Published:Updated:

எங்கள் ஆன்மிகம்: 'கொடுப்பதில் கற்பகம் எங்கள் அன்னை!'

ஆனைக்குளத்தம்மன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனைக்குளத்தம்மன்

வேலூர் - சலவன்பேட்டை ஆனைக்குளத்தம்மன்

எஸ்.ஸ்வாமிநாதன்

உறவுகளில் சிறந்தது அன்னை என்னும் உறவு. இந்த உலகில் ஓர் உயிருக்கு அம்மா என்னும் ஓர் உறவு உடன் இருந்துவிட்டால்போதும், அதுவே அனைத்து உறவுகளுமாகி அணைத்துக் காத்திடும்.

தன் குழந்தையைக் காக்கும் மண்ணுலக அன்னையரைப் போலவே இந்த குவலயத்தைக் காக்கும் அன்னை, பராசக்தி.

சக்தி வழிபாடு உலகின் தொன்மையான வழிபாடு. இந்த நாடெங்கும் அன்னை பராசக்தி வெவ்வேறு திருநாமங்களோடு அருள்பாலித்துக் காத்துவருகிறாள். குறிப்பாகத் தமிழகத்தில் அம்மன் வழிபாடு மிகவும் பிரசித்திபெற்றது. அந்த வகையில், எங்கள் குலதெய்வமாகவும் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகவும் விளங்கி வரும் ஆனைக்குளத்தம்மனின் மகிமைகள் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.

எங்கள் ஆன்மிகம்: 'கொடுப்பதில் கற்பகம் எங்கள் அன்னை!'

வேலூர் மாவட்டம், சலவன்பேட்டையில் அருளாட்சி செய்து வருகிறாள் ஆனைக் குளத்தம்மன். வேலூர் பழைய பஸ் நிறுத்தத்தில் இருந்து 1.5 கி. மீ தொலைவில் உள்ளது அன்னையின் ஆலயம்.

இந்தத் தேவி, கருணையே வடிவானவள்; அதேபோல் நீதி வழங்குதலிலோ கண்டிப்பான அதிகாரி. ‘அம்மா’ என்று இவள் வாசலில் கதறி நிற்போருக்கு அபயம் அளிக்காமல் இவள் சும்மா இருந்ததில்லை.

எஸ்.ஸ்வாமிநாதன்
எஸ்.ஸ்வாமிநாதன்

கொடுப்பதில் கற்பகம் எங்கள் அன்னை, நோய்களைத் தீர்ப்பதில் சிறந்தவள் எங்கள் வேப்பிலைக்காரி. பூவாரம் சூட்டி வழிபடு வோருக்கு இந்தப் பூகோள நாயகி எப்போதும் அருள்செய்வாள். அன்னையின் கோயில் பற்றிய செவிவழிச் செய்தி பலவுண்டு. அவற்றுள் சில...

வேலூரில் உள்ள கோயில்களில் மிகப் பழைமையானது இந்தக் கோயில். ஒரு காலத்தில் வேலூர் நகரமாக மாறுவதற்கு முன்பே, பரந்து விரிந்த குளக்கரையில் கிராம தெய்வமாக வீற்றிருந்தவள் இந்த ஆனை குளத்தம்மன். இவள் கோயிலின் அருகே அன்னை அங்காளியும் வீற்றிருக்கிறாள்.

எங்கள் ஆன்மிகம்: 'கொடுப்பதில் கற்பகம் எங்கள் அன்னை!'

ஆனைக் குளத்தம்மனே இந்த ஊரின் ஆதி தெய்வம் என்பதால், இந்த ஊரைச் சுற்றியுள்ள ஏழு பேட்டை அம்மன் கோயில்களிலிருந்தும் அன்னைக்கு மரியாதை செய்தபிறகே, அந்தந்தக் கோயில்களில் திருவிழா தொடங்குவது வழக்கம்.

சமணமும் பௌத்தமும் தொண்டை மண்டலத்தில் ஓங்கியிருந்த 5-ம் நூற்றாண்டில் கூட இந்த அம்மன் கோயில் சிறப்புற்று விளங்கியதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலுக்குப் பக்கம் அமணங் குட்டை குளத்தருகே உள்ளது காசி விஸ்வநாதர் கோயில். இதன் அருகே பல சமணப் படுகைகளும் சிற்பங்களும் கல்வெட்டுகளும் காணப் படுகின்றன. ராஜராஜ சோழனின் முன்னோர்களின் சமாதிகள் இந்த ஊருக்கு அருகே உள்ள மேல்பாடியில் காணப்படுகின்றன. ராஜராஜனின் கொடிக்கால் வழி உறவுகள் இந்தப் பகுதியை ஆண்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

எங்கள் ஆன்மிகம்: 'கொடுப்பதில் கற்பகம் எங்கள் அன்னை!'

வேலங்காடாக இருந்த இந்தப் பகுதியில் ஆதியில் வந்து அமர்ந்த இந்த தேவி புரிந்த அற்புதங்கள் அநேகம்.

ஒருகாலத்தில் இந்தப் பகுதி நீண்ட குளமும் அதைச்சுற்றி வயலுமாக இருந்தது. ஒருநாள் இந்தக் குளத்தில் யானை ஒன்றைக் குளிப்பாட்டினான் பாகன். வெயிலினால் உண்டான சோர்வில் அவனுக்குப் பசி எடுக்க ஆரம்பித்தது. அப்போது அந்த வழியாகச் சென்ற வாலைக்குமரி ஒருத்தியிடம் தன் பசியைச் சொல்லி உணவு கேட்டான்.

எங்கள் ஆன்மிகம்: 'கொடுப்பதில் கற்பகம் எங்கள் அன்னை!'

வயலில் வேலை செய்யும் தன் அம்மாவுக்கு உணவு எடுத்துக் கொண்டு போன அந்தப் பெண், பாகனின் நிலை கண்டு அவனுக்கு இரங்கி உணவளித்தாள். பின்பு சிறுது நேரம் அந்த யானையிடம் விளையாடிக் கொண்டிருந்துவிட்டுப் பிறகு காலியான கலயங்களை எடுத்துக் கொண்டு அம்மாவிடம் சென்றாள். உணவு இல்லாததைக் கண்டு கோபம் கொண்ட தாய் நடந்ததைக் கூறுமாறு கேட்டாள். உடனே, அந்தப் பெண்ணும் நடந்ததைக் கூறினாள்.

பசி மயக்கத்தில் இருந்த அந்தத் தாய் தன் மகளை சரமாரியாகத் திட்ட ஆரம்பித்தாள். ‘இப்படி ஏமாளியாக இருப்பதைவிட எங்காவது சென்று ஒழிந்துபோ!’ என்று வைதாள். இதைக் கேட்ட அந்தப் பெண் மனம் வெறுத்தாள். ‘எதற்கு இனி வாழ்க்கை’ என்று சொல்லிக் குளத்தில் விழுந்து உயிர்விடச் சென்றாள்.

எங்கள் ஆன்மிகம்: 'கொடுப்பதில் கற்பகம் எங்கள் அன்னை!'

பசித்தவனுக்கு உணவிட்ட கருணையின் வடிவான அந்தப் பெண்ணையா அன்னை ஆதிசக்தி விட்டுவிடுவாள்... குளத்தில் விழப் போனவளைத் தடுத்து நிறுத்திக் காட்சி கொடுத்தாள்.

“நீ சாக வேண்டியவள் இல்லை மகளே; என்னோடு இருந்து ஊரைக் காக்க வேண்டியவள்” என்று கூறி அந்தப் பெண்ணை தன்னோடு இணைத்துக்கொண்டு விட்டாள். அன்றிலிருந்து ஆனைக் குளத்தம்மனாக அந்தப் பெண் உருமாறி ஊருக்கு நல்லருள் புரிந்துவருகிறாள் என்கிறார்கள் ஊர்ப் பெரியோர்கள்.

ஆனை நீராடிய அகண்ட அந்தக் குளம் இன்று குட்டையாகிவிட்டது. எனினும் ஆடி மாத விழாவுக்கு முன்பாக நிகழும் அம்மன் புறப்பாடு இந்தக் குளத்தில் இருந்துதான் தொடங்குகிறது. குளத்திலிருந்து யானை அலங்கரிக்க அம்மனின் ஊர்வலம் தொடங்கும். இந்தத் திருக்குளத்துக்கு மற்றுமொரு புராண சிறப்பும் உண்டு.

எங்கள் ஆன்மிகம்: 'கொடுப்பதில் கற்பகம் எங்கள் அன்னை!'

சிவ பூசையைத் தவறாகவும், சிரத்தையின்றியும் செய்ததால் தேவலோகத்து யானையான ஐராவதம் சாபத்துக்குள்ளானது. அந்தச் சாபம் தீர புனிதமான இந்தத் தலத்துக்கு வந்து குளம் ஒன்றை உருவாக்கிப் புனித நீராடி காசி விஸ்வநாதரை நோக்கித் தவம் செய்தது. ஐராவதத்தின் தவத்தில் மகிழ்ந்த ஈசன், காசிவிஸ்வநாதராகக் காட்சி கொடுத்து சாப விமோசனம் அளித்தார்.

ஐராவதத்துக்கு அருளிய காசி விஸ்வநாதரின் ஆலயம் இன்றும் குளத்தின் ஒரு கரையில் உள்ளது. யானை உருவாக்கிய குளம் என்பதால் அதற்கு `ஆனைக் குளம்' எனப் பெயர் வந்தது. இங்கு கோயில் கொண்டுள்ள அம்மன் `ஆனை குளத்தம்மன்' எனப் பெயர் பெற்றாள் என்றும் ஒரு திருக்கதை உண்டு.

பிரம்மனின் சிரசைத் துண்டித்த ஈசனார், பிரம்மனின் கபாலத்தைக் கரத்தில் தாங்கி பிட்சாடனர் ஆனார். அன்னை பார்வதி, சரஸ்வதியால் சபிக்கப்பட்டு அங்காளியானாள்.

மேல்மலையனூருக்கு சக்தி போவதற்கு முன்னால், இங்குள்ள வேலமரக்காட்டில் தங்கியிருந்தாள். ஈசனின் சாபம் தீர அன்றாடம் அங்காளி பிட்சையிட்டும் வந்தாள்.

ஒருமுறை ஈசனுக்குப் பிட்சையிடத் தாமதிக்கவே ஈசன் கோபம் கொண்டு கிளம்பி விட்டார். அவரைப் பின்தொடர்ந்தாள் சக்தி. சிவனார் இங்குள்ள காசி விஸ்வநாதர் கோயில் இருக்கும் இடத்துக்கு அருகே மறைந்து போனார். இதைக் கண்ட அன்னை அங்காளியும் குளத்தின் அருகிலேயே தங்கி சிவனைத் தொழுதபடி கோயில் கொண்டாள்.

ஆனைக் குளத்தம்மனையும் ஆதிசக்தியான அங்காளம்மனையும் வணங்கி வழிபட்டால் துன்பங்கள் தீர்ந்து இன்பம் பிறக்கும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கை. பசித்த பாகனுக்கு உணவிட்ட தேவி இவள். அதனால் அன்னதானப் பிரியையாக, அன்னதானம் செய்து தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அருளும் தயாளகுணம் கொண்டவளாக விளங்குகிறாள் அன்னை.

அதே வேளையில் கன்னிதெய்வமாக விளங்கு வதால் மிகவும் உக்கிரமாகவும் இருக்கிறாள். தீயவர்கள் இவள் பார்வையில் பட்டால் அவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டாள். தன் பக்தர்களுக்குத் துன்பம் விளைவிப்பவர்களை ஆங்காரமாய் தண்டிக்கும் காளி இந்த ஆனைக் குளத்தம்மன்.

பலருக்குக் குலதெய்வமாகவும், ஒருமுறை வந்து வழிபட்டவர்களுக்கு இஷ்ட தெய்வமாகவும் விளங்கும் அன்னை ஆனைக் குளத்தம்மனை நீங்களும் ஒரு முறை வந்து வழிபட்டு நல்லருள் பெறுங்கள். அன்னை அனைத்து நலன்களையும் உங்களுக்கு அருள்வாள்.