சொல்லால் சுமக்க முடியாத பல நெகிழ்ச்சியான அனுபவங்களைத் தந்த மூன்று நாள் திருவிழா அது என்றே சொல்ல வேண்டும்.
ஷீர்டி பக்தர்கள் அவசியம் எதிர்பார்க்கும் சாயி ஆரத்தி, சிறப்பு தரிசனம், விசேஷ பூஜை ஆகியவற்றோடு, நம் வாசகர்கள் எதிர்பார்த்திராத விசேஷங்களும் இடம்பெற்றன யாத்திரையில்.
ஆம்! ஷீர்டி சாயியின் அணுக்கத்தைப் பெற்ற அன்பரான ஷாமாவின் (மாதவராவ் தேஷ் பாண்டே) மருமகள் இப்போதும் ஷீர்டியில் இருக்கிறார். இந்த மூதாட்டியுடன் நடைபெற்ற சந்திப்பு, ஷீர்டியைச் சுற்றிலும் உள்ள அதிகம்பேர் தரிசித்திராத தலங்கள் - தரிசனம், விசேஷ பலன்களை அருளும் ஸ்ரீசாயி சத்யநாராயண பூஜை, இயற்கை எழில் சூழ ஏகாந்த தரிசனம் தந்த நாராயண்பூர் வேங்கடாசலபதி திருக்கோயில் தந்த சிலிர்ப்பு என ஒவ்வொரு மணி நேரமும் அனுபவங்களால் நெக்குருகிப் போனார்கள் வாசகர்கள்.
கடந்த 12-ம் தேதி இரவு 11 மணியிலிருந்தே வாசகர்கள் சென்னை விமான நிலையத்தில் குழுமத் தொடங்கினார்கள். தென்காசி, வேலூர், ஈரோடு, சோளிங்கர் என தமிழகமெங்கும் இருந்து வாசகர்கள் வந்திருந்தார்கள்.

18 வயது நிதிஷ்குமார் தொடங்கி 76 வயது ஸ்ரீநிவாசன் வரை எல்லோருமே தங்களை ஒருவருக்கொருவர் அங்கேயே அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். இளையவர்கள் முதியவர்களின் சுமைகளைச் சுமந்தும், கரம் பிடித்து அழைத்துச் சென்றும் உதவ, பெரியோர்கள் இளையவர்களுக்கு வழிகாட்ட அற்புதமாக தொடங்கியது பயணம்.
13-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து புனே செல்லும் விமானம் கிளம்பியதுமே வாசகர் களிடம் உற்சாகம் தொற்றிக்கொண்டது. வந்திருந்தவர்களில் பெரும்பாலோனோருக்கு விமானப் பயணம் முதல் அனுபவம் என்பதால், பரவசத்தில் ஆழ்ந்து போனார்கள்.
இரண்டு மணி நேரம் பயணத்தில் புனே விமானநிலையத்தை அடைந்த வாசகர்களை, சாயி பக்தர்களான மோகன், கணேஷ், பால முருகன் ஆகியோர் அகமகிழ வரவேற்றனர். சென்னை தி.நகர் சாயிபாபா ஆலய நிர்வாகி திருவள்ளுவன் ஐயா கேட்டுக்கொண்டதற்கிணங்க, யாத்திரை முழுவதும் நமக்கும் வாசகர்களுக்கும் இந்த அன்பர்கள் கொடுத்த வழிகாட்டலும் காட்டிய கரிசனமும் ... என்றென்றும் மறக்க முடியாதவை.

குளிரும் தூறலும் தொடர, சுமார் 7 மணி அளவில் ரஞ்சன்காவ் மகாகணபதி ஆலயம் அருகில் ஒரு ஹோட்டலில் குளித்து முடித்து, உள்ளம் குளிர அந்த க்ஷேத்திரத்தின் மகா கணபதியை தரிசித்தோம். அந்த நகரிலேயே காலை சிற்றுண்டியும் முடிந்தது.
அங்கிருந்து கிளம்பி வழியெங்கும் இயற்கைச் சூழலை தரிசித்தவாறே சனி சிங்கனாபூர், ரேணுகாதேவி ஆலயங்களையும் தரிசித்துவிட்டு, மாலை 6 மணி அளவில் புண்ணிய பூமியாம் ஷீர்டியை அடைந்தது எங்களின் பயணக்குழு.
கிட்டத்தட்ட அந்த 12 மணி நேர பயணமே புதிய அனுபவமாக... கலந்துரையாடல், பாடல், பஜன் என மகிழ்ச்சியாக சென்றது. அன்றிரவே சாயி சமாதி மந்திரில் கிடைத்த பாபாவின் சிறப்பு தரிசனம் ஒவ்வொருவரையும் சிலிர்க்கவைத்தது.
மறுநாள் ஷீர்டியிலும் சுற்றுப்புறத்திலும் அமைந்த ஆலயங்களை தரிசித்தோம். வெளியூர் பக்தர்கள் பலரும் அறிந்திராத இடங்கள் அவை.மழை அவ்வப்போது மிரட்டினாலும் பாபாவின் அருள் மழை எங்களைக் காத்து நின்றது!
ஆம்! சாயியின் அருளுக்கும் அற்புதங்களுக்கும் பல உதாரணங்களைச் சொல்லலாம்.
வாசகி தாரணி சக்தி விகடன் ஷீர்டி யாத்திரைக்கு முன்பதிவு செய்திருந்த நிலையில், திடுமென ஒருநாள் சிறு விபத்தில் காலில் எழும்பு முறிவு ஏற்பட, யாத்திரையில் கலந்துகொள்ள இயலுமா இயலாதா என்றறிய முடியாத நிலை.
பக்தர்களைப் பரிதவிக்க விடுவாரா நம் சாயி. அந்தச் சகோதரிக்கு மிகுந்த மனோபலம் அளித்தார் என்றே சொல்லவேண்டும். மெள்ள மெள்ள காலை ஊன்றும் அளவுக்குத் தேறினார். தொடர்ந்து, `நிச்சயம் யாத்திரையில் கலந்துகொள்வேன், சாயியை தரிசித்து வருவேன்' என்று வைராக்கியத்துடன், கால் வலியைப் பொறுத்துக்கொண்டு தினம் தினம் நடைப் பயிற்சி செய்து தன்னைத் தயார்படுத்திக் கொண்டார்.

யாத்திரை தொடங்கும் நாளன்று சிறிது வலி இருந்தாலும் மனத்தளவில் பூரணமாய்த் தயாராகி வந்து நின்றார் தாரணி. காரணம் சாயிநாதரின் பக்கத் துணை என்றே சொல்லவேண்டும். மட்டுமன்றி, யாத்திரை முழுவதும் அவரை மிகுந்த கவனத்துடன் கண்ணும் கருத்துமாய்க் கவனித்துக்கொண்டார்கள் சக வாசக-வாசகியர்.
அதேபோல், வாசகர் தனபால் ஐயாவின் மனைவி ராஜேஸ்வரி முதுகு வலியால் அவதிப் பட்டாலும், கொஞ்சமும் முகம் கோணாமல், எத்தனை தூரமானாலும் புன்னகையோடு கடந்து வந்தார். காரணம் சாயியின் மீதான பக்தி! தென்காசி வாசகர் கணேசமூர்த்தி எல்லோருக் கும் அன்பளிப்பாக தென்காசி திருக்கோயில் கோபுரத்தின் வண்ணப்படத்தையும், பர்ஸ் ஒன்றையும் வழங்கினார்.
இவர்கள் இப்படியென்றால் தன் (அம்மாவின் சாவித்திரி அம்மா) ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவரை ஷீர்டி யாத்திரைக்கு அழைத்துவந்து அன்போடு கவனித்துக்கொண்ட ஸ்ரீநிவாசன், எல்லோரையும் நெகிழ வைத்தார்.
மேலும், ஓய்வு பெற்ற ஆசிரியையான ராணி அம்மையார், யாத்திரைக்குழுவினரோடு தன்னுடைய 72-வது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்த தருணங்கள் மறக்கமுடியாதவை.
இப்படியான அனுபவங்கள் மட்டுமல்ல, யாத்திரையில் நாம் தரிசித்த இடங்கள் மற்றும் தலங்களும் பல சிலிர்ப்பூட்டும் தகவல்களையும் கதைகளையும் தன்னகத்தே கொண்டவை.
அந்த அனுபவங்கள் அடுத்த இதழில்...