`ஏழு நாள் அழகர் உற்சவம் ஒரே நாளில்... எளிமையான மீனாட்சி கல்யாணம்!’ -சம்பிரதாய சித்திரைத் திருவிழா!
மே 4-ம் தேதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அர்ச்சகர்களால் நடத்தப்படும். கள்ளழகர் வைபவங்கள் மே 8-ம் தேதியன்று கோயில் உள்பிரகாரத்திலேயே நடைபெறும்.
மதுரையின் கோலாகல உற்சவமான சித்திரைப் பெருவிழா, கொரோனா காரணமாக ரத்தானது. ஏப்ரல் 25-ம் தேதி தொடங்கி மே 11-ம் தேதிவரை நடைபெறவிருந்த எல்லா உற்சவங்களையும் ரத்து செய்து, மீனாட்சி கோயில் மற்றும் அழகர்கோயில் நிர்வாகங்கள் அறிவிப்பை வெளியிட்டிருந்தன.
அதில், மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபம், அழகர் உற்சவம் ஆகியவை மட்டும் கோயிலுக்குள்ளேயே அர்ச்சகர்களால் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
அதன்படி, மே 4-ம் தேதி திங்கள்கிழமையன்று, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அர்ச்சகர்களால் நடத்தப்படும். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பழைய திருக்கல்யாண மண்டபத்திலோ, வடக்காடி வீதி திருக்கல்யாண மண்டபத்திலோ நடைபெறுவதற்குப் பதிலாக, சுவாமி சந்நிதியிலேயே நடத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக, திருக்கோயில் அர்ச்சகர் சங்கர பட்டரிடம் பேசியபோது, "சுவாமி சந்நிதியில் தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி ஆகியோருக்கு அருகில் அமைந்துள்ள உற்சவமூர்த்திகளுக்குப் பூஜைகள் செய்யப்பட்டு, திருக்கல்யாண வைபவம் நடத்தப்படும். மிகக் குறைந்த அளவிலான அர்ச்சகர்களும் பணியாளர்களும் மட்டுமே பாதுகாப்பான முறையில் இந்த வைபவத்தில் கலந்துகொள்வார்கள். பக்தர்களுக்கு அனுமதியில்லை. இந்தத் திருக்கல்யாண நிகழ்வு, கோயில் இணையதளத்தில் காலை 8.30 மணிமுதல் 10.15 மணிவரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என ஏற்கெனவே கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார். காலை 9.05 மணியிலிருந்து 09.29 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மீனாட்சி திருக்கல்யாணத்தைக் காண இந்த லிங்க்கை சொடுக்கவும்...

சித்திரைத் திருவிழாவின் முத்தாய்பான நிகழ்ச்சிகளாக ஆண்டுதோறும் கள்ளழகர் திருவிழா நடைபெறும். அதுவும் தற்போது ரத்துசெய்யப்பட்டிருக்கிற நிலையில், அழகர்கோயில் பிராகாரத்திலேயே வைபவங்கள் அர்ச்சகர்களால் நடத்தப்பட உள்ளன. சித்திரைத் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் நடைபெற வேண்டிய கள்ளழகர் வைபவங்கள், ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் கோயிலுக்குள்ளேயே நடத்தப்பட உள்ளன. அதன் விவரங்களையும் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சித்ரா பௌர்ணமிக்கு அடுத்த நாளான மே 8-ம் தேதியன்று, இந்த உற்சவங்கள் நடைபெறுகின்றன.
அன்றையதினம், அதிகாலை 3 மணி முதல் உற்சவம் தொடங்குகிறது. வழக்கமான நித்திய பூஜைகள் முடிந்து, காலை 6 மணியளவில் சுந்தரராஜ பெருமாள்-ஆண்டாள் சந்நிதி முன்பு எழுந்தருளுவார். காலை 8 மணிக்கு எதிர்சேவை உற்சவமும் அலங்கார சேவையும் அங்கே நடைபெறும். அதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு தங்கக்குதிரை வாகன சேவை நடக்கும்.

மதியம் 12 மணிக்கு சைத்ய உபசார சேவை முடிந்ததும், பிற்பகல் 1.30 மணிக்கு சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுவார். அதைத் தொடர்ந்து, மாலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை கருட வாகனத்தில் சேவை சாதிப்பார். மோட்ச புராணம் பாராயணம் செய்யப்படும். மாலை 6.30 மணிக்கு பூப்பல்லக்கு நடைபெறும். இரவு 9 மணிக்கு உற்சவமூர்த்தி மூலவர் சந்நிதியை அடைவார்.
இந்த ஒருநாள் உற்சவ தினத்தில் அர்ச்சகர், உதவியாளர்கள் உட்பட, மொத்தம் 31 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அழகர்கோயில் நிர்வாகத் தரப்பில் பேசியதில், "பக்தர்களின் வேண்டுகோளின்படியும் கோயில் ஆகமவிதிப்படியும் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காக, மண்டுக மகரிஷிக்கு மோட்சம் வழங்குகிற நிகழ்வு மட்டுமே கோயில் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும். வாய்ப்பும் சூழலும் அமைந்தால், மற்ற சில நிகழ்வுகளும் ஒளிபரப்பப்படலாம்" என்றனர்.
கள்ளழகர் சாபவிமோஷனக் காட்சியைக் காண இந்த லிங்க்கை சொடுக்கவும்...

பல நூற்றாண்டு கால வரலாற்றில், மதுரை சித்திரைத் திருவிழா தடைப்பட்டிருப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு, வழக்கம்போல திருவிழா கோலாகலமாய் நடைபெற இறைவனை வேண்டுவோம்.