மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

ஆன்மிகத்தில் விளம்பரம் தேவையா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

?   ஊடகங்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில்  விளம்பரங்கள் அதிகரித்துவிட்டன. இதில் ஆன்மிகத்தையும் விட்டுவைக்கவில்லை. சந்தைகளில் பொருட்களை கூவிக்கூவி விற்பது போல ஆன்மிகத்தையும் கூவி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோமோ என்றே எண்ணத் தோன்றுகிறது. உங்களின் விளக்கம் என்ன?

- கே. சரவணபெருமாள், திருச்சி-2

முதல் கோணம்:

ற்பசை, பல் விளக்கப் பயன்படும். ஆனால், 'அது பற்களுக்கு உரமூட்டும். ஈறுகளுக்கு வலிவூட்டும். துர்நாற்றத்தை அகற்றும். சொத்தைப் பல் போன்ற பிணி வராமல் தடுக்கும். பற்களின் பளபளப்பு மங்காது. சாகும் வரை பற்கள் வலுவை இழக்காது...' என்றெல்லாம் அதன் பெருமைகள் விளக்கப்படும்.

அதேபோன்று, இந்த தைலத்தை பயன்படுத்தினால் மனம் சுணக்கமுறாமல் சுறுசுறுப்போடு இயங்கி, எல்லா விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் முடி பளபளக்கும், குறிப்பிட்ட இந்த க்ரீம் வகையறாக்களை பயன்படுத்தினால் தொடுபுலன் வெண்மையாகும், அழகு வளரும். ஆரோக்கியம் நிலைத்திருக்கும். இந்த கல்லை மோதிரத்தில் பொருத்தி அணிந்தால் கல்வி, வேலை வாய்ப்பு, வீடுவாகனம், விரும்பியபடி மனைவி ஆகிய அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும், உனது பெயரை இப்படி மாற்றினால் வாழ்க்கையில் துயரம் தொடாத இன்பம் பெருகும், வீட்டின் சமையற்கட்டை வேறு இடத்துக்கு மாற்றினால் பெரிய செல்வந்தராக மாறலாம்... இப்படி பல விளம்பரங்கள் தென்படுகின்றன.

கேள்வி - பதில்

? ஆக, ஒரு பொருளின் அல்லது ஒரு விஷயத்தின் சிறப்பை எடுத்துரைப்பது தவறு எனச் சொல்ல வருகிறீர்களா?

மிகைப்படுத்துகிறார்கள் என்றே சொல்ல வருகிறோம். இன்னொரு விஷயம்... விளம்பரங்கள் ஆன்மிகத்தை யும் விட்டுவைக்கவில்லை என்பதே. இந்த ஸ்லோகத்தை தினமும் சொன்னால் ஆயுள், ஆரோக்கியம், பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு ஆகியன சிறக்கும், இந்த நதியில் நீராடினால் ஏழு பிறப்பில் சேமித்த பாபங்களும் தொலையும். இந்த தெய்வத்தை அடிபணிந்தால் ஜாதக தோஷம் விலகி, செல்வச் செழிப்பில் வாழ்க்கை இனிக்கும் என்றெல்லாம் சொல்வார்கள். ஆறாவது அறிவை பயன்படுத்தி ஆராய்ந்தால், இதுபோன்ற விளக்கங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்பது புலனாகும்.

'ஜாதகத்தில் களத்திர தோஷம் இருக்கு. ஆனாலும் பயப்பட வேண்டாம்; பரிகாரத்தால் அழித்துவிடலாம். ஏழ்மை உன்னை அலைக்கழிக்கும். எனினும் கவலை வேண்டாம். பரிகாரத்தால் வறுமையை அகற்றிவிடலாம். குழந்தை இல்லை என்ற கவலை வேண்டாம். பரிகாரத்தின் மூலம் குழந்தை பாக்கியம் பெறலாம்... இப்படி ஜாதகத்தில் தென்படும் தோஷங்களை பரிகாரத்தால் விலக்கி எல்லோருக்கும் சிறப்பான வாழ்வை அளிப்பவர் இந்த ஜோதிடர்’ என்றெல்லாம் விளம்பரம் இருக்கும்.

ஆக, ஜோதிடம் சொல்லும் தோஷத்தை மாற்றியமைக்கிறார் ஜோதிடர். ஜோதிடம் பொய்த்துப் போய்விடுகிறது. இந்த ஜோதிடரை சந்திக்காதவர், பரிகாரத்தை ஏற்காதவர் எல்லாம் துயரத்தில் சிக்கித் தவிப்பார்கள்! இது வேடிக்கையாக இல்லையா? இதில் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக அல்லவா இருக்கிறது!

? வழிபாடுகள், ஜோதிட விஷயத்தில் இப்படி இப்படி செயல் படலாம், இன்னின்ன விஷயங்களில் இன்னின்ன சிறப்புகள் உண்டு என்று எடுத்துச்சொல்வது எப்படி தவறாகும்?

இருப்பதை எடுத்துச் சொல்லலாம். இல்லாததையும் இருப்பதாக மிகைப்படுத்துவது, நல்ல நடைமுறை இல்லையே!

கடவுளைவிட கடவுள் பெயர் உனக்கு வீடுபேறை அளிக்கும்.கடவுளை வணங்கவேண்டாம்; கடவுள் பக்தனை வணங்கு. அது உனது வாழ்க்கையை முழுமையாக்கும். இந்த நதியில் நீராடினால் பத்து தலைமுறை முன்னோரும் கரையேறி விடுவார்கள்  இப்படி எல்லா நடைமுறைகளும் வாழ்வின் நிறைவை, செழிப்பை, மகிழ்ச்சியை எட்ட உதவும் என்ற ரீதியிலேயே தென்படும். இந்த விளம்பரங்களில் எல்லாம் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே இருக்கிறது. மக்களை ஈர்க்க பொருளின் பெருமையை விளக்குவது தகும். ஆனால், அளவுக்கு மிஞ்சிய பெருமையை வெளியிடுவதால், அந்த பொருளின் தரத்தில் சந்தேகத்தை ஏற்படுத்திவிடும். கல்வியும், உழைப்பும், ஒழுக்கமும் இல்லாமலேயே தேவைகள் பூர்த்தியாகும் என்கிற கணிப்பு, அப்பாவி மக்களை அலைக்கழிக்கிறது. அறிஞர்களும் சிந்தனையாளர்களும் இதில் சிக்கமாட்டார்கள். அப்பாவி மக்களே இதில் நம்பிக்கை வைத்து பணத்தையும் காலத்தையும் விரயமாக்கி திண்டாடுகிறார்கள்.

எந்த சீர்திருத்தவாதியின் கண் களிலும் இந்த விளம்பரம் தென்படுவது இல்லை. மக்களை ஈர்க்கும் வகையில் விளம்பரம் செய்யும் தகுதி படைத்தவர்களுக்கு, வேலை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. படிப்பும், பட்டமும், உழைப்பும், ஒழுக்கமும் மக்களில் நிறைவு பெற்று வளரும்போது அவர்கள் விழித்துக்கொள்வார்கள். அப்படியொரு நிலையை கடவுள் நமக்கு வழங்கவேண்டும்.

இரண்டாவது கோணம்:

எதிலும் குறையைப் பார்க்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு  விளம்பரங்களில் உள்ள குறைகளே தென்படும். அது, விளம்பரப் பொருளின் குறை அல்ல; தங்கள் பார்வையில் இருக்கும் குறை.

இன்றைய சூழலில் மக்களுக்கு ஒரு பொருளை அறிமுகம் செய்ய, விளம்பரத்தைத் தவிர வேறுவழி இல்லை. மக்களை ஈர்க்கும் வகையில் குறிப்பிட்ட பொருளின் தன்மையை மிகைப்படுத்திச் சொல்லவேண்டிய கட்டாயம் உண்டு. இல்லையெனில், அந்த பொருள் பயன்பாட்டுக்கு வராது. பொருள் உற்பத்தி குறைந்து, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, நாட்டின் முன்னேற்றத்திலும் தடை ஏற்படும்.

பற்பசை பயன்படுத்தும் அன்பர் களில் ஆரோக்கியமான பற்களை பெற்றவர்களும் உண்டு. தைலத்தைப் பயன்படுத்தி பலன் அடைந்தவர்களும் உண்டு. மீண்டும் மீண்டும் ஒரு பொருளை பயன்படுத்துபவர்கள், பலன் இல்லாமல் பயன்படுத்துவார்களா? இதில், ஸ்லோகம் சொல்லி கடவுளை வணங்குபவர்களும் அடக்கம். பக்தி, ஈவு, இரக்கம், பரோபகாரம் போன்றவற்றை படிப்படியாக வளர்த்து, வாழ்க்கை தேவைகளை அடைந்து மகிழ்வில் நிறைவு பெறுவார்கள். ஜோதிடத்திலும், வாஸ்துவிலும், கல் பதித்த மோதிரத்திலும் வைத்திருக்கும் அளவுகடந்த நம்பிக்கை, புதிய முயற்சி களில் புதிய ஈடுபாட்டை ஊக்குவிக்கும். அதன் பலனாக வெற்றிபெற்றவர்களும் உண்டு.

கேள்வி - பதில்

? அதற்காக, இதே நடைமுறையை வழிபாட்டு விஷயங்களிலும் புகுத்த வேண்டுமா என்ன?

முயற்சியும் உழைப்பும் வெற்றிக்கு நேரடிக் காரணங்களானாலும், அதில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவதற்கு, அசையாத நம்பிக்கையே மூல காரணம் என்பதை மறுக்க முடியாது. மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் என்பது புதிய சிந்தனையாளர்களின் படைப்பல்ல. மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் இங்கு மட்டுமல்ல, உலகெங்கும் பல காலமாக வந்து கொண்டுதான் இருக்கின்றன. மேல்நாட்டு விளம்பரங்கள் எல்லா வற்றையும் மிஞ்சி விச்வரூபம் எடுத்துள்ளன. நம்மவர்கள் அடக்கி வாசிக்கிறார்கள். நல்லெண்ணம் இருப்பதால், மிகைப்படுத்துவதிலும் ஒரு வரைமுறையைக் கடைப்பிடிக்கிறார்கள். பண்டைய அறநூல்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரத்தால் வளர்ந்தோங்கி இன்று வரையிலும் பயன் பாட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றன.

லிங்காஷ்டகம் படித்தால் சிவலோகம் அடைந்து சிவனோடு இணைந்து மகிழலாம் என்கிறது வேதம் (சிவலோக மவாப்னோதி சிவேனஸஹ மோததெ). இந்த ஸ்லோகத்தை காலையில் மட்டும் படித்தால், இதுவரை சேமித்த பாவங்கள் கரையும்; மதியம் மட்டும் படித்தால், வாழ்க்கை முழுவதும் செல்வச்செழிப்பில் மிதக்கலாம்; மாலையில் மட்டும் படித்தால் வீடுபேறு கிடைக்கும்; மூன்று வேளையும் படித்தால் கடவுளோடு இரண்டறக் கலந்து ஆனந்தத்தில் மூழ்கலாம் என்று சொல்லும் (ஏககாலம் படேத் நித்யம்...). உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் 'நாராயணா’ என்று சொன்னால் போதும், பிணியில் இருந்து விடுபட்டு நீண்டஆயுள் பெற்று விளங்குவான் என்கிறது சாஸ்திரம் (ஸம்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம்...).

?எனில், சாஸ்திர விளக்கங்களையும் அறநூல்களின் அறிவுரைகளையும் விளம்பரங்களோடு ஒப்பிடுகிறீர்களா?

நல்ல விஷயங்களை அழுத்தமாக எடுத்துரைப்பதில் தவறு இல்லை எனச் சொல்ல வருகிறோம். ரேகைகள் பரவிய கைத்தலத்தில் (உள்ளங்கையில்) ஒருநாளும் ரோமம் முளைக்காது. இயற்கையில் இல்லாத ஒன்றை வரவழைக்க இயலாது. இப்படியிருக்க, இந்த தைலத்தை தேய்த்துக் கொண்டால் கைத்தலத்திலும் ரோமம் முளைக்கும் என்கிறது ஆயுர்வேதம். அதேபோன்று, கோபுர தரிசனம் கோடி புண்ணியம், கஜகேசரி யோகம் செல்வந்தனாக்கும், குருவருள் கோடி பாவத்தை அழிக்கும், ராம நாமத்தை உச்சரித்தால் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் நம்மை

வந்தடையும் (கல்யாணானாம் நிதானம்), துர்கையை நினைத்தால் பாவம் விலகும், புத்தி வளர்ந்து சிந்தனையில் உயர்வை எட்டி மகிழலாம், கடவுள் கோபமுற்றால் குரு காப்பாற்றுவார், குரு கோபமுற்றால் காப்பாற்ற ஆள் இருக்காது; கடவுளைவிட உயர்ந்தவர் குரு என்றெல்லாம் சொல்வது உண்டு.

அதுமட்டுமா? ஸ்ரீராமனைவிட அவரது பக்தன் உயர்ந்தவன். அனுமனை வணங்கு. அவனருள் உன்னை உயர்த்தும். இந்த மகான் விஷ்ணுவின் மறுவடிவம், இந்த மகான் ஈசனின் அம்சம், அவர்கள் அவதரித்த நாள், நட்சத்திரம், தேசம், வீடு, பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றை நினைத்தாலே போதும் பிறவிப்பயன் கிடைத்து விடும். மகான்களின் வாரிசுகள் வணக்கத்துக்கு உரியவர்கள், அவர்களை மனதில் நினைத்தால் வாழ்க்கை வளம் பெறும்... இவற்றை எல்லாம்

மிகைப்படுத்தப்பட்டவை என்று எவரும் ஒதுக்கி வைப்பது இல்லையே. மாறாக அவற்றின் செழிப்பை வளர்க்கும் விதத்தில் புதுப்புது வகையில் மிகையான விளம்பரங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

துரியோதனனின் பார்வையில் எல்லோரும் கெட்டவர்களாகப் பட்டார்கள். தருமரின் பார்வையில் எல்லோரும் நல்லவர்களாகப் பட்டார்கள் என்று சொல்லுவது உண்டு. நாளேடுகளைப் பார்த்துதான் நாட்டு நடப்பை அறிகிறோம். விளம்பரத்தை வைத்துதான் பொருள்களை தெரிந்து கொள்கிறோம். மிகைப் படுத்தப்பட்ட விளக்கம் கொண்ட பொருட்களை ஆர்வத்துடன் பெற்றுக்கொள்கிறோம். எனவே, குறை காண்பதில் மனமாற்றம் வேண்டும்.

மூன்றாவது கோணம்:

தேவையான ஒரு பொருளை பெறுவதற்கு விளம்பரத்தை எதிர்பார்ப்பது இல்லை. மளிகைப் பொருட்களுக்கு விளம்பரம் தேவை இல்லை. இயற்கையில் விளைந்த பொருள்களுக்கு விளம்பரம் சிறப்பு சேர்க்காது.

பூனை அரிசி, எலி பருப்பு, தேள் கடுகு, வாழை மார்க் துவரை இப்படியெல்லாம் புது அடைமொழிகளைச் சேர்த்து, அவற்றை வியாபார அடையாளமாக்கி மிகைப்படுத்துவது நல்ல நடைமுறை அல்ல. நல்லெண்ணெயையும், தேங்காய் எண்ணெயையும், கடுகு எண்ணெயை யும் புதுப்புது அடையாளத்தில் மிகைப்படுத்துவது, உள் நோக்கம் உடையது. நமது செயற்கையான செயல்பாடு இந்த பொருட்களின் தரத்தை குறைக்குமே தவிர, பெருமை சேர்க்காது.நல்லெண்ணெயின் கொழுப்பை அகற்றி நீர் போல் ஆக்கினால் எண்ணெயின் தரம் குன்றிவிடும்; உயராது. ஆடை, சேலை, தேன், மாவு, பழம் ஆகியவற்றுக்கு அடைமொழிகள் சேர்த்து, சிறப்பு பெற்றதாக பறைசாற்றும் விளம்பரங்கள், மக்களின் பலவீனத்தை ஈர்க்குமே தவிர, பொருளின் தரத்தை உயர்த்தாது.

? உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வதானால், உயர்வான விஷயங் களை உலகுக்கு எடுத்துச்சொல்ல முடியாதே?

விளம்பரம் இல்லாத எத்தனையோ பொருட்களை நாம் தேடியலைந்து வாங்குவது உண்டு. உயர்வானது எனில் நிச்சயம் எல்லோரையும் அது சென்றடைந்துவிடும்.

ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்... விளம்பரம் ஏற ஏற பொருளின் வியாபாரத்தில் மந்தம் இருக்கிறது என்று அர்த்தம். வியாபாரத்தில் பொய் கலப்பு இருக்கலாம்; முழுப் பொய்யாக மாறக் கூடாது. கண்ணைக் கவரும் பெட்டிகளில் அடைக்கப்பட்ட முந்திரிப் பருப்பில் புழு நெளிவதைக் கண்டவர்கள் உண்டு. விளக்கை ஏற்றுவதற்கு எண்ணெய் பயன்படுத்துவோம். முன்னோர் செக்கில் ஆட்டிய எண்ணெயை அப்படியே பயன்படுத்தினார்கள். அதில் செயற்கையான நமது இணைப்பு... குறைந்த விலையில் வாங்க வேண்டிய எண்ணெயை அதிக விலை கொடுத்து வாங்கும் கட்டாயத்துக்கு நம்மை ஆளாக்குகிறது.

கேள்வி - பதில்

'இந்த தெய்வத்துக்கு இந்த எண்ணெய்’ என்பதெல்லாம் நமது கற்பனை. விறகில், கரியில், மண்ணெண்ணெயில், கேஸ், மின்சாரம்  இப்படி, சமையலுக்கான பொருட்களில் எந்த வித்தியாசமும் இல்லை. நமக்கு சமையல் நடைபெற வேண்டும் அவ்வளவுதான். அதுபோல் விளக்கெரிய எண்ணெய் வேண்டும். அதில் எந்த ஆன்மிகமும் கலக்கவில்லை. ஆக, எல்லா பொருட்களிலும் ஆன்மிகத்தையும், சுகாதாரத்தையும் இணைத்து மிகைப்படுத்தும் எண்ணம், மலிந்த பொருட்களையும் அதிக விலை கொடுத்து வாங்கவைத்து, பொருளாதாரச் சுமையை ஏற்க வைக்கிறது. ஆகவே, மிகைப் படுத்தப் பட்ட விளம்பரங்களை ஏற்பதும், அதை சாக்காக வைத்து ஏழை  எளிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களிலும், மளிகையிலும், இயற்கையில் விளைந்த காய்கனிகளிலும் வியாபார மார்க் என்று ஏற்படுத்தி, மக்களின் பலவீனத் தைப் பயன்படுத்துவது முறையாகாது.

தங்களின் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

இயற்கையின் படைப்பான தண்ணீரையும் வியாபாரப் பொருளாக்கி, மிகையான விளம்பரங்களால் மக்களை ஈர்ப்பது நல்லதல்ல. எண்ணிக்கையில் குறைவான மக்கள் பயன்படுத்துவதை மனதில் கொண்டு, அவற்றை மிக பயனுள்ளதாக விளம்பரங்கள் மூலம் சித்திரிப்பது தவறு.

புதுப் பொருட்களை அறிமுகம் செய்ய விளம்பரம் தேவை. பழைய பொருள்கள்... அதிலும் குறிப்பாக சுகாதாரத்தைப் பேணிக் காக்கும் மளிகைகளிலும் உணவிலும் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் ஏற்கத் தக்கதல்ல.

இந்த நிலை முற்றும் தருணத்தில் மக்கள் விழித்துக்கொள்வார்கள். அப்படியான காலம் வெகுதூரத்தில் இல்லை. சமுதாயம் சீரழிவை எட்டும் போது ஒரு பலமான சீர்திருத்த வாதியை தோற்றுவிப்பார் கடவுள். இப்போதே, செயற்கை உரத்தில் விளைந்ததை விலக்கி, இயற்கை உரத்தில் விளைந்ததை தேட ஆரம்பித்துவிட்டார்கள். விழித்துக் கொள்வது நல்லது!

பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.