Published:Updated:

ஆடி அம்மன் தரிசனம்: பிணி தீர்க்கும் புற்றுமண்... புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் மகிமைகள்! #Video

ஆடி அம்மன் தரிசனம்
ஆடி அம்மன் தரிசனம்

சோழ மன்னர்கள் தஞ்சையை ஆண்டபோது நகரைச் சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் எட்டுவித தேவியரைக் காவல் தெய்வமாக வைத்தார்கள் என்கிறார்கள் சரித்திர ஆசிரியர்கள். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்ப்புறத்தில் உருவாக்கப்பட்ட தேவியே புன்னைநல்லூர் மாரியம்மன் என்கிறது 'சோழசம்பு' நூல்.

ஆடி மாதம் அம்மன் மாதம் என்பார்கள். அதிலும் சுயம்புவாகவே அம்பிகை தோன்றிய திருத்தலங்கள் என்றால் அதன் மகத்துவமே தனி. அங்கு நடைபெறும் வழிபாடுகளும் திருவிழாக்களும் மிகவும் சிறப்புமிக்கவை. அந்த வகையில் புற்று வடிவமாகவே தோன்றி சுயம்பு வடிவம் கொண்டவள் புன்னைநல்லூர் மாரியம்மன். அவளை வணங்கி புற்றுமண் பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு பிரார்த்தனை செய்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அத்தகைய புன்னைநல்லூர் திருத்தல மகிமைகளைக் காணோம்.

புன்னை நல்லூர் மாரியம்மன் #AadiSpecial
புன்னை நல்லூர் மாரியம்மன் #AadiSpecial

அன்னை புற்றுவடிவில் சுயம்புவாகத் தோன்றிய தலம் இது. சோழ மன்னர்கள் தஞ்சையை ஆண்டபோது நகரைச் சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் எட்டுவித தேவியரைக் காவல் தெய்வமாக வைத்தார்கள் என்கிறார்கள் சரித்திர ஆசிரியர்கள். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்ப்புறத்தில் உருவாக்கப்பட்ட தேவியே புன்னைநல்லூர் மாரியம்மன் என்கிறது 'சோழசம்பு' நூல். தஞ்சாவூரை ஆண்ட அரசர்கள் மட்டுமல்ல பிற்காலத்தில் ஆண்ட ஆங்கிலேயே அதிகாரிகளுக்கும் அவள் தன் திருவிளையாடல்கள் மூலம் தன் மகிமையை உணர்த்திப் பெரும்பேறுபெற்றவள் இந்தத் தாய்.

மகான் சதாசிவ பிரம்மேந்திரரே புற்றாக இருந்த இந்த அம்மனை திருவடிவாகச் செய்தார். சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, சந்தனம், குங்குமப் பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, கோரோஜனை, அகில், பலவித மூலிகை மருந்துகள் கொண்டு புற்று மண்ணில் பிசைந்து உருவானது இந்த மூல மூர்த்தியான அம்மன் என்கிறார்கள். அதனால் இந்த அம்மன் இயற்கையிலேயே நோய்தீர்க்கும் திருமேனியள்.

அம்மன், புற்று வடிவத்தினள் என்பதால் இங்கு அபிஷேகங்கள் நடைபெறுவதில்லை. அதற்குப் பதிலாக தைலக்காப்பு மட்டுமே செய்யப்படுகிறது. அம்மனுக்கு ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை மண்டல தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு பூச்சொரிதல்..!
புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு பூச்சொரிதல்..!

சரபோஜி மன்னர் இந்த அம்மனின் தீவிர பக்தர். அதனால் இந்த ஆலயத்தின் கோபுரம், மகா மண்டபம், நர்த்தன மண்டபம், இரண்டாவது பெரிய சுற்றுச் சுவர் போன்றவற்றைக் கட்டி திருப்பணி செய்தார். மராட்டிய மன்னரான சிவாஜி இக்கோயிலுக்கு 3-வது திருச்சுற்று மதிலைக் கட்டினார் என்கிறார்கள்.

ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் என்பவர் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபம் ஆகியவற்றைக் கட்டினார் என்கிறது தலபுராணம். ஆங்கிலேயே அதிகாரிகள் பலரும் இந்த அம்மனுக்குக் காணிக்கையாக பல அணிகலன்களை அளித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தஞ்சை சமஸ்தானத்துக்கு உரிய இந்த ஆலயத்தில் விநாயகர், முருகர், காத்தவராயர், அய்யனார், பேச்சியம்மன், லாட சன்னாசி, மதுரை வீரன் உள்ளிட்ட சந்நிதிகளும் சுற்றுப்பிரகாரத்தில் காணப்படுகின்றன. வேப்ப மரமே தலவிருட்சமாக விளங்குகிறது. இங்குவந்து அம்மனை வேண்டிக் கொண்டால் நோய்கள் தீர்கின்றன என்கிறார்கள் பக்தர்கள். அம்மை கண்டு அவதிப்படும் பக்தர்கள், கண் வியாதிகள் கொண்டவர்கள் இங்கு வந்து தங்கியிருந்து குணம் அடைந்து செல்வதாகச் சொல்கிறார்கள்.

இத்தகைய சிறப்புகள் உடைய அம்மனின் திருவிளையாடல்கள் சிலவற்றை மேலும் அறிந்துகொள்ளவும் இத்தலத்தில் பிற மகிமைகளைத் தெரிந்துகொள்ளவும் கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள். ஆடியிலே புன்னைநல்லூராளை தியானிப்போம். நீங்காத புண்ணியத்தைப் பெறுவோம்.
அடுத்த கட்டுரைக்கு