Published:Updated:

கருமாரியம்மனுக்கு 1,08,000 வளையல்கள்... கோடம்பாக்கத்தில் களைகட்டும் ஆடிப்பூரத் திருவிழா!

சைலபதி

அம்பிகைக்கு உகந்த இந்த ஆடிமாதம் வரும் பூர நட்சத்திர நாளில் அம்மன் ஆலயங்களில் அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்த்தப்படுகிறது. இதன் மூலம் இந்த உலகம் செழித்து வளம் பெருகும் என்பது நம்பிக்கை...

ஆடிப் பூரம்
ஆடிப் பூரம்

சீமந்தம், வளைகாப்பு ஆகிய சடங்குகள் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப்பெண்ணையும் அவள் கருவையும் காக்கும் சடங்குகள். வளை என்னும் அணிகலன்கள் இட்டுக் காக்கும் காப்பே வளைகாப்பு. சாதாரண மனிதர்கள் செய்யும் இந்தச் சடங்குகளுக்கே இவ்வளவு சிறப்புகள் உண்டு என்றால் ஜகன்மாதாவான அம்பிகைக்குச் செய்யப்படும் வளைகாப்பு உற்சவம் தரும் நன்மைகள் ஏராளமானவை.

அம்மன்
அம்மன்

அன்னை, தாய் என்றால் இந்தப் பூலோகமே அவளின் பிள்ளை. அதனால்தான் அம்பிகைக்கு உகந்த இந்த ஆடிமாதம் வரும் பூர நட்சத்திர நாளில் அம்மன் ஆலயங்களில் அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்த்தப்படுகிறது. இதன் மூலம் இந்த உலகம் செழித்து வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

சென்னை கோடம்பாக்கம், ஆண்டவர் நகர் முதல் தெருவில் உள்ளது ஸ்ரீ தேவிகருமாரியம்மன் திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பூர உற்சவம் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூர தினத்தன்று, இங்கு அம்மனுக்கு சீமந்தமும் வளைகாப்பும் செய்யப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் அம்மனுக்கு ஒரு லட்சத்தி எட்டாயிரம் வளையல்கள் சமர்ப்பித்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். விரும்பும் பக்தர்கள் வேண்டிக்கொண்டு வளையல்களை வாங்கி இந்தக் கோயிலுக்குச் சமர்ப்பிக்கிறார்கள்.

ஆடிப்பூரதினத்தன்று, காலை உற்சவரை ஒரு கர்ப்பிணிப் பெண்போல அலங்கரித்து வளைகாப்பு உற்சவத்தைத் தொடங்குவார்கள். இங்கு, மகப்பேறுவரம் கேட்டு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள். அவ்வாறு வரும்பக்தர்கள், ஐந்து எலுமிச்சம்பழங்கள் கொண்டுவந்து அம்மனுக்கு சமர்ப்பித்து வேண்டிக்கொள்கின்றனர். அவ்வாறு இங்கு வேண்டிக்கொள்கிறவர்களுக்கு பொம்மை பிரசாதம் ஒன்று வழங்குகிறார்கள். அந்த பொம்மையைக் கொண்டு செல்பவர்கள், அடுத்த ஆண்டுக்குள்ளாக குழந்தை பாக்கியம் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 4 -ம் தேதி இந்த ஆலயத்தில் ஆடிப்பூரத் திருவிழா கொண்டாடப் படவிருக்கிறது. அன்று காலை அதிகாலையிலேயே கோ அபிஷேகத்தோடு வைபவம் தொடங்கும். அடுத்து அன்னையை ஒரு லட்சம் வளையல்களால் அலங்கரித்து வழிபட இருக்கிறார்கள். அன்று காலை எட்டுமணிமுதல் இங்கு வரும் பக்தர்களுக்கு, ஐந்துவகை சாதங்கள் கொண்ட சீமந்த சாப்பாடு பரிமாறப்படும். அன்று நாள்முழுவதும் வரும் பக்தர்களுக்கு இந்தச் சீமந்த சாப்பாடு வழங்கப்படும்.

அம்மன்
அம்மன்

இந்த ஆலயத்தில் அன்னை கருமாரியோடு, உத்திரகோசமங்கை வாராஹி, புதுக்கோட்டை அறைகாத்தம்மன், கருக்காத்தம்மன், திருநெல்வேலி இசக்கியம்மன், கல்கத்தா மகாகாளி, பிரத்யங்கரா அம்மன், முத்தாரம்மன் ஆகிய தெய்வங்கள் சந்நிதிகள் கொண்டு இங்கு அருள்பாலிக்கின்றனர். அன்னையர் அருளும் இந்தச் சந்நிதிகளில் வேண்டிக்கொள்ள வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுகின்றன என்கின்றனர் பக்தர்கள். அம்மனுக்கு உகந்த ஆடிப்பூர தினத்தன்று இந்த ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது கூடுதல் சிறப்பினை வழங்கும்.