Published:Updated:

17 ஆண்டுகளிலேயே பழுதா.. இல்லை முறைகேடா? - அறநிலையத்துறையைச் சுற்றும் பெரிய கோயில் கொடிமர சர்ச்சை

பொன்னுசாமி அடிகளார்
பொன்னுசாமி அடிகளார்

1997-ம் ஆண்டு குடமுழக்கின்போது பெரியகோயிலுக்குள் யாகசாலை அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது கோயிலுக்கு வெளியில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இது ஆகமத்துக்கு உகந்ததா.

தஞ்சை பெரிய கோயில் கொடிமரம் மற்றும் யாகசாலை மாற்றங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி எழுந்துள்ளது. இவை ஆகம விதிகளுக்கு உகந்ததா. 2003-ம் ண்டு புதிதாக வைக்கப்பட்ட கொடிமரம் ஏன் இவ்வளவு குறுகிய காலத்துகுள் மாற்றம் செய்யப்படுகிறது என இந்துவேத மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர் பொன்னுசாமி அடிகளார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சை பெரியகோயில்
தஞ்சை பெரியகோயில்

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு தமிழ்வழியில் நடத்தக்கோரி தஞ்சாவூரில் நடைபெற்ற மாநாட்டில் இதுகுறித்துப் பேசிய பொன்னுசாமி அடிகளார், "வடமொழி மீது எங்களுக்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. தமிழ் மண்ணில் உள்ள தமிழ் சைவ கோயிலான பெரிய கோயிலில் வடமொழி ஆதிக்கம் செய்யக் கூடாது என்றுதான் சொல்கிறோம். தமிழ் ஆகம விதிப்படி கட்டப்பட்ட பெரியகோயிலுக்கு 1997-ம் ஆண்டு சம்ஸ்கிருத முறைப்படி குடமுழுக்கு நடத்தியதால்தான், அப்போது சில அசம்பாவிதங்கள் நடந்தன.

ஆரம்பத்திலேயே இது தவறானது, ஆபத்தானது என எங்கள் குருதேவர் எச்சரித்தார். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை கேட்கவில்லை. 40-க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயின. காலம் காலமாகத் தமிழ்நாட்டின் கோயில்களில் தமிழ் வழியில்தான் வழிபாடு நடைபெற்றது. இடையில்தான் சம்ஸ்கிருதம் புகுத்தப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாகப் சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு செய்துவிட்டோம், இந்த வழக்கத்தை எப்படி மாற்ற முடியும் எனச் சிலர் கேட்கிறார்கள்.

தஞ்சை பெருவுடையார் கோயிலில் பல ஆண்டுகளாக இருந்த கொடிமரத்தை 2003-ம் ஆண்டு ஏன் மாற்றினீர்கள். யாரைக் கேட்டு மாற்றினீர்கள். மக்களின் வரிப்பணத்தில் லட்சணக்கான ரூபாய் செலவில் வைக்கப்பட்ட அந்தக் கொடிமரத்தைத் தற்போது அகற்றிவிட்டு புதிய கொடிமரம் வைக்க ஏற்பாடு நடக்கிறது. அப்படியென்றால் 17 ஆண்டுகளிலேயே அந்தக் கொடிமரம் வீணாகிவிட்டதா?

பெரிய கோயில்
பெரிய கோயில்

அதற்கு யார் பொறுப்பு. அதில் என்ன முறைகேடு நடந்தது. இறைவனின் மீது உண்மையான நம்பிக்கை, பற்று உள்ளவர்கள் இந்தத் தவற்றைச் செய்வார்களா. 2003-ம் ஆண்டு வைக்கப்பட்ட கொடிமரம், ஒருவேளை நல்ல நிலையில்தான் இருக்கிறதென்றால், அதைத் தற்போது ஏன் மாற்ற வேண்டும். கொடிமரம் என்பது நீண்டகாலத்துக்குத் தரம் குறையாமல் நிலைபெற்றதாக இருக்க வேண்டும்.

1997-ம் ஆண்டு குடமுழக்கின்போது பெரியகோயிலுக்குள் யாகசாலை அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது கோயிலுக்கு வெளியில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இது ஆகமத்துக்கு உகந்ததா. இப்படியாக ஏற்கெனவே இருந்த வழக்கத்தில் பலவற்றை மாற்றியுள்ளீர்கள். எனவே, சம்ஸ்கிருத வழக்கத்தை மாற்றி, தமிழில் குடமுழக்கு செய்வதில் எந்தத் தவறும் இல்லை. இதுதான் சரியானது" என்றார்.

இதுகுறித்து விளக்கம் பெற இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டோம். கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் விளக்கம் தரும்பட்சத்தில் அது தகுந்த பரிசீலனைக்குப் பின்னர் பிரசுரிக்கப்படும்.

அடுத்த கட்டுரைக்கு