் செய்து, பலரும் தரிசிக்கும்படியாகச் செய்தார். பின்னர், பல்வேறு காணிக்கைகளையும் சமர்ப்பித்து, ஸ்வாமிகள் தம்முடைய சமஸ்தானத்துக்கு விஜயம் செய்து அனுக்கிரஹிக்க வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

ராமேஸ்வரம் சென்று விட்டுத் திரும்பும்போது சமஸ்தானத்துக்கு விஜயம் செய்வதாக மன்னரிடம் கூறிய ஸ்வாமிகள், அங்கிருந்து புறப்பட்டு தனுஷ்கோடியை அடைந்தார். அங்கே மூன்று தினங்கள் தங்கியிருந்த ஸ்வாமிகள், நியமப்படி சேது ஸ்நானம் செய்து, சமஸ்தான வழக்கப்படி ஏற்பட்ட தான தர்மங்களைச் செய்தார். பின்னர், ராமேஸ்வரத்தை அடைந்து, ராமநாத ஸ்வாமிக்கு தாமே விசேஷ பூஜைகளைச் செய்தார். சில தினங்கள் அங்கே இருந்து அங்குள்ள சிஷ்யர்களுக்கு அனுக்கிரஹம் செய்தார்.

பின்னர், ராமநாதபுர சமஸ்தான மன்னரின் விருப்பத்தின்பேரில் ஸ்வாமிகள் ராமநாதபுர சமஸ்தானத்தை அடைந்தார். ஸ்வாமிகளை மிகுந்த பக்தியுடன் பூர்ணகும்ப மரியாதை அளித்து வரவேற்ற மன்னர், ஸ்வாமிகள் தம்முடைய நித்தியானுஷ்டானங்களைச் செய்வதற்கு வசதியாக, விஸ்தாரமான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.

அந்த சமஸ்தானத்தில் நவராத்திரி நாள்களில் சஹஸ்ர பலி என்ற பெயரில் தினமும் ஆயிரம் ஜீவன்களை பலியிடுவது வழக்கமாக இருந்து வந்தது. அதைப் பற்றி ஸ்வாமிகளிடம் முறையிட்ட மன்னர், அதை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இயல்பிலேயே சகல ஜீவன்களிடத் தும் அன்பும் இரக்கமும் கொண்டவர் அல்லவா நம் ஸ்வாமிகள்?! மன்னரின் வேண்டுகோளை நிறைவேற்றத் திருவுள்ளம் கொண்டவராக, தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது, ஒரு கையில் விளக்குமாறும், மற்றொரு கையில் ஒரு பாத்திரமும் வைத்திருந்த அவலட்சணமான பெண் ஒருத்தி, 'நான் போகிறேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றாள். சற்றைக்கெல்லாம் சர்வ லட்சணங்களும் பொருந்தியவளாக, சாட்சாத் அம்பாளைப் போலவே தோன்றிய ஒரு பெண், 'நான் வந்துவிட்டேன்’ என்று சொல்லியபடி வந்து சேர்ந்தாள். ஸ்வாமிகளின் யோக சக்தியின் வலிமையினால் தாமஸ குணம் அந்த இடத்தில் இருந்து அகன்று, ஸத்வ குணம் வந்துவிட்ட பிறகு, உயிர் பலி அங்கே நடக்குமா என்ன?!

ஸ்வாமிகளிடம் மிகுந்த விநயத்துடன் கூடிய பக்தி கொண்டிருந்த ராமநாதபுர சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி, இயல்பில் செல்வத்தின் அருமை தெரியாதவராக இருந்தார். என்னதான் நல்லவராகவும், பக்திமானாகவும், சமஸ்தானத்துக்கே அதிபதியாகவும் இருந்தாலும், இப்படியே இருந்தால், சமஸ்தானமே நசித்துப் போய்விடுமே!

ஆனால் ஸ்வாமிகள், தம்முடைய ஆத்மார்த்த பக்தரான பாஸ்கர சேதுபதியை அப்படியே  விட்டுவிடுவாரா, என்ன? ஒருநாள் மன்னர் பாஸ்கர சேதுபதியை அழைத்த ஸ்வாமிகள், ''நான் தங்களிடம் ஒன்றைக் கேட்டால் தருவீர்களா?'' என்று வினவினார்.

ஸ்வாமிகள் ஒன்றைக் கேட்டால் அதை மறுக்கமுடியுமா என்ன? அதிலும், மன்னர் பாஸ்கர சேதுபதி ஸ்வாமிகளிடம் அளவற்ற பக்தி கொண்டிருப்பவர் ஆயிற்றே! எனவே சற்றும் யோசிக்காமல், ''தாங்கள் எதைச் சொன்னாலும் அதை அப்படியே தட்டாமல் நிறைவேற்றக் காத்திருக்கிறேன்'' என்று பவ்வியமாகக் கூறினார்.

துங்கா நதி தீரத்தில்... - 15

''எனக்குத் தங்களுடைய சமஸ்தானத்தை தானமாகக் கொடுத்துவிட முடியுமா?'' என்று கேட்டார் ஸ்வாமிகள். இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஸ்வாமிகள் ராமநாதபுர சமஸ்தானத்தை ஸ்ரீசாரதா பீடத்துக்கு தானமாகக் கேட்கவில்லை. தனக்குத்தான் தானமாகக் கேட்டார். சந்நியாச ஆசிரமம் மேற்கொண்ட ஒருவர் தம்முடைய பெயருக்கு சமஸ்தானத்தை தானமாகக் கேட்பது சரிதானா என்ற யோசனை நம்மில் பலருக்குத் தோன்றக்கூடும்.

ஆனால், மன்னர் பாஸ்கர சேதுபதி சற்றும் யோசிக்காமல், ''ஸ்வாமிகள் இப்படிக் கேட்டது என் பாக்கியம். உடனே சமஸ்தானத்தை தங்கள் பெயருக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடுகிறேன்'' என்று கூறிவிட்டு, ஸ்வாமிகளிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார்.

அதன்படியே, உடனே சபையைக் கூட்டி, திவானை அழைத்து சமஸ்தானத்தை ஸ்வாமிகளின் பெயருக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு உத்தரவிட்டார். மன்னரின் உத்தரவைக் கேட்ட திவான் உட்பட அங்கிருந்த அனைவரும் திகைத்துப் போனார்கள். ஆனாலும், ஒருவராலும் மன்னரின் உத்தரவை மீறிப் பேச முடியவில்லை. காரணம், தானம் கேட்பவர் அனைவரின் அன்புக்கும் பக்திக்கும் உரிய ஸ்வாமிகள் ஆயிற்றே!

ஸ்வாமிகள் கேட்டதுபோலவே ஒரு சுப தினத்தில், ராமநாதபுர சமஸ்தானம் ஸ்வாமிகளின் பெயருக்கு தானமாக மாற்றிக் கொடுக்கப்பட்டது.

அப்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு காரியத்தைச் செய்தார் ஸ்வாமிகள்.

தொடரும்...

தொகுப்பு: க.புவனேஸ்வரி

படம்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism