Published:Updated:

அம்பாளும் அற்புதங்களும்!

மயிலை கற்பகாம்பாள்
பிரீமியம் ஸ்டோரி
மயிலை கற்பகாம்பாள்

திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலில் அமர்ந்து அருள்கிறாள் காந்திமதி அம்மன்

அம்பாளும் அற்புதங்களும்!

திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலில் அமர்ந்து அருள்கிறாள் காந்திமதி அம்மன்

Published:Updated:
மயிலை கற்பகாம்பாள்
பிரீமியம் ஸ்டோரி
மயிலை கற்பகாம்பாள்

ஆடி மாதம் அம்பாளை வழிபட உகந்த மாதம். ஆடியில்தான் அம்மனின் அருள் மாரியாகப் பொழிகிறது. வெப்பம் குறைந்து பூமி குளிர்ச்சியாகிறது. ஆடியில் நதிகள் எல்லாம் புதுப்புனலோடு எழில்கொண்டு பாய்கின்றன. விவசாயிகள் மீண்டும் விதைப்பைத் தொடங்குவதும் இந்த மாதத்தில்தான். இத்தகைய சிறப்புகள்மிக்க ஆடியில் அன்னை அம்பிகையை வழிபடுவது மேலும் சிறப்பினை வழங்கும்.

ஆடியில்தான் அம்பிகைக்கு உகந்த ஆடித்தபசு, ஆடிப்பூரம், ஆடி பதினெட்டு ஆகிய விழாக்கள் வருகின்றன. ஆடி வெள்ளிக்கிழமைகளும், செவ்வாய்க்கிழமைகளுமே திருவிழாக்கள்தாம் என்பதை அம்பிகை ஆலயங்களில் கூடும் பக்தர்களின் கூட்டத்தை வைத்தே அறிந்துகொள்ளலாம்.

அருள்தரும் இந்த ஆடி மாதத்தில் அம்பிகை கொலுவிருக்கும் தலங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அறியலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
 • திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலில் அமர்ந்து அருள்கிறாள் காந்திமதி அம்மன். காந்திமதி அம்மனுக்குத் தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலை விளாபூஜை நடக்கும்வரையில் அம்பிகை வெண்ணிறப் புடவையோடே காட்சிகொடுக்கிறாள். உலகின் ஊழிகாலத்தில் அனைத்தும் அன்னைக்குள்ளாகவே அடங்கும் என்பதை உணர்த்துவதாகவே இது அமைகிறது என்கின்றனர்.

நெல்லை காந்திமதி அம்மன்
நெல்லை காந்திமதி அம்மன்
 • காந்திமதி அம்மன், தினந்தோறும் உச்சிகாலத்தில் தன் கையினாலேயே நெல்லையப்பருக்கு அன்னம் பரிமாறுவதாக ஐதிகம். உச்சிகால பூஜையின்போது அம்மன் சந்நிதி அர்ச்சகர் அம்பாளின் பிரதிநிதியாக மேளதாளத்தோடு கிளம்புவார். சர்க்கரைப்பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், பருப்பு, சாம்பார் சாதம், ஊறுகாய் எனப் பல உணவுகளுடன் சுவாமி சந்நிதிக்குச் சென்று நைவேத்தியம் செய்வார். பின்பு அதே நைவேத்தியங்கள் அம்பிகைக்கும் செய்யப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 • பிரதோஷத்தின்போது சிவபெருமான் சந்நிதி நந்திக்குப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நெல்லையிலோ, காந்திமதி அம்மன் சந்நிதிக்கு முன் உள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜைகள் நடைபெறுகின்றன. அதன்பின்பு அன்னை ரிஷப வாகனத்தில் எழுந்தருள்கிறாள்.

 • காந்திமதியம்மன் சந்நிதிக்கு, கங்கையும் யமுனையுமே துவாரபாலகிகள். அருள் கடலுக்கு புனிதநதிகள் காவல் என்பது பொருத்தம்தானே.

 • நெல்லையப்பர் கோயிலில் அருளும் துர்கைக்கு மானும் சிங்கமும் வாகனங்கள். அன்னைமுன்பு வலியோரும் எளியோரும் சமம் என்பதையே இது உணர்த்துகிறது. மேலும் அன்னை துணையிருக்கும்போது எளியோர் யாருக்கும் அஞ்சவேண்டியதில்லை என்றும் பொருள்.

 • மதுரை மீனாட்சி அம்மன், ஒருநாளில் மூன்று விதமான திவ்யமங்கள ரூபங்களில் காட்சிகொடுக்கிறாள். காலையில் சின்ன பெண் போன்ற அலங்காரம், உச்சி காலத்தில் மடிசார் புடவை அலங்காரம், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டாலான புடவை என்று மூன்று அலங்காரங்களுடன் அன்னையைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும் என்கின்றனர் பக்தர்கள்.

 • குழந்தைவரம் வேண்டுகிறவர்கள் அன்னை மீனாட்சியைக் காலை வேளையில் பாலசுந்தரியாகக் காட்சிகொடுக்கும் கோலத்தில் தரிசனம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அவ்வாறு செய்தால் விரைவில் மழலைச் செல்வம் கிடைக்கும் என்பது ஐதிகம்.

 • அன்னை சிறுமியாய்த் தோன்றி அருள்பாலித்த தலங்களுள் மதுரை மிகவும் முக்கியமானது. மீனாட்சி அம்மன் கோயில் தல புராணம், அன்னை பாலகியாகத் தோன்றி அருள்புரிந்த சம்பவங்கள் பலவற்றைக் குறிப்பிடுகின்றன.

 • அவர் ஒரு துறவி. நோயால் துயருற்றார். ஆனபோதும் அவரின் உணவு ஒருநாளுக்கு மூன்று கையளவு கோயில் தீர்த்தமும், ஒரு கைப்பிடி அறுகம்புல்லும்தான். அதை அவருக்குத் தினமும் ஒரு சிறுமி கொண்டுவந்து தருவாள். தன் துயரம் நீங்குமாறு அன்னை மீனாட்சியை வேண்டிக்கொண்டு அவர் பாடல் இயற்றினார். அதுவே, ‘மீனாட்சியம்மை கலிவெண்பா.’ சிறுமியாய் வந்து உணவளித்துவந்த அன்னை அவருக்குக் காட்சி கொடுத்து, அவரின் துயர் தீர்த்தார். பின்பு, `முருகக்கடவுளின் திருத்தல ஆலயம் சீர் இன்றி இருக்கிறது. அதை நீ சென்று புதுப்பிப்பாயாக’ என்று அனுப்பிவைத்தாள். அந்தத் துறவியும் அன்னை சொன்ன இடத்துக்கு வந்து கோயிலைப் புதுப்பித்துக் கட்டினார். அந்த ஆலயமே, திருப்போரூர் முருகன் ஆலயம். அந்த மகான், சிதம்பரம் சுவாமிகள்.

 • ஆட்சியாளர்கள் நீதி தவறினால் சீறி அழிப்பதுபோல நல்லாரைப் பேணிக்காப்பாள் அன்னை மீனாட்சி என்பது சர்வ நிச்சயம்.

 • அம்பாள் முப்பெரும் தேவியராகக் காட்சிகொடுக்கும் தலம் திருவானைக்கா. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இங்கு அம்பாளுக்கு விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன. அகிலாண்டேஸ்வரி ஒருநாளில், காலையில் லட்சுமிதேவியாகவும் உச்சிக்காலத்தில் பார்வதியாகவும் மாலையில் சரஸ்வதி தேவியாகவும் திருக்காட்சியளிக்கிறாள். மூன்று வேளையிலும் அம்மையை தரிசித்து வழிபட கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.

மயிலை கற்பகாம்பாள்
மயிலை கற்பகாம்பாள்
 • திருவானைக்கா திருத்தலத்தில் அம்பாள் நாள்தோறும் உச்சிகாலத்தில் ஈசனை வழிபடுவதாக ஐதிகம். அதற்காக, அம்பாள் சந்நிதி அர்ச்சகர் அம்பிகையின் புடவையைக் கட்டிக்கொண்டு கிரீடம் மற்றும் மாலை தரித்து தீர்த்த பாத்திரத்துடன் சுவாமி சந்நிதிக்கு, மேள தாளத்துடன் சென்று வழிபாடு செய்கிறார். சுவாமிக்கு அபிஷேகமும், கோபூஜையும் செய்த பின் அம்பாள் தன் சந்நிதி திரும்புவாள். அந்த நேரத்தில் பக்தர்கள், அந்த அர்ச்சகரை அம்பாளாகவே கருதி வழிபடுவர்.

 • ஆதி சங்கரர் திருவானைக்கா தலத்துக்கு வந்தபோது அங்கு அன்னை உக்கிர ரூபத்தோடு காட்சியளித்தாள். அன்னையின் உக்கிரம் தணிக்க, சங்கரர் ஸ்ரீசக்கரத்தை தாடகமாகச் செய்து அணிவித்தார். இதனால் அன்னை மனம் குளிர்ந்து சாந்த சொரூபியாக வரப் பிரசாதியாக அருள்பாலித்தார். அன்னையின் தாடகங்கள் ஸ்ரீசக்கர ரூபமாக அமைந்ததால், அதை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை வரம் வேண்டும் பெண்கள், தாடகத்தையே உற்று நோக்கி வேண்டினால். நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள் பக்தர்கள்.

 • சிவபெருமானிடம் மாணவியாக இருந்து ஞானத்தைப் பணிவுடன் கேட்கும் அம்பிகையை, ‘சிஷ்ய பாவ கௌரி’ என்கின்றனர். அவளே குருவாகி உலகிற்கு ஞானத்தை உபதேசிக்கும் கோலத்தை, ‘ஞானேஸ்வரி’ என்று போற்றுகிறார்கள். சிவபெருமான் உபதேசித்த ஆகமங்களை அன்னை உலகுக்கு வழங்கும் திருக்கோலமே ஞானேஸ்வரி திருக்கோலம். நித்திய சிவபூஜையில் வணக்கம் சொல்லப்படும் ஏழு குருமார்களில் அம்பிகையும் ஒருவர். அவரை ‘அம்பிகாகுரு’ என்று போற்றுகின்றனர்.

 • சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் அன்னை கற்பகவல்லியாக அருள்பாலிக்கிறாள். வைகாசி பௌர்ணமி அன்று அன்னையை ஞானேஸ்வரியாக வழிபடுகிறார்கள். அன்று அம்பிகை இடையில் ஒரு வாள் தரித்திருப்பாள். அதை ‘ஞான வாள்’ என்கின்றனர். அஞ்ஞானத்தை அறுத்து மெய்ஞ்ஞான வழியில் நடத்தும் வாள் என்பது அதன் தாத்பர்யம்.

 • அபிராமி பட்டர் அந்தாதி பாட, அமாவாசையன்று முழுநிலவைத் தோன்ற வைத்தாள் அம்பிகை அபிராமி. அதேபோல ஒரு கவிஞனின் அந்தாதிக்குப் பூச்செண்டு தந்து திருவிளையாடல் புரிந்த தலம் பாபநாசம்.

 • பாபநாசத்தில் வாழ்ந்த நமச்சிவாயக் கவிராயர், ஈசன் மீதும் உலகம்மை மீதும் பெரும் பக்தி கொண்டிருந்தார். ஒருநாள் உலகம்மை, மன்னனின் கனவில் தோன்றி கவிராயரின் சிறப்புகளை எடுத்துரைத்தார். கண்விழித்த மன்னன், கவிராயரின் சக்தியை சோதிக்க விரும்பினான். மலர்ச்செண்டு ஒன்றை உலகம்மையின் திருக்கரத்தில் வைத்துக் கட்டினான். பின்பு கவிராயரை வரச் சொல்லி, ‘உம் கவித்திறத்தால் அந்தப் பூச்செண்டு உம் கைக்கு வர வேண்டும்’ என்று கட்டளையிட்டான். ‘எல்லாம் அம்பாளின் திருவிளையாடல்’ என்பதை உணர்ந்துகொண்ட கவிராயர், உலகம்மையின் மேல் அந்தாதி பாடத் தொடங்கினார். 95 பாடல்கள் பாடியதும் அன்னை மனம் மகிழ்ந்து தன் கையிலிருந்த பூச்செண்டை கவிராயரின் கையில் சேருமாறு அருள் செய்தாள். கவிராயர் பாடிய அந்தாதிகள், ‘உலகம்மை அந்தாதி’ என்று பெயர்பெற்றது.

 • சிம்ம வாகினியாகக் காட்சி கொடுக்கும் அன்னை சில தலங்களில் ரிஷப வாகினியாகவும் தரிசனம் தருகிறாள். அன்னை ரிஷப வாகினியாக எழுந்தருளும் நந்திக்கு ‘சோம நந்தி’ என்று பெயர். அம்பிகை ஒருமுறை ஈசனை நோக்கித் தவம் செய்தபோது அங்கு வந்த புலி ஒன்று அன்னைக்குக் காவலாக அமர்ந்திருந்தது. அம்பிகையின் தவத்தில் மகிழ்ந்த ஈசன், அம்பிகைக்கு அருள் செய்தது போல, அம்பிகையைக் காத்து நின்ற புலிக்கும் அருள் செய்தார். நந்தி கணங்களுள் ஒருவராக அதை மாற்றி அருளினார். அதுவே சோம நந்தி என்கின்றன புராணங்கள். அவ்வாறு ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் அன்னைக்கு, ‘தர்ம சம்வர்த்தினி’ என்றும் ‘அறம் வளர்த்த நாயகி’ என்றும் பெயர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஏலவார் பூங்குழலி அம்பிகை, உற்சவங்களின்போது ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார்.

 • திருநீலக்குடியில் மனோக்ஞ நாதசுவாமி ஆலயத்தில் அம்பாள், யோக சக்தி, போக சக்தி என்னும் இரு சக்திகளாகத் திருக்கோலம் கொண்டு அருள்புரிகிறாள். போக சக்தி - அநூபமஸ்தனி என்ற திருப்பெயருடனும், யோக சக்தி - பக்தாபீஷ்டதாயினி என்னும் திருப்பெயருடனும் அருள்கிறாள் அன்னை. இரு சந்நிதிகளுக்கும் தனித் தனி விமானம் இல்லாமல் ஒற்றைக் கலசம் கொண்ட ஒரே விமானம் அமைந்துள்ளது.

 • திருவாரூர் திருத்தலத்தில் அம்பிகை போக சக்தியாகவும், யோக சக்தியாகவும் இரு சந்நிதிகள் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கிறார். யோகநாயகியை ‘கமலாம்பிகை’ என்று அழைக்கிறார்கள். அன்னை இங்கு யோகாசனத்தில் வீற்றிருக்கிறாள். போக நாயகியை ‘நீலோற்பலாம்பிகை’ என்று அழைப்பர். போக நிலையின் அடையாளமாக அம்பிகைக்கு அருகே ஒரு சேடி நிற்க, அவளின் தோளில் முருகன் வீற்றிருக்கிறார். அம்பிகை முருகனின் சிரசைத் தொட்டவாறு காட்சியருள்கிறாள்.

 • கர்நாடக மாநிலம், பேலூரில் அமைந்துள்ள ஸ்ரீசென்ன கேசவர் திருக்கோயிலில் சரஸ்வதி தேவி நடனக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். அன்னை நடன சரஸ்வதி என்ற திருநாமத்தோடே அழைக்கப்படுகிறாள். அதேபோன்று, சென்னராயன்பட்டினத்துக்கு அருகே உள்ள நூக்கிஹல்லி என்ற இடத்தில் அமைந்துள்ள ஹொய்சாள மன்னர்கள் கட்டியுள்ள கோயில் ஒன்றில் லட்சுமிதேவி நடனமாடும் திருக்கோலத்தில் காட்சிகொடுக்கிறாள்.

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன்
ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன்
 • ஆடிமாதம், மாரியம்மன் கோயில்களில் தீமிதித் திருவிழா நடைபெறும். பொதுவாக, தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒரே ஒரு தலத்தை தவிர பிற தலங்களில் தீமிதித் திருவிழா நடத்தும் வழக்கங்கள் இல்லை. அந்த ஒரு தலம் திருவண்ணாமலை. அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்துள் உண்ணாமுலையம்மன் சந்நிதிக்கு முன்பாக யாக சாலைக்கு அருகே அக்னிகுண்டம் உருவாக்கப்படும். ஆடிப் பூரத்தன்று, அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும். அன்று ஆலயம் வரும் அனைத்துப் பெண்களுக்கும் வளையல்கள் வழங்கப்படும். அன்று மாலையில் தீமிதித் திருவிழா நடைபெறும். அதற்கென பக்தர்கள் விரதமிருந்து பங்கேற்பர். சிலர் தீச் சட்டி எடுக்கும் வழக்கமும் இங்கு உண்டு.

 • ஈஸ்வரனுக்குச் சந்திர கலாதரன், சந்திர மௌலீஸ்வரன் என்றெல்லாம் திருநாமங்கள் இருப்பதுபோன்று அம்பிகைக்கும் சந்திர சடாதரி, பிறைசூடி, பிறைநுதலாள் என்றெல்லாம் பெயர் உண்டு. திருநாகேஸ்வரத்து அம்பிகைக்கு ‘பிறையணி நுதலாள்’ என்று பெயர். அன்னையின் நெற்றியே பிறைபோல் இருப்பதால் அவளுக்கு இந்தத் திருநாமம் மிகவும் பொருந்தும் என்கின்றனர்.

 • திருஞானசம்பந்தர் தன் மனைவியோடும் சுற்றத்தினரோடும் பிற நாயன்மாரோடும் இறைவனோடு ஜோதியில் கலந்த தலம், ‘ஆச்சாள்புரம்.’ அங்கு எழுந்தருளியுள்ள அம்மைக்கு, ‘திருநீற்று உமையம்மை’ அல்லது ‘விபூதி கல்யாணி’ என்று பெயர். திருஞானசம்பந்தரின் திருமணத்தில் கலந்துகொண்டு சிவகதி அடைந்த அனைவருக்கும் அம்மையே விபூதி பிரசாதம் அளித்தாள் என்பது ஐதிகம்.

 • வழுவூர் ஆலயத்தில் அமைந்துள்ள மோகினி ரூபம் அனைவரின் மனதையும் கொள்ளைகொள்ளும் வகையில் அமைந்துள்ளது. யார் இந்த மோகினி? சிவபெருமான் தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்கி ஞானம் புகட்ட பிட்சாடனராக வந்தபோது, திருமாலும் சிவனோடு மோகினி ரூபம் கொண்டு வந்தார். திருமாலே மோகினியாக மாறி வந்த அந்தத் திருக்கோலமே வழுவூரில் அருள்புரிகிறது. கையில் கிளிகொண்டு, இடையினைச் சாய்த்து ஒய்யாரமாக நிற்கும் இந்த மோகினி, பிட்சாடனர் எழுந்தருளலின் போது சேர்ந்து எழுந்தருளி அருள்பாலிக்கிறாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism