Published:Updated:

அருட்செல்வர்!

சில நினைவுகள்... வி.ராம்ஜி

அருட்செல்வர்!

சில நினைவுகள்... வி.ராம்ஜி

Published:Updated:

பொள்ளாச்சி என்றதும் அந்த பிரமாண்டமான சந்தை மட்டுமல்ல, மனிதநேயம் மிக்க பொள்ளாச்சி நா.மகாலிங்கமும் நம் நினைவுக்கு வருவார். வணிகம், இல்லறம், தோழமை, சமூகம் மட்டுமின்றி ஆன்மிகத்திலும் தன் முத்திரையைப் பதித்த பொள்ளாச்சி மகாலிங்கம் 'அருட்செல்வர்’ என்னும் அடைமொழிக்கு அத்தனைப் பொருத்தமானவர்.

''கோபமோ, அகங்காரமோ அவருக்கு எள்ளளவும் இருந்ததில்லை. தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் கடவுள் துணை நிற்கிறார் என்றே அவர் சொல்லி வந்தார். எங்கள் ஒவ்வொருவரின் செயல்பாடுகளிலும் அருட்செல்வர் ஐயா என்றென்றைக்கும் துணை நிற்பார்' என்று சொல்லி நெகிழ்கிறார் சிதம்பரநாதன். பொள்ளாச்சி மகாலிங்கம் நடத்தி வந்த 'ஓம்சக்தி’  இதழின் பொறுப்பாசிரியர்.  

''வள்ளலார் மீது அளப்பரிய பக்தி கொண்டவர் மகாலிங்கம் ஐயா அவர்கள். ஒரு தை மாத பெளர்ணமி நன்னாளில், வள்ளலாரின் பக்தர்களை அழைத்துக்கொண்டு இமயமலை சென்று, அங்கே அருட்பெருஞ்ஜோதியை ஏற்றுவதற்குச் சிலர் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஐயாவை வந்து சந்தித்து, இந்த விஷயத்தைச் சொன்னார்கள். 'நிதியுதவி ஏதும் தேவையா?’ என்று கேட்டார் ஐயா. 'வேண்டாம் ஐயா! போதுமான அளவு வந்துவிட்டது’  என அவர்கள் தெரிவித்தனர். உடனே ஐயா, 'சரி, நாங்களும் வரோம் இமய மலைக்கு’ என்று எங்களையும் உடன் அழைத்துச் சென்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அருட்செல்வர்!

விமானப் பயணம், கார் பயணம் எல்லாம் முடிந்து, பத்ரிநாத் மலைப் பகுதியில் உள்ள ஹோட்டலில் இருந்து மலையடிவாரத்தில், அலக்நந்தா நதிக்கரையில் உள்ள கோயிலுக்குச் செல்லவேண்டும். அந்தக் கிடுகிடு பள்ளத்தில், செங்குத்தான, கரடுமுரடான பகுதியில், பல்லக்கில் அமர வைத்து ஐயாவை அழைத்துச் சென்றார்கள். பிறகு அங்கு நடந்த விழாவில், 'வாழ்க்கையில் ஒவ்வொருவரும் மரண பயத்தைத் தெரிந்து உணர்ந்து நடக்க வேண்டும். அப்போதுதான் கர்வம், அலட்டல் ஏதுமின்றி வாழமுடியும் என்பார்கள். கடவுள் அருளால், ஒரு நெறியான வாழ்க்கை வாழ்ந்து வரும் எனக்கு, அப்படியான மரண பயம் இதுவரை வந்ததில்லை. வள்ளலார் பெருமானின் கட்டளையால், இன்றைக்கு அதுவும் கிடைத்திருக்கிறது என உணர்கிறேன். நம் வள்ளலார் வளர்க்கச் சொன்ன அருட்பெருஞ்ஜோதி, இமயமலையிலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. இதைவிட வேறென்ன வேண்டும்!’ எனப் பேசி நெகிழ்ந்தார் ஐயா. ஒரு குழந்தையைப் போல உண்மை பேசவும், ஞானியைப் போல தெளிந்து வாழவுமாக இருந்த ஐயா, மிகச்சிறந்த மகான். மனிதருள் மாணிக்கம்' என்று நெக்குருகிச் சொல்கிறார் சிதம்பரநாதன்.

அருட்செல்வர்!

''அறிவுத் திருக்கோயிலுக்குத் தலைமையிடம் தேடிக் கொண்டிருந்தார் வேதாத்திரி மகரிஷி. 'பொள்ளாச்சிப் பக்கம் பாருங்களேன்’ என்று யாரோ சொல்ல, ஊத்துக்குளியைச் சேர்ந்த தொழிலதிபர் சின்னச்சாமி ஐயா, 'பொள்ளாச்சி என்றால், மகாலிங்கம் ஐயாவைப் பார்க்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார். அப்போது மகரிஷியைச் சந்தித்த மகாலிங்கம் ஐயா, ஆழியாறு அணைக்கு அருகில் உள்ள தனக்குச் சொந்தமான இடத்தைக் காட்டினார். 'மிகச் சிறந்த இடம். இங்கே அறிவுத் திருக்கோயில் அமைக்கலாம்’ என்று வேதாத்திரி மகரிஷி மகிழ்ச்சியோடு சொல்லிவிட்டு, விலை விவரம் கேட்க, 'அறிவுத் திருக்கோயிலுக்கு அந்த வள்ளலாரே கொடுத்ததாக இருக்கட்டும். பணமெல்லாம் எதுவும் வேண்டாம்’ என்று மறுத்துவிட்டார் ஐயா. அந்த இடம், சுமார் 11 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

நெஞ்சமெல்லாம் கருணையும் பரோபகார குணமுமே நிறைந்தவர் எங்கள் ஐயா. எத்தனையோ ஆலயங் களுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார். மகான்களுக்கு மரியாதை செய்திருக் கிறார். புதுப்புது அனுபவங்கள் ஆன்மிகத்தில் கிடைக்க, சிரமம் பார்க்காமல் பயணப்பட்டிருக்கிறார். என் வாழ்க்கைக் கும் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக, வளம் சேர்த்தவராகத் திகழ்ந்தவர் ஐயா. அற வழியில் நடந்த அருட்செல்வர் ஒரு சகாப்தம்!'' என நா தழுதழுக்கச் சொல்கிறார் 75 வயது சிதம்பரநாதன்.

சைவ சமயக் கலைக்களஞ்சியத்தின் தலைமைப் பதிப்பாசிரியர்  பேராசிரியர் இரா.செல்வக்கணபதி, பொள்ளாச்சி மகாலிங்கத்துடனான தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

''அவருடன் எனக்கு 44 வருட கால நட்பு உண்டு. ஆன்மிகத்தில் அவரின் செல்லப்பிள்ளை என்றே என்னைச்  சொல்வார்கள். அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. நா.மகாலிங்கம் ஐயா தொடங்கிய பணி ஒன்றை, தனி ஒருவனாக ஆறரை வருடங்கள் கடுமையாக உழைத்து முடித்தேன். 'சைவ சமயக் களஞ்சியம்’ எனும் பத்து தொகுதிகள் கொண்ட புத்தகத்தைக் கண்டு சிலிர்த்துப் போனவர், வீடு தேடி வந்து, பாராட்டினார். பத்து லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கி, நெகிழ வைத்தார். அவருக்கு 100 புத்தகங் கள் வழங்கினேன். அதை இந்தியா முழுவதும் உள்ள

அருட்செல்வர்!

தமிழ்ச்சங்கங்களுக்கும் ஆன்மிக அமைப்புகளுக்கும் அறிஞர் பெருமக்களுக்கும் அனுப்பி வைத்தார். அவரின் மனிதநேயமும், இலக்கிய ஆர்வமும், சைவ சமயத்தின்மீது கொண்ட அளவற்ற பற்றும் கண்டு வியந்து போனேன்' என்று கண்ணீர் மல்கச் சொல்கிறார் செல்வக்கணபதி.

''அருட்செல்வர் சென்னைக்கு வந்தால், அவரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை அவரின் உதவியாளர் ரவீந்திரன் தந்து உதவுவார். ஐயாவும் நானும் நேரம் போவதே தெரியாமல் பேசி மகிழ்ந்திருக்கிறோம். வேதத்தில் துவங்கி, நவீன இலக்கியம் வரை அவர் அழகாகவும், விரிவாகவும் பேசுவதைக் கேட்டு வியப்பின் எல்லைக்கே போயிருக்கிறேன். எப்போது அவரைப் பார்க்கச் சென்றாலும், புதிய புத்தகம் ஒன்றை எனக்குப் பரிசாகத் தருவார். அப்படி இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்ட புத்தகங்களை எனக்குத் தந்திருப்பார். 'புத்தகங்களின் காதலன்’ என்றே அவரைச் சொல்லலாம்.

ஆன்மிகத்துக்கும் சமூக இலக்கியத்துக் கும் அவர் ஆற்றியுள்ள தொண்டு, எல்லையற்றது. பல நூற்றாண்டுகளாக சைவ சமயத்துக்குப் பலரும் ஆற்றிய தொண்டினை, தனியொருவராக, தான் வாழும் காலத்திலேயே செய்த ஒப்பற்ற இறைப் பண்பாளர் அவர். தமிழகப் பல்கலைக்கழகங்கள் செய்திருக்க வேண்டிய நூலாக்கத்தையும் மொழி பெயர்ப்புகளையும் தன் சொந்தச் செலவில் செய்து, கடந்த 35 வருடங் களாக மிகப்பெரிய தமிழ் வளர்ச்சியை மெளனமாக இருந்தே சாதித்த தமிழ்ப் பற்றாளன் அவர். அவரின் கையசைவிலும் கண் பார்வையிலும் 20 நிறுவனங்கள்; 20க்கும் மேற்பட்ட கல்விக் கூடங்கள். மாமிசம் உண்பதில்லை. இறைவனை வணங்காத நாளே இல்லை. வள்ளலார் வழியில் ஒரு நேரான வாழ்க்கையை வாழ்ந்து, எங்களுக்கெல்லாம் நடமாடும் வள்ளலாராகவே வாழ்ந்த மகான் அவர்!'' என்று நெஞ்சம் நெகிழச் சொல்கிறார் செல்வக்கணபதி.

அருட்செல்வர்... ஆன்மிகச் சேவைக்கு இறை வழங்கிய கொடை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism