Published:Updated:

ஆடி அம்மன் தரிசனம்: இன்னலைத் தீர்த்து இன்பம் அருள்வாள் இருக்கன்குடி மாரியம்மா!

கருவறையில் ஜகன்மாதாவான மாரியம்மன் வலது காலை மடித்து, இடது காலை தொங்க விட்டபடி சுகாசன திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். காண்பவரெல்லாம் உயிர் சிலிர்த்துப் போகும் அளவுக்கு அழகும் கம்பீரமும் கருணையும் கொண்ட மகாமாரி இவள்.

'க்காள தேவியரே திக்கெல்லாம் ஆண்டவளே

திக்கெல்லாம் ஆண்டவளே திகம்பரியே வாருமம்மா

முக்கோணச் சக்கரத்தில் முதன்மையாய் நின்றசக்தி

அக்கோணந் தன்னில்வந்து ஆச்சியரே வந்தமரும்!'

ஆடி மாதம் பிறந்துவிட்டால் இருக்கன்குடி மாரியம்மன் ஆலயம் எங்கும் பலவிதமான அம்மன் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். தென்மாவட்டம் எங்கும் இருக்கும் கிராமியப் பாடகர்கள் கூடி இருக்கன்குடி மாரியை பாடல்களால் அழைத்து வழிபடுவது வழக்கம். சங்கீதப் பிரியை என்ற பெயர் கொண்ட தேவியும் அவர்களின் பாடலுக்கு மனமிரங்கி வந்து அருள் மழை பொழிவாள். தன்னை அண்டிய சகல ஜீவன்களுக்கும் கருணை வரம் அளிப்பாள்.

ஆடி அம்மன் தரிசனம்
ஆடி அம்மன் தரிசனம்

அர்ச்சுனா, வைப்பாறு எனும் இரு புண்ணிய நதிகளுக்கு இடையே அமர்ந்திருப்பவள் அன்னை மாரி. வனவாசம் சென்ற பஞ்சபாண்டவர்கள், மகாலிங்க மலையடிவாரத்துக்கு வந்து போது நீராட விரும்பினார்கள். ஆனால் அங்கு நீராடுவதற்கு நதியோ குளமோ இல்லை. இதனால் அர்ச்சுனன் பூமி தேவியையும், கங்கையையும் வணங்கி தன் அம்பால் பூமியைப் பிளந்து அர்ச்சுனா நதியை உருவாக்கினார் என்கிறது தலவரலாறு. இதேபோல் ராமபிரான் இங்கு வந்தபோது, அகத்தியர் அடக்கி வைத்திருந்த ஒரு புண்ணிய நதியை தனது அம்பால் விடுவித்து வைப்பாறை உண்டாக்கினாராம். வைப்பு என்றால் புதையல் என்று பொருள். இந்த இரு ஆறுகளும் கங்கைக்கு நிகரானவை என்பதால் 'இரு கங்கைக் குடி' என்று இந்த ஊருக்கு பெயராகி அதுவே இருக்கன்குடி என்றானதாக பெரியோர்கள் சொல்வார்கள்.

இருக்கன்குடி மாரியம்மன்
இருக்கன்குடி மாரியம்மன்

சதுரகிரியில் தவம் இருந்த ஒரு சித்தருக்கு அம்மன் திருக்காட்சி அளித்து அவரை இருக்கன்குடிக்கு வரச்சொன்னாளாம். அதன்படி இங்கு வந்த சித்தர் அம்மனை ஒளஷதப் பொருள்களால் வடிவமைத்து வழிபட்டாராம். காலப்போக்கில் அந்த திருவுருவம் புதைந்து போக, பின்னாளில் மாடு மேய்க்கும் சிறுமிக்கு காட்சி தந்த மாரியம்மன் நிலையாக இங்கு கோயில் கொண்டாளாம். சிறுமிக்கு அருள் செய்த அம்மன் எழுந்தருளிய இடத்தில் இப்போது ஆதிஅம்மன் கோயில் உள்ளது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இருக்கன்குடி மாரி, அந்த ஆதி கோயிலுக்கு எழுந்தருளுவாள். மாரியம்மன் இங்கு சிவ அம்சமாகவே காட்சி தருவதால், அம்மனுக்கு முன்னால் நந்தி அமர்ந்துள்ளது.

கருவறையில் ஜகன்மாதாவான மாரியம்மன் வலது காலை மடித்து, இடது காலை தொங்க விட்டபடி சுகாசன திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். காண்பவரெல்லாம் உயிர் சிலிர்த்துப் போகும் அளவுக்கு அழகும் கம்பீரமும் கருணையும் கொண்ட மகாமாரி இவள். இவளை வழிபட்டு சரண் அடைந்தவர்களுக்கு எந்தவித அச்சமும் வாழ்வில் ஏற்படவே ஏற்படாது என்கிறார்கள் இவளின் பக்தர்கள். இவள் திருக்கோயிலில் காவல் தெய்வங்களான வெயிலுகந்த அம்மன், வடக்கு வாசல் செல்வி, முப்பிடாதி அம்மன், வீரபத்திரர், பைரவர், காத்தவராயர், பேச்சியம்மன் ஆகியோரும் எழுந்தருளி உள்ளார்கள்.

அக்னிச் சட்டி எடுத்தல்
அக்னிச் சட்டி எடுத்தல்

அண்டமெல்லாம் காத்தருளும் இந்த மகாமாரியம்மன் குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை வரம் தேவி என்கிறார்கள். இங்கு வந்து கரும்புத் தொட்டில் கட்டுவதாக வேண்டிக் கொள்ளும் அன்பர்களுக்கு இந்த தாய் கருணை கொண்டு வரம் அளிக்கிறாள். அதேபோல் குழந்தை பிறந்ததும் கரும்பில் தொட்டில் செய்து, அதில் குழந்தையைப் படுக்க வைத்து அம்மனின் சந்நிதியை வலம் வந்து நேர்த்திக்கடனையும் செலுத்துகிறார்கள் பக்தர்கள்.

ஆடி அம்மன் தரிசனம்: தாய்க்கொரு தாயாக இருக்கும் தாயமங்கலம் முத்து மாரியம்மன்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்க பெண்கள் இங்கு வந்து செவ்வாய், வெள்ளி, ஞாயிறுகளில் ஆயிரங்கண் பானை எடுத்தல், அக்னிச் சட்டி எடுத்தல் எனப் பிரார்த்திக்கிறார்கள். திருமண வரம் வேண்டியும், நோய்நொடிகள் நீங்கவும் இங்கு வந்து அங்கபிரதட்சிணம் செய்கிறார்கள். அலகு குத்தியும் மாவிளக்கு ஏற்றியும் இங்கு செய்யப்படும் நேர்த்திக்கடன்கள் அம்மனை குளிர்வித்து வேண்டும் வரம் வேண்டியபடியே கொடுக்க வைக்கிறது என்கிறார்கள்.

இருக்கன்குடி அம்மன் கோயில்
இருக்கன்குடி அம்மன் கோயில்

குறிப்பாக கண்கள் தொடர்பான சிக்கல்கள் உள்ளவர்கள் இருக்கன்குடி வந்து மாரியம்மனின் அருள் வேண்டினால், நோயில் இருந்து விடுபடுவதாக இங்குள்ளவர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். மேலும் மனதில் தேவையற்ற அச்சங்கள் கொண்டவர்கள் இங்கு வந்து வேண்டினால் தைரியம் பெறுவதாகவும் சொல்கிறார்கள். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் விசேஷ பூஜைகளும் வழிபாடுகளும் இங்கு நடைபெறுகின்றன. துன்பங்களால் அவதிப்படுபவர்களுக்கு இருக்கன்குடி மாரியம்மன் ஆலயம் ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது என்றால் அது உண்மை.

இருக்கன்குடி மாரியம்மன்
இருக்கன்குடி மாரியம்மன்

திருக்கோயில் அமைவிடம்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் இருக்கன்குடி கிராமம் அமைந்துள்ளது. காலை 6 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் காலை 5.30 முதல் இரவு 8.30 வரை தொடர்ந்து திறந்திருக்கும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு