தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியிலிருந்து கடனாநதி அணைக்குச் செல்லும் சாலையில், சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது ஸ்ரீபரமகல்யாணி உடனுறை ஸ்ரீசிவசைல நாதர் திருக்கோயில். `தாமிரபரணி நதிக்கரையில் உள்ள பாபநாசம், ஆழ்வார்குறிச்சி, சிவசைலம், கடையம், திருப்புடைமருதூர் ஆகிய பஞ்சகுரோத தலங்களில் முக்கிய மானது சிவசைலம்' என்கிறார்கள்.

பார்வதிதேவிக்கும் சிவனாருக்கும் நடந்த திருக் கல்யாணத்தை தரிசிக்க தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் திருக்கயிலாயத்தில் கூடியதால், பூமண்டலத்தின் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது. உலகத்தைச் சமன் செய்ய அகத்தியருடன் அத்ரி மகரிஷி போன்றோரை யும் அனுப்பினார் ஈசன். தென்னகம் வந்து சேர்ந்த நிலையில், ஈசனின் சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்ய விரும்பினார் அத்ரி.

அகத்திய மகாமுனியின் ஆலோசனைப்படி, மேற்கு மலைத்தொடரிலுள்ள திரிகூடப் பர்வதத்தில் (மேற்குமலைத் தொடருடன் வெள்ளிமலை, முள்ளிமலை ஆகியவை இணையுமிடம்), தன் மனைவி அனுசுயாதேவி, மகன் தத்தாத்ரேயர், சீடர் கோரட்சகர் ஆகியோ ருடன் வந்து தவம் செய்தார் அத்ரி.

ஒரு பெளர்ணமி நாளில் பூஜைக்கான கடம்ப மலர்களைப் பறிக்க வனத்துக்குச் சென்றார்கள் அத்ரியின் சீடர்கள். வனத்தில் ஒரு பாறையின் அருகில் கடம்ப மரத்தின் அடியில், பசுக்கள் தாமாகவே பால் சுரந்துகொண்டிருப்பதைக் கண்டு திகைத்தனர். அருகில் சென்றபோது அங்கே சிறிய சிவலிங்கத்தைக் கண்டனர். அதனால் சிலிர்ப்படைந்தவர்கள், கையில் பறித்து வைத்திருந்த கடம்ப மலர்களை லிங்கத்தின்மீது தூவி வழிபட்டார்கள். பின்னர் அத்ரி மகரிஷியிடம் ஓடோடிச் சென்று விஷயத்தைச் சொன்னார்கள். சீடர்கள் சொன்ன இடத்துக்கு மனைவியுடன் சென்ற அத்ரி மகரிஷி, அங்கே சுயம்புலிங்கத்தை தரிசித்துப் பேரானந்தம் அடைந்தார்.

`அத்ரிநாம் பூஜிதம் ஸ்தம்பம் பக்தாபீஷ்ட பிரதாயகம்

வந்கேதம் சிவசைலேசம் பிண்டிகாம் ஷோடசானுதம்

சதுர்புஜாம் விசாலாட்சிம் தேவீம் பசுபதீம் முகீம்

பாசாங்குச வல்லபாம் அம்பாம் தீரைலோகிய நாயகீம் பரமகல்யாணீம்'

என்று துதித்துப் பாடி, “எம்பெருமானே அகத்தியருக்குப்

பொதிகை மலையில் திருமணக் கோல காட்சி அளித்தது போல, எங்களுக்கும் தங்களின் மணக் கோலத்தைக் காட்டியருளவேண்டும்'' என்று பிரார்த்தித்தார். சிவனார் அவர்களுக்குத் தன் மணக்கோலத்தைக் காட்டியருளினார். பெரிதும் மகிழ்ந்த அத்ரி, ``எங்களுக்குக் கிடைத்த இந்தப் பாக்கியம் இங்கு உம்மைத் தேடி வரும் பக்தர் களுக்கும் கிடைக்கவேண்டும்'' என்று வேண்டிக் கொண்டார். பகவானும் அதற்கு இசைந்தார்.

அப்போது அந்தப் பகுதியை ஆண்டு வந்தவர் சுதர்சன பாண்டியன். குழந்தைப்பேறு வேண்டி அனுதினமும் ஈசனை வணங்கிவந்த அம்மன்னரின் கனவில் தோன்றி, ``சிவசைலத்தில் சுயம்புவாகத் தோன்றியுள்ள எனக்கு ஆலயம் எழுப்பி வணங்கி வா. உனக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும்'' எனக் கூறி மறைந்தார் ஈசன். தூக்கம் கலைந்து திடுக்கிட்டு எழுந்த மன்னர், அடுத்த நாளே ஆலயம் எழுப்பும் திருப்பணியைத் தொடங்கினார்.

இந்த நிலையில், ஆழ்வார்குறிச்சி அருகிலுள்ள தற்போதைய கீழஆம்பூரில் சிவாசார்யர் ஒருவரின் கனவில் தோன்றிய ஈசன், `இவ்வூரில் வடக்குத் தெரு கிணற்றில் அம்பிகையின் சிலை உள்ளது. அதைக் கண்டெடுத்து சிவசைலத்திலுள்ள என் தலத்தில் பிரதிஷ்டை செய்' எனச் சொல்லி மறைந்தார்.

சிவாசார்யர் மறுநாள் ஊர் மக்களிடம் கனவு பற்றிச் சொல்ல... கிணற்றில் அம்பிகையின் சிலை கண்டெடுக்கப்பட்டது. சிவசைலத்தில் ஏற்கெனவே திருப்பணி நடந்து வருவதை அறிந்த ஊர்மக்கள், மன்னரிடம் விவரத்தைக்கூறி அம்பிகையின் சிலையை ஒப்படைத்து அம்பாளைப் பிரதிஷ்டை செய்தனர். சிநேகபுரி, அன்பூர் என்ற பெயர்களுடன் விளங்கிய அவ்வூர் தற்போது `ஆம்பூர்’ என்று மாறிவிட்டது.

திருக்கோயில் எழுப்பப்பட்டதிலிருந்து மன்னர், தினமும் ஆலயத்துக்கு வந்து ஸ்வாமி, அம்பாளை தரிசனம் செய்துவிட்டுச் செல்வதும், தரிசனத்துக்குப் பிறகு ஸ்வாமி, அம்பாளுக்குச் சூட்டப்பட்ட மலர்களை மன்னனுக்குச் சிவாசார் யார் பிரசாதமாக வழங்குவதும் வழக்கமாக நடந்து வந்தது. ஒருநாள்... ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மன்னர் வருவதற்குத் தாமதமானது.

`இனி மன்னர் வரமாட்டார்' என நினைத்து, அவருக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த மலர்களை நாட்டியமாடும் தேவதாசிப் பெண்ணிடம் கொடுத்தார் சிவாசார்யர். அந்தப் பெண்ணும், பயபக்தியுடன் வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு தலையில் சூடிக்கொண்டாள்.

அடுத்த சில நிமிடங்களில் மன்னன் கோயிலின் அருகில் வந்துகொண்டிருப்பதாகத் தகவல் வர, திகைத்துப்போன சிவாசார்யர் அந்தப் பெண்ணி டம் கொடுத்த மலர்களை வாங்கித் தன் வசம் வைத்துக்கொண்டார். ஸ்வாமி தரிசனத் துக்குப் பிறகு வழக்கம்போல மன்னரிடம் மலர்களை பவ்யமாகக் கொடுத்தார் சிவாசார்யர். மன்னன் அவற்றைப் பெற்று கண்களில் ஒற்றிக்கொள்ள போனபோது, நீளமான தலைமுடி ஒன்று இருந்தது.

“சிவாசார்யரே... என்ன இது? ஸ்வாமிக்குச் சூடிய மாலையில் தலைமுடி எப்படி வந்தது” என மன்னன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்த சிவாசார்யர், பின்னர் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, “மன்னா.. ஸ்வாமிக்கு நீண்ட சடைகள் இருப்பதால், அதிலிருந்து ஒட்டிக்கொண்ட முடியாக இருக்கும்” என்று சிவசைலநாதர்மீது பாரத்தைப் போட்டு ஒரு பொய்யைச் சொன்னார்.

மன்னர் வியந்தார். ``இத்தனை நாளும் கோயிலுக்கு வந்து செல்கிறேன். ஒருநாள்கூட ஸ்வாமிக்குச் சடை இருப்பதை நான் பார்த்த தில்லையே... லிங்கத்துக்குச் சடை இருக்கிறதா, இல்லையா என்பதை எனக்குக் காட்ட முடியுமா...” எனக் கேட்டான்.

“மன்னா, ஸ்வாமி சந்நிதியின் பின்புறச் சுவரில் மூன்று துளைகள் அமைக்கவேண்டும். அவற்றின் வழியாக ஸ்வாமிக்குச் சடை இருப்பதைக் காண லாம்” என்றார் சிவாசார்யர்.

“நாளையே துளையிட்டுப் பார்க்கிறேன்” எனக் கூறிச் சென்றான் மன்னன்.

சிவாசார்யர் கலங்கினார். “ஈசனே... தென்னா டுடைய சிவனே... தங்களது லிங்கத்திருமேனியில் சடை இருப்பதாக மன்னனிடம் பொய் சொல்லி விட்டேன். என்னை மன்னித்துக் காப்பாற்றிட வேண்டும்” என்று இறைவனிடம் மண்டியிட்டு வேண்டிக்கொண்டர். அப்போது, `நாளை கற்பூர ஆரத்தியின்போது சடாமுடியுடன் காட்சியளிப்பேன்' என அசரீரி ஒலித்தது.

மறுநாள் மன்னரின் ஆணைப்படி சுவரில் மூன்று துவாரங்கள் இடப் பட்டன. துவாரங்களின் வழியே மன்னர் கவனித்தார்.

கருவறைக்குள் சிவாசார்யர் கற்பூர ஆரத்தி காட்டும்போது லிங்கத்தின் பின்புறம் நீண்ட சடைமுடியுடனும், அதில் மலர்கள் சூடியிருப்பதுபோலவும் சிவசைலநாதர் காட்சியளிக்க, திகைப்புடனும் சிலிர்ப்புடனும் வணங்கிய மன்னர், சிவாசார்யரிடம் மன்னிப்பு கேட்டார்.

இப்போதும் கருவறைக்குப் பின்புறம் மூன்று துவாரங்கள் உள்ளன. அபிஷேகத்தின்போது அந்தத் துவாரங்களின் வழியாக தரிசித்தால், லிங்கத்தின் பின்பகுதியில் முடிபோன்ற கோடுகள் இருப்பதைக் காணலாம்.

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் திகழும் இந்த ஆலயத்தில், ஸ்வாமியும் அம்பாளும் மேற்கு நோக்கித் தனித்தனிச் சந்நிதிகளில் காட்சியளிக்கிறார்கள். இங்குள்ள ஈசன், அத்ரி முனிவர் வழிபட்டதால் ‘அத்திரீசுவரர்’ என்றும் மன்னனுக்குச் சடையுடன் காட்சியளித்ததால் `சடையப்பர்’, ‘சடைமுடி நாதர்’ என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள் பரம கல்யாணி நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.

கிழக்கு நோக்கி ஸ்ரீசைல விநாயகர், வலதுபுறம் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் சந்நிதிகளும், இடதுபுறம் வள்ளி தெய்வானையுடன் சுப்பிர மணியரும் அருள்பாலிக்கிறார்கள். சிவன் சந்நிதியின் இடப்புறம் தட்சிணாமூர்த்தியும், அம்பாள் சந்நிதியின் வலதுபுறம் சப்த கன்னியர் களும், சுற்றுப்பிராகாரத்தில் 63 நாயன்மார்களும் உள்ளனர். கொடிமரத்தின் முன்பு, முன் காலை ஊன்றி எழும் நிலையில் காட்சியளிக்கிறார் நந்திகேஸ்வரர்.

