Published:Updated:

‘சொல்லிக் கொடுக்கறதுதான் சந்தோஷம்!’

என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே..!சாருகேசி

‘சொல்லிக் கொடுக்கறதுதான் சந்தோஷம்!’

என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதே..!சாருகேசி

Published:Updated:

சென்னை மயிலாப்பூர் சம்ஸ்கிருத கல்லூரி வளாகத்தில் உள்ள எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் வீட்டுக்கு வராத மகான்களோ மடாதிபதிகளோ இல்லை என்றே சொல்லலாம். மகா பெரியவா முதல் அகோபில மடம், மாத்வ மடம், சிருங்கேரி மடம் என அத்தனை மடாதிபதிகளும் வந்திருக்கிறார்கள். ஹால் முழுக்கக் கடவுள் படங்கள், சாஸ்திரிகளின் அறை முழுக்க அவருக்கு வழங்கப்பட்ட பட்டங்கள், விருதுகள். மகா மகோபாத்யாய எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்கு இந்த வருட சமஸ்கிருத துறைக்கான ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டதில் வியப்பேதும் இல்லை! அவருக்கு, சுவாமி ஓங்காராநந்தா தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பல அறிஞர்கள் வாழ்த்திப் பேசினார்கள்.

'ஓங்காராநந்த சுவாமிகள், என் தந்தை முல்லைவாசல் ராஜசேகர கனபாடிகளிடம் வேதாந்தம் படித்தார். என் தந்தையார் பேரூரில் இருக்கிறபோது கீதை பிரவசனம் பண்ணுவார்'' என்று பழசையெல்லாம் நினைவில் வைத்திருந்து பேசும் கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகளுக்கு வயது 70.

''மேடைல கருணாகராச்சார்யரோட சம்ஸ்கிருதக் கவிதையை கவனிச்சீங்களா? ரொம்பப் பிரமாதம். என்ன பாண்டித்யம் அவருக்கு!'' என்று மனம் திறந்து பாராட்டு கிறார் சாஸ்திரிகள். அப்போது அவரின் மகனும், மும்பை ஐஐடியில் பேராசிரியராக பணிபுரிபவருமான ராமசுப்ரமணியன், கவிதைக்கான தமிழ் அர்த்தத்தை நமக்கு விளக்கிச் சொன்னார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'2005ம் வருஷம்,  திருப்பதியில் உள்ள ராஷ்ட்ரீய சம்ஸ்கிருத சமஸ்தான், எனக்கு மகா மகோபாத்யாய என்கிற பட்டத்தைத் தந்துச்சு. இதுல ஆச்சரியம் என்னன்னா... அப்பவும்  ஓங்காராநந்தாதான் பாராட்டு விழாவுக்குத் தலைமை வகிச்சு பேசினார். இப்பவும் அவர்தான் தலைமை வகிச்சார். என்ன பந்தமோ எனக்கும் அவருக்கும்?!'' என்று சொல்லிப் பூரிக்கிறார் சாஸ்திரிகள்.

‘சொல்லிக் கொடுக்கறதுதான் சந்தோஷம்!’

தந்தையிடம், குருகுலவாச முறைப்படி, பதினாலரை வயதுவரை கல்வி. தந்தை ஊர் ஊராக ராமாயணமும், பகவத் கீதை யும் பிரவசனம் செய்து வந்தார்.  பின்னர் 1959ல் சம்ஸ்கிருதக் கல்லூரியில் சேர்ந்து, வேதாந்த சிரோமணி பட்டம் கிடைத்தது.  அதுமட்டுமா? மாநிலத்தில் முதல் ராங்க், கூடவே தங்கப்பதக்கம்!

''66ம் வருஷம், மேட்டூர் ஓரியண்டல் ஹைஸ்கூல்ல ஆசிரியர் பணி. அப்படியே பி.ஏ. முடிச்சேன். அப்புறம் ஆறு மாசம் கழிச்சு, திருமலை திருப்பதி வேத வித்யா கேந்திராலய துணைமுதல்வர் பொறுப்பு. அது காஞ்சி மகாபெரியவா உத்தரவு. அங்கே போய்  வேலை பார்த்தேன். 76ம் வருஷம், வேங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்துல எம்.ஏ. இலக்கியம். அதுக்குப் பிறகு, சம்ஸ்கிருதக் கல்லூரில பேராசிரியராவும் கல்லூரி முதல்வராவும்  வேலை. நடுவுல, சென்னைப் பல்கலைக்கழகத்துல பிஹெச்.டி. பண்ணினேன். முக்கியமா, கிருஷ்ண யஜுர்வேத பாஷ்யத்தை, பதினாலு செமஸ்டர் எழுதி, பாஸ் பண்ணி, அதனால வேத பாஷ்ய ரத்னம் அப்படீங்கற பட்டம் கிடைச்சுது. காஞ்சி மகா பெரியவா முன்னிலைல, இந்த பட்டமளிப்பு விழா நடந்தது.  என் வாழ்க்கைல கிடைச்ச எல்லாப் பட்டங்களையும் விட, இதைத்தான் ரொம்ப கௌரவமா, உயர்ந்ததா நினைக்கிறேன்''என்று நெகிழ்ந்து சொல்கிறார் சாஸ்திரிகள்.

சாஸ்திரிகளின் மனைவி பிரேமாவும் மெத்தப் படித்தவர். தமிழ், சம்ஸ்கிருதம், ஹிந்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, மற்றும் ஆங்கிலம் என எட்டு மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.  

இத்தனை உயரங்களும் மரியாதைகளும் கிடைத்தாலும் எதையும் புத்திக்குள் ஏற்றிக் கொள்ளவில்லை கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். மாறாக, தான் கற்றதை பலரும் கற்றறிய வேண்டும் என்கிற ஆவலுடனும் கனவுடனும் வேத பாஷ்ய வகுப்புகளை நடத்தி, அதன் மூலம் சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள், வேத பாஷ்ய ரத்னம் எனும் பட்டம் பெற்றிருக்கிறார்கள். இப்போதும் அவரின் கற்பிக்கிற ஆர்வம் குறையவில்லை. ஆறு பேருக்கு வேத பாஷ்ய வகுப்பு, சம்ஸ்கிருதம், ஹிந்தி எனச் சொல்லிக் கொடுத்து வருகிறார்.

''காலைல அஞ்சேகால்லேருந்து ஏழேகால் மணி வரைக்கும் வேத வகுப்பு எடுக்கறேன். இது இலவச வகுப்புதான். பெரியவர்கள், குழந்தைகள்னு பதினஞ்சு பேர் வரைக்கும் படிக்கிறாங்க. கத்துக்கறதுல அவங்களுக்கு அப்படியொரு ஆர்வம். கத்துக் கொடுக்கறதுல எனக்கு அலாதியான ஈடுபாடு. அவ்ளோதான்'' என்று சொல்லிச் சிரிக்கிறார் சாஸ்திரிகள்.

பகவத் கீதை, ராமாயணம், விவேக சூடா மணி என்று சனாதன தர்ம சமிதி சார்பில் வாரத்தில் மூன்று நாட்கள் சொற்பொழிவு செய்து வருவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்.

''கடந்த பத்து வருஷமா, சாதுர்மாஸ்ய காலத்துல, காஞ்சிபுரத்துக்கு தினமும் போய், மடத்துல வேதாந்த பாடம் நடத்திக் கொடுத்துட்டு வந்துட்டிருக் கேன். அந்த வகுப்புக்கு காஞ்சி சங்கராச்சார்யர்களும் வருவாங்க. இதெல்லாம், இந்த ஜென்மத்தில் கிடைக்கற பூரிப்புகள்... சந்தோஷங்கள்'' என்று சொல்லும் சாஸ்திரிகள் வீட்டில் இரண்டு விழாக்கள் அமர்க்களப்படும். மே மாதத்தில் சங்கரருக்கு விழா நடத்துவார். அப்போது விழாவில் கலந்துகொள்கிற அனைவருக்கும் பிரமாதமான விருந்தே நடைபெறுமாம்.

‘சொல்லிக் கொடுக்கறதுதான் சந்தோஷம்!’

அடுத்து, நவராத்திரி வைபவ விழா. அறை கொள்ளாத அளவுக்கு படிகளும் படிகள் கொள்ளாத அளவுக்கு பொம்மைகளும் இடம் பெற்றிருக்குமாம். தினமும் பாராயணம் நடந்தபடி இருக்கும். அதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.  

'காலை முதல் இரவு வரை வேத பாராயண, சம்ஸ்கிருத வகுப்புகள், சொற்பொழிவுகள், அப்பாவிடம் சம்ஸ்கிருதம் படிக்கும் கம்பெனி நிர்வாகிகள், அதிகாரிகள் என்று சந்தேகம் கேட்டு வருகிறவர்களுக்கு பதில்கள். ஆனால் அத்தனையும் சமாளிப்பார் அப்பா'' என்று பெருமிதத்துடன் நம்மிடம் தெரிவித்தார் அவரின் மைந்தன் ராமசுப்ரமணியன்.

'படிக்கறதும் படிச்சதை பலர்கிட்ட பகிர்ந்துக்கறதும் உசத்தியான விஷயங் கள். இப்பவும் படிச்சுக்கிட்டே இருக்கேன். படிச்சதையெல்லாம் மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுத்துக்கிட்டே இருக்கேன். சாஸ்திரத்துக்காகவும் வேதத்துக்காகவும் தன் வாழ்க்கையையே அர்ப்பணிச்சவர் என் அப்பா. எல்லாப் பிள்ளைகளும் அப்பாவைப் போல வரணும்னுதானே ஆசைப்படுவாங்க. நானும் அப்படித் தான்...'' என்று சொல்லிவிட்டு, குழந்தை போல் கலகலவெனச் சிரிக்கிறார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்.

தந்தைக்கும் குருவுக்கும் கடவுளுக்கு மான கடமைகளைச் செவ்வனே செய்யச் சொல்கிறது சாஸ்திரம். அதை வாழ்ந்து காட்டியபடி நமக்கெல்லாம் உணர்த்துகிறார் சாஸ்திரிகள்.

படங்கள்: தே.தீட்ஷித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism