
சபரிமலையில் இனி திங்கள் முதல் வெள்ளி வரை 2,000 பக்தர்களும், சனி, ஞாயிறு தினங்களில் 3,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.
கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல மகரவிளக்கு கால பூஜைக்காகக் கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. நவம்பர் 17-ம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் பல கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை உள்ள ஐந்து நாள்கள் தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஐயப்பசாமி சன்னிதானத்தில் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மகரவிளக்கு அன்று 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சபரிமலை தரிசனத்திற்காக கடந்த நவம்பர் 1-ம் தேதி ஆன்லைன் புக்கிங் தொடங்கியது. புக்கிங் தொடங்கிய 2 மணி நேரத்தில் அனைத்து நாள்களுக்குமான தரிசனம் முழுவதும் புக்கானது. இதனால் வேறு பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பக்தர்கள் வருகை குறைந்ததால் சபரிமலையில் வருவாயும் குறைந்தது.

இந்த நிலையில் சபரிமலையில் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேரள அரசிடம் முன்வைத்தது. மேலும் கேரள தலைமைச் செயலர் தலைமையில் நடந்த அதிகாரிகள் கூட்டத்திலும் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் தினமும் 1,000 பக்தர்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட உள்ளதாக கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பதற்கான ஆன்லைன் புக்கிங் இன்று (டிசம்பர் 2) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதற்கு முன்பு திங்கள் முதல் வெள்ளி வரை ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இனி திங்கள் முதல் வெள்ளி வரை இரண்டாயிரம் பக்தர்களும், சனி, ஞாயிறு தினங்களில் 3,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.

தரிசனத்திற்காக sabarimalaonline.org என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் பக்தர்கள் புக் செய்ய வேண்டும். எல்லா பக்தர்களும் 24 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும். கொரோனா சோதனைக்காக நிலக்கல்லில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் கொண்டுவர வேண்டும்" என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.