சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும் - நான்கிடத்தும்
நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர்.

- பொய்கையாழ்வார்

திருவேங்கடத்தில் நின்றான்; ஸ்ரீவைகுண்டத்தில் அமர்ந்தான்; திருவெஃகாவில் பள்ளிகொண்டான்; எப்போதும் பூக்கள் நிறைந்து காணப்படும் அகழிகளால் சூழப்பட்ட திருக்கோவிலூரிலோ நடந்தான். எம்பெருமானின் இச்செய்கைகளைக் கூறித் துதித்தால், நாம் நிற்கும்போதும், அமர்ந்திருக்கும்போதும், படுத்திருக்கும்போதும், ஏன்... நடக்கும்போதும் செய்யும் பாவங்கள் எல்லாம் தொலையும்; துன்பங்கள் நீங்கும் என்கிறார் ஆழ்வார்.

##~##
'எவனொருவன், கிருஷ்ண க்ஷேத்திரத்தில் இருக்கும் கோயில் விமானத்தை வெகு தூரத்தில் இருந்து தரிசிக்கிறானோ, அவன் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான்; ஸ்ரீதிரிவிக்ரமனை வழிபடுவோர் உத்தம கதியை அடைவர்’ என்கின்றன புராணங் களும் ஞானநூல்களும்.

உண்மைதான்... 'வெண்ணெய் உருகு முன்னே பெண்ணை பெருகும்’ என்பார்கள். அந்த ஜீவநதியாம் தென்பெண்ணை தாலாட்டும் திருக்கோவிலூரில் நுழைந்ததும்... கோவலூர் நாயகனை, கோகுலத்துக் கோவலனை தரிசிக்கப் போகிறோம் என்கிற உவப்பில், நம் உள்ளமும் உடலும் சேர்ந்தே அல்லவா உருகுகிறது!

அகத்தியரும், அர்ஜுனனும், சத்ரிய வதம் நிகழ்த்திய பாவம் நீங்க ஸ்ரீபரசுராமரும் தவம் செய்து தொழுத தலமல்லவா இது? அதுமட்டுமா... மலையமான் திருமுடிக்காரி ஆண்ட ஊர்; அதியமான் நெடுமான் அஞ்சி முற்றுகையிட்டு வென்ற ஊர்; பெரும்புலவர் கபிலர் முக்தி பெற்ற ஊர்; பல்லவரும் பாண்டியரும் விஜயநகர மன்னர்களும் போற்றிச்  சிறப்பித்த ஊர்... இப்படி சரித்திர சிறப்பும் உண்டே திருக்கோவிலூருக்கு!

விழுப்புரத்தில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கோவிலூர். ஆற்றுப்பாலம் கடந்ததும், கோபுர தரிசனம் சிலிர்ப்பூட்டுகிறது!

கிழக்கில்- பெரிய கோபுரம் 11 நிலைகளுடன் திகழ்கிறது. இதுதவிர கட்டை கோபுரம், கிழக்கு மற்றும் மேற்குப்புற ராஜ கோபுரங்கள், திருமங்கை மன்னன் கோபுரம், சொர்க்கவாசல் கோபுரம், கிளி கோபுரம்... என திரிவிக்ரமன் கோயிலுக்கு, மொத்தம் 7 கோபுரங்கள்.

பெரிய கோபுரத்தின் அருகில் ஸ்ரீஅனுமன் சந்நிதி (பெருமாளைச் சேவித்தபடி காட்சி தருகிறார்), கோபுர நுழைவு வாயிலில் ஸ்ரீமுனியப்பன், கோயிலின் எதிரில் கருட ஸ்தம்பத்தின் உச்சியில் கருடாழ்வார் ஆகியோரைத் தரிசிக்கலாம். கோயிலின் இடப் பக்கத்திலேயே ஸ்ரீஎம்பெருமானார் ஜீயர் மடம் உள்ளது. கோயிலை. இந்த ஜீயர் பரம்பரையினர் சிறந்த முறையில் நிர்வகித்து வருகிறார்கள்.

கோயிலுக்குள் நுழைந்தால், அதன் தோற்றமும் அமைதியும் பேரானந்தத்தில் ஆழ்த்துகின்றன. நமக்கு வலப்புறம் ஸ்ரீவேணுகோபாலன் சந்நிதி. ஆதியில் க்ஷேத்திராதிபதி இவர்தான் என்கின்றனர். சாளக்கிராம திருமேனியராய் ஸ்ரீபாமா- ருக்மிணி யுடன் அருளும் இந்த கோபாலனை, ரோகிணியில் வழிபடுவது சிறப்பு.

இவர் மட்டுமல்ல... கோயிலை வலம் வரும் போது ஸ்ரீபுஷ்பவல்லி தாயார், ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீராமன், ஸ்ரீவரதராஜர்... உள் பிராகாரத்தில் ஸ்ரீலட்சுமி நாராயணர், ஸ்ரீலட்சுமி வராகர், ஸ்ரீஆண்டாள், உடையவர், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், சேனை முதல்வர், மணவாள மாமுனிகள் ஆகியோரும் அருள்கின்றனர். அனைவரையும் வழிபட்டு, திரிவிக்கிரமனைத் தரிசிக்கச் செல்கிறோம்.

பாண்டிய மண்டபம், மகா மண்டபம் கடந்து அர்த்த மண்டபத்தை அடைகிறோம். இடப் புறத்தில் தனிச் சந்நிதியில் ஸ்ரீவிஷ்ணு துர்கை. வேறு வைணவத் தலங்களில் காண்பதற்கரிய தரிசனம். இங்குள்ள க்ஷேத்திராதிபதி கண்ணனின் சிறப்பறிந்து, விந்திய மலையிலிருந்து இங்கு வந்து, அவனுக்கு ரட்சகியாகத் திகழ்கிறாளாம் இந்த நாயகி! இதுகுறித்து... 'கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட...’ என திருநெடுந்தாண்டகத்தில் பாடுகிறார் திருமங்கையாழ்வார். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில், இந்த தேவிக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள், பக்தர்கள். இவளைத் தரிசிக்க, நமது விருப்பங்கள் நிறைவேறும். அர்த்த மண்டபத்தில் சகோதரனை யும் சகோதரியையும் ஒருசேர தரிசிக்கலாம் என்பது சிறப்பு!

ஸ்ரீதுர்கையை வணங்கிப் பணிந்து, வலம் சுற்றி வாமனரையும் வழிபட்டு வந்து, திரிவிக்கிரமன் சந்நிதியை நோக்கினால்... ஸ்ரீகர விமானத்தின் கீழ், இடக்காலை தரையில் ஊன்றி, வலது திருக்காலை உயரத் தூக்கி, அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீஉலகளந்த பெருமாள். 'திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்’ என்று பேயாழ்வாரும், 'பொற்புடைய மலையரையன் பணிய நின்ற பூங்கோவலூர் தொழுதும் போத நெஞ்சே’ என திருமங்கை மன்னனும் போற்றிப் பணிந்தது இந்தப் பேரழகைக் கண்டுதானே!

தசாவதாரம் திருத்தலங்கள்!

அடடே, அதென்ன... வழக்கத்துக்கு மாறாக வலக் கரத்தில் சங்கும் இடக்கரத்தில் சக்கரமு மாகத் திகழ்கிறார் ஸ்வாமி?! இது ஞானம் அருளும் திருக் கோலமாம்!

தூக்கிய திருவடியை பிரம்மன் ஆராதிக்க, இடது திருவடியில் அருகில் திருமகள், மகாபலி, அவருடைய மகன் நமச்சு மகாராஜா, சுக்ராச்சார்யர், மிருகண்டு முனிவர் - மித்ரவதி, கருடன் ஆகியோரும் உள்ளனர். தாரு (மரம்) திருமேனியராகத் திகழும் ஸ்வாமிக்கு ஆயனார், இடைகழி ஆயன் எனும் சிறப்புப் பெயர்களும் உண்டு.

அர்ச்சகர் தீபாராதனை காட்ட... தீபவொளியில் பிரகாசிக்கும் அந்த பரஞ்ஜோதியின் திருமுகத்தைத் தரிசிக்கும்போது, அற்புதமான ஒரு கதை நினைவுக்கு வந்தது.

ஏழிசை, ஆறு அங்கம், ஐந்து வேள்வி, நான்கு வேதங்கள், முத்தீ ஆகியவற்றால் அனுதினமும் பெருமாளை அருளாளர்கள் வழிபடும் இந்தப் புண்ணிய க்ஷேத்திரத்தின் மகிமை அறிந்த காலவர் என்ற மகரிஷி, சக முனிவர்களுடன் இங்கு வந்து தவம் இயற்றினாராம். பாதாளகேது என்ற அசுரன், அவர்களின் தவம் கலைத்து துன்புறுத்தினான்.

ரிஷிகள் அனைவரும் எம்பெருமானிடம் முறையிட, 'அசுரனுக்கு அழிவு நெருங்கிவிட்டது; வருந்தற்க’ என்று பணித்தது பரம்பொருள்.

முனிவர்களும் தவத்தைத் தொடர்ந்தனர். மீண்டும் அசுரன் வரும் அரவம் கேட்டது. முனிவர்கள் பரிதவிப்புடன் பெருமாளை தியானிக்க... அப்போது, குசத்வஜன் எனும் மன்னன் வந்தான். காலவ முனிவரின் மூலம் பாதாளகேதுவின் அக்கிரமங்களைத் தெரிந்து கொண்டான். 'இறையின் துணையோடு அசுரனை வதைப்பேன்’ என சூளுரைத்து புறப்பட்டான். அந்த தருணத்தில் ஆகாயத்தில் இருந்து குவலயம் என்றொரு குதிரை இறங்கியது.

மன்னனும் அந்தத் தெய்வக் குதிரையில் ஏறிச் சென்று அசுரனை அழித்து வந்தான். காலவர் அகமகிழ்ந்தார்.  மன்னனுக்கு வரம் தர முன்வந்தார்.

மன்னனோ, புருஷார்த்தமான மோக்ஷத்தைப் பற்றி தெரிவிக்க வேண்டினான்.

முனிவரும், ''எனது ஆசிரமத் திலேயே தங்கி இருந்து, தினமும் கிருஷ்ணபத்ரா (தென்பெண்ணை) நதியில் நீராடி, அஷ்டாட்சரம் ஜபித்து, பகவானை வழிபட்டு, தவம் செய்க'' என்று அருளினார். அதன்படியே திருக்கோவிலூர் நாயகனை வழிபட்டு, தவம் செய்து வந்த குசத்வஜனுக்கு, விரைவில் இறை தரிசனம் கிடைத்தது. கருட வாகனத்தில் காட்சி தந்த மாலவன், மன்னனின் வேண்டுகோளை ஏற்று, அவனை திவ்ய விமானத்தில் ஏற்றிக்கொண்டு, திருநாட்டுக்கு எழுந்தருளினாராம்!

அர்ச்சகர் ஆரத்தி பிரசாதத்தை நம் முன் நீட்ட, இரு கரங்களா லும் எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டோம். ''இறையே...அறியாமை இருளகற்றி, எம்மையும் ஆட்கொள்க'' என்று ஸ்ரீஉலகளந்த பெருமாளையும், உற்ஸவராம் ஸ்ரீதேஹளீசப் பெருமாளையும் வேண்டிக் கொண்டு, கோயிலிலிருந் தும் திருக்கோவிலூர் தலத்தில் இருந்தும் விடைபெற்றோம்!

செப்டம்பர்-9 ஓணம் பண்டிகை. புனிதமான இந்த நாளில், திருக்கோவிலூர் நாயகனை வழிபட்டு வாருங்கள்; உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்!

- அவதாரம் தொடரும்...
படங்கள்: வி.செந்தில்குமார்

ஏழு அவதாரங்கள்...

திருக்கோவிலூர் கோயிலில் ஸ்ரீலட்சுமி நாராயணருக்கு இடப்புறம் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சந்நிதி. இடக்கையை இடுப்பில் வைத்தும், வலக்கை உயர்த்தி அருளும் கோலத்தில் திகழும் வீர அனுமனை வியாழக் கிழமைகளில் வழிபட்டால், நினைத்தது நிறைவேறும். அடுத்து ஸ்ரீலட்சுமி வராகரையும், ஸ்ரீலட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது சிறப்பு. இவர் சந்நிதியில் மச்ச- கூர்ம ரூபமாகவும் பெருமாளைத் தரிசிக்கலாம். தவிர, லட்சுமணன் சீதாதேவியுடன் ஸ்ரீராமன் விக்கிரகமும் உண்டு. இந்தக் கோயிலில் தசாவதாரங்களில் 7 அவதாரங்கள் உள்ளது சிறப்பு. நரசிம்மர் சந்நிதியை அடுத்து ஆண்டாள். மார்கழியில் விரதமிருந்து ஆண்டாளை வழிபட, கன்னிப் பெண்களுக்கு விரைவில் கல்யாணம் கைகூடும்!