Published:Updated:

`ஆடிப்பூரம் தேரோட்டம்... அது பேரானந்த அனுபவம்!' - ரங்கராஜ் பாண்டே

ஶ்ரீவில்லிப்புத்தூர் தேரோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீவில்லிப்புத்தூர் தேரோட்டம்

வி.ஐ.பி ஆன்மிகம் - படங்கள்: சுரேஷ் கிருஷ்ணா

`ஆடிப்பூரம் தேரோட்டம்... அது பேரானந்த அனுபவம்!' - ரங்கராஜ் பாண்டே

வி.ஐ.பி ஆன்மிகம் - படங்கள்: சுரேஷ் கிருஷ்ணா

Published:Updated:
ஶ்ரீவில்லிப்புத்தூர் தேரோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீவில்லிப்புத்தூர் தேரோட்டம்

அனல் தெறிக்கும் பேச்சு... கனல் தெறிக்கும் வாதங்கள்... புள்ளி விவரங்களோடு அள்ளி வீசும் தகவல்கள்... என பார்வையாளர்களைத் தன் புறம் கட்டிப்போடும் கலை தெரிந்த ஊடகவியலாளர்களுள் ஒருவர் ரங்கராஜ் பாண்டே. இதுநாள் வரை அரசியலையும் நாட்டு நடப்பையும்தான் அவர் பேசி கேட்டிருப்பீர்கள். முதல் முறையாக சக்தி விகடனுக்காக ஆன்மிகம் பற்றிப் பேசுகிறார் பாண்டே.

ரங்கராஜ் பாண்டே
ரங்கராஜ் பாண்டே

ராயப்பேட்டையில் அவர் அலுவலகத்தில் நுழைந்ததுமே வரவேற்கிறது பெருமாளின் மோகினி அவதார ஓவியம். அவருடைய மகள் வரைந்தது என்றார். ஆன்மிகத்தைப் பற்றிப் பேசவேண்டும் என்றதும் சிறு முறுவலுடன் பேசத் தொடங்கினார். சொந்த ஊர் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பற்றிப் பேசும்போதே முகம் பிரகாசமாகி, சிறு பிள்ளையைப் போல குதூகலம் கொப்புளிக்கிறது.

``ஆன்மிக ஈடுபாடு எந்த வயதில், யாரால் ஏற்பட்டது?’’

``அது என் பிறப்பிலேயே வந்ததுன்னு சொல்லலாம். எங்களுக்குப் பூர்விகம் பீகார் என்றாலும், நான் பிறந்தது இரண்டு ஆழ்வார்கள் அவதரித்த ஶ்ரீவில்லிபுத்தூரில். அதுவும் ஆண்டாள் கோயிலில் வாசலில், அந்த அம்மாவின் காலடியில்... ஶ்ரீரங்கமன்னாருடைய ரேவதி நட்சத்திரத்தில்!

ஶ்ரீரங்கத்தின் ரங்கநாதர்தான் எங்க ஊரில் ஆண்டாளைத் திருமணம் செய்து ரங்கமன்னாராக, ரங்கராஜனாக வீற்றிருக்கிறார். அதனால்தான் எனக்கு ரங்கராஜன்னு பெயர் வெச்சாங்க. ஶ்ரீஆண்டாள் அம்மாவும் நானும் பக்கத்துவீட்டுக்காரங்கன்னுகூடச் சொல்லலாம். ஏன்னா, ஆண்டாள் பிறந்த நந்தவனத்தின் சுற்றுச் சுவரும் எங்க வீட்டுச் சுவரும் ஒரே சுவர்!

அதுமட்டுமல்லாமல் வீட்டுக்கு அருகிலேயே கோயில் என்பதால், அப்பா, அம்மா, அக்காவுடன் தினமும் கோயிலுக்குப் போறது... அப்புறம் பெரியவனானதும் தோழர்களுடன் போறது... இப்படிக் கோயிலும், ஆன்மிகமும், பக்தியும் எங்களுக்குப் பிரிச்சுப் பார்க்க முடியாத ஒன்றாக அமைஞ்சிடுச்சுன்னு சொல்லலாம்.

