Published:Updated:

அள்ளி கொடுப்பாள் அம்பிகை!

அம்பிகை
பிரீமியம் ஸ்டோரி
அம்பிகை

பி.சந்திரமௌலி

அள்ளி கொடுப்பாள் அம்பிகை!

பி.சந்திரமௌலி

Published:Updated:
அம்பிகை
பிரீமியம் ஸ்டோரி
அம்பிகை

ஆடி மாதம்- அம்பாளுக்கு உகந்த மாதம். தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடியில் ஊரெங்கும் உள்ள அம்பிகையின் அனைத்துக் கோயில்களிலும் விழா நடக்கும். கிராமங்களில் வீதிதோறும் வேப்பிலைகள் சரசரக்கும்; உடுக்கைகள் கிடுகிடுக்கும். பொங்கலும், கூழும் எந்நேரமும் அவள் சந்நிதி முன் சுடச் சுட மணம் பரப்பும். பாடல்களும் படையல்களும் அன்னையின் ஆலயத்தை நிரப்பும்.

காரணம், ஆடி மாதம் அம்பிகை அவதரித்த பெருமையைப் பெற்றது. அம்பிகை பக்குவம் அடைந்ததாகச் சொல்லப்படும் மாதமும் இதுவே. மட்டுமன்றி ஆடிப் பூரம், ஆடிச் சுவாதி, ஆடிப் பெருக்கு என புண்ணிய திருநாள்களைத் தன்னகத்தே கொண்ட மாதம் ஆடி.

அற்புதமான இந்த ஆடி மாதத்தில் அம்பாளின் மகிமைகளைப் படிப்பதாலும் கேட்பதாலும் நம் வினைகள் யாவும் நீங்கும் என்பார்கள் பெரியோர்கள். நாமும் அன்னையின் பேரருளைப் பெறும் விதம் அவளின் அருளாடல்களை, அவள் குடியிருக்கும் தலங்களின் சிறப்புகளை அறிந்து மகிழ்வுடன் வழிபடுவோம். நமக்கு வேண்டிய வரங்களை அள்ளிக் கொடுப்பாள் அம்பிகை...

லிங்க ரூபிணியே மூகாம்பிகையே

மூகாம்பிகை
மூகாம்பிகை

ஆகாயத்தை முட்டும் அழகு மலைகள். மலை மேலிருந்து கீழாக இறங்கி வழிந்தோடும் அருவிகள். அடர்ந்த காடு. அந்தக் காட்டுக்குள் நதிக் கரை ஒன்றில் அமர்ந்து, உமை யரு பாகன் திருவடிகளில் உள்ளத்தை வைத்துத் தவம் செய்து கொண்டிருந்தார் கோல மகரிஷி.

நெடுங்காலம் நீண்ட அவரது தவத்தால் மகிழ்ந்த முக்கண்ணன் அவர் முன் தோன்றினார். முனிவர் மேனி சிலிர்த்தார். ‘‘கயிலாயவாசா! எனக்கு தரிசனம் தந்தருளிய நீங்கள், இங்கேயே வாசம் செய்து எல்லோருக்கும் தரிசனம் தந்தருள வேண்டும். இங்கு வரும் அனைவருக்கும் மும்மூர்த்திகளும் மகிழ்ந்து அருள் புரிய வேண்டும். பராசக்தியும் இங்கு உங்களுடன் வாசம் செய்ய வேண்டும்!’’ என வேண்டினார். இறைவனும் ‘‘அப்படியே நடக்கும்!’’ என்று அருள்புரிந்தார்.

அதே விநாடியில்... கண்ணைப் பறிக்கும் ஒளி தோன்றியது. அந்த ஒளி முழுவதுமாக மறைவதற்கு முன், அற்புதமானதொரு சுயம்புலிங்கம் தோன்றியது. லிங்கத்தின் நடுவில் ஸ்வர்ண (தங்க) ரேகை.

தன்னை மறந்தார் தவமுனிவர். அவர் சிந்தனையை இழுத்தது சிவபெருமானின் குரல். ‘‘கோல முனிவரே! இதோ, இருக்கும் இந்த லிங்கத்தின் ஸ்வர்ண ரேகையில் இடப் பக்கம் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி எனும் மூவரும், வலப் பக்கம் ருத்ரன், விஷ்ணு, பிரம்மா எனும் மூவருமாக நாங் கள் எப்போதும் இருப்போம். இதனால் தேவர்கள் அனைவரும் இந்த சிவலிங்கத்தில் வசிப்பார்கள். உனது விருப்பம் நிறை வேறும்!’’ என்றார்.

கோல மகரிஷி மகிழ்ந்தார். அந்த சுயம்பு லிங்கத்தை பூஜித்து வந்தார் கோல மகரிஷி.கோல மகரிஷியால் புகழ் பெற்ற அந்தத் திருத்தலம் அவர் பெயரையட் டியே, ‘கொல்லாபுரம்’ என அழைக்கப்பட்டது. அதுவே தற்போதைய கொல்லூர். கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் (மங்களூருவில் 140 கி.மீ. தூரம்) அமைந்துள்ள கொல்லூரின் அரசி தாய் மூகாம்பிகை. இந்த அன்னை இங்கே குடியேறியது எப்படி?

இங்கு கோல மகரிஷி சக முனிவர்களுடன் வழிபட்டு வந்தார் என்று பார்த்தோம் அல்லவா? அவரின் தவத்துக்கும் பூஜைக்கும் மிகவும் அல்லல் ஏற்படுத்தி வந்தான் மூகாசுரன். அவனது கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன. திக்கற்று திகைத்த அடியார்கள் யாவரும் சிவ-சக்தியைச் சரணடைந்து தவம் இருந்தனர்.

அன்னை துர்கையாய் தோன்றினாள் மூகனை வதைத்தாள். மரணத் தறுவாயில் அந்த அசுரன் ஒரு வரம் கேட்டான்.

``அம்மா! இந்தத் தலத்தில் உன் பெயர் நிலைத்து இருக்கும் வரை, என் பெயரும் நிலைத்து இருக்க வேண்டும். அருள் செய்!’’ என வேண்டினான் மூகாசுரன். அம்பிகை, அவனுக்கு அருள் புரிந்தாள். ‘மூகாம்பிகை’ எனும் திருநாமத்தை ஏற்றாள்.

யுகங்கள் கடந்தன. ஆதிசங்கரர் காலம். பாரத தேசம் எங்கும் பாத யாத்திரையாக வந்த பகவான் ஆதி சங்கரர், கொல்லூருக்கு வந்தார். சக்தி அலைகளின் அதிர்வுகள் அவரை பிரமிப்பில் ஆழ்த்தின. ஸ்வர்ண ரேகைகள் கொண்ட சிவலிங்கத்தில் இருந்துதான் அந்த சக்தி அலைகள் வெளிப்படுகின்றன என்பதை உணர்ந்தார்.

‘சக்தி எல்லாம் இங்கே சிவ லிங்கத்தில் அரூபமாகக் கலந்து இருக் கின்றன. அம்பிகைக்கு ஒரு வடிவம் தந்து இங்கே அமைக்க வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபடுவோம்’ எனத் தீர்மானித்து அவர், மூலவருக் குப் பின்புறம் உள்ள இடத்தில் அமர்ந்து தியானம் செய்தார். பலன்... ஞான வடிவினளாகத் தோற்றம் காட்டினாள் அம்பிகை. அன்னையின் அந்தத் திருவுருவைப் பஞ்சலோகத்தில் அமைக்க ஏற்பாடு செய்தார். திருவுருவம் தயாரானது.

ஸ்வர்ண ரேகை கொண்ட சிவலிங்கத்தின் பின்னால், சக்தி மிகுந்த சக்கரம் ஒன்றைப் பதித்த ஆதிசங்கரர், அதில் அறுபத்துநான்கு கோடி தேவதைகளையும் ஆவாஹனம் செய்தார். அதன் மீது அம்பிகையின் திருவுருவைப் பிரதிஷ்டை செய்தார். அந்த அருள் வடிவம்தான், இன்றும் கொல்லூரில் மூகாம்பிகை எனும் திருநாமத்தில் நமக்கு அருள் வழங்கிக் கொண்டிருக்கிறது. அம்பிகையின் மகிமையைப் பறைசாற்றும் ‘சௌந்தர்ய லஹரி’யை இங்குதான் ஆதிசங்கரர் இயற்றினார் என்ற தகவலும் உண்டு.

காயத்ரீ மண்டபத்தில் காமாட்சி தரிசனம்!

காமாட்சி
காமாட்சி


காஞ்சிபுரம் தொண்டமண்டலத்துக் கோயில் நகரம். பல்லவ சாம்ராஜ் ஜியத்தின் ராஜதானி. இவற்றை மிஞ்சிய சிறப்பு என்னவெனில், காஞ்சி பராசக்தியின் ஒட்டியாண பீடம். இந்த ஊரில் பிரதான நாயகி காமாட்சி அம்பாள். அடியவர்களின் விருப்பங்களை எல்லாம் விரைவில் நிறைவேற்றித் தரும் தாயாக அருள்பாலிக்கிறாள் காமாட்சிதேவி.

தேவர்களது பிரார்த்தனைக்கு இணங்க, கொடுமைக்கார பண்டாசுரனை அழிக்க பிலத் துவாரத்தில் இருந்து தோன்றினாள் என்கிறது தல புராணம். பண்டாசுரன் வதத்துக்குப் பின், அம்பாளின் கட்டளைப்படி, காயத்ரி மண்டபத்தை நிர்மாணித்து, அம்பாளின் கன்யா ரூபமாகிய பிம்பத்தை பிரதிஷ்டை செய்தனராம் தேவர்கள்.

பிறகு அந்த மண்டபத்தை அடைத்து, இரவு முழுவதும் அம்பிகையை ஸ்தோத்தரித்தபடி வெளியில் நின்றனர். அருணோதய காலத்தில் கதவைத் திறந்த தேவர்கள், கன்யா ரூபமான பிம்பத்துக்கு பதில், அம்பிகை சகலாபரண பூஷிதையாக, மலர்ந்த முகம் மற்றும் சதுர்புஜங்களுடன் பத்மாசினியாக அமர்ந்திருப்பதைக் கண்டனர்.

இன்று நாம் தரிசிக்கும் காமாட்சி, இப்படித் தோன்றியவளே!

பங்காரு காமாட்சி

காஞ்சி க்ஷேத்திரத்தில் காமாட்சியை நோக்கி தவம் இருந்த பிரம்மா, ஈசனுடன் அம்பிகையை தரிசிப்பதற்காக அவர்களுக்குத் திருக்கல்யாண மகோத்சவம் புரிய அருள் வேண்டினார். அதற்கு இணங்கி, தன் நெற்றிக் கண்ணிலிருந்து தேஜோ மயமாக ஏகாம்பிகையை ஆவிர்பவிக்கச் செய்தாள் காமாட்சி.

ஏகாம்பிகையை தரிசித்த பிரம்மன், அவளைப் போல் சொர்ண விக்கிரகம் செய்து, பங்குனி உத்திரத்தில் கல்யாண மகோற்சவம் நிகழ்த்தி காமகோடி பீடத்தில் எழுந்தருளச் செய்தார். அந்த தேவியே பங்காரு காமாட்சி எனப்பட்டாள். பிற்காலத்தில் இந்த அம்பிகையே தஞ்சையில் குடியேறி கோயில் கொண்டாள்.

மூன்றரை சுற்றுப் பிராகாரம்

முக்கோண வடிவ கருவறையும் மூன்றரைச் சுற்றுப் பிராகாரமும் காமாட்சி அம்மன் கோயிலின் சிறப்பு அம்சம், சக்கரத்தில் பிந்து மண்டல வாசினி யாக முக்கோணத்தில் உறைபவள் என்பதால், காமாட்சி அம்மனின் கருவறை முக்கோண வடிவமாகத் திகழ்கிறது. குண்டலினி என்கிற ஜீவசக்தி உடம்பில் மூன்றரை அங்குலச் சுற்றுப் பாம்புபோல் கிடக்கிறது. இதைக் குறிக்கும் வகையில் இங்கு மூன்றரைச் சுற்றுப் பிரகாரம் அமைந்துள்ளது என்பர்.

பஞ்ச காமாட்சிகள்!

இங்கு பஞ்ச காமாட்சிகள் இருப்பதாக ஐதீகம். அனைவரும் தரிசித்து மகிழும் மூலஸ்தான காமாட்சி பிரதானமானவள். அடுத்ததாக தபஸ் காமாட்சி. இது மூலஸ்தானத்துக்கு அருகிலுள்ள சிறிய சந்நிதியில் அருள்கிறாள். சிவபெருமானை வேண்டி அன்னை காமாட்சி தவம் செய்த இடம் இது என்பர்.

மூன்றாவது பிலாகாஸ காமாட்சி சந்நிதி. காமாட்சியின் திவ்விய வடிவை இங்கு தரிசிக்கலாம். இந்த வடிவத்துக்கு முன்பு காமாட்சி, ஆகாயத்தில் பிலாகாஸமாக பொந்து ஒன்றில் இருந்ததாகக் கூறுவர். அடுத்தது உற்சவ காமாட்சி. இந்த விக்கிரகத்துக்கு பிரம்மோற்சவம் நடை பெறுகிறது. நான்காவது பங்காரு காமாட்சி சந்நிதி. நான்கு காமாட்சி விக்கிரகங்களுடன் ஐந்தாவது காமாட்சியின் பாதம் மட்டுமே உண்டு என்கிறார்கள்.

கண் கொடுத்தாள் அபிராமி!

அபிராமி
அபிராமி

அன்று திருவாடிப்பூரம், வெள்ளிக் கிழமை! அபிராமியின் சந்நிதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பூஜைகள் முடிந்து வீட்டுக்கு வந்த அம்பிகாதாசர் ஏதோ பெயரளவுக்குச் சாப்பிட்டார். பிறகு, அம்பாளைத் தியானித்து விட்டுப் படுத்தார். அவரின் மனத்தில் மகன் குறித்த கவலை பெரிதும் ஆக்கிரமித்திருந்தது.

திருக்கடவூர் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் அபிராமிப்பட்டர். அவரின் வம்சத்தில் வந்தவர்தான் அம்பிகாதாசர். வெகு காலம் பிள்ளை இல்லாமல் இருந்து, பிறகு அன்னையின் அருளால் பிறந்தவன் மகன் சியாமளதாசன். திடுமென வைசூரி கண்டு பார்வையை இழந்தான். அதனால் உண்டான கவலை அம்பிகாதாசரை வாட்டியது.

கவலையுடன் படுத்திருந்தவர் அப்படியே கண்ணயர்ந்தார். அவரது கனவில் அன்னை அபிராமி தோன்றினாள் ‘தாசனே, வருந்தாதே! இந்தத் தலத்துக்குத் தெற்கே பர்வதராஜபுரம், திருமலை, ராஜசோளீச்சுரம் ஆகிய பெயர்களைக் கொண்ட திருத்தலம் ஒன்று உள்ளது. அங்கு, இறைவனின் இடப்பாகத்தில் நானே எழுந்தருளி உள்ளேன். வருகிற திங்கள்கிழமை அன்று, அங்குள்ள சிவ தீர்த்தத்தில் உன் மகனுடன் நீராடி, என்னை வழிபடு... உன் மகன் பார்வை பெறுவான்!

மேலும்... அங்கு, என்னை பூஜித்து வரும் சிவாசார்யர், தன் ஒரே மகளான கௌரிக்குத் திருமணம் நடத்த வேண்டும் என்றும், தனக்குப் பின் தன் மாப்பிள்ளையே எனக்குரிய பூஜைகளைக் கவனிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். அதை நிறைவேற்றும் வகையில், உன் மகன் சியாமள தாசனை அங்கேயே பூஜை செய்துவர ஏற்பாடு செய்!’ என்று அருளி மறைந்தாள். அதேநேரம், பர்வதராஜபுரத்தில் உள்ள சிவாசார்யரது கனவிலும் தோன்றி, செய்ய வேண்டியதை விவரித்தாள் அன்னை அபிராமி.

விடிந்ததும் அம்பிகை அருளியதை அனைவரிடமும் தெரிவித்தார் அம்பிகா தாசர். பிறகு, மகன் சியாமளதாசனுடன், பர்வதராஜபுரத்தை அடைந்து, அங்குள்ள சிவ தீர்த்தத்தில் நீராடி அம்பிகை சந்நிதியை அடைந்தார். அன்னையை மனமுருகிப் பிரார்த்தித்தார்.

அப்போது, கோடி சூரியப் பிரகாசத்துடன், ராஜ சோளீஸ்வரருடன் காட்சி தந்தாள் அம்பிகை. ‘அம்மா... அம்பிகே!’ என்ற எழுந்த குரல்கள் சந்நிதி முழுக்க எதிரொலித்தன. அதையும் மீறி, ‘கண் கொடுத்த தாயே! உன் திருவடியைக் கண்டு கொண்டேன். காலமெல்லாம் உனக்குத் தொண்டு செய்வேன்’’ என்றொரு குரல் ஓங்கிக் கேட்டது.

அம்பிகாதாசர் திரும்பிப் பார்த்தார். கைகளைத் தலைக்கு மேல் கூப்பியபடி கதறிக் கொண்டிருந்தான் சியாமளதாசன். அவனுக்குப் பார்வை கிடைத்ததை அறிந்து அம்பிகாதாசர் மெய் சிலிர்த்தார்.

பின்னர், அம்பிகையின் ஆணைப்படி சியாமளதாசனுக்கும், கௌரிக்கும் திருமணம் நடந்தது. அங்கேயே இருந்து அம்பிகைக்கு தினமும் பூஜை செய்து வந்த சியாமளதாசன், சியாமளதாச பட்டர் என்ற திருநாமம் பெற்றார். அன்னை அபிராமியைப் பல காலம் ஆராதித்து வந்த சியாமளதாச பட்டர், ஓர் ஆடி மாத வளர் பிறை நாளில்- திருவாடிப்பூரத்தன்று அன்னையின் திருவடி நிழலில் கலந்தார்.

தற்போது, திருமலைராயன் பட்டினம் என்று அழைக்கப்படும் இந்தத் தலம் (பர்வதராஜபுரம்), காரைக்காலில் இருந்து தெற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. சியாமளதாசர் நீராடி, பார்வை பெற்ற சிவதீர்த்தம் ‘நேத்திர புஷ்கரணி’ எனப்படுகிறது. இதில் நீராடி, அம்பாளை வழிபட்டால், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் ஆகியவற்றைப் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism