Published:Updated:

ஆடி அம்மன் தரிசனம்: தாய்க்கொரு தாயாக இருக்கும் தாயமங்கலம் முத்து மாரியம்மன்!

நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்களுடன் கலியுகக் கற்பக விருட்சமாக, கேட்டதை வீட்டுக்கேக் கொண்டு வந்து தரும் காமதேனுவாக தாயமங்கலம் முத்துமாரியம்மன் திகழ்கிறார். சிறுமியாக வந்து முதன்முதலில் நின்றதால் கன்னித்தெய்வமாக மாரி பாவிக்கப்பட்டு வழிபடப்படுகிறாள்.

'இன்னும் எத்தனை நாள்தான் வந்து உன்னை தொல்லை கொடுப்பது, தாயே மீனாட்சி என் கவலை உனக்குத் தெரியாதா! ஆயிரம் செல்வங்கள் இருந்தாலும் மழலைச் செல்வம் போல் வருமா. இன்றுடன் என் வேண்டுதல்களை நிறுத்திக் கொள்கிறேன். இனி நீயே மனம் குளிர்ந்து எனக்கு மழலை கொடுத்தால் கொடு, இல்லையேல் உன் இஷ்டம் தாயே!' என்று புலம்பித் தீர்த்துவிட்டார் அந்த வியாபாரி. மதுரைப் பேரரசி மீனாளோ தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
தாயமங்கலம் முத்துமாரியம்மன்
தாயமங்கலம் முத்துமாரியம்மன்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வியாபாரி அவர், ஒவ்வொரு முறையும் மதுரைக்கு வரும்போதெல்லாம் மீனாளிடம் பிள்ளை வரம் கேட்டு வேண்டுவது அவர் வழக்கம். பிள்ளை வேண்ட, தாய் மறுப்பாளா! 'இதுவே கடைசி முறை வேண்டுதல்' என்று வேண்டிக்கொண்ட அதே நாள், இளையான்குடிக்கு அருகே கள்ளிக்காட்டில், அவர் பயணித்த பாதையில் ஒரு சிறுமி குறுக்கிட்டாள். தாய் தந்தையை தொலைத்துவிட்ட தனக்கு யாருமில்லை என்று அழுதாள். மீனாள் கொடுத்த பிள்ளை இது என்று வியாபாரி மகிழ்ந்துபோய் சிறுமியை அழைத்துக்கொண்டு சென்றார். வழியில் ஆறு குறுக்கிட, சிறுமி மாயமானாள். அது கண்டு கவலை கொண்ட வியாபாரியின் கனவில் அன்னை மீனாள் காட்சி தந்தாள். 'சிறுமியாக வந்தது நானே, நான் தோன்றிய கள்ளிக்காட்டில் என்னை மாரியாக வழிபட்டு வா. எல்லோருக்கும் தேவையானதை அருள்வேன்' என்று வாய் மலர்ந்தாள்.

தாயமங்கலம் கோயில்
தாயமங்கலம் கோயில்

அதன்படி அதே இடத்தில் ஆற்று மணலில் மாரியம்மனை வடிவமைத்தார்கள். ஊர் கூடி அம்மனை ஆராதித்து வழிபட்டார்கள். அம்மன் மனம் குளிர்ந்தாள். வெம்மை நீங்கி முகமெங்கும் முத்து முத்தாக நீர் வடிய காட்சி தந்தாள். 'முத்துமாரியே...எங்கள் தாயாக வந்த மங்கலதேவியே' என்று மக்கள் ஆவேசக் குரல் எழுப்பிக் கொண்டாடினார்கள். அன்னை முத்துமாரியம்மன் என்றானாள், அந்த ஊர் தாய்மங்கலம் என்றாகி பின்னர் தாயமங்கலம் என்றானது.

நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்களுடன் கலியுகக் கற்பக விருட்சமாக, கேட்டதை வீட்டுக்கேக் கொண்டு வந்து தரும் காமதேனுவாக தாயமங்கலம் முத்துமாரியம்மன் திகழ்கிறார். சிறுமியாக வந்து முதன்முதலில் நின்றதால் கன்னித்தெய்வமாக மாரி பாவிக்கப்பட்டு வழிபடப்படுகிறாள். அதனால் திருமண வரம் வேண்டுபவர்கள், தாலிப்பொட்டினை இந்த அம்மன் திருவடியில் வைத்து வேண்டிக் கொள்கிறார்கள். அழகான இந்த ஆலயத்தில் சின்னக்கருப்பு, பெரிய கருப்பு, காளி போன்ற தெய்வங்களின் சந்நிதியும் இங்கு உள்ளன.

காளி அம்மன்
காளி அம்மன்

தாயமங்கலத்தின் சுற்றுவட்டார 22 கிராம மக்களுக்கும் தாயாக விளங்கும் இந்த அன்னையை இங்குள்ளோர் எல்லோருமே தனது சொந்த தாயாகவே எண்ணி வழிபடுகிறார்கள். தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் மருத்துவச்சியாகவும், வேண்டிய வரங்களைக் கொடுக்கும் வள்ளலாகவும் மாரியம்மன் இங்கு நிலைபெற்று அருளாட்சி செய்து வருகிறாள். அம்மனின் அருள் வந்து இங்கு பக்தர்கள் ஆடும் 'ஆவேசக் குறி சொல்லுதல்' இந்த ஊருக்கே பெருமை என்கிறார்கள். இங்கு கொடுக்கப்படும் தீர்த்தம் அம்மை நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதாம்.

ஆடி அம்மன் தரிசனம் - சிக்கல்களைத் தீர்ப்பாள் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்குள்ள வில்வம் மற்றும் வேப்ப மரங்களில் தொட்டில் கட்டிச் சென்றால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. வாரத்தின் செவ்வாய், வெள்ளி, அமாவாசை நாள்கள் இங்கு விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். ஆடி மாதம் முழுக்க இங்கு விழாக்கோலம்தான். விவசாயம் தொடங்க இருக்கும் மக்கள் எல்லாம் இங்கு கூடி அம்மனை பலவாறாக வழிபட்டு மழை பொழியவும், விளைச்சல் பெருகவும் வேண்டிக் கொள்வார்கள். வானம் பார்த்த பூமியான ராமநாதபுரச் சீமையில் பச்சை வளம் காண்பதெல்லாம் இந்த மாரியம்மனின் கடாட்சம்தான் என்கிறார்கள் மக்கள்.

சின்னக்கருப்பு பெரிய கருப்பு
சின்னக்கருப்பு பெரிய கருப்பு

தாயமங்கலம் முத்துமாரியம்மனுக்கு பங்குனியில் நடைபெறும் பத்து நாள்கள் உற்சவம் வெகு பிரசித்தமானது. அம்மன் ஆற்று மணலால் உருவானவள் என்பதால், பிடி மண் கொண்டு வந்து அம்மனாக பாவித்துக் கொண்டாடும் பிடிமண் விழாவோடு இந்த உற்சவம் தொடங்கும். திருவுலா, தேரோட்டம், பொங்கவிடும் திருவிழா, பாற்குடம், தீர்த்தவாரி, பூக்குழி இறங்கும் வைபவம் என ஒவ்வொரு நாளும் இந்த திருவிழா உற்சாகமாகக் கொண்டாடப்படும்.

'தன்னையே கதி என்று நம்பி வந்தவர்களை இந்த மாரியம்மன் கைவிட்டதே இல்லை. எத்தனையோ பெண்கள், தங்கள் வாழ்வு நிலைக்க இவளை நம்பி வந்து பலன் பெற்றிருக்கிறார்கள். தாய்க்கு தாயாக நின்று தாலியைக் காப்பாற்றிக் கொடுப்பதில் இவளுக்கு நிகர் இவளே என்று சத்திய சாட்சி சொல்கிறார்கள்' இவள் பக்தர்கள். உண்மைதான் அழுவதற்கு முன்பே பிள்ளையின் தேவையை அறிந்தவளே அன்னை சக்தி! அவளை இந்த ஆடி மாத வைபவத்தில் எல்லோரும் கொண்டாடுவோம். திருவருளைப் பெறுவோம்.

அமைவிடம்: சிவகங்கையில் இருந்து இளையான்குடி செல்லும் பேருந்து மார்க்கத்தில் தாயமங்கலம் விலக்கில் இறங்கி ஷேர் ஆட்டோவில் செல்லலாம். காலை 9.00 மணியிலிருந்து 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணியிலிருந்து 8.00 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு