திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

அகத்தியர் களறி கற்ற வள்ளி சுனை! - வேளிமலை தரிசனம்!

வேளி மலை தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
News
வேளி மலை தரிசனம்

படங்கள்: சுடலைமணி, ஓவியம்: பத்மவாசன்

ன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் உள்ள வேளி மலை குமாரன்கோயில் மிகவும் சிறப்பு பெற்றது. கல்குளம் வட்டம் பத்மநாபபுரம் நகராட்சி எல்லையில் வேளி மலையின் அடிவாரத் தில் அமைந்துள்ளது இந்தத் தலம்.

வள்ளிதேவி நீராடிய வள்ளிச்சுனை, தினைப்புனம் காத்த வள்ளிச்சோலை, முருகப் பெருமான் கிழவனாக காட்சியளித்த கிழவன் சோலை ஆகியவை வேளிமலைக்குப் பெருமை சேர்க்கின்றன.

வேடர் குலமான வேளிர்கள் வசித்த மலை என்பதால் வேளி மலை எனவும், முருகனுக் கும் வள்ளிக்கும் காதல் வேள்வி நடந்த மலை என்பதால் வேள்வி மலை எனவும் பெயர் பெற்றது என்கிறார்கள் அடியார்கள்.

திருமணத்தைக் கேரளத்தவர் `வேளி' என்று சொல்வார்கள். ஆகவே இது வேளி மலை எனப் பெயர் பெற்றது; முருகவேளுக்கு உகந்த மலை ஆதலால் வேளி மலை என்று பெயர்பெற்றது எனும் தகவல்களும் உண்டு.

வேளிமலையின் மேற்கு பக்கம் வள்ளிச் சோலை, தினைப்புனம், வள்ளியாறு ஆகியவையும் கிழக்குப்பக்கம் வள்ளியூர், நம்பித் தலைவன் பட்டயம், நம்பியான் விளை ஆகிய ஊர்களும் அமைந்துள்ளன. ஆகவே, வள்ளியம்மை வாழ்ந்தது வேளிமலைப் பகுதியே என்பதை உறுதி செய்யலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

கந்தபுராணத்தின் அடிப்படையில் குமரியி லேயே வள்ளி வாழ்ந்த இடங்கள் உள்ளன; இதனால் வள்ளித் திருமணம் தொடர்பான சம்பவங்கள் நடந்தது, குமரி பெருந்துறையிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலுள்ள வேளிமலையிலேயே என்றும் ஒரு நம்பிக்கை உண்டு.

வேளிமலை முருகன் கோயிலில் வேங்கை மரத்துக்கென்று தனிச் சந்நிதி உள்ளது. அதற்குத் தினமும் பூஜை நடைபெறுகிறது. ஆக, முருகன் வள்ளியை மணம் புரிய வேங்கையின் உருவமாகி நின்ற இடம்தான் வேளிமலை என்று கூறப்படுகிறது.

வேங்கை சந்நிதிக்கு அருகில் நடராஜர் சந்நிதியும் உள்ளது. இந்த அமைப்பு ‘வேங்கை உரித்த பராபரன் மாமகன் வேங்கை உருக் கோளவே’ என வரும் கந்த புராண வரிகளை நமக்கு நினைவூட்டுகிறது.

வேளிமலை
வேளிமலை
வேளி மலை
வேளி மலை
வள்ளிச் சுனை
வள்ளிச் சுனை

முன்னொரு காலத்தில் குமரமுனி என்ற முனிவர் இங்கு வாழ்ந்தார். அவர் தமது இறுதி காலத்தில் பிடிச் சாம்பலாக மாறி, குமாரக் கோயிலில் சமாதியானார். குமர முனி அடங்கிய காரணத்தினால் குமார கோயில் என வழங்கலாயிற்று என்றும் கூறுவர்.

கிருஷ்ண பக்தர்களுக்குப் பிருந்தாவனம் எப்படியோ, அப்படி முருக பக்தர்களுக்கு வேளிமலை என்பர். முருகன் வள்ளியை மணந்த தலம் ஆதலால், வேளிமலையின் உச்சியிலும் அடிவாரத்திலும் முருகனுடன் வள்ளி மட்டுமே காட்சி தருகிறார்.

வள்ளியின் குலத்தினர் தற்போதும் பங்குனி அனுஷ நட்சத்திர தினத்தன்று வள்ளித் திருமணம் நடத்துகின்றனர். திருக் கல்யாணத்தன்று குமாரகோயிலைச் சுற்றி எல்லா இடங்களிலும் திருக்கல்யாண விருந்து வைத்து, வள்ளியைத் தங்கள் வீட்டுப் பெண்ணாகவே கொண்டாடுகின்றனர்.

வேளி மலை அடிவாரம்
வேளி மலை அடிவாரம்
வேளிமலை முருகன் கோயில்
வேளிமலை முருகன் கோயில்
வள்ளிச் சுனை
வள்ளிச் சுனை
வேளி மலை குமாரகோயில்
வேளி மலை குமாரகோயில்

இந்தக் கோயிலில் மூலவர் முருகன் மற்றும் வள்ளிதேவி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்கள். கல்யாண விநாயகர் காட்சி தருவதும் இங்குதான். தமிழ்நாட்டில் வேறெங்கும் காண்பதற்கரிய `வேடுவர் படுகளம்' என்ற வைபவம் திருக்கல்யாணத்தின்போது இங்கு வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

முருகன் வள்ளியைக் கரம் பிடித்ததற்கு ஆதாரமான வள்ளிச் சுனை தற்போதும் வேளி மலையில் அழியா தடயமாகக் காணப்படுகிறது. இந்த இடத்தில்தான் முருகன் அகத்தியருக்குக் களரி பயிற்சியைக் கற்றுக்கொடுத்தார் எனக் கூறப்படுகிறது. தமிழர்தம் ஆதிக் கலையான களரியை சிவபெருமான் உமாதேவிக்கும் பிறகு முருகனுக்கும் உபதேசித்ததாக தகவல் உண்டு.

தமிழக மண்ணில் அந்தக் கலையை பயிற்றுவிக்க வேண்டும் ஆசை கொண்ட முருகன், வேளி மலையின் வள்ளிச் சுனை பகுதியில் அகத்தியருக்கு `களரி' கலையைக் கற்றுக் கொடுத்தாராம். அதன்பிறகு அகத்தியர் அதை தன் சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

வேளிமலை முருகன் கோயில் ஆர்ச் பகுதியிலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில், வள்ளிதேவியை முருகன் திருமணம் செய்ததாகக் கூறப்படும் கல் மண்டபம் ஒன்றும், வள்ளிதேவி ஒளிந்திருந்த வள்ளிக்குகையும், விநாயகர் சந்நிதியும் உள்ளன. இந்த இடத்துக்குச் சென்று வழிபட்டு வந்தால், திருமணத் தடை நீங்கும் என்பது ஐதிகம்.

இங்கிருந்து சிறிது தூரத்திலேயே வள்ளிச் சுனை உள்ளது. இந்த இடத்தில் ஓடை அருகில், வள்ளிதேவியோடு முருகப்பெருமானும், விநாயகரும் பாறைச் சிற்பங்களாக தரிசனம் தருகிறார்கள். எதிரில் உள்ள ஒர் பாறையில் சிவ லிங்கம் ஒன்று புடைப்புச் சிற்பமாக உள்ளது.

இந்த மலைப்பாதையை சீரமைத்து பாதுகாப் புடன் செல்லும் வண்ணம் வசதி செய்து கொடுத்தால், பக்தர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நாகர்கோவில் - மார்த்தாண்டம் சாலையில், தக்கலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் வேளி மலை குமாரகோயில் உள்ளது. கோயில் நடை காலை 6 முதல் 12 மணி வரை;மாலை 5 முதல் 7 மணி வரை திறந்திருக்கும். வள்ளிச் சுனைக்குச் செல்ல விரும்புவோர், தக்க பாதுகாப்புடனும் வழிகாட்டலுடனும் சென்று வரலாம்.