Published:Updated:

ஆடி அம்மன் தரிசனம்: கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் மண்டைக்காடு பகவதி அம்மன்!

மண்டைக்காடு பகவதி அம்மன்: சபரிமலைக்கு விரதமிருந்து ஆண் பக்தர்கள் வருவதைப்போல 41 நாள்கள் விரதமிருந்து பெண் பக்தர்கள் இருமுடிகட்டி இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்பான பகவதி கோயில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். குளச்சலுக்குத் தெற்கே சுமார் 2 மைல் தொலைவில் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கிறது மண்டைக்காடு கிராமம், இங்குதான் பகவதி அம்மன் வீற்றிருக்கிறாள். பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இந்தக் கோயிலில் பகவதி அம்மன் சுயம்புவாக புற்றுவடிவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்து வருகிறாள்.
மண்டைக்காடு பகவதி
மண்டைக்காடு பகவதி

மாசி மாத கொடை விழா இங்கு சிறப்பானது. மாசிக் கொடை விழாவின் நிறைவு நாள், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடைபெறும். இது பகவதி அம்மனுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி. இந்த ஒடுக்கு பூஜைக்காக, பகவதி கோயிலுக்கு அருகே உள்ள சாஸ்தா கோயிலில் உணவுகளைத் தயாரித்து, நீளமான வெள்ளைத் துணியால் மூடி ஊர்வலமாக எடுத்து வருவார்கள். அப்போது, லட்சக்கணக்கான மக்கள் சூழ்ந்து இருந்தாலும் ஒரு சின்ன சத்தம்கூட கேட்காது என்பது சிறப்பு. அம்மனுக்குப் படையல் போடும்போது எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்பதே இதன் ஐதீகம்.

இந்த விழாவைக்காண சபரிமலைக்கு விரதமிருந்து ஆண் பக்தர்கள் வருவதைப்போல 41 நாள்கள் விரதமிருந்து பெண் பக்தர்கள் இருமுடிகட்டி இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். மாசி மாத விழாவைப் போல, ஆவணி மாத அஸ்வதி பொங்காலை விழாவும் இங்கு சிறப்பானது. அதேபோல் ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளும் இங்கு விசேஷ வழிபாடுகளுடன் கொண்டாடப்படும்.

ஆடி அம்மன் தரிசனம்: தாய்க்கொரு தாயாக இருக்கும் தாயமங்கலம் முத்து மாரியம்மன்!

வேம்பாக, பாம்பாக, வேராக, புற்றாக எங்கெங்கும் தோன்றி அருள் பொழியும் அம்மன் இங்கு சுமார் 15 அடி உயரம் கொண்ட பெரிய புற்றாக வணங்கப்படுகிறாள். இந்த புற்று வடிவம் கொண்ட அம்மன் வளர்ந்து கொண்டே வருவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். பிரமாண்டப் புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தரும் பகவதி அம்மனுக்கு முன்பாக வெண்கலச் சிலையாக நின்ற கோலத்திலும், மற்றுமொரு வெள்ளிச் சிலையாக அமர்ந்த கோலத்திலும் அம்மன் இங்கு வீற்றிருக்கிறாள்.

மண்டைக்காடு பகவதியம்மன்
மண்டைக்காடு பகவதியம்மன்

சேரர்கள் காலத்தில் இந்தப் பகுதி பனங்காடாக இருந்து வந்துள்ளது. இந்த பனங்காட்டில் புற்று வடிவில் சுயம்புவாக எழுந்தவள் மண்டைக்காடு பகவதியம்மன். அப்போது பனங்காட்டு காளியாக வழிபடப்பட்டவள், பிறகு கேரள மக்களின் வழக்கப்படி 'பகவதி அம்மன்' என்றானாளாம். மேய்ச்சல் வெளியாக இந்த பகுதி இருந்ததால் முன்பு 'மந்தைக்காடு' என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி, 'மண்டைக்காடு' என்று மாறியதாக கூறுகிறார்கள்.

'விழி மூடாத பகவதி' இவள் என்கிறார்கள். தீயவர்களைத் அழிக்கவும், நல்லவர்களைக் காக்கவும் எப்போதும் விழித்திருப்பவள் என்பதால் இந்தப் பெயராம். இவளை வேண்டிக்கொண்டு தொடங்கும் எந்தக் காரியமும் தடையில்லாமல் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆதிசங்கரரின் சீடர் ஒருவர் இங்கு அமைத்த ஸ்ரீசக்கரமும் அம்மனின் வடிவமாக இருந்து பக்தர்களைக் காத்து வருகிறதாம்.

ஆடி அம்மன் தரிசனம்: இன்னலைத் தீர்த்து இன்பம் அருள்வாள் இருக்கன்குடி மாரியம்மா!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மண்டைக்காடு பகவதிக்கு அப்பம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், மண்டையிடி குணமாகும் என்பது நம்பிக்கை. இங்கு வந்து மண் சோறு உண்டால் பிள்ளை வரம் கிடைக்கும் என்றும், தாலி காணிக்கை செலுத்தினால் திருமண வரம் கிட்டும் என்பதும் நம்பிக்கை. உடல் உபாதைகள் கொண்டவர்கள், குறை உள்ளவர்கள் இங்கு வந்து உலோகத்தால் ஆன சின்ன சின்ன உறுப்புகளை அம்மனுக்குக் காணிக்கை செலுத்தி நிவாரணம் பெற வேண்டிக் கொள்கிறார்கள்.

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் தேர்
மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் தேர்

மேலும் இங்குள்ள கிணறுக்கு தோண்டியும், கயிறும் வாங்கிக் கொடுத்தால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெறுவார்கள் என்பதும் சிறப்பு. 27 தீபங்கள் ஏற்றி, அம்மனை 9 முறை சுற்றி வந்தால் தோஷங்கள் யாவும் நீங்கும் என்பதும் இங்குள்ள வழக்கம். இந்த கோயிலின் பிரசாதமான மண்டையப்பம் வெகு பிரசித்தமானது. அதேபோல் பக்தர்கள் வேண்டிக்கொண்டு செய்யும் முத்தப்பமும் சுவையானது.

அம்மன் உறையும் வேப்ப மரமே இங்கு தலவிருட்சம். தென் தமிழக மக்களின் குலதேவியாக விளங்கும் மண்டைக்காடு பகவதி அம்மன் கூப்பிட்டக் குரலுக்கு ஓடிவரும் திரிசூலி; விழி நீர் சிந்தி அபயம் என்று அலறுவோருக்கு இவளே காவல் அதிகாரி. ஆடி மாதத்தில் இங்கு கூடும் பெண்களின் எண்ணிக்கை ஏராளம். மனையெங்கும் மங்கலங்கள் பெருகவும், நாடு நலம் பெறவும், நல்லோர் வளம் பெறவும் கண்மூடாமல் ஆட்சி செய்யும் இந்த பகவதி அம்மனைப் பிரார்த்தனை செய்து கொண்டு நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெறுவோம்!

இஞ்சிமேடு அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் சக்தி விகடன் மற்றும் GRT ஜூவல்லர்ஸ் இணைந்து நடத்தும் மகா சுவாதி ஹோமம் நடைபெறுகிறது வீடியோ: எஸ். தேவராஜன்

Posted by Sakthi Vikatan on Friday, August 13, 2021
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு