Election bannerElection banner
Published:Updated:

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

பிறந்த வேளை (லக்னம்), நட்சத்திர பாதம் (சந்திரன்) இவை இரண்டும் சிம்ம ராசியில் இருக்கும் தறுவாயில், குருவின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், அரசனின் மனைவியாக விளங்குவாள். அரச சுகபோகங்களை உரிமையுடன் சுவைத்து மகிழும் பேறு பெற்று விளங்குவாள் என்கிறது ஜோதிடம் (ந்ருபவதூ).

முடியரசு மறைந்துவிட்ட இந்நாளில் இந்த தகவல் பொருத்தமாக இருக்காது. பண்டைய நாட்களில் இருந்த சமுதாய அமைப்பின் அடிப்படையில் சொல்லப்பட்டதால், தற்காலச் சூழலுக்கு இந்த பலன்கள் பொருந்தாது என்று எண்ணத் தோன்றும். ஆனால் முடியரசு காலத்தில் மன்னன் என்றால், தற்காலத்தில் அமைச்சர்கள்! மற்றபடி, அனுபவம் இரண்டும் ஒன்றுதான். இன்றைய மந்திரியின் மனைவி, அன்றைய அரசிக்கு இணையான சுகபோகங்களை அனுபவிப்பார். ஆக, சுகபோகங்களின் எல்லையை வரையறுக்கவே, 'அரசனின் மனைவி’ என்று குறிப்பிடுகிறது ஜோதிடம்.

அரசிக்கு உரிய சுகபோகம்...

ஜனாதிபதி, கவர்னர்கள், வெளிநாட்டு தூதர்கள், அரசாங்க பிரதிநிதிகள், அரசு இயந்திரத்தை இயக்குபவர்கள் ஆகியோர் இதில் அடங்குவார்கள். சுகபோக அளவுகோலின்படி அவர்களின் மனைவியரும் இதில் அடங்குவர். அரசு அதிகாரம் பலபேரிடம் பகிர்ந்தளிக்கப்பட்டு, பலபேருக்கு அரச சுகபோகங்கள் கிடைக்கும்படி செய்திருக்கிறது குடியரசு. சட்டத்தை உருவாக்குவதில் திரைமறைவில் பங்குபெறும் பெரும் செல்வந்தர்களின் மனைவிமார்களும் இதில் அடங்குவர்.

'எந்தவித பொறுப்பும் இல்லாமல் சுதந்திரமாக, மன தடுமாற்றம் இன்றி நம்பிக்கையுடன் உலக சுகங்களை உண்மையாகச் சுவைத்து உணர்வாள்’ என்ற கருத்தில், 'அரசனின் மனைவி’  (ந்ருபவதூ) என்கிறது ஜோதிடம். மந்திரி பதவி நழுவினால், அத்தனையும் மறைந்துவிடும். ஆனால், அவளுக்கு (மனைவிக்கு)  அரசபோக அனுபவத்தை நிலைநாட்டியாக வேண்டும் என்பதால்,  அவரது பதவியிழப்பை இல்லாமல் செய்துவிடும் குருவின் த்ரிம்சாம்சகம். ஆனால், அவளை மந்திரியாக்காது. மந்திரி பதவி ஏற்றவள், அதைத் தக்கவைக்கும் முயற்சியில் முனைப்போடு இருக்கவேண்டிய நிர்பந்தம் இருப்பதால், அவளுடைய மனமானது சுகபோகத்தை சுவைத்து மகிழும் நிலையில் இருக்காது.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

அரசனாக வாழக் கூடாது; அரசகுமாரனாக இருக்கவேண்டும். அப்போதுதான் பொறுப்பற்ற முழு சுதந்திரத்தின் மகிழ்ச்சியை உணர இயலும். தங்களது வாரிசுகளை மந்திரியாக்கும் எண்ணம் பல இடங்களில் வலுத்திருப்பதால், முடியரசின் கோட்பாடுகள் குடியரசிலும் தொடருவதைக் காணமுடிகிறது. சிந்தனை மாற்றம் புது நடைமுறைகளை ஏற்கவைத்தாலும், அதற்கு அடிப்படையான மனப் போக்கை வரையறுக்கும் ஜோதிடத்துக்கு எப்போதும் தோல்வி இருக்காது. சமுதாய மாற்றத்துக்கு ஏற்றவாறு பலனை வரையறுக்கும் தகுதி ஜோதிடர்களுக்கு இருக்கவேண்டும். செயல்பாடுகளில் மாற்றம் இருந்தாலும், அதற்கு உகந்த சிந்தனையை ஏற்படுத்தும் மனநிலையை ஜோதிடம் சுட்டிக்காட்டுவதால், அதன் தகவல்கள் என்றும் உண்மையாகவே இருக்கும். கிரகங்களுடன் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், ஆராய்ச்சி யானது மனப்பூர்வமாக வளர்ந்தால் வெற்றியை எட்டலாம்.

சில நம்பிக்கைகள்...

ஜாதகருக்கு குரு பலம் இருந்தால் திருமணம் நிச்சயமாக நிறைவேறும் என்ற அசையாத நம்பிக்கை சிலரிடம் உண்டு. 'தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற சொல்வழக்கை நம்பும் மக்களும் உண்டு. 'நல்லவை நிகழ, தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று சொன்னதை, 'கல்யாணத்துக்கு வழி பிறக்கும்’ என்பதாக எடுத்துக் கொள்பவர்களும் உண்டு. 'கல்யாணம்’ என்ற சொல்லுக்கு மங்களம், சுபம் என்று பொருள். திருமணமும் மங்களமானதுசுபமானது என்பதால் நம்மவர்கள் கல்யாணம் என்ற சொல்லுக்கு 'திருமணம்’ என்ற பொருளை மட்டுமே ஏற்றுக்கொண்டுள்ளார்கள். வட இந்தியர்கள் கல்யாணமானவளை 'கல்யாண் ஹோ’ என்று வாழ்த்துவது உண்டு. 'நித்ய கல்யாண ஸமிருத்திரஸ்து’ அதாவது 'தினமும் கல்யாணம் வளரட்டும்’ என்று புரோகிதர்கள் வாழ்த்துவது உண்டு.

ஜாதகத்தில் சந்திர லக்னத்தில் இருந்து 2,5,7,9,11ல் குரு வீற்றிருந்தால், நமது செயல்பாடுகளுக்கு ஒத்துழைத்து, வெற்றிக்கு வழிவகுப்பார் என்று சொல்லும் ஜோதிடம். ஒவ்வொரு 12 வருடங்களிலும் இந்த ஐந்து இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் குரு நிச்சயமாக இருப்பார். இளமை திருமணத்துக்கு தயாராக இருக்கும் நிலையில் குருவின் ஒத்துழைப்பு வெற்றிக்கு வழிகோலும் என்று பொருள். வெப்பக் கிரகங்களின் தொடர்பில் தனது இயல்பை முற்றிலும் மாற்றிக்கொள்ளாத கிரகமாக குருவை சித்திரிக்கிறது ஜோதிடம் (நிசர்க சுபன்). சுக்கிரனும், புதனும், சந்திரனும் வெப்பக்கிரகத்தின் தொடர்பில் தனது இயல்பை இழந்துவிடுவது உண்டு!

புராணப் பெண்மணிகள்

'நிருபவதூ’ என்ற சொல்லின்படி  அரசனின் மனைவி, அரசி என்ற பெருமையும் உண்டு. சுகபோகங்களைப் பெறுவதுடன், அரசனுக்கு நிகரான பெருமையைப் பெற்று விளங்குவாள். நாட்டில் அங்கீகாரம் பெற்று புகழோடு சிறப்புப் பெறுவாள். அரசவையில் அரசனின் அருகில் சரிசமமாக அமர்ந்து அவை நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பெருமையைப் பெற்று பெருமிதம் அடைவதும் உண்டு. தசரதனின் மனைவி கைகேயி போரிலும் அரசனோடு இணைந்து செயல்பட்டதை ராமாயணம் விளக்கும். சந்தனுவின் சத்யவதி, நளனின் தமயந்தி, சத்யவானின் சாவித்திரி, அஜனின் இந்துமதி, திருதராஷ்டிரரின் காந்தாரி ஆகியோர்  'ந்ருபவதூ’ல்  அடங்குவார்கள்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

அரசனின் மனைவியாக விளங்கி, ராஜமாதாவாக மாறி, பாண்டவர் களையும் கௌரவர்களையும் முறையே குந்தியும் காந்தாரியும் வழிநடத்திச் சென்றனர் என்ற சரித்திரத் தகவல் உண்டு. ஆண்மை பெண்மையை அடிமைப்படுத்தும் வரலாறு பண்டைய நாளில் இல்லை.  கௌசல்யையின் புதல்வன், குந்தியின்  மகன் (கௌஸல்யா ஸுப்ரஜா, கௌந்தேய...) என்பதில் பெருமிதம் பெற்றார்கள். கேகய தேசத்து அரச குமாரி கைகேயி, மிதிலையின் அரச குமாரி மைதிலி என்ற வழக்குகள் அவர்களின் தனித்தன்மைக்கு உதாரணம். இந்த மாதரசிகளும் 'ந்ருபவதூ’ல் அடங்கு வார்கள். இந்துமதியும் தமயந்தியும் தாங்களாகவே தங்களின் கணவனை தேர்ந்தெடுத்தனர். அரசபோகத்துடன் நிற்காமல் அரசை வழி நடத்திச் செல்வதில் தனது பங்கை அளிக்கும் திறமையும் அவர்களிடம் இருந்தது. அத்தகைய பெருமையை குருவின் த்ரிம்சாம்சகம் சுட்டிக்காட்டும்.

இருவரும் சேர்ந்து குழந்தை பெற்றோம். ஆனால், அந்த குழந்தையை அறிமுகம் செய்ய ஆணின் பெயரை மட்டும் பயன்படுத்துவது தகாது என்ற புதுச் சிந்தனையாளர்களில் சில பெண்மணிகளின் குற்றச்சாட்டு சரியல்ல என்பது தெளிவு.

வராஹமிஹிரர் தரும் விளக்கம்

சமீபகாலம் வரையிலும் கேரளத்தில் ஒருசாரர், தாயை வைத்தே குழந்தையை அறிமுகம் செய்து வந்தார்கள் (மருமக்கத் தாயம் கடைப்பிடித்தவர்களிடம் அது இயல்பாக இருந்தது). வயலில் விதைத்த விதை, மழை வெள்ளத்தால் அடுத்த வயலில் இணைந்து அங்கு வளரும் பயிருக்கு, அந்த வயலின் உரிமையாளர் சொந்தம் கொண்டாடலாம் என்று பழைய அறநூல்கள் வெளிப்படுத்தும் (ஓசுவாதாஹ்ருதம் பீஜம்...). குழந்தையை ஈன்றெடுத்தவளுக்கு குழந்தை சொந்தம் என்று சொல்லும். ஆண்மைக்கு மட்டும் பெருமை அளிக்காமல் பெண்மைக்கு உரிய பங்கை அளிப்பதில் பண்டைய சட்டதிட்டங்கள் முனைப்பாக இருந்தன. நம் நாட்டிலும் பெண்மை அரசாட்சி புரிந்திருக்கிறது. அரச சுகபோகங்களோடு நிற்காமல், அரசை வழிநடத்திச் சென்றவர்களும் இருந்திருக்கிறார்கள்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

ராசியிலும், த்ரேக்காணத்திலும், ஹோரையிலும் வெப்பக் கிரகங்களின் தொடர்பு இருந்தாலும், அவற்றின் தாக்கத்தைப் பின்னுக்குத் தள்ளி குருவின் த்ரிம்சாம்சகமானது, தன்னில் பிறப்பைத் தழுவிய பெண்ணை வீராங்கனையாக உருவாக்கி உலகுக்கு அளிக்கிறது என்று வராஹமிஹிரர் விளக்குகிறார். முதல் 5 செவ்வாய், இரண்டாவது 5 சனி... இப்படி, 10வது பாகையைத் தாண்டி எட்டு பாகைகள் வரையிலும் குருவின் த்ரிம்சாம்சகம் பரவியிருக்கும். 10 பாகையில் இருந்து 20 பாகை வரை 2வது த்ரேக்காணம். அதற்கு உடையவன் குரு. முதல் 15 பாகை  சூரியனின் பங்கு ஹோரையில் இருக் கும். அதற்கு மேல் 3 பாகை - சந்திரனின் தொடர்பு உண்டு. ஹோரையிலும், த்ரேக்காணத்திலும் முழுமையாக வெப்பக்கிரகம் இல்லாமல் தட்பத்தின் தொடர்பு இருப்பதால், தட்பக்கிரகமான குருவின் த்ரிம்சாம்சகம் வலுப்பெற்று, அதில் பிறந்தவளை உலகுக்கு  உதவும் உத்தமியாக உருவாக்கியது என்று சொல்லலாம். 'குழந்தையை ஈன்றெடுப்பது மற்றும் உடலுறுப்புகளில் சில மாற்றங்களைத் தவிர மற்ற பலன்கள் அத்தனையும் ஆண்மை  பெண்மை என்ற பாகுபாடின்றி பொருந்தும்’ என்ற வராஹமிஹிரரின் கூற்று ஜோதிடத்தின் பரந்துவிரிந்த கண்ணோட்டத்தின் வெளிப்பாடு (யத்யத்பவே...).

முற்பிறவியில் சேமித்தவை...

முற்பிறவியில் சேமித்த நன்மையும் தீமையும் இருவரிடமும் சமமாக இருக்கும்போது, ஜோதிடத்தால் ஆண்மை, பெண்மை என்ற பாகுபாட்டுடன் பலன் சொல்ல இயலாது. போர்க்களத்தில் காலை இழந்த 'அபாலா’வும் உண்டு, பாரதப் போரில் எதிரியைப் பந்தாட வந்த சிகண்டியும் உண்டு. ஆண்களின் வாசனையற்ற பெண்மையின் குழாம் மகிஷாசுரமர்த்தினியை தலைவியாக வைத்து அரக்கர் குலத்தை அழித்த வரலாறை மார்க்கண்டேய புராணம் விளக்கும். பிற்பாடு வந்த ஆரவல்லி, சூரவல்லியும் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஆண்களை ஈன்றெடுப்பவள் பெண். வேத மாதா, பாரத மாதா என்றுதான் சொல்ல விரும்புவோம். 'அக்னி  சோமன் என்ற இரு தேவதைகளின் இணைப்பு உலகம்’ என்கிறது வேதம். வெப்பமும் குளிர்ச்சியும் இணைந்து செயல்படும்போது, உலக இயக்கம் தடையின்றி விளங்குகிறது என்றும் விளக்குகிறது (அக்னிஷேமாத்மகம் ஜகத்). வெட்பதட்பக் கிரகங்களின் விகிதாசார இணைப்புதான், அனைத்து விதமான மாறுபட்ட பலன்களை விளக்குவதற்கான ஆதாரம் என்கிறது ஜோதிடம். கொங்கையில் தென்படும் பிணி (ஸ்தனவித்ரதி) கர்ப்பப் பிணி ஆகியவற்றைத் தவிர, மற்ற பிணிகள் பொதுவானவை என்கிறது ஆயுர்வேதம். இருவரின் ஆன்மாவும் (உடலை இயக்கும் சக்தி) மனமும் (சேமித்த நல்லது கெட்டது வாசனையின் அளவு) ஒன்றுதான். அதன் அடிப்படையில் தோன்றும் பிணிகள் இருவரிலும் சமம். மகிழ்ச்சியை உணருவதிலும் மாறுபாடு தென்படாது. இப்படி, இயற்கையின் பங்கு சமமாக இருக்கும்போது, அதன் கண்ணோட்டமானது மேல் கீழாக இருப்பது, சாத்திரங்களின் பங்களிப்பு அல்ல. அது, பிற்பாடு வந்தவர்களின் சிந்தனை மாற்றத்தின் தவறான கணிப்பு. 'தாயை வணங்கு’ என்று சொன்ன வேதம், அதன் தரத்தை குறைந்ததாகப் பார்க்காது (மாத்ருதேவோபவ).

இப்படியிருக்க, வராஹமிஹிரரின் கூற்றை ஒதுக்கி, சொல் வளத்தால் திசை திருப்பிவிடும் முயற்சியை ஜோதிடர்கள் கையாளுவது, சாஸ்திரத்துக்கும் மக்களுக்கும் செய்யும் சேவை ஆகாது. காலத்துக்குப் பரிணாமம் என்று பெயர் உண்டு. இதற்கு, மாறுபாடு உடையது என்று பொருள். மாறுபாட்டை அது சான்றோடு விளக்கும்போது, தங்களது சிந்தனை மாறுபாட்டை அதில் இணைப்பது தவறு. கண்ணுக்குப் புலப்படாத கர்ம வினையை வெட்ப தட்பகிரகங்களின் ஒத்துழைப்பில் அலசி ஆராய்ந்து விளக்க வேண்டிய பொறுப்பு இருக்க வேண்டும்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

குருபகவானின் தனித்தன்மை

'குருவின் பார்வை சேர்க்கை, கேந்திரம் (1,4,7.10), த்ரிகோணம் (1,5,9) ஆகியவற்றில் அமர்ந்திருப்பது அத்தனையும் நன்மை விளைவிப்பதில் முற்றுப்பெறும்’ என்ற தகுதி மற்ற தட்பக்கிரகங்களுக்கு கிடையாது. த்ரிம்சாம்சகத்தில் இணைந்த குரு, பல வெப்பக் கிரகங்களின் சேர்க்கை இருந்தாலும், அவற்றின் இணைப்பிலும் நல்லதையே உணரவைக்கும் பெருமை பெற்றது. இது, குருவின் தனித் தகுதி. விண்வெளியில் மேலே சனியும், கீழே செவ்வாயும் தங்களின் சுற்றுவட்ட பாதைகளை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு வெப்பக் கிரகங்களின் தாக்கத்தில் கிடுக்கிப்பிடியாக மாட்டிக் கொண்டாலும், தனது தனித்தன்மையை தக்கவைக்கும் பெருமை பெற்றது என்பதால் ஜோதிடத்தில் தனி இடம் பிடித்துவிட்டது குரு. இக்கட்டான சூழலில் பெரும் துயரத்தில் ஆழ்ந்த வனுக்கு, அதிலிருந்து தாக்குப்பிடித்து வெளிவரும் திறமையை குருவின் தொடர்பு உருவாக்கிவிடும்.

இங்கு, ராசி முழுவதும் வெப்பக் கிரகத்தின் ஆதிக்யம் உண்டு. ஹோரையில் 5 பாகை வரை சூரியனின் தாக்கம் இருக்கும். 'சதுர்த்தாம்சம், ஸப்தமாம்சம், நவாம்சம், தசாம்சம், த்வாதசாம்சம் என்ற பிரிவுகளின் வெப்பக்கிரக தாக்கம் தென்பட்டாலும், அதை ஒட்டுமொத்தமாக முறியடித்து, தனது திறமையில் பிறந்தவளை உத்தமியாக்கும் பெருமை பெற்றிருக் கிறார் குரு’ என்கிறது ஜோதிடம். முற்பிறவியில் சேமித்த நல்லவற்றின் பலனை பிறக்கும் போதே இணைத்து விடுகிறது. வாழ்வில் சேமித்த நல்லவற்றின் பலனை முழுமையாக உணரவைப்பதில், குரு முதலிடம் பெறுகிறார்.

குரு, தேவகுரு பிரஹஸ்பதி, தக்ஷிணா மூர்த்தி  - இப்படியெல்லாம் தொடர்பை ஒட்டவைத்து தெய்வமாக மாறி அருள்வார் என்கிற விளக்கங்களில் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை. சூரியன், சந்திரன் எனும் இரண்டு ஒளிமயமான கிரகங்களின் தாக்கத்தில் வலுப்பெற்று, மற்ற ஐந்து கிரஹங்களும் தங்களின் செயல்பாட்டில் வெற்றி பெறுவர் என்ற ஜோதிட விளக்கத்தை கவனிக்க வேண்டும். தாரா கிரகங்களான ஐந்தும் இருண்ட கிரகங்களான இரண்டும் சரியாக செயல்பட, ஒளி கிரகங்களான சூரியன்  - சந்திரன் ஆகியோரது தொடர்பு தேவை.

- சிந்திப்போம்...

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு