க்கத்து வீட்டில் புது தொலைக்காட்சிப் பெட்டி வாங்கி இருக்கிறார்கள். சினிமா திரையில் கிட்டத்தட்ட பாதியளவு இருக்கும்போல. அதில், ஒரே நேரத்தில் எட்டு அலைவரிசைகள் (சேனல்கள்) தெரியுமாம். அந்த எட்டில் எதைப் பார்க்க விரும்புகிறோமோ அதைத் (ஸ்கிரீனில்) தொட்டால், அந்த அலைவரிசை திரை முழுக்கப் பெரிதாக விரியுமாம்.

ஆகா... ஆகா! அதேபோல் ஒன்று வாங்கிவிட வேண்டும். அதற்கு வழி? அட! மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. பக்கத்து வீட்டுக்காரரிடம் போய்க் கேட்டால், அவர் சொல்லிவிட்டுப் போகிறார். அந்தத் தொலைக்காட்சிப் பெட்டி எங்கு கிடைக்கும், விலை என்ன, அதை இயக்குவது எப்படி, மடிக் கணினியை (லேப் டாப்) அதனுடன் இணைக்க முடியுமா என்றெல்லாம் விரிவாகவே சொல்வார்.

அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கி சுவரில் பொருத்திவிட்டு, கையில் 'ரிமோட்’டுடன் எதிரில் உட்காரும்போது, பிறவிப் பயனையே அடைந்துவிட்டதைப் போல, ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனதில் சந்தோஷ அலையடித்துக்கொண்டு இருக்கும் அந்த நேரத்தில்...

'எதிர் வீட்டுக்காரர் புத்தம்புது கார் வாங்கியிருக்கிறார். குழந்தைகூட சுலபமாக ஓட்டும்படியான அமைப்பு. பட்டனைத் தட்டிவிட்டால் தானாகவே உரிய இடத்தில் கச்சிதமாக பார்க்கிங் செய்துகொள்கிறது’ என்று கேள்விப்பட்டால், புதிய தொலைக்காட்சி வாங்கின சந்தோஷம் காணாமல் போகிறது. எதிர் வீட்டுக்காரர் வாங்கிய அந்த காரை எப்படி வாங்கலாம் என்று மனம் அலைகிறது. தவிக்கிறது.

மனிதனும் தெய்வமாகலாம்!

இயந்திர சாதனங்களின் பின்னால் ஓடி, அவற்றை வாங்கி வாங்கிக் குவித்துவிட்டு, 'நிம்மதி இல்லை, அமைதி இல்லை’ என்று நாமெல்லோரும் புலம்பிக்கொண்டிருக்கிறோம்.

நம்மை மயக்கும் அந்த இயந்திரங்களை எல்லாம் தேடி ஓடும் நாம், நம்மிடமே ஓர் அபூர்வமான, அதிசயமான இயந்திரம் இருப்பதை மறந்துவிட்டோம். மறந்தது மட்டுமில்லை; அந்த அதிசய இயந்திரத்துக்கு நாம்தான் உரிமையாளர் என்ற எண்ணம்கூட இல்லாமல் இருக்கிறோம்.

அதிசயமான அந்த இயந்திரத்தில், பல பாகங்கள் உண்டு. அவற்றில் ஒன்று பேசும், பாடும்; ஒன்று கேட்கும்; ஒன்று பார்க்கும்; ஒன்று பலவிதமான செயல்களைச் செய்து நம்மை வாழ வைக்கும்; ஒன்று நம்மைத் தூக்கிக் கொண்டு நாம் விரும்பும் இடங்களுக்கெல்லாம் போகும். இந்த இயந்திர பாகங்களையெல்லாம், கட்டுப்படுத்தி வைக்க ஒரு கன்ட்ரோல் ரூமும் உண்டு.

அபூர்வமான அந்த இயந்திரம், நமது உடம்புதான். எத்தனை அற்புதமான எந்திரம் இது! விஞ்ஞானிகளாலேயே இப்படி ஒரு முழுமையான இயந்திரத்தை இன்னும் தயாரிக்க முடியவில்லையே!

வேறு ஏதோ ஒரு ஜீவராசியாகப் பிறக்காமல், இந்த மனிதப் பிறப்பெடுக்க நாம் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும்! 'ஜந்தூணாம் நரஜன்மம் துர்லபம்’ என்று வியக்கிறார் ஆதிசங்கரர். 'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்று அருந்தமிழில் சிலாகிக்கிறார் ஔவையார்.

மனிதப்பிறவி மிகவும் அபூர்வமானது. அதிலும் கூன், குருடு, செவிடு, ஊமை என்று பிறக்காமல், நல்லவிதமாக மனித உடல் கிடைப்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ஆனால், அப்படிக் கிடைத்திருக்கும் இந்த மனித உடலின் அருமை பெருமை நமக்குத் தெரிகிறதா? தீய பழக்க வழக்கங்களால் இதைச் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தி, நாமும் துயரப்பட்டு, அடுத்தவர்களையும் துயரத்தில் ஆழ்த்துவதில் யாருக்கு என்ன லாபம்?

அற்புதமான மனிதப்பிறவி கிடைத்தும் இவ்வளவு அவலங்கள் ஏன்? மனிதப் பிறவி என்பதே துயரத்தில் துடித்துத் துவண்டு, முடிந்துபோவதற்குத்தானா?

மனிதப் பிறவி எடுத்த எவ்வளவோ பேர், இங்கே ஆனந்தக் கூத்தாடியிருக்கிறார்களே? காலக்கணக்குக்கு அகப்படாத கும்ப முனியான அகஸ்தியர் முதல், காது படைத்தோர் அனைவருக்கும் கந்தன் புகழையும் கன்னித் தமிழின் பெருமையையும் உணர்த்திய சமீப கால வாரியார் சுவாமிகள் வரை ஏராளமானோர், மனிதப் பிறவி எடுத்ததன் பயன் இதுதான் என்று வாழ்ந்து காட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள். அப்படியிருக்க, நாம் மட்டும் ஏன் இந்தப் பிறவிப் பெருங்கடலில், நீச்சல் போடத் தெரியாமல் கஷ்டப்படவேண்டும்?

நாம் கரையேறும் வழியைச் சொல்கின்றன வேதங்கள்.

'அனந்தோ வை வேதா’  வேதங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை. அவற்றில் குறிப்பாக ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றை முறைப்படி கற்று உணரப் பலவிதமான கட்டுப்பாடுகள், நியமங்கள் உண்டு. அவற்றைச் சரிவரக் கடைப்பிடித்து, நான்கு வேதங்களையும் கற்று உணர, சாமானியர்களால் முடியாது.

அப்படி என்றால் கரையேற வழியே இல்லையா என்ற எண்ணம் தோன்றும். 'கவலையே வேண்டாம்; கரையேற வழி உண்டு’ என்று ஆறுதல் அளிக்கிறார் தாண்டவராய ஸ்வாமிகள்.

பாலைக் கடைந்து புத்தம்புது வெண்ணெயைக் கையில் கொடுப்பதுபோல, வேதக் கடலில் மூழ்கி, கடைந்து, நவநீதமாக அதாவது அனுபவம் என்னும் புது வெண்ணெயாகத் தந்திருக்கிறார்.

அந்த அனுபவக் குவியலே 'கைவல்லிய நவநீதம்’

மனிதப் பிறவி எடுத்ததன் பலனை அறியவும் அடையவும் துடிக்கும் ஆர்வம் மிக்க சீடன் ஒருவனுக்கு, குருநாதர் உபதேசம் செய்வது போன்று அமைந்த நூல் இது.

வாருங்கள், அந்த வெண்ணெயின் சுவையை நாமும் பருகத் தொடங்குவோம்!

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism