மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

வினைகள் தீரும்... வெற்றிகள் சேரும்!குலசை தசராஎஸ். கண்ணன்கோபாலன்

சரா என்றால், பத்தாவது ராத்திரி என்று பொருள். நவராத்திரியின் ஒன்பது இரவுகளைக் கடந்து பத்தாவதாக வருவது தான் தசரா. தசரா கொண்டாட்டம் என்றாலே, மைசூரில் நடைபெறும் தசரா விழாதான் நம் நினைவுக்கு வரும். ஆனால், அதற்குக் கொஞ்சமும் குறையாமல் தமிழகத்திலும் தசரா பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும் திருத்தலம் குலசேகரப்பட்டினம்.

செந்தில் அழகன் அருளாட்சி புரியும் திருச்செந்தூர் திருத்தலத்தில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் இருக்கும் குலசேகரப்பட்டினம் திருத்தலத்தில் நடை பெற்ற தசரா திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நடைபெற இருப்பதாகத் தெரியவர, அந்த விழாவை தரிசிக்க குலசேகரப்பட்டினம் சென்றோம். 'காலையிலேயே சென்றுவிட்டால்தான் நல்லது. அப்போதுதான் நெரிசல் இல்லாமல் இருக்கும். சிரமம் இல்லாமல் செல்லலாம்’ என்று நண்பர் சொன்னதால், 3ம் தேதி காலை 8 மணிக்கே குலசேகரப்பட்டினத்துக்குப் புறப்பட்டோம். ஆனாலும் அப்போதே கூட்டம் திமுதிமுவென்று காணப்பட்டது.எல்லா பாதைகளும் குலசேகரப்பட்டினத்தை நோக்கியே இருந்தன என்று சொல்லும் படியாக, நாலாபக்கங்களில் இருந்தும் பக்தர்கள் குலசேகரப்பட்டினத்தை நோக்கித் திரண்டுகொண்டிருந்தனர்.

அந்த பக்தர்களிடையே நம்மால் ஒரு வித்தியாசத்தைக் காணமுடிந்தது. பலர் ஏதேனும் வேடம் தரித்தவர்களாகக் காணப் பட்டனர். காளி, விநாயகர், முருகன், ராமன், அனுமன், இந்திரன், சந்திரன்,  பணக்காரன், பரதேசி, ராஜா, ராணி, மந்திரி, போலீஸ் என இன்ன வேஷம்தான் என்றில்லாமல் பலப்பல வேஷங்களில் காணப்பட்டனர். இவர்களில் காளி வேஷம் கட்டியவர்களையே அதிகம் காணமுடிந்தது. இப்படி வேஷம் கட்டிக்கொண்டு வருவதன் தாத்பர்யத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கு முன்பாக, குலசேகரப்பட்டினத்தில் இலவச வேத பாடசாலையின் முதல்வராக இருக்கும் குமார் என்பவர் தெரிவித்த கோயில் மற்றும் ஊரைப் பற்றிய வரலாற்றைத் தெரிந்துகொள்வோமா..?

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

ஆதியில் வீரைவளநாடு என்ற பெயருடன் திகழ்ந்த இந்த ஊர், பின்னர் முற்கால பாண்டிய மன்னர்களில் ஒருவரான குலசேகர பாண்டியன் பெயரிலேயே குலசேகரப்பட்டினம் என்ற அழைக்கப்படுவதாகத் தெரிய வருகிறது. அக்கால மன்னர்கள் நகர்வலம் செல்வது வழக்கம். அப்படி செல்லும்போது, இறைவனின் ஆலயங்களை தரிசிப்பதை தங்களின் கடமையாகக் கொண்டிருந்தனர். ஒருமுறை குலசேகரபாண்டியன் இந்த ஊரில் தங்க நேர்ந்தபோது, கோயில் எதுவும் அங்கே இல்லாதபடியால் ஊரின் தென்பாகத்தில் ஒரு விநாயகர் கோயிலைக் கட்டினான். அந்த விநாயகரின் பெயர் 'மும்முடி காத்த விநாயகர்’ என்பதாகும். பாண்டியர் களின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தாலும் சேர, சோழ மன்னர்களும் வெவ்வேறு காலங்களில் இந்த ஊரை தங்கள் வசப்படுத்தியதாகத் தெரியவருகிறது. அதனால்தான் 'மும்முடி காத்த விநாயகர்’ என்று பெயர் ஏற்பட்டதுபோலும்!

நம் சிந்தனையைக் கலைப்பது போல், 'ஓம் காளி, ஸ்ரீகாளி, ஜெய் காளி’ என்ற முழக்கம் கேட்டது. கூடவே, தாரை தப்பட்டைகளின் ஓசையும் சேர்ந்து கொண்டது. குரல் வந்த திசையைப் பார்த்தோம். ஒரு வாகனத்தில் சுமார் 10 பேர் விதம் விதமாக காளி வேஷம் தரித்தபடி வந்துகொண்டிருந்தனர். அவர்கள் நம்மைக் கடந்து சென்றதும், குலசேகரப்பட்டினத்தில் அருள் புரியும் அன்னை முத்தாரம்மன் பற்றி குமார் நம்மிடம் தெரிவித்திருந்த செய்திகள் மீண்டும் நம் சிந்தனையில் வலம் வந்தன.

செந்தூரில் சூரபத்மன் சம்ஹாரம் நிகழ்ந்தது என்றால், இந்த குலசேகரப் பட்டினத்தில் மகிஷாசுரன் தேவியால் சம்ஹரிக்கப்பட்டான். சூரபத்மனுக்கும் மகிஷாசுரனுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், சூரபத்மன் பிறவியிலேயே அசுரன். ஆனால், இந்த மகிஷாசுரன் சாபத்தின் விளைவாக அசுரனானவன்.

யார் கொடுத்த சாபம் அது?

முன்னொரு யுகத்தில் இந்தப் பகுதியில் வரமுனி என்ற பெயரில் ஒரு முனிவர் இருந்தார். ஒருமுறை அகத்திய முனிவர் இந்த வழியாக வந்து கொண்டிருந்தபோது, வரமுனிவர் அவரை வரவேற்று உபசரிக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டார். அதன் விளைவாக அவர் மகிஷாசுரனாக மாறி, மற்ற முனிவர்களையும் மக்களை யும் துன்புறுத்தி வந்தார். அன்னை சக்தி தோன்றி மகிஷனை சம்ஹாரம் செய்தாள்.

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

அசுரனாக இருந்தாலும், பூர்வாசிரமத் தில் முனிவராக இருந்ததால், மகிஷனை சம்ஹாரம் செய்ததும் அம்பிகையை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. தோஷம் நீங்க வேண்டி அம்பாள் சிவபெருமானை தியானித்து தவம் இருந்தாள். அம்பிகை யின் தவத்துக்கு இரங்கி சிவபெருமான் ஞானமூர்த்தீஸ்வரராக தரிசனம் தந்த தலம்தான், இதோ நாம் இப்போது தரிசித்துக்கொண்டிருக்கும் குலசை திருத்தலம்.

ஊருக்கு 3 கி.மீ. தொலைவிலேயே வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விடுகிறார்கள். அங்கிருந்து நடந்துதான் நாம் கோயிலுக்குச் செல்லவேண்டும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தில் நம்மால் நடந்து செல்ல முடியவில்லை; அடி மேல் அடி வைத்து மெல்ல நகர்ந்துதான் செல்ல முடிந்தது. கோயிலை நெருங்க நெருங்க நெரிசலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. ஒருவழியாக கோயிலுக்குள் சென்றுவிட்டோம். உள்ளே தாரை தப்பட்டை ஒலிக்க, காளி வேஷம் போட்டவர்களும் தீச்சட்டி ஏந்தியவர் களும் ஆவேச மாக கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தனர். கோயிலின் உள்ளே நமக்கு இடப்புறம் இருந்த ஒரு மண்டபத்துக்குள் சென் றோம். நம்மிடம் கோயிலின் வரலாறு பற்றிக் கூறிய குமார் அங்கேதான் இருந்தார். அவரிடம் அன்றைய நிகழ்ச்சிகளைப் பற்றி கேட்டோம். அபிஷேகத்துக்கான நேரம் நெருங்கிவிட்டதால், ஆலயத்தின் தலைமை அர்ச்சகரைப்  பார்க்குமாறு சொல்லி, கூடவே ஒருவரை அனுப்பி வைத்தார்.

தலைமை அர்ச்சகரும், இலவச வேத பாடசாலையும் கோசாலையும் நடத்தி வருபவருமான ஸ்ரீமகராஜ சுவாமிகளிடம், கோயில் உருவான விதம் குறித்தும், தசரா விழா பற்றியும் விவரம் கேட்டோம்.

''ஆதியில் மகிஷாசுரனை வதம் செய்த தேவி, அந்த தோஷம் நீங்க சிவபெருமானை நோக்கித் தவம் இருந்து, சிவபெருமானின் தரிசனமும் தோஷ நிவர்த்தியும் பெற்ற இடத்தில் கால ஓட்டத்தில் புற்றும், அதன் மேலாக ஒரு உடைமரமும் வளர்ந்தது.

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

பின்னாளில், ஆங்கிலேயர்கள் கன்னியாகுமரிக்கு புறவழிச்சாலை அமைக்க குலசேகரப்பட்டினத்தில் தேர்வு செய்திருந்த இடத்தில் இந்தப் புற்றும் மரமும் தடையாக இருக்கவே, மரத்தை வெட்ட முடிவெடுத்தனர். அப்படி மரத்தை வெட்டியபோது, எந்தக் கிளையை வெட்டினாலும் அதில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. சுற்றியிருந்தவர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றபோது, அங்கிருந்தவர் களில் ஒருவர் மரத்தின் அடிப்பகுதியை மற்றவர்களுக்குச் சுட்டிக் காட்டினார். அங்கே இறைவனின் முகமும், இறைவியின் முகமும் காணப்பட்டது. எனவே மக்கள் அந்தப் புற்றையே இறைவியாக பாவித்து வழிபடத் தொடங்கிவிட்டனர்.

ஒருநாள், அம்பாள் உபாசகரான மயிலாடி சுப்பையா ஸ்தபதி கனவில் தோன்றிய அம்பாள், பஞ்சலிங்கபுரம் மலையில் இருந்து கல் எடுத்து, கொட்டாரம் என்ற இடத்தில் வைத்து, சுவாமி மற்றும் அம்பாள் சிலைகளைச் செய்யுமாறு உத்தரவு கொடுத்தாள். எந்த ஊருக்கு என்று அந்த ஸ்தபதிக்குத் தெரியாது. புற்றின் மேலாக ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மன் சிலைகளை பிரதிஷ்டை செய்ய விரும்பிய மக்கள், மயிலாடி சுப்பையா ஸ்தபதியிடம் சென்றார்கள். அவர் களைப் பார்த்ததுமே அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, 'உங்கள் ஊருக்கான சிலைகள் தயாராக இருக்கின்றன. எடுத்துச் செல்லுங்கள்’ என்று கூறிவிட்டார். இதோ, இப்போது நாம் தரிசிக்கும் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் திருவுருவங்கள் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது இப்படித்தான்!''

ஸ்ரீமகராஜ சுவாமிகள் தொடர்ந்து,

''சுமார் 50 வருஷத்துக்கு முன்பு இந்த ஊரில் இருந்த சேதுப்பிள்ளை என்பவரும், அவருடைய செட்டியார் நண்பர் ஒருவரும் சேர்ந்துதான் குலசேகரப்பட்டினத்தில் தசரா விழாவைத் தொடங்கி வைத்தனர். ஆரம்பத்தில் சில நூறு பேருடன் தொடங்கிய தசரா விழா இன்றைக்கு பல லட்சம் பக்தர்கள் கூடும் விழாவாகக் கோலா கலமாக நடைபெறுகிறது'' என்றார்.

தொடர்ந்து பக்தர்கள் வேஷம் போட்டுக் கொண்டு வருவதன் தாத்பர்யம் பற்றி கேட்டோம்.

''மக்கள் தங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனாலோ அல்லது ஏதாவது கோரிக்கை நிறைவேற வேண்டும் என்றாலோ, குலசை முத்தாரம்மனிடம் வேண்டுதல் வைத்து பலித்துவிட்டால், தங்கள் மனதில் என்ன வேஷம் கட்ட வேண்டும் என்று தோன்றுகிறதோ அந்த வேஷத்தில் தொடர்ந்து மூன்று வருஷம் தசரா அன்று அம்பிகையை வந்து தரிசித்து வணங்குவார்கள். மூன்று வருஷத்துக்குப் பிறகும் வேஷம் கட்டிக்கொண்டு வர விரும்பினால், அம்பாள் சந்நிதியில் பூப்போட்டு உத்தரவு கிடைத்த பிறகுதான், என்ன வேஷம் வருகிறதோ அந்த வேஷத்தில் அம்பாளை தரிசிக்க வரலாம்.

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

காளி வேஷம் உட்பட எந்த வேஷமாக இருந்தாலும், காப்பு கட்டிக்கொண்டு, விரதம் இருந்து ஒரு தபஸ்வியைப் போலக் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். வேண்டுதல் எதுவும் இல்லாமல் இப்படி காப்பு கட்டி, விரதம் இருந்து வேஷம் கட்டிக்கொண்டு வரும் பக்தர்களும் இருக்கவே செய்கிறார்கள். சுற்றுப்புற கிராமங்களில் தசராக் குழுக்கள் அமைத்துக்கொண்டு இப்படி வேஷம் கட்டிக்கொண்டு வருவதும் உண்டு. காளி வேஷம் தரித்து வருவதற்கு 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குள் உள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை'' என்றார்.

பின்னர் கடற்கரையை நோக்கிச் சென்றோம். கடலின் அலைகளைக்கூட எண்ணிவிடலாம்; ஆனால் அங்கே குவிந்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கையை எண்ணவேமுடியாது எனும்படி எங்கெங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. காலையிலிருந்தே மழை லேசாகப் பெய்து கொண்டிருந்தாலும் யாரும் அதை சட்டை செய்வதுபோல் தெரியவில்லை. இடியே விழுந்தாலும் சரி, நள்ளிரவு நடக்கப்போகும் சூரசம்ஹாரத்தைப் பார்க்காமல் கிளம்புவதில்லை என்ற உறுதி அங்கிருந்தவர்களின் முகங்களில் பிரதிபலித்ததை நம்மால் காண முடிந்தது.

மாலைப் பொழுது முடிந்து இரவு நெருங்க நெருங்க பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. இரவு 10 மணிக்கு மேல் அன்னை முத்தாரம்மன் சூரசம்ஹாரம் என்னும் தன் உன்னதக் கடமையை நிறைவேற்ற கடற்கரைக்கு எழுந்தருளுகிறாள்.

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

சரியாக நள்ளிரவு 12 மணி!

கடற்கரையில் சூரனுடன் போரிட வந்த அன்னையிடம் இருக்கும் சூலத்தை எடுத்துக்கொள்ளும் தலைமை அர்ச்சகர், தன்னை அம்பிகையாக பாவித்துக்கொண்டு மகிஷனை சம்ஹரிக்க ஆவேசமாகச் செல்கிறார். அன்னையை ஏமாற்ற எண்ணியவன் போல் அசுரன் முதலில் சூரனாக முகம் காட்ட, அம்பிகை அவனை வதம் செய்கிறாள். சூரனின் முகம் சரிந்த இடத்தில் சிம்மத்தின் முகம் தோன்ற, அம்பிகை அதையும் வீழ்த்துகிறாள். அப்படியும் அவன் ஓயவில்லை. அதுவரை பெற்றிருந்த மகிஷனின் கோலத்தில் தோன்ற, அம்பிகை அவனையும் வீழ்த்துகிறாள். தன்னுடைய சுய உருவான மகிஷாசுரனின் தோற்றத்தில் எருமைத் தலையுடன் அவன் அம்பிகையுடன் போரிட்ட வேளையில், பூர்வாசிரமத் தவப்பயனாய் அவன் அம்பாளின் அருளினால் ஞானம் பெற்று, ஞானத்தின் சின்னமான சேவலின் வடிவம் கொண்டான். மாயை அகன்று ஞானம் பெற்ற நிலையில் அவன் அன்னையால் சம்ஹரிக்கப்பட்டு, அம்பிகையின் திருவடிகளை அடைந்தான்.

மைசூரில் நடைபெறும் விழா, தர்பார் விழா என்றால், இங்கே நம் குலசேகரப் பட்டினத்தில் நடைபெறும் தசரா விழாவானது தவக்கோலம் கொண்டு, விரதம் அனுஷ்டித்துக் கொண்டாடப்படும் பக்திப் பெருவிழா!

மகிஷாசுரன் மாய வடிவங்களில் அம்பாளுடன் போரிட்டபோது, அவனால் அம்பிகையின் அண்டமெல்லாம் நிறைந்திருக்கும் சக்தியை, அருள்திறனைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தன் இயல்பான வடிவில் அன்னையை எதிர்கொண்டு போரிட்டபோது, ஞானம் பெற்று ஆட்கொள்ளப்பட்டான். அதுபோல், நாமும் நம் மனத்தை மறைத்திருக்கும் மாயைகளைக் களைந்து, நமது உண்மையான இயல்புடன் அம்பிகையின் திருவடிகளைச் சரண் அடைந்தால், தாயினும் சாலப் பரிந்து நம்மைக் காப்பாற்றி, நம்மை நல்வழியில் நடத்திச்செல்வாள் என்பது சத்திய சாசுவதமான உண்மை!

படங்கள்: எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம்