கும்பகோணத்துக்கு அருகேயுள்ளது துக்காச்சி கிராமம். இங்குதான் புகழ்மிக்க ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அதன் புராணப் பெருமைகளையும் வரலாற்றுச் சிறப்பினையும் அறியும் அனைவருக்குமே அந்தக் கோயில் ஈசனை தரிசனம் செய்யும் ஆவல் மேலோங்கும். அப்படியான ஆவலுடன் அந்தத் தலத்துக்குச் சென்றாலோ, பெரும் வருத்தமே மிஞ்சும். காரணம், மாமன்னர்கள் பலரும் போற்றிச் சிறப்பித்த அந்தப் பேராலயம் தற்போது பொலிவிழந்து கிடக்கிறது!
பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜயநகர அரசர்கள் போன்றோர் எத்தனையோ போரை நிகழ்த்தியுள்ளார்கள். ஆனாலும் இவர்கள் யாரும் பகைநாட்டில் உள்ள திருக்கோயில்களைச் சேதப்படுத்தியதேயில்லை. மாறாக, போற்றிப் பராமரித்துள்ளார்கள். கோயில்கள் கல்விக் கூடங்களாகவும், ஆதூரச் சாலைகளாகவும், சிற்பங்கள் நிறைந்த கலைப்பொக்கிஷங்களாகவும் பாதுகாக்கப்பட்டன.

ஆனால்...
அந்நியர்கள் இந்த மண்ணுக்குப் படையெடுத்து வந்தபோது, நம் செல்வங்களைக் கொள்ளைகொள்வதையும் நம் அடையாளங்களைச் சிதைப்பதையுமே நோக்கமாகக் கொண்டனர். அப்போது சிதைவுக்குள்ளான கோயில்கள் எண்ணிலடங்காதவை. அப்படி ஓர் ஆலயம்தான் துக்காச்சி ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகுலோத்துங்கச் சோழன் காலத்தில் உருவாக்கப்பட்டு விக்கிரமச் சோழன் காலத்தில் புகழ்பெற்று விரிவாக்கம் செய்யப்பட்டு, பெயரும் புகழுமாய்த் திகழ்ந்த ஆலயம் இது. இங்குதான் முதன்முதலில் சரபேஸ்வரர் வழிபாடு தொடங்கப்பட்டது என்கிறார்கள். மேலும், இந்தத் தலத்து ஈசன், வேண்டும் வரம் அருளும் வள்ளல் என்று போற்றுகிறது தலவரலாறு.

விக்கிரமச் சோழனுக்கு மேனியெங்கும் தீராத வெண்புள்ளிகள் தோன்றின. மன்னனே ஆனாலும் மருத்துவர் கைவிட்டால், அவனுக்குத் துணை அந்த மகாதேவன்தானே. தன் துயர் நீங்குமாறு சிவாலயங்கள்தோறும் சென்று தொழத்தொடங்கினான். அவன் மேல் கருணை செய்யத் திருவுளம்கொண்ட ஈசன், அவன் கனவில் தோன்றி வழிகாட்டினார்.

ஆபத்சகாயேஸ்வரரார் அருள்புரியும் தலத்தினைக் கனவில் காட்டி, அங்கு வந்து ஒரு மண்டலகாலம் பூஜை செய்யுமாறு பணித்தார். விக்கிரமச் சோழனும் துக்காச்சிக்குச் சென்று வில்வதளம் கொண்டு 48 நாள்களும் பூஜை செய்தான். வில்வம்போல மருந்தும் விஸ்வநாதனைப் போன்ற தெய்வமும் இந்த உலகில் இல்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில், சோழனின் நோய் தேய்ந்து மறைந்தது. மனம் மகிழ்ந்த சோழன் சிவனாரின் ஆலயத்தைச் சிறப்பிக்கச் செய்தான். இந்த நிகழ்ச்சிக்குப் பின் நாடெங்குமிருந்து மக்கள் இந்த ஆலயத்துக்கு வந்து பரமேஸ்வரனை வேண்டி இங்கு வழங்கப்பட்ட மூலிகைப் பிரசாதத்தை உட்கொண்டு, தங்களைப் பற்றியிருந்த நோய்கள் பறந்தோட ஈசனைப் பிரார்த்தித்துச் சென்றனர் என்கிறது தலவரலாறு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வில்வம்போல மருந்தும் விஸ்வநாதனைப் போன்ற தெய்வமும் இந்த உலகில் இல்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் விக்கிரம சோழனின் நோய் தேய்ந்து மறைந்தது. எல்லாம் ஈசன் செயலன்றோ!
இத்தகைய பெருமைகளை உடைய ஆலயம்தான் இன்று நிலைகுலைந்து காணப்படு கிறது. கம்பீரமான ஐந்துநிலைக் கோபுரம் இன்று ஒருநிலைகூட இல்லாமல் இருக்கிறது. இந்தக் கோபுரத்தின் அமைப்பு மிகவும் தனித்துவமானது. இந்தக் கோபுரத்தில் தற்போது எஞ்சியிருக்கும் சிற்பங்களின் நேர்த்தியே நம்மை பிரமிக்கவைக்கிறது. குறிப்பாக, ஆனை உறித்த தேவனின் சிற்பம் அற்புதம். எனில், அன்றைய காலத்தை நினைத்துப்பாருங்கள்!

கோபுரத்தின் நடுவே வேறெங்கும் காண்பதற்கு அரிய அமைப்பான நான்கு கருங்கல் தூண்கள், கோபுரத்துக்கு இடதுபுறத்தில் திகழும் மண்டபம் மிக அழகு. இந்த மண்டபத்தில் காணப்படும் சிற்பங்கள் கலையழகுடன் வடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அருகில் நெருங்கி அவற்றைக் காண அச்சமும் சூழ்கிறது. அந்த அளவுக்கு இடிந்துவிழும் நிலையில் உள்ளன என்றே சொல்லலாம்.

கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத் திருமேனியராக எழிற்காட்சி தருகிறார், ஆபத் சகாயேஸ்வரர். அவரின் எழில் தரிசனத்தால் நம்முள் எழுந்த பரவசம் குறையாமல், அம்பிகை சந்நிதிக்குச் சென்றோம். தென்திசை நோக்கிய சந்நிதியில் அம்பிகை சௌந்தர்ய நாயகியாக அருள்பாலிக்கிறாள். பெயருக்கு ஏற்றார்ப்போல அன்னையின் சௌந்தர்யம் மனத்தை நிறைக்கிறது.
துர்கை ஆட்சி செய்த தலம் என்பதால் இந்த ஊருக்கு ‘துக்காச்சி’ என்ற பெயர் ஏற்பட்டது என்கிறார்கள். மகிஷாசுரனை வதம் செய்த துர்கை கோபாவேசத்தில் அசுரனின் குருதியை அள்ளி அருந்தினாள். அதனால் அன்னைக்குக் குண தோஷம் ஏற்பட்டது. அதை மாற்றியருளுமாறு துர்கை, சிவபெருமானிடம் வேண்டினாள்.
`பூலோகத்தில் அரிசொல் (அரசலாறு) ஆற்றங்கரையின் வடபாகத்தில் பாதிரி மரத்தடியில் யாம் ஆபத்சகாயேஸ்வராகக் கோயில் கொண்டுள்ளோம். என்னைப் பாதிரிப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டால், அனைத்து தோஷமும் நீங்கும்' என்று கூறியருளினார் ஈசன். அன்னையும் அதன்படி இத்தலத்துக்கு வந்து ஆபத்சகாயேஸ்வரரைப் பூஜித்துத் தன் சாபம் நீங்கப் பெற்றாள் என்கிறது புராணம். இந்தத் துர்கையை வேண்டிக்கொள்ள சத்ருபயம் நீங்கி, மனத்தில் தைரியம் பிறக்குமாம். அஷ்டபுஜங்களோடு இங்கு வீரத் திருக்கோலத்துடன் காட்சியருள்கிறாள், சிவதுர்கை.

மகாமண்டபத்தில் சரபேஸ்வரர் எழுந்தருளியிருக்கிறார். இந்தத் தலத்தில்தான் வாராஹிக்கும், துர்கைக்கும் சரபேஸ்வரர் தன் திருக்கோலத்தின் தத்துவத்தை விளக்கியருளினார். எனவே, அனைத்து சரபேஸ்வரத் தலங் களிலும் முதன்மையானதாக இக்கோயில் கருதப்படுகிறது. கோஷ்டத்தில் அருளும் நடராஜரின் கற்திருமேனி அற்புதம். இதைத் தட்டினால் எழும்நாதம் வெண்கலம்போல ஒலிக்கிறது. இத்தனை மகிமைகள் வாய்ந்த இந்தத் தலம் ஒருகாலத்தில் ஏழு பிராகாரங்களோடு பிரமாண்ட ஆலயமாகத் திகழ்ந்ததாம். ஆனால் இன்றோ, ஒரே ஒரு பிராகாரம் மட்டுமே எஞ்சியிருக்கிறது.
இந்த ஆலயத்தின் சிறப்புகள் குறித்தும் இது புனரமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஏற்கெனவே 26.11.13 தேதியிட்ட சக்தி விகடன் இதழில் `ஆலயம் தேடுவோம்' பகுதியில் விரிவாக எழுதியிருந்தோம். அதன் பலனாக அங்கு திருப்பணிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வேலையும் தொடங்கப்பட்டன. ஆனால், ஏதோ காரணத்தால் நிறுத்தப்பட்டுவிட்டது. இதுகுறித்து கோயிலில் பணியாற்றும் கல்யாணசுந்தர குருக்களிடம் பேசினோம்.

“2016-ல் கும்பாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து திருப்பணியும் தொடங்கியது. ஆனால் ‘திருப்பணிக்குப் பயன் படுத்திய கருங்கற்கள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலின் புனரமைப்புக்கு உகந்தவை அல்ல’ என்று தொல்லியல் துறை தடை ஆணை வாங்கிப் பணிகளை நிறுத்திவிட்டது. தற்போது போதுமான நிதி ஒதுக்கீடு செய்து, தரமான பொருள்களைக் கொண்டு, கும்பாபிஷேகப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன” என்றார்.
திருக்கோயிலை - இறைவனை வீடியோ வடிவில் தரிசிக்க இங்குள்ள QR Code-ஐ பயன்படுத்தவும்.

அரும்பாடுபட்டு பழங்கால மன்னர்கள் அமைத்த ஆலயங் களைப் பேணிக்காப்பது நம் கடமை. நாம் அனைவருமே துக்காச்சி கோயிலின் திருப்பணியில் பங்குகொள்ள வேண்டும். மாமன்னர்கள் வழிபட்ட ஆபத்சகாயரை மீண்டும் புதுப்பொலிவோடு ஆலயத்துள் எழுந்தருளச் செய்து ஆராதித்து அவரின் பேரருளுக்குப் பாத்திரர் ஆவோம்.