பங்குனி மாதம் நடைபெறும் 12 நாள் திரு விழாவே இக்கோயிலின் முக்கியத்திருவிழா. 11-வது நாள் தேரோட்டம் விமர்சையாக நடை பெறும். ஸ்வாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வருவர். அம்பாள் பவனிவரும் தேரைப் பெண்கள் மட்டுமே இழுப்பார்கள்.

மறுநாள் காலையில் ‘சப்தாவர்ணம்’ என்ற நிகழ்ச்சி நடக்கும். அப்போது, புஷ்பப் பல்லக்கில் - சிவபெருமானின் மடியில் தன் வலது கையை வைத்தபடி அமர்ந்தநிலையில் காட்சி தருவாள் அம்பிகை. இக்காட்சியைக் கண்டால் திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

சித்திரை மாதம் பெளர்ணமியில் ஆற்றங் கரையில் மீன் விளையாட்டு வைபவம் நடைபெறும். அன்று மாலையில் ஆற்று மணலைக் குழியாகத் தோண்டி, அதில் தண்ணீர் நிரப்பி ஆற்றிலிருக்கும் மீனைப் பிடித்துவிடுவார்கள். கோயிலிலிருந்து ஸ்வாமியும் அம்பாளும் ஆற்றங்கரைக்கு எழுந்தருளி, மண்தொட்டியை மூன்று முறை சுற்றி வருவார்கள். இந்த வைபவத்தை தரிசிப்பது விசேஷம் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

`மன்னனுக்குக் குழந்தைப்பேறு வழங்கிய தலம் என்பதால் இங்கு வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அம்பாளின் திருப்பெயர் பரமகல்யாணி. ஆகவே, திருமணத்தடைநீங்க இந்த அம்மனை வணங்குவது விசேஷம்.

இங்கு ஸ்வாமி, அம்பாளுக்கு 11 வகை திரவியங் களால் அபிஷேகம் செய்து, சிவசைலநாதருக்கு வெள்ளை வஸ்திரமும், அம்பாளுக்கு மஞ்சள் அல்லது சிவப்பு நிறப் பட்டும் சாத்தி, பிச்சி அல்லது மல்லிகைப் பூமாலை சூட்டி சர்க்கரைப்பொங்கல் சமர்ப்பித்து வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கும்' என்கிறார்கள் பக்தர்கள்.

அம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள உரலில், திருமணமாகாத பெண்கள் ஒரு கைப்பிடி விரலி மஞ்சளைப் போட்டு இடித்து அதில் ஒரு துளியை நெற்றியில் பூசிக்கொள்கிறார்கள். திருமணமான பெண்கள் மஞ்சள் இடிக்காமல் உரலில் உள்ள மஞ்சள்தூளை எடுத்துப் பூசிக்கொள்கிறார்கள். இதன் பலனாக கன்னிப்பெண்களுக்கு விரைவில் கல்யாணம் கூடிவரும், சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் வாய்க்கும் என்பது நம்பிக்கை.

இந்த வழிபாட்டையொட்டி வழங்கப்படும், ‘மஞ்சள் இடித்தால் மாங்கல்யம் கிடைக்கும்’ எனும் சொலவடை இந்தப் பகுதியில் பிரசித்தம்.

விவசாயிகள் மாடு, டிராக்டர் போன்றவை வாங்கினால் இத்தல நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து உளுந்து நைவேத்தியம் படைத்து வழிபடுகிறார்கள். இதனால் அந்தக் கால்நடைகளை எந்தப் பிணியும் அண்டாது. வாகனங்கள் எவ்வித விபத்திலும் சிக்காமலும், அடிக்கடி பழுதாகாமலும் திகழும் என்பது நம்பிக்கை. மேலும், `இத்தலத்தில் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேக வைபவம் செய்வதும் சிறப்பு' என்கிறார்கள் பக்தர்கள்.

நெல்லைச் சீமைக்குச் செல்லும் அன்பர்கள் அவசியம் இந்தத் தலத்துக்கும் சென்று வழிபட்டு வாருங்கள்; உங்கள் வாழ்க்கை செழிக்கும்.

நந்திக் களவம்!

இந்திரனின் ஆணைப்படி தேவலோக தலைமைச்சிற்பி மயனால் எந்தக்குறையுமின்றி உயிரோட்டமாக வடிக்கப்பட்டதால், உயிர் பெற்றதாம் இந்த நந்தி. எழுவதற்காக முன்காலைத் தூக்கியபோது மயன், ஓர் உளியால் நந்தியின் முதுகில் சிறு கீறலை ஏற்படுத்தினாரம். அதன் பிறகே நந்தி அதே இடத்தில் அமர்ந்தது என்கிறார்கள் பக்தர்கள். இன்றும் நந்தியின் முதுகில் நுட்பமாக ஏற்படுத்திய அந்தக் கீறலைக் காணலாம். ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நந்திகேசுவரருக்கு முழு சந்தனக்காப்பும் தீபாராதனையும் செய்யப்படும் `நந்திக் களவம்' விழா நடைபெறும்.

பக்தர்கள் கவனத்துக்கு...

இறைவன்: ஸ்ரீசிவசைலநாதர்

இறைவி: ஸ்ரீபரமகல்யாணி

தலச் சிறப்பு: இங்குள்ள இறைவன் சுயம்புவாய் எழுந்தருளியவர். பக்தனுக்காக லிங்கத் திருமேனியில் சடாமுடியைக் காட்டியருளிய பரமன். அகத்தியர், அத்ரி ஆகியோருக்கு அருள்பாலித்தவர்.

அத்திரீசுவரர், சடையப்பர், சடைமுடி நாதர் என்றும் இந்த இறைவனுக்குத் திருப்பெயர்கள் உண்டு. குழந்தை வரம், கல்யாணப்பேறு, மாங்கல்ய பலம் அருளும் அற்புத க்ஷேத்திரம் இது. சித்திரை மீன்பிடி வைபவம் இங்கே விசேஷம்.

நடைதிறப்பு நேரம்: காலை 6.30 முதல் மதியம்

1 மணி வரை; மாலையில் 5 முதல் 8.30 மணிவரை.

எப்படிச் செல்வது ?: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியிலிருந்து கடனா நதி அணைக்குச் செல்லும் சாலையில், சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது இக்கோயில். (தொடர்புக்கு: நாறும்பூநாத பட்டர் - 84896 71556)

வைகாசி மாதம் அம்பாளின் சிலை கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டதால், அந்த மாதத்தில் வசந்த உற்சவத் திருவிழா நடைபெறுகிறது. விழாவின் அம்சமாக ஸ்வாமி, அம்பாள் மறுவீடு செல்லும் வைபவம் நடைபெறுகிறது.

ஆழ்வார் குறிச்சி, ஆம்பூர் மக்கள் ஸ்வாமி மற்றும் அம்பாளை மறுவீடு அழைத்துச் செல்கிறார்கள்.ஆழ்வார்குறிச்சியிலுள்ள பெருமாள் கோயிலில் மூன்று நாள்கள் நடக்கும் அபிஷேகங்கள், தீபாராதனை, திருவீதி உலா ஆகியவற்றுக்குப் பிறகு, ஸ்வாமியும் அம்பாளும் சிவசைலம் கோயிலுக்குத் திரும்புவார்கள். பெண்வீட்டார் சீர் கொடுப்பதுபோல, அவ்வூர் மக்கள் சீர்வரிசையாகக் கோயிலுக்குத் தேவையான பொருள்களைக் கொடுப்பது, தற்போது வரையிலும் நடந்து வருகிறது.