இன்னொரு விஷயம்... ஆண்டாள் கோயிலிலிருக்கும் அலங்காரம் ராஜகோபால பட்டர்தான் என்னை மாதிரிப் பசங்களை ‘சானலைஸ்’ பண்ணி, ஓர் ஒழுங்குக்குக் கொண்டுவந்தார். எனக்கு ஆன்மிகத்தின் மேல் தீவிரப் பற்று வர வைத்ததில் அவருக்கும் முக்கிய பங்கு உண்டு! பக்தி எனக்குப் பிறப்பிலேயே இருந்தாலும், திருத்தியமைக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டது அவரால்தான்!’’

``ஶ்ரீவில்லிபுத்தூர் என்றாலே ஆடிப்பூரமும் தேரோட்டமும் விசேஷம். நீங்கள் அந்த ஊர்க்காரர். அந்தத் திருவிழாவை பற்றி...’’

``எங்க ஊரில் 365 நாளுமே திருவிழாதான்! ஆடி, புரட்டாசி, மார்கழி என்று எல்லா தமிழ் மாதங்களிலும் உற்சவம் நடந்துகொண்டேதான் இருக்கும். அவற்றுள் ரொம்ப விசேஷமானது ஆண்டாள் அவதரித்த ஆடிப் பூரம். அன்னைக்குத்தான் தேரோட்டமும் நடக்கும்.

முதல் நாள் ‘செப்புத்தேர்’ என்று ஒரு சின்னத் தேர் சுற்றி வரும். 9-ம் நாள் திருவிழாதான் தேரோட்டம். அந்தத் தேருக்கு ஒன்பது சக்கரம். அஞ்சு ஆள் உயரத்துக்கு பிரமாண்டமா இருக்கும். விழான்னு வந்துட்டா போதும் குஷிதான்... எல்லாவிதமான குறும்பும் பண்ணுவோம்... தேரில் ஏறி உட்காருவோம்... உள்ளுக்குள்ளேயே ஏறிப் போவோம்... அந்தக் காலத்தில் 20, 30 நாள் தேர் இழுப்பாங்க. அந்த 30 நாளும் உள்ளூர் விடுமுறை விட்டுருவாங்க. எங்களுக்கெல்லாம் ஒரே ஜாலிதான்.

`ஆடிப்பூரம் தேரோட்டம்... 
அது பேரானந்த அனுபவம்!'
- ரங்கராஜ் பாண்டே
`ஆடிப்பூரம் தேரோட்டம்... 
அது பேரானந்த அனுபவம்!'
- ரங்கராஜ் பாண்டே

ஸ்கூல், காலேஜ், சுத்துப்பட்டு ஊர்களில் இருக்கிற டெக்ஸ்டைல் மில்கள், கம்பெனிகள் ஒண்ணுவிடாம எல்லா இடங்களில் இருந்தும் தேர் இழுக்க ஆள் கூப்பிடுவாங்க. நடுவில் இருக்கும் ஏழு வடங்களை ஆண்களும், இரு புறமும் கடைசியாக இருக்கும் வடங்களைப் பெண்களும் இழுப்பாங்க. தேருக்குப் பின்னால நெம்புதடி போடும் ஆட்களுக்கெல்லாம் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் கொடுப்பாங்க.இப்படி அமர்க்களமா மாசக்கணக்கில் நடந்த தேரோட்டம், நாலு நாள், மூணு நாள்ன்னு சுருங்கி, இப்போது ஒரு நாள் தேரோட்டம் ஆயிடுச்சு!

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து... இப்போ வேலை காரணமாக ஶ்ரீவில்லிபுத்தூரை விட்டு வெளியே வந்துட்ட பிறகும்கூட... ஆண்டுதோறும் ஆடிப்பூரத்துக்கு ஊருக்குப் போயிடுவோம். பத்து நாள் திருவிழாவும், ஆண்டாள் தேரின் கம்பீரமும், அது அசைந்தாடி வரும் அழகும், தேருக்குள்ளே ஆண்டாளின் சௌந்தர்யமும், ஜேஜேன்னு திகழும் கூட்டமும்... அடடா அது பேரானந்தம்... !’’

``வீட்டில் தினமும் பூஜை உண்டா?’’

``நித்தமும் உண்டு. விரிவான பூஜையாக இல்லாமல், ‘சாமி கும்பிடறது’ என்ற அளவில் இருக்கும். எங்கப்பாவெல்லாம் தீவிர பக்திமான். திருமணத்தின்போது போடப்பட்ட கங்கு அணையாமல், கடைசி வரை கூட வரணும்கிறதுக்காக நித்திய ஔபாஷாண ஹோமம் பண்றவர். அந்தக் கனல் அணையாமல் இருந்துட்டே இருக்கும். அவர் அளவுக்கெல்லாம் இல்லைன்னாலும் சாமி கும்பிடாமல் நான் வெளியே கிளம்பறது இல்லை. நெற்றியில் சூர்ணம் இல்லாமல் இருப்பதில்லை. என்ன அவசர வேலைன்னாலும் சாமி கும்பிட்டுட்டு, காயத்ரி மந்திரம், ராம நாமம் எல்லாம் சொல்லிட்டுத்தான் கிளம்புவேன்.

என் மனைவி ரொம்ப பக்தியா ரெண்டு வேளையும் விளக்கேத்தி பூஜை பண்ணுவாங்க. குழந்தைகளும் ஸ்லோகம் எல்லாம் பாராயணம் பண்ணுவாங்க. எப்போதுமே சாமி கும்பிட்டுக்கொண்டே இருப்பதுதான் எங்களின் பூஜை நடைமுறை!’’

``குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்ற அனுபவங்கள்..?’’

``குடும்பத்துடன் அதிகம் போறது கோயில்களுக்குத்தான். இந்த லாக் டவுன் காலகட்டத்தில் நாங்க மிஸ் பண்ணினது கோயில்களுக்குப் போறதைத்தான். 108 திய்வதேசங்களில் இதுவரை 100 திவ்யதேசம் சேவிச்சிருக்கோம். பொதுவாக க்ஷேத்ராடனம் எல்லாம் ரிடையர் ஆன பிறகுதான் போகணும்னு நினைச்சிட்டிருக்காங்க. நாங்க அப்படியில்லை. லீவு விட்டாச்சுன்னா, எந்தக் கோயிலுக்குக் கிளம்பலாம்னுதான் பார்ப்போம். குழந்தைகளின் முழு ஆண்டு விடுமுறையில்கூட, ‘பாண்டிய நாட்டு திவ்யதேசம் முடிச்சிடலாமா, சேர நாட்டு திவ்யதேசம் பார்த்துடலாமா’ங்கிற ரீதியில் பேசி, ரவுண்டு கட்டி போய்ட்டு வருவோம். வடக்கே பத்ரிநாத், கேதார்நாத் வரை பார்த்துட்டு வந்தாச்சு!’’

`ஆடிப்பூரம் தேரோட்டம்... 
அது பேரானந்த அனுபவம்!'
- ரங்கராஜ் பாண்டே

``குலதெய்வக் கோயிலுக்குப் போகும் பழக்கம் இருக்கிறதா?’’

``நாங்க பீகாரிலிருந்து இடம்பெயர்ந்து தெற்கே வந்தவங்க என்பதினாலோ என்னவோ, எங்களுடைய குலதெய்வம் பற்றி அவ்வளவு தெளிவு இல்லை. குலதெய்வ வழிபாடு பற்றி வீட்டில் பெரிசா சொல்லப்பட்டதில்லை. ஆனால், பீகாரில் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் எங்கள் வீட்டில் ஓர் அறையில் மண்ணால் எழுப்பப்பட்ட சிவலிங்கம் போன்ற ஓர் உருவம் வெச்சிருப்பாங்க. அதை ‘பாபா அறை’ன்னு சொல்வாங்க.

‘பாபா’ என்னும் வார்த்தைக்கு தாத்தா, சாமி, முன்னோர் என்று பல அர்த்தங்கள் உண்டு. எப்போதும் பூட்டியே இருக்கும் அந்த அறைக்குள் சாமி கும்பிட மட்டும்தான் போவோம். எங்க குடும்ப வம்சாவளியைத் தவிர வேறு யாரையும் அறைக்குள் விட மாட்டாங்க. ஒருவேளை அந்த ‘பாபா’தான் எங்க குலதெய்வமாக இருக்குமோன்னு இப்போ தோணுது.’’

``நீங்கள் வணங்கும் குரு யார்?’’

``இன்னொரு குரு அறிமுகப்படுத்திய குருதான் நான் வழிபடும் குரு என்று சொல்லலாம். அவர் யோகி ராம்சுரத்குமார்.

அவரை அறிமுகப்படுத்திய குரு எழுத்தாளர் பாலகுமாரன். அவருடைய எழுத்துக்களைப் படிச்சுப் படிச்சுத்தான் நான் ஓர் ஒழுங்கான எழுத்துப் பக்கமே திரும்பினேன். அவர் நாவல்களைப் படித்தபோது, அவர் வழிகாட்டியதில் வந்த குருதான் யோகி ராம்சுரத்குமார். சொல்லப்போனா எனக்கும் அந்த மகானுக்கும் தனிப்பட்ட அனுபவம் எதுவும் இல்லை. நேரடியாகப் பார்த்ததுகூட இல்லை. இன்னிக்கு வரை அந்த மடத்துக்குக் கூடப் போனதில்லை. ஆனால் அவரைப் பற்றி பாலகுமாரன் சொல்லிச் சொல்லி... ‘பாலகுமாரன் சொன்னா சரியா இருக்கும்’ என்பதால், அந்த மகான் மேல் ஓர் ஈடுபாடு. சின்ன வயசிலிருந்தே எப்போதும் ‘ராம ராம’ சொல்லும் வழக்கமுண்டு. இவர் பேரிலும் ‘ராம்’ இருக்கு. பூஜையறையில் அவர் படம் வெச்சிருக்கேன். என்னுடைய ட்ராவல் பேக்கில் என்ன இருக்கோ இல்லையோ, எப்போதும் அவருடைய படம் இருக்கும்!’’

``சிலிர்க்க வைத்த இறை அற்புதம்..?’’  

‘இதுக்கு என்னுடைய பதில் கொஞ்சம் தத்துவார்த்தமாகத் தெரியும்.என் வாழ்க்கையே ஓர் அற்புதம்தான். கடவுளை அனுதினமும் அனுபவித்துக்கொண்டே இருப்பவன் நான். ஐ ஆம் ரியலைஸிங்... ஐ ஆம் ஃபீலிங் ஹிம்! அவருடைய இருப்பை நான் முழுமையாக உணர்கிறேன். என்னைவிட நல்லாப் படிச்ச, என்னை விட அறிவும், ஞானமும், திறமையும் கொண்ட, என்னைவிட எல்லாமே தெரிஞ்ச பலர் வேறெங்கேயோ இருக்கும்போது, என்னைக் கொண்டு வந்து ஆண்டவன் உங்க முன்னால உட்கார வெச்சிக்கிறதே, அவன் அருள்தான்.

வேறெங்கேயோ இருந்த என் குடும்பத்தை அப்படியே வேரோடு பிடுங்கி ஶ்ரீவில்லிபுத்தூருக்குக் கொண்டு வந்தது, அங்கே என்னை ரேவதி நட்சத்திரத்தில் பிறக்க வெச்சது... இப்படி ஒண்ணொண்ணுமே அவனுடைய ஆசீர்வாதம்தான்! எனக்கு வாழ்க்கையில் கிடைத்த எல்லாமே வரங்கள்தான். பெரிய சவாலான விஷயங்களை எல்லாம் நான் நம்பிக்கையுடன் கையாண்டதற்கு அவன் அருளே காரணம்.

ஆகவே, குறிப்பிட்ட ஒரு விஷயத்தை கடவுளின் அற்புதம்னு சுட்டிக் காட்ட முடியல. என்னுடைய எல்லா அசைவுகளையுமே அவன்தான் தீர்மானிக்கிறான் என்பதை நான் ரொம்ப திடமாக நம்புறேன். இறையின் அனுமதி இல்லாமல் எதுவுமே சாத்தியமில்லை. ஸோ, என்னுடைய ஒவ்வொரு நாளுமே எனக்கு இறைவனின் அற்புதம்தான்!’’

கொட்டித் தீர்த்த மழை நிதானமாகத் தூறி நிற்பது போல, படபடவெனப் பேசிக்கொண்டே வந்த பாண்டே, நிறுத்தி நிதானமாகக் கூறிய அந்த வார்த்தைகள் நிறைவானவை மட்டுமல்ல; நிதர்சனமானவையும் கூட!