அன்பின் சக்தி
1961 விகடன் தீபாவளி மலரில் இருந்து...
'நாட்டில் தற்போது ஒற்றுமையைப் பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. ஒற்றுமை என்பது வேற்றுமை பாராட்டாமல் இருப்பது அல்ல; வேற்றுமையே கிடையாது என்று தெளிவதுதான்! பரம்பொருள் ஒன்றுதான் உண்டு. அதைத் தவிர, வேறு வஸ்து தனியாகக் கிடையாது. அந்தப் பரம்பொருளைப் பற்றிய நினைவு ஒன்றுதான் எல்லோரையும் சேர்த்து வைக்கக்கூடியது. மதமும் பக்தியும் எல்லோரும் ஒன்றாக வாழ்ந்து சந்தோஷமாக இருக்க ஏற்பட்டவை. ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு துன்பப்பட அல்ல!

பக்திதான் பாரதநாட்டை இணைத்து வைத்த பெரிய சக்தி. வடக்கில் காசியிலிருந்து தெற்கேயுள்ள இராமேசுவரத்துக்கும், தெற்கேயிருந்து வடக்கேயுள்ள க்ஷேத்திரங்களுக்கும் ஜனங்கள் தரிசனம் செய்யப் போய்க்கொண்டேயிருந்தார்கள். இன்றும், எத்தனை மாறுதல்கள் ஏற்பட்டும், அப்பழக்கம் மாத்திரம் விட்டுப் போகவில்லை. பாஷை, ராஜ்ய எல்லைகள், இதர பழக்க வழக்கங்கள் மாறினாலும், இந்த அடிப்படையில்தான் சகலவித ஜனங்களும் மற்ற எல்லாவற்றையும் மறந்து ஒன்று சேருகிறார்கள். அழிவற்ற, ஒரே வஸ்துவால் ஏற்படும் இந்த உண்மையான ஒற்றுமை அழியவே அழியாது.
பக்திக்கு ஆதாரம் அன்பு. ஆண்டவன் கருணைக் கடல். அந்த அன்புக்குக் கட்டுப்படாத ஜீவராசியே கிடையாது. அதேபோல், பக்தனின் அன்புக்குக் கட்டுப்படாத ஆண்டவன் இல்லை. அன்பின் சக்தி மகத்தானது. அன்பு அன்பையே வளர்க்கும். தேச மக்கள் அனைவரும் அன்பு என்னும் வெள்ளத்தில் மூழ்க வேண்டும். அதற்கு உள்ளங்கள் தூய்மையாக வேண்டும். தர்மம் செழித்தால் உள்ளம் சுத்தி பெற்றுவிடும். நமது வேதம்தான் தர்மத்தின் இருப்பிடம். அது அநாதியானது. உலகத்துக்கே பொதுவான பொக்கிஷம். அது நாடு பூராவும் முழங்க வேண்டும். தர்ம சிந்தையும், தெய்வ வழிபாடும், கருணை உள்ளமும் நம் பாரத நாட்டின் சிறப்பான அம்சங்கள். ஒற்றுமையை வளர்க்க வேண்டுமானால் இவற்றை வளர்க்க வேண்டும்.
இது உலகம் பூராவுக்கும் பொருந்தும், அன்பில் விளைவதுதான் உண்மையான சாந்தி. ஒவ்வொருவருக்கும் மனச் சாந்தி ஏற்பட்டு விட்டால், உலகில் அமைதி தானாக நிலைத்துவிடும். முதலில், வேற்றுமை உண்டு என்ற அறியாமை விலக வேண்டும். இந்த இருள் நீங்கி, ஒளி பிறக்கவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு, இந்த தீபாவளியன்று மங்கள ஸ்நானம் செய்வோமாக!'
- ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்




திருக்குளத்திலே ஸ்நானம் செய்துகொண்டிருந்த தந்தையைக் காணாமல், ''அம்மே! அப்பே!'' என்று கூவிய ஞானசம்பந்தனுக்கு ரிஷபாரூடராகக் காட்சி தந்தார் சிவபெருமான். உலகத்துக்கெல்லாம் அன்னையான பார்வதி தேவி குழந்தைக்குப் பாலுடன் ஞானத்தையும் ஊட்டினார